திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அறிவிப்பை மீறி பத்தனம்திட்டா அருகே சம்பவம்!

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள தர்மசாஸ்தா கோயிலில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அறிவிப்பை மீறி சட்டை அணிந்து தரிசனம் செய்த பக்தர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் குருவாயூர் கிருஷ்ணன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உள்பட பல முக்கிய கோயில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக்கூடாது என்ற மரபு கடந்த பல வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் திருவனந்தபுரம் அருகே உள்ள சிவகிரி நாராயண குரு ஆசிரமத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆசிரமத்தின் தலைவர் பேசும் போது கோயில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

சிவகிரி மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இந்த வழக்கம் பின்பற்றப்பட மாட்டாது என்று அவர் மேலும் கூறினார். காலம் மாறும் போது இது போன்ற நம்பிக்கைகள் தேவையில்லாதது என்று முதல்வர் பினராயி விஜயனும் அப்போது தெரிவித்தார்.

பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி பெருநாடு பகுதியில் கக்காட்டு தர்ம சாஸ்தா கோயில் உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ஆண்கள் சட்டை அணிந்து தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

இந்நிலையில் இந்தக் கோயிலில் எஸ்.என்.டி.பி. என்ற அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சட்டை அணிந்து தரிசனம் செய்தனர். இதை முன்னிட்டு கோயில் அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மூடநம்பிக்கைகளை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தக் கோயிலில் சட்டை அணிந்து தரிசனம் செய்ததாக இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கூறினர்.

இதுகுறித்து கக்காட்டு தர்மசாஸ்தா கோயில் நிர்வாகி அருண் கூறியபோது, “சபரிமலை ஐயப்பன் கோயிலைப் போலவே இது புராதனமான ஒரு கோயில் ஆகும். இந்தக் கோயிலில் சட்டை அணிந்து செல்லக் கூடாது என்பது ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோயிலில் ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். ஆனால் இதைப் பின்பற்ற வேண்டும் என்பது பக்தர்களுக்கு கட்டாயம் அல்ல” என்றார். கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் முதுகில் பூணூல் அணிந்தவர்களா இல்லை என்று கண்டறிவதற்கே சட்டை இல்லாமல் கோயிலுக்குள் செல்லும் மரபு உருவாக்கப்பட்டது.

விடுதலை இராசேந்திரன்