பெரியாரை விமர்சிக்கும் அடிமுட்டாள்கள்!
(சென்னையில் பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் தொடர்ச்சி)
பெரியார் ஆங்கிலம் படிக்கச் சொன்னார். தேவநேயப் பாவணரும், பாவலர் பெருஞ்சித்திரனாரும் சேர்ந்து ஆங்கிலமும் தமிழும் படிக்க வேண்டும் என்று சொன்னவர்கள்தான். ஆராய்ச்சிப் படிப்புகள் வரைக்கும் தமிழில் படிக்க வேண்டும் என்ற குரலும் அப்போதே ஒலிக்கத் தொடங்கியது. “தமிழில் சொற்களே இல்லை, தமிழில் எப்படி ஆராய்ச்சி படிப்புகளை படிக்க முடியும்?” ஆனால் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தமிழ்வழிக் கல்வி மாநாட்டில் பேசும்போது தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்று சொல்லுவேன்.
உடனே மணியரசன் போன்றவர்கள், மணி தமிழர் இல்லை, தமிழருக்கு பெருமிதம் இல்லை என்று வசைபாடுவார்கள். அடுத்தக் கூட்டத்தில் நான் சொன்னேன், “தமிழர்களுக்கு பெருமிதமான வரலாறே இல்லை; அடிமை வரலாறு, சூத்திர வரலாறுதானே நமக்கு எல்லாம். அழகான தமிழ்ப்பெயர் அருண்மொழிவர்மன் என்பதை ராஜராஜ சோழன் என்ற வடமொழி பெயராக மாற்றிக் கொண்டவர்.அவரை இந்த தமிழ்க் கம்பெனிகள் எல்லாம் சிறந்த தமிழர் என பட்டம் கொடுப்பார்கள், பாராட்டுவார்கள். நாங்கள் ஏதாவது விமர்சனம் செய்தால் எங்களை தமிழர் இல்லை என்பார்கள்” என்றேன்.
ஆனால் தமிழர்களுக்கு பெருமிதமான வரலாற்றைப் படைக்க வேண்டும் என்று வந்தவர்கள்தான் பெரியாரும், அண்ணாவும். பெருமிதம் என்பது பிதற்றிக் கொள்வது அல்ல. மற்றவர்கள் நம்மைப் பார்த்து பெருமை கொள்கிற உயர்ந்த நிலை நமக்கு வரவேண்டும் என்று விரும்பியவர்கள்.
தஞ்சை தமிழன், குத்தூசி குருசாமிதான் எழுத்துச் சீர்திருத்தத்தை செய்தார் என்று மணியரசன் போன்றவர்கள் சொல்வார்கள். அதாவது பெரியார் செய்யவில்லை, கன்னடர் செய்யவில்லை, இவர்கள்தான் செய்தார்கள் என்று மார்தட்டிக் கொள்வார்கள். ஆனால் பெரியார் எதையும் மறைத்துக் கொண்டதில்லை, ஆ.சி. சுப்பையா என்ற ஒருவர் சிங்கப்பூரில் இருந்தார். “சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்” என்ற எல்லா புராணங்களில் உள்ள பொய்மைகளை அம்பலப்படுத்தி எழுதியவர். அவர் எழுத்து சீர்திருத்தம் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதுகிறார்.
அதைப் பார்த்து தெரிந்த பெரியார், ஈரோட்டில் சுயமரியாதைக் கழகத்தின் சார்பாக மறு வெளியீடு செய்கிறார். 1931-இல் இருந்து ‘முன்னேற்றம்’ இதழில் தொடர்ச்சியாக எழுதி வந்த கட்டுரையை நாங்கள் மறு வெளியீடு செய்கிறோம் என்றுதான் பெரியார் அந்த புத்தகத்தை வெளியிட்டார். அதேபோல் குத்தூசி குருசாமி முன்மொழிந்த தீர்மானம் அனைத்தும் குடியரசில் பதிவாகி இருக்கிறது. தமிழன்பர் மாநாடு பார்ப்பனர்கள் சேர்ந்து இந்த மாநாட்டை நடத்துகிறார்கள். ஐயங்கார், ஐயர் வகையறாக்கள், சில அனுமான்கள் இருந்திருப்பார்கள். தமிழர் என்று சொல்வதில் கூச்சம் இந்த பார்ப்பனக் கூட்டத்திற்கு.
