"பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்? - வாருங்கள் வரலாறு பேசுவோம்!!” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் மார்ச் 15-ல் தொடங்கி மார்ச் 22- வரை தமிழ்நாடு தழுவிய பரப்புரைப் பயணங்களை நடத்தி நிறைவு விழா மாநாட்டை மயிலாடுதுறையில் மார்ச் 22.03.2025 மாலையில் நடத்தியது. மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசியல் சட்டத்திற்கு எதிராக இனவெறியைத் தூண்டி காஞ்சி சங்கராச்சாரி பேசிய பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏப்ரல் 21-இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாநாடு முடிவு செய்தது. தீர்மானத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்தார். பலத்த கரவொலி எழுப்பி, தோழர்கள் வரவேற்றனர்.கடந்த ஜனவரி 19-ஆம் தேதி பெங்களூரில் “கர்நாடக பிராமண மகாசபையில்” பேசிய காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி, அரசியல் சட்டத்திற்கு எதிராக இனவெறியை தூண்டி விட்டிருக்கிறார். வேத மதத்தை காப்பாற்ற “பிராமணர்களால்” மட்டுமே முடியும் எனவே “பிராமணியத்தை” நாம் காப்பாற்றியாக வேண்டும்.
“பிராமணர்களை” அடையாளப்படுத்தும் சந்திய வந்தனம், காயத்திரி மந்திரம், அக்னி பூஜைகளை கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் நடத்த வேண்டும். சடங்குகளை குடும்பத்தினரே நடத்த வேண்டும். வீட்டுச் சமையல் சாப்பிட வேண்டும். ஓட்டலில் இருந்து வரவழைத்து சாப்பிடக் கூடாது.
நமக்கான தனி “அக்கிரகாரங்களை” உருவாக்க வேண்டும். 50-100 பிராமணர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய தனி குடியிருப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய கலாச்சாரத்தைக் காப்பாற்ற முடியும். இசை, சினிமா மற்றும் கலை நிகழ்ச்சிகள் வழியாக நம்முடைய தர்மத்தைப் பரப்ப வேண்டும். கிராமங்களை நம்முடைய `பிராமண’ தர்மத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மக்களை நாம் வழிநடத்த வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் கோயில்களிலும் நமது குல கோத்திரங்களை நிலைநிறுத்தியாக வேண்டும். நமக்கான “மரபுவழி ஆடைகளை (மடிசார்), (பஞ்ச கச்சம்) கைவிடக்கூடாது” என்று பேசி இருக்கிறார். அரசியல் சட்டத்துக்கு எதிரான இந்த இனவெறிப் பேச்சின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த பார்ப்பனியத்திற்கு துணைபோகும் போலித் தமிழ் தேசியவாதிகளை கண்டித்தும் ஏப்ரல் 21, 2025 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டஙக்ளை நடத்த இந்த மாநாடு முடிவு செய்கிறது. கழகத் தலைவர் இந்த தீர்மானத்தை முன்மொழிய கழகத் தோழர்கள் பலத்த கரவொலியுடன் வரவேற்றனர்.
பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு
தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும், அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும் திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று ‘பெரியார் பணி செய்வதே என் கடன்’ என்ற லட்சிய வெறியோடு ஒரு வாரகாலம் பயணித்த கழகச் செயல் வீரர்களை இம்மாநாடு பாராட்டுகிறது, மகிழ்கிறது.இந்தப் பயணத்தில் தோழர்கள் செலுத்திய உழைப்பு வீண் போகாது; வரலாற்றில் பதியப்படும் என்று இந்த மாநாடு பெருமை அடைகிறது.மாநாட்டிலிருந்து சில துளிகள்
- பயணக் குழுவினர் மயிலாடுதுறை கேணிக்கறையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக முழக்கங்களுடன் மாநாட்டு மேடைக்கு அணிவகுத்து வந்தனர்.
- கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனின் திராவிட மாடலா? ஆரிய மாடலா? நூலை (தலையங்கத் தொகுப்பு) கள்ளக்குறிச்சி பயணக்குழு பொறுப்பாளர் இராமர் வெளியிட பயணக்குழுவில் தொடர்ந்து வந்த சென்னை இரண்யா, சேலம் ஆனந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
- ரூபாய் 500 மதிப்புள்ள நூல் 400-க்கு விற்கப்பட்டது. அனைத்து பிரதிகளும் மாநாட்டில் விற்றுத் தீர்ந்தன.
- மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பில் கழக வளர்ச்சிக்கு ரூ.25,000 கழகப் பொருளார் சு.துரைசாமி அவர்களிடம் வழங்கப்பட்டது.
- மேடை அருகே அமைக்கப்பட்ட தனித்திரையில் பெரியார் பற்றிய குறும்படம் ஒளிப்பரப்பட்டது. குறும்படம் தோழர்கள் இடையே உணர்வலைகளை உருவாக்கியது. .பிரகாஷ் எழுத்தில் கொளத்தூர் கபிலன் ஸ்டுடியோ இந்த குறும்படத்தை உருவாக்கியது.
- பயணக் குழுவை வழிநடத்திய இரா.உமாபதி, காவை ஈசுவரன், கள்ளக்குறிச்சி இராமர், கோவை நிர்மல் பயண அனுபவங்களையும், மக்கள் தந்த ஆதரவுகளையும் விளக்கிப் பேசினர்.
- பெரியார் எந்த நோக்கத்திற்காக தனித்தமிழ்நாடு கேட்டாரோ அந்த நோக்கமும் காரணங்களுமே இப்போது அரசியல் போராட்டமாக நடக்கிறது என்று குறிப்பிட்ட பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பயணத்தில் பங்கேற்ற தோழர்களை பாராட்டும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
- நிறைவுரை ஆற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்தார் பெரியார் மீது கை வைத்தால் பார்ப்பனக் கருத்தியலின் வடிவமான சங்கராச்சாரிகளின் முகத்திரை கிழிக்கப்படும் என்று பலத்த கரவொலிகளுக்கிடையே அறிவித்தார்.
- கோவன் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் சனாதன எதிர்ப்புக் கருத்துக்களை கூர்மையாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சென்று உணர்வலைகளை உருவாக்கியது.
- பயணக் குழுவினருக்கு மயிலாடுதுறை மாவட்ட கழகத் தோழர்கள் கழகத்தின் புதிய வெளியீடுகளை பரிசுகளாக வழங்கினர்.
- மாநாட்டில் போராசிரியர் செயராமன், கோபி இளங்கோவன், ஆசிரியர் சிவகாமி, புதுவை தீனா, ராஜ்குமார் (காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்), கல்யாணம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), நிவேதா முருகன்(பூம்பூகார் சட்டமன்ற உறுப்பினர்), மோகன் குமார் (விசிக மாவட்டச் செயலாளர்), உரையாற்ற நடராசன்(மயிலாடுதுறை நகரச் செயலாளர்) நன்றியுரையாற்றினார்.
- பெரும் எண்ணிக்கையில் தோழர்கள் திரண்டனர் கருஞ்சட்டை கடலாக காட்சி அளித்தது மயிலாடுதுறை.
- மாநாட்டு ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட கழகத் தோழர்கள் மகாலிங்கம் (மாவட்ட தலைவர்), தில்லை நாதன், நடராசன்(நகர செயலாளர்), கு.செந்தில் குமார் (மாவட்ட அமைப்பாளர்), சூ ஆரோக்கியதாஸ், பீமராவ், இரா.விக்னேஷ், கே.ரமேஷ், நாஞ்சில் சங்கர்(நகர தலைவர்), மகேஷ் மாவட்டச் செயலாளர், இளையராஜா (தலைமைக் குழு உறுப்பினர்), விஜயராகவன் (மாவட்ட பொருளாளர்), காவியன், கார்த்தி மதன் குமார் (கடலூர் மாவட்ட அமைப்பாளர்), பிரகாஷ் சிதம்பரம், மகிழ்நன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். தோழர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.