“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் ஒன்றிய ஆட்சியின் திணிப்புகள், மறுப்புகளுக்கு எதிராகக் கருத்தியல் போராட்டம் நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் பாஜகவின் மெஜாரிட்டி எண்ணிக்கையைக் குறைத்து மைனாரிட்டி நிலைக்குத் தள்ளியவர்கள் தமிழ்நாட்டு வாக் காளர்கள். அதன் காரணமாக தமிழ்நாட்டு மக்களின் நிதி உரிமைகளைப் பறிப்பதோடு ஆளும் கட்சிக்குக் கடுமையான அரசியல் நெருக்கடிகளையும் ஒன்றிய பாஜக ஆட்சி உருவாக்கி வருகிறது.
1967 முதல் இருமொழிக் கொள்கையை நடை முறைப்படுத்தி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு. கல்வி கட்டமைப்பில் இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தோல்வி அடைந்த மும்மொழித் திட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் மீது மிரட்டித் திணிக்கும் ஒன்றிய ஆட்சிக்குப் பணிய மாட்டோம், நிதி தர மறுத்தாலும் மாநில அரசு அந்த நிதியை ஒதுக்கும். மும்மொழிக் கொள்கை காவிக் கொள்கை, நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். கொள்கை என்று அறிவித்துவிட்டார் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.
40-க்கும் மேற்பட்ட மாநில மொழிகளை இந்தி அழித்த வரலாற்றை முதலமைச்சர் சுட்டிக் காட்டிய நிலையில் இந்தி பேசும் உ.பி. மாநில சட்டசபையில் இந்தி எதிர்ப்புக் குரல் ஒலிக்கத் தொடங்கி இருப்பது, திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.
தொகுதி மறு சீரமைப்பு வர இருக்கும் சூழலில் பாஜக ஆட்சியில் கடந்த கால கபட செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையோடு அதைத் தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு முதல்வர் இறங்கியுள்ளார். பல மாநிலங்களின் முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அவர்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளார்கள். இதன் வழியாக இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார்.
முதல்வரின் இந்த மாநில உரிமைப் போராட்டங்களைப் பாராட்டி வரவேற்கிறோம். மாநிலத்தின் உரிமைக்கும், சுய மரியாதைக்குமான இந்தப் போராட்டங்களுக்கு அனைத்துத் தரப்புத் தமிழர்களும் துணை நிற்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.”
(மயிலாடுதுறையில் மார்ச் 22.03.2025 மாலையில் நடத்தப்பட்ட திராவிடர் விடுதலைக் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் ஒன்று)