அடுத்த மாநாடு துறையூரில் ‘தமிழர் மாநாடு’ என்ற தலைப்பில் நடத்துகிறார்கள். தமிழன் என்று சொன்னால் உள்ளே வந்து விடுவான் பார்ப்பான் என்ற எண்ணம் பெரியாருக்கு அப்போதுதான் வந்திருக்க வேண்டும். இந்த மாநாட்டில் தீர்மானம் கொடுக்கிறார்கள். ஒரு வேடிக்கையான தீர்மானம், குத்தூசி குருசாமி அவர்கள் எழுதி ஒரு தீர்மானத்தை கொடுக்கிறார். ‘தென்னாடுடைய சிவனே’ என்று எழுதி இந்தியாவிற்குள் பிரிவினையை உண்டாக்கும் சிவனை கண்டிக்கிறோம் என்றுகூட ஒரு தீர்மானத்தை முன்மொழிகிறார்கள்.
தமிழர் மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் சம்பந்தமாக தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்கள். சாத்தான்குளம் ராகவன் ஒரு முன்னுரை எழுதுகிறார், பெரியார் 1934-இல் சிறையில் இருந்து வந்தபோது எழுத்து சீர்திருத்தம் பற்றி என்னிடம் கூறினார். கொம்பு லை, வை, துணைக்கால் போன்ற எழுத்துக்கள் மாற்றப்பட வேண்டும் என்று சொன்னார் பெரியார். உடனே ராகவன் சொன்னார் ஐ, வ், போன்ற எழுத்துக்களை அய், அவ் என மாற்றினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். உடனே பெரியார் நல்ல யோசனைதான் தொடக்கத்தில் இதை மட்டும் செய்யலாம் என்றார். உடனே அதையும் செய்தால் குழப்பம் ஏற்படுத்தும் என்றார் பெரியார்.
பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் அமைச்சர் என்ற பெயரில் அந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இதையெல்லாம் பெரியார் மக்களிடம் வெளிப்படையாகவே சொன்னார். 1934-இல் ராகவன் சொன்னதையும் குத்தூசி குருசாமி கொண்டு வந்த தீர்மானத்தையும் பெரியார் மறைக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை, நான்தான் செய்தேன் என்று எங்கேயும் சொல்லியதும் இல்லை. பெரியார் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளும் அவரே சொன்ன செய்திகள்தானே ஒழிய இவர்களெல்லாம் கண்டுபிடித்த செய்திகள் எதுவும் இல்லை.
பெரியார் மீதான விமர்சனங்களில் அவர் நிர்வாண சங்கத்தில் கலந்து கொண்டார் என்ற ஒரு விமர்சனம் உள்ளது. சோசலிஸ்ட் நடத்துற நிர்வாண சங்கத்திலும் கலந்து கொண்டார், பூஸ்வாக்கள் நடத்துகிற நிர்வாண சங்கத்திலும் கலந்து கொண்டார். என்ன வேறுபாடு இவர்கள் இருவருக்கும் என்று போய் பார்த்து, அதை அறிந்து கொண்டு வருகிறார். இவை அனைத்தையும் குடியரசில் படமாக வெளியிட்டும் இருக்கிறார். அவரே வெளியிட்ட செய்தியை வைத்துக்கொண்டுதான் இந்த விமர்சனத்தை வைக்கிறார்கள்.
