புதிய கல்விக் கொள்கையை இந்தியாவிலேயே முதன்முதலில் நடைமுறைப்படுத்திய மாநிலம் கர்நாடகா. 2021-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசு, புதிய கல்விக் கொள்கையை அம்மாநிலத்தில் நடைமுறைப்படுத்தியது. 2023-ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்தவுடன், இந்தப் புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறுவது குறித்தும், மாநிலக் கல்விக் கொள்கையை வரையறுப்பது தொடர்பாகவும் 15 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு இதுவரை தங்களது வரைவறிக்கையைச் சமர்பிக்கவில்லை.

இதனால், புதிய கல்விக்கொள்கை இன்னும் அம்மாநிலத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி மும்மொழிக் கொள்கையும் கடைபிடிக்கப்படுகிறது. மூன்றாவது மொழியாக எந்த இந்திய மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று, தமிழ்நாட்டில் பா.ஜ.க. சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், கர்நாடகாவில் மூன்றாவது மொழியாக இந்திதான் கற்பிக்கப்படுகிறது. 6, 7-ஆம் வகுப்புகளில் இந்தி கற்றுக்கொடுக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோதும் முழுமையாக இந்தி ஆசிரியர்களை நியமிக்கவில்லை.

இப்படி, கற்றல் குறைபாட்டோடும், அதனால் ஏற்படும் மனச்சுமையோடும் இருக்கும் மாணவர்களுக்குப் பத்தாம் வகுப்பில் கட்டாயப்பாடமாக இந்தி வைக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் மட்டும் 90,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்திப் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர். எந்த வகையிலும் பயன்படாத ஒரு மொழியைக் கட்டாயமாக ஏன் கற்க வேண்டும், மாணவர்களை ஏன் இவ்வளவு நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்று கர்நாடக மாநிலக் கல்வியாளர்கள் விமர்சனங்களை வைக்கத் தொடங்கியுள்ளனர். கல்வியில் இருந்து மாணவர்களை விலக்கும் இந்தித் திணிப்பை நீக்க வேண்டுமென்று குழந்தைகள் உரிமை அமைப்புகள் பரப்புரையைத் தொடங்கியுள்ளன.

ஆபத்து வந்த பிறகு விழி பிதுங்கி நிற்கிறது, கர்நாடகா; வருமுன் காப்போம் என விழிப்போடு எதிர்க்கிறது, தமிழ்நாடு! 

எளிதில் கிடைக்கும் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு!

தமிழ்நாட்டில் சுமார் 10 ஆண்டுகளாக, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் MS / PhD போன்ற மேற்படிப்பு படிப்பதற்கு என்று உதவித்தொகை திட்டம் நடைமுறையில் இருக்கிறது. 2021-ஆம் ஆண்டுவரை இந்த திட்டத்தினால் பயன்பெற்றவர்கள் மொத்தம் 10 பேர்கூட கிடையாது. ஆனால், 2021ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இப்போது வரை மட்டும் சுமார் 135 பேர் இந்த திட்டத்தினால் பயன்பெற்று வெளிநாட்டில் படிக்கிறார்கள்.

பல மாணவர்கள் வருடத்திற்கு 30 லட்சம் ரூபாய் வரை இத்திட்டத்தில் நிதியுதவி பெறுகிறார்கள். கடந்த நிதி ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு சுமார் 30 கோடி ரூபாய் இதற்காக செலவு செய்திருக்கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

விடுதலை இராசேந்திரன்