திராவிட மாடல் ஆட்சி – ஒன்றிய ஆட்சியின் புறக்கணிப்புகளைத் திட்டவட்டமான ஆதாரங்களுடன் பேசி வருகிறது. தமிழ்நாடு வரலாறு காணாத மழைப் பொழிவால் கடும் பாதிப்புக்கு உள்ளான போது, ஒன்றிய ஆட்சி, மாநில நிலுவையில் இருந்த ரூ.450 கோடியை மட்டும் வழங்கி விட்டு தேசியப் பேரிடர் நிதியில் இருந்து ஒரு காசு கூட தராமல் மறுத்துவிட்டது. மாநிலப் பேரிடர் நிதி என்பது மாநிலத்துக்கு வழங்க வேண்டிய கட்டாய நிதி. நிதியமைச்சர் நிர்மலா, தேசியப் பேரிடர் நிதியை மறுத்ததை மறைத்து, மாநிலப் பேரிடர் நிதியை முழுமையாக வழங்கியதாக உண்மைக்கு மாறான கருத்தைத் தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மன்றத்தில் இதுதான் முக்கியப் பிரச்சனையானது. தமிழ்நாடு அரசை ஒரு போதும் வஞ்சிப்பதில்லை என்ற உண்மைக்கு மாறாக பாஜகவினரின் பரப்புரைக்கு தமிழ்நாடு வந்துள்ள நிதி ஆணையத் தலைவர் பேட்டியையே பதிலாகக் கூற முடியும்.
“இதுவரை நிதிக்குழு ஆணையம் இந்தியாவில் 12 மாநிலங்களுக்குச் சென்றுள்ளது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான், ஏன் நிதியை அதிகரிக்க வேண்டும் எனத் தெளிவாக விளக்கமளித்துள்ளது. ஆழ்ந்த ஆராய்ச்சி, தெளிவான பகுப்பாய்வுகளுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கைக்காகத் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இது ‘மாஸ்டர் கிளாஸ்’ அறிக்கை” என்று நிதி ஆணையக் குழுவின் தலைவர் அரவிந்த பனகாரியா மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
“மாநிலங்களின் செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜி.எஸ்.டி வரி விதிப்பு தடையாகி விட்டது. நிதி ஆதாரங்களை அதிகரிக்கும் வாய்ப்புகள் – கதவடைக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் ஒன்றியம் வரிகளாக ஈட்டும் பெரும் தொகையில் இருந்து மாநிலங்களுக்கு தரும் பங்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். மாநில வளர்ச்சியில் தான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அடங்கியிருக்கிறது. இதைச் செயல்படுத்தும் போது கூட்டாட்சித் தத்துவமும் வலிமையாகிறது” எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகச் சரியாக நிதிக்குழுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகத் தரம்தாழ்ந்த ‘அரசியலை’ எதிர்க்கட்சிகள் நடத்தி வருவதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு வீதியில் நிகழும் சம்பவங்கள் கூட தமிழ்நாட்டின் பிரச்சனையாக ஊதிப் பெருக்கப்படுகின்றன. சமூக ஒழுங்கு மீறல்களை எல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூப்பாடு போடுகிறார்கள்.
மருத்துவமனையில் ஒரு மருத்துவர் தாக்கப்பட்டால், தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களும் ஒவ்வொரு நாளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாக மிகைப்படுத்தப்படுகிறது. அற்ப அரசியலுக்கு முகம் தராமல் இவற்றைப் புறந்தள்ளி ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் திட்டங்களை முதல்வர் அறிவித்துக் கொண்டு வருகிறார். மாவட்டந்தோறும் அதிகாரிகளை நேரடியாக சந்தித்து வளர்ச்சித் திட்டங்களை முதல்வரும், துணை முதல்வரும் ஆய்வுக்குள்ளாக்கி வருவதை மக்கள் பார்த்துக் கொண்டிருகிறார்கள். அரசின் செயல்பாடுகளை நிதிக்குழு மட்டும் அல்ல, ஒன்றிய ஆட்சியின் கீழ் உள்ள நிதி ஆயோக்கும் பாராட்டுகிறது.
கடந்த ஜூலை மாதம் ‘2023-24’ ஆண்டுக்கான நிலைத்த வளர்ச்சி இலக்கு குறியீட்டு தரவரிசைப் பட்டியலை (sustainable development goals index) நிதி ஆயோக் வெளியிட்டது. அதில் வறுமை ஒழிப்பு, பட்டினி இல்லாமை, பாலின சமத்துவம், தரமான கல்வி உள்ளிட்ட 16 இலக்குகளில் இந்திய சராசரியை விடத் தமிழ்நாடு அதிக விகிதத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டியது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, தமிழ்நாடு அரசின் மருத்துவக் கட்டமைப்பை நாடாளுமன்றத்திலேயே பாராட்டுகிறார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு அய்.நா சான்றிதழ் வழங்குகிறது. இப்படி நீண்ட பட்டியலிடலாம் மக்கள் நலனுக்கான திட்டங்களை…
- விடுதலை இராசேந்திரன்