காவிரி கரையில் மைனராக இருந்தார் என்றும் சொல்கிறார்கள். அதையும் பெரியார்தான் சொன்னார். நான் பொது வாழ்க்கைக்கு வரும் முன்னர் வாலிப வயதில் சகல இன்பங்களையும் அனுபவித்தவனாக இருந்தேன் என்று அவரே அவர் வாழ்க்கை வரலாறு எழுதியிருக்கிறார். இந்த விமர்சனம் வைக்கும் கயவர்கள் எதையாவது மறைத்த்தைக் கண்டுபிடித்துச் சொன்னார்களா என்றால் இல்லை, பெரியாரே தன் மீதான அத்தனை விமர்சனத்திற்கும் பதிலையும் விமர்சனத்தையும் சொல்லி இருக்கிறார். அவற்றை எடுத்துதான் இப்போது இந்தக் கும்பல்கள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.குறை சொல்வதற்குக் கூட ஒரு சின்ன ஆதாரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பார்ப்பார்கள், சுத்தமாக இருப்பதை மறைத்து உண்மைக்கு புறம்பாக எழுதுவதை இந்த கயவர்கள் கூட்டம் செய்து கொண்டிருக்கிறது.
திராவிட நாடு கேட்பவர்கள் எல்லாம் தமிழர்கள் தான் என்று எப்போது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் முதன் முதலில் டி.எம் நாயர் நீதிக்கட்சியில் 1917 ஆண்டு நவம்பர் மாதம் தலையங்கம் ஒன்றை எழுதுகிறார். அதில் இந்த நாட்டில் சகோதர மொழிகளான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளும் இறையாண்மைகளை அமைத்து federation ஆக வைப்போம். அதனால்தான் சவுத் இந்தியன் என்ற பெயரை சேர்த்து நாங்கள் அமைப்புக்கு வைத்துக் கொண்டோம் என்று ஒரு மலையாளி எழுதுகிறார்.
1926 மார்ச் சர். சங்கரன்நாயர் தனித்தமிழ்நாடு கேட்டார். 10 மாவட்டங்கள் தனியாக அமைத்து அஞ்சல், தந்தி, தரைப்படை, வான்படை, கடற்படை கொண்ட உரிமையுள்ள ஒரு நாடாக அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மத்திய சட்டமன்றத்தில் 1926 இல் முன்மொழிந்தார். பெரியார் திராவிட நாடு கேட்டார் பெரியார் பேசியது சென்னை மாகாணத்தை மட்டுமே. ஆனால் அண்ணா சொன்னார் மொழி வழி பிரிந்து, இன வழி கூடியிருக்கும் பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய திராவிட சமதர்மக் கூட்டரசு என்றுதான் அண்ணா சொன்னார்.
பெரியார் அண்ணா மீது விமர்சனம் செய்பவர்கள் முழு செய்திகளைப் படிக்காமல் அரைகுறை செய்திகளைப் படித்துவிட்டு, அல்லது ஒற்றை வரியைத் தனியாக பிரித்தெடுத்துதான் ஆசான்களும் ஆசான்களுக்கு அடிமுட்டாள்களாக இருக்கும் தொண்டர்களும் செய்து கொண்டிருக்கிற கூச்சலில் தான் மீண்டும் பெரியாரைப் பற்றி அனைவரும் படிக்கிறார்கள்; தேடுகிறார்கள். ராஜாஜி எடுபிடியாக நான் உடைக்க முடியாத வியூகங்களை எல்லாம் அபிமன்யு போல் உடைத்துக் கொண்டு போய் தமிழர்களிடம் என் கருத்தை சேர்ப்பேன் என்று சொன்னார் ஏவல் நாயாக இருந்த ம.பொ.சி இருந்தார். இன்றைக்கு குருமூர்த்தி, கோபால் ஜி போன்றவர்கள் இன்னொரு ஏவல் நாயாக இன்றைக்கு இருக்கிற போலித் தமிழ்த் தேசியரைப் பயன்படுத்துகிறார்கள். இப்படி ஏவல் நாய்களாக இருந்து பழகிப்போன இந்த நாய்கள் தான் பெரியாரை இன்றைக்கு வேகமாக தேட வைத்திருக்கிறார்கள்
(நிறைவு).