• வர்ணசிரமத் தர்மத்தைக் காப்பாற்ற எந்த அதர்மத்தையும் செய்யலாம் என்றான் பார்ப்பான்; பின் தர்மம் கெட்டது.
• பல ஜாதி மாடுகளை எடுத்துக் கொண்டால், இது நெல்லூர் மாடு; இது காங்கேயம் மாடு; இது மணப்பாறை மாடு; இது பர்கூர் மாடு என்று பிரித்து அடையாளம் காட்டலாம். நாயை எடுத்துக் கொண்டாலும், இது கோம்பை நாய், இது ராஜபாளையம், இது புல்டாக், இது அல்சேஷன் என்று அடையாளம் காட்ட முடியும். ஆனால் மனிதரில் எதைக் கொண்டு கூற முடியும். பார்ப்பனப் பெண், செட்டியார் பெண், நாயுடு பெண், பறையர், சக்கிலிப் பெண் இவர்களை எவ்வித அடையாளமும் இன்றி அம்மணமாக நிறுத்தினால், இதில் பார்ப்பனப் பெண் யார், செட்டியார் பெண் யார், நாயுடு பெண் யார், பறையர், சக்கிலிப் பெண் யார் என்று எதைக் கொண்டு அடையாளம் காட்டுவாய்?
• உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால், இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்க வேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணத்துக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் சீவனுத்துக்கு மார்க்கமில்லாவிட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டுச் சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால், வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணிவில்லையெனில், உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன்.
• தொழில் பாகுபாட்டைக் கொண்டு ஜாதி வகுக்கப்பட்டதே ஒழியப் பிறவியைக் கொண்டு அல்ல என்கின்றனர் ஒரு சிலர். ஒரு மனிதன் காலையில் தச்சனாகவும், நண்பகலில் வியாபாரியாகவும், இரவில் ஆசிரியனாகவும், மறுநாள் காலை உழுவோனாகவும், பகலில் நெய்வோனாகவும், இரவில் காவல்காரனாகவும் ஏன் இருக்கக் கூடாதென அவர்களைக் கேட்கிறேன்.
- பெரியார்