அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, அங்கு கருக்கலைப்பு உரிமை பறிபோகும் என்ற அச்சம் பெண்களிடத்தில் எழுந்திருக்கிறது. இதனால் அமெரிக்காவில் 4-பி இயக்கத்தை ஆதரிக்கும் பெண்கள் கூட்டம் பெருகி வருகிறது. உலகெங்கும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் பெண்களை ஒருங்கிணைக்கும் ‘மீ டூ’ இயக்கம் போல, இந்த ‘4-பி’ என்பது கலாச்சாரங்கள், புனிதங்களின் பெயரால் பறிக்கப்படும் பெண்ணுரிமைகளை மீட்பதற்கான இயக்கமாக உருப்பெற்று வருகிறது.
இந்த இயக்கம் 2010-ஆம் ஆண்டில் தென் கொரியாவில் சமூக வலைத்தளங்களின் மூலம் உருவானது. படிப்படியாக வலுப்பெற்று வெவ்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், பெண் விடுதலைக்காகப் பெரியார் முன்வைத்த கருத்துக்களே இந்த ‘4-பி’ இயக்கத்தால் ஒருங்கிணைந்த பெண்கள் முன்வைக்கும் முழக்கமாக இருக்கிறது.
“1. பெண்கள் படிக்க வேண்டும்.
2. பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே நடத்திக் கொள்ளக் கூடிய அளவுக்கு ஊதியம் தேட ஆரம்பித்து விட்டாலே ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
3. ஆண்களைப் போல உருவத்தில் வேறுபாடு தெரியாத அளவுக்கு பெண்களும் சட்டை, பேண்ட், லுங்கி அணிய வேண்டும்.
4. குழந்தை பெறும் இயந்திரங்களாக பெண்கள் இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் கருப்பையை அறுத்தெரியவும் தயங்கக்கூடாது.
5. நகை மாட்டிக் கொள்ளும் ஸ்டாண்டுகளாகவும் பெண்கள் இருக்கக்கூடாது.”
போன்ற முற்போக்குக் கருத்துக்களைப் பெரியார் முன்வைத்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகி விட்டது. இதே கருத்துக்களை முன்வைத்துதான் இந்த ‘4-பி’ இயக்கமும் உருவாகியிருக்கிறது.
‘4-பி’ என்றால் என்ன?
கொரிய மொழியில் ‘bi’ என்றால் மறுப்பது என்று பொருள்படுகிறது. ‘4-பி’க்களை மறுப்பது என்பது இதன் குறிப்புச்சொல். bihon (திருமணம் கூடாது), bichulsan (குழந்தை கூடாது), biyeonae (ஆண்களோடு காதல் கூடாது), bisekseu (ஆண்களோடு உடலுறவு கூடாது) என்பது அவர்கள் முன்வைக்கும் நான்கு முழக்கங்கள். காதல் கூடாது, திருமணம் கூடாது, உடலுறவு கூடாது என்று பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கூறுவது இயற்கைக்கு முரணானது என்று எதிர்ப்புகள் எழுகின்றன. ஆனால் அத்தகைய முழக்கங்களை முன்வைப்பதற்கான நியாயமான காரணங்கள் பெண்ணிய செயற்பாட்டாளர்களிடத்தில் உள்ளது.
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது தென் கொரியா. தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கிறது. வேலைவாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும் இத்தகைய வளர்ச்சியை அனுபவிப்பதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆண்களுக்கு நிகராக ஊதியம் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. திருமணம் செய்துகொள்வது, குழந்தை பெற்றுக் கொள்வது, பராமரிப்பது, குடும்பத்திற்கான வீட்டு வேலைகளைச் செய்வது என்ற கட்டாயங்கள் இன்னமும் பெண்களுக்கு இருக்கிறது. ஆண்கள் வேலைக்குச் செல்கிறார்கள், ஊதியம் பெறுகிறார்கள், பொருளாதார தன்னிறைவை அனுபவிக்கிறார்கள். ஆனால் பெண்கள் மட்டும் இன்னும் எத்தனைக் காலத்திற்கு வீட்டு அடிமைகளாகவே இருக்க வேண்டுமென்று கேள்வி எழுப்புகிறார்கள்.
பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தை விடுவிக்க வேண்டுமென்பதும் இவர்கள் பரப்புரையில் முக்கிய அங்கம். மொத்தத்தில் கலாச்சார கட்டாயங்களைக் கட்டுடைத்து, பொருளாதார சுதந்திரத்தைப் பெறுவதற்கான முன்னெடுப்புக் கருவியாக ‘4-பி’ இயக்கத்தை பெண்ணிய செயற்பாட்டாளர்கள் பயன்படுத்துகின்றனர். 2010ஆம் ஆண்டிலேயே எழத் தொடங்கிய இம்முழக்கங்கள், 2016 ஆம் ஆண்டு சியோலில் பெண் ஒருவர் ரயில் நிலைய கழிவறையில் ஒரு ஆணால் கொல்லப்பட்ட பிறகு வேகமெடுத்தது.
குழந்தை பெறும் கருவியல்ல பெண்கள்!
இந்த 4-பி இயக்கம் வலுப்பெற்றதில் தென் கொரிய அரசுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. குழந்தை பிறப்பு விகிதம் வேகமாக சரியும் நாடுகளில் ஒன்றாக தென் கொரியா உள்ளது. இதை ஒரு தேசிய இடராகக் கருதும் அந்நாட்டு அரசு, புதுமணத் தம்பதிகளுக்கு மானிய விலையில் வீடுகள் தருகிறது. திருமணம் செய்துகொள்ளவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. அரசின் இத்தகைய முடிவுகள் பிற்போக்குத்தனமானது என்று பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கண்டிக்கின்றனர்.
குறிப்பாக, 2016ஆம் ஆண்டில் தென் கொரிய அரசு pink birth map என்ற தேசியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அந்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தை பெறத் தகுதியான வயதில் உள்ள பெண்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை தெரியப்படுத்தும் மோசமான திட்டம் அது. இந்தத் திட்டத்திற்கு எதிராக பொங்கியெழுந்த அந்நாட்டுப் பெண்கள் முன்வைத்த முழக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு பெரியாரால் முன்வைக்கப்பட்டது. “எங்கள் கருப்பை பொதுச்சொத்து அல்ல. பெண்கள் குழந்தை பெறும் இயந்திரமும் அல்ல” என்பதுதான் அந்த முழக்கம்.
இப்போது அந்த முழக்கம் அமெரிக்காவிலும் எழத் தொடங்கியுள்ளது. ஆணாதிக்கத்திற்கெதிரான இந்த முழக்கங்கள் நாளை உலகெங்கும் பரவும். அந்த முழக்கங்களின் ஊடாக பெரியார் கொள்கைகளும் உலகமயம் ஆகும்!
- ரா.பிரகாசு