எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களைக் கவரக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியதாக தமிழ்நாடு நிதிநிலை இருக்கும் என்று ஊடகங்கள் பேசின. ஆனால் தமிழ்நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.
வாக்குகளை விட தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் முக்கியம் என்ற கவலையோடு தமிழ்நாடு அரசு செயல்படுகிறது என்பதையே இந்த நிதி நிலை அறிக்கை உணர்த்துகிறது. தலைசிறந்த பொருளாதார நிபுணர்களையும் விளிம்புநிலை மக்களையும் கலந்து ஆலோசித்து சர்வதேச அளவில் வெற்றியடைந்த திட்டங்களைக் கண்டறிந்து அவற்றை தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏற்ப வடிவமைத்து பல மாதங்கள் தீவிர ஆலோசனைக்கு பிறகு இந்த பட்ஜெட் உருவாக்கபட்டு இருக்கிறது என்று தமிழ்நாடு முதல்வர் விளக்கம் தந்துள்ளார்.
நிதி நிலை அறிக்கையில் கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் பெரியார் கவலையோடு கவனிப்பார். திராவிட இயக்கத்தின் அந்த கொள்கையின் பார்வையில் நின்று கல்விக்கு மட்டும் ரூ.55,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக் கல்விக்கு தரவேண்டிய 2,152 கோடி ரூபாயை நிறுத்தி வைத்துள்ளது. மும்மொழித் திட்டத்தை நிறைவேற்றினால்தான் தருவோம் என்று மிரட்டுகிறது. இந்த நிலையில் அந்த நிதியை மாநில அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு தமிழ்நாடு அரசின் கொள்கை உறுதிக்குச் சான்றாகும்.
மொழிக் கொள்கையைத் திணிப்பதற்கு, நிதியை நிபந்தனையாக வைக்கின்ற அணுகுமுறை வெட்கக்கேடானது. மும்மொழித் திணிப்புக்குப் பதிலடியாக மற்றொரு அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ரூபாயைக் குறிக்கிற தேவநாகரி எழுத்துக்களை மறுத்து, தமிழ் எழுத்தான ‘ரூ’-வை பட்ஜெட்டில் சின்னமாகப் பயன்படுத்தி இருக்கிறது.
“ரூபாய்க்கு பயன்படுத்தப்பட்ட தேவநாகரி எழுத்தைத் தவிர்த்து ‘ரூ’ என்ற தமிழ்ச்சொல்லை முதல்வர் அறிமுகப்படுத்தி இருக்கிறார்”. இந்த அறிவிப்பு வெளியான அதே நாளில்தான் 1975 மார்ச் 13-ஆம் நாள் முதல்வராக இருந்த கலைஞர் வெளியிட்ட ஒரு அறிவிப்பை அன்றைய ஒன்றிய அரசு மறுத்திருக்கிறது என்ற வரலாற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தேசியக்கொடிக்குப் பதிலாக தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி வேண்டும் என்று முதல்வர் கலைஞர் திட்டமிட்டார். மாநில காவல்துறைத் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடிக்குப் பதிலாக, மாநில அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் இந்த புதிய கொடி பறந்தது.
அன்றைய காங்கிரஸ் ஆட்சி இதை ஏற்க முடியாது, மாநிலங்கள் தனிக்கொடியை பயன்படுத்தக் கூடாது என்று உள்துறை அமைச்சகம் வழியாக எதிர்ப்பை தெரிவித்ததும் இதே மார்ச் 13ம் நாளில்தான். மாநில உரிமைக்காக திராவிட இயக்கம் தொடர்ந்து குரல் கொடுக்கிறது.
1967-இல் அண்ணா முதலமைச்சர் ஆனவுடன் அரசு இலச்சினையில் இருந்த “சத்திய மேவே ஜெயதே” என்ற சொற்றொடரை நீக்கிவிட்டு “வாய்மையே வெல்லும்” என்ற தமிழ்ச் சொல்லை புகுத்தினார். அதுவரை அரசு ஆவணங்களில் பயன்படுத்தி வந்த ஸ்ரீ, ஸ்ரீமதி என்ற வடமொழிச் சொற்கள் நீக்கப்பட்டு திரு, திருமதி என்ற அழகிய தமிழ் மொழிச் சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது வரலாறு.
சமூக நீதிப் பார்வையில் பல்வேறு திட்டங்கள் நிதிநிலைக் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மகளிர்க்கு தோழி விடுதிகள், மூத்த குடிமக்களுக்கு அன்புச் சோலை மையங்கள், திருநங்கைகள் உயர்கல்விக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பெண்கள் பெயரில் சொத்துக்களைப் பதிவு செய்தால் 1% வரிச்சலுகை, சமூக நல்லிணக்கம் பேணும் கிராமங்களுக்கு ஒரு கோடி பரிசு, 1 லட்சம் மாணவர்களுக்கு 2,500 கோடி கல்விக்கடன், சென்னையில் 100 கோடியில் அறிவியல் மையம், முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு கூடுதலாக 3,000 வீடுகள், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய், சத்துணவு ஊழியர்கள் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு, ஊர்க்காவல் படையில் 50 திருநங்கைகள் நியமனம், 45 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு, சுய உதவிக் குழு பெண்கள் தயாரிக்கும் பொருட்களை கொண்டுச் செல்ல பேருந்துகளில் கட்டணமில்லா சேவை. 20 இலட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி என்று அடுக்கடுக்கான சமூகநீதித் திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி அறிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டும். ‘அனைவரையும் உள்ளடக்கிய சமூக பொருளாதார நீதியே திராவிட மாடல்’ என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை.
- விடுதலை இராசேந்திரன்