சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் 29.10.2024 அன்று நிமிர்வோம் வாசகர் வட்ட சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு சிறப்புக் கூட்டம் நடந்தது. அடிகளார் படத்தைக் கழகப் பொதுச் செயலாளர் திறந்து வைத்து ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி..

மறைமலை அடிகளாருக்கும் – பெரியாருக்கும் இடையே உரசல் ஏற்பட்டாலும் சித்தாந்த மோதல் தொடர்ந்து கொண்டே இருந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம், பார்ப்பனியத்தை மட்டுமல்ல; சைவத்தையும் கேள்விக் கேட்டது. பார்ப்பனரல்லாதார் என்பதற்காக சைவத்தின் பிற்போக்குத்தனங்களை எதிர்க்காமல், சுயமரியாதை இயக்கம் ஒதுங்கி நிற்கவில்லை.

1929 பிப்ரவரி மாதம் செங்கல்பட்டில் பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்க மாநாட்டின் தீர்மானங்கள், சைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜாதி ஒழிப்பு, புரோகித மறுப்பு, தீண்டாமை, பெண்ணுரிமை தீர்மானங்களோடு நிற்காமல், மதச் சின்னங்களை அணியக்கூடாது என்ற தீர்மானம் ‘மந்திரமாவது நீறு’ என்று திருநீற்றுப்பதிகம் ஓதிய சைவர்களைப் பதற வைத்தது.

குடிஅரசு – சமயங்களையே எதிர்க்கத் தொடங்குவதா? மூட எண்ணங்களுக்கு தீர்வு சமயங்களையே எதிர்ப்பதா என்று சைவர்கள் கொந்தளித்தனர். தீவிர சைவர்கள் ‘சைவ சித்தாந்த மகா சமாஜம்’ ஆண்டுக் கூட்டத்தை சென்னையில் கூட்டினார்கள். (1928, டிசம்பர் 25). அதைத் தொடர்ந்து தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கத்தின் ‘ஆண்டு விழா’வும் நெல்லையில் நடத்தப்பட்டது. (1929 ஜனவரி 2)

செங்கல்பட்டு சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் சைவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே அசைக்கத் தொடங்கியது. சைவப் பெரியார்கள் சென்னையில் கூடினார்கள். அந்த கூட்டம் சைவத்தின் கொள்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று அறிவித்தது. அந்தத் தனிக்கூட்டம் விவாதிக்கும் கருத்துகளை இவ்வாறு பட்டியலிட்டது.

•           நல்லொழுக்கம் வளர்க்கும் நாகரீகத்துக்கு சமயம் அவசியமா?

•           ஆம் எனில். சமய வாழ்வின் இயல்பு என்ன?

•           இந்நூற்றாண்டில் எத்தகைய சமயம் தேவை?

•           சைவ சமயம் அச்சமயமாக இருக்க இயலுமா?

• ‘சைவ சமயத்தின் இன்றியமையாக் கோட்பாடுகளும் அநுட்டானங்களும் எவை?’ என்பவை உள்ளிட்ட 25 வினாக்கள் விவாதிக்கப்படும் என்று அறிவித்தது. (குடிஅரசு 1929 – மார்ச் 24)

சைவர்கள் இடையே மூன்று அணிகள் உருவாகின. தீவிர சைவர்கள் – நடுத்தர சைவர்கள் – சுயமரியாதை இயக்க ஆதரவு சைவர்கள். சுயமரியாதை இயக்கத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க சில சீர்திருத்தங்களைச் செய்து கொண்டு சைவத்தை மீட்க வேண்டும் என்ற நடுத்தர சைவர்கள் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. திரு.வி.கல்யாணசுந்தரம் (திரு.வி.க.), மா.பாலசுப்பிரமணிய முதலியார், சச்சிதானந்தம் பிள்ளை போன்றோர், இந்த நடுத்தர சைவப் பிரிவில் இருந்தனர். சொ.முருகப்பா, வ.உ.சிதம்பரம் பிள்ளை (வ.உ.சி), பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை, குத்தூசி குருசாமி, நாகர்கோயில் வழக்கறிஞர் சிதம்பரம் பிள்ளை, பாலசுப்பிரமணிய முதலியார் சுயமரியாதை இயக்க ஆதரவாளர்கள்.

சென்னையில் கணபதி விலாச நாடகச் சபையில் கூடிய கூட்டத்தில் நடுத்தர சைவர்கள் கை ஓங்கியிருந்ததால் சில சீர்திருத்தத் தீர்மானங்களோடு, சைவத்தை முழுமையாக ஏற்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சைவ சமயம் எச்சமயத்துக்கும் பொருத்தமானது, நல்லொழுக்கத்துக்கு கடவுள் நம்பிக்கை அவசியம் என்ற தீர்மானங்களோடு தேவதாசி முறையை ஒழித்தல், கோயில் வழிபாட்டில் மக்களிடையே உயர்வு தாழ்வு ஒழித்தல் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எல்லோருக்கும் கோயில் நுழைவை வலியுறுத்தும் தீர்மானத்தில் ‘தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனையை இத்தீர்மானம் விதித்தது. இதற்கு சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக இருந்த கோவை அய்யாமுத்து பதிலடி தந்தார்.

“அய்யா, சைவப் பெரியாரே! தாங்கள் கோரும் “சுத்தம்” அகச்சுத்தமா? புறச்சுத்தமா? அகச்சுத்தமாயின், அகச்சுத்தமுள்ளவனுக்கு கோயில் எதற்கு? புறச்சுத்தமாயின், நாளைய தினமிருந்து தங்களை ஒரு அழுக்குள்ள குடிசையில் குடியிருக்கச் செய்து, திருநெல்வேலியிலுள்ள கக்கூசு மலங்களையெல்லாம் வாரியெடுத்து அப்புறப்படுத்துவதைத் தங்களுக்கு தொழிலாகக் கொடுத்து அதற்காகத் தங்களுக்கு மாதம் ஐந்து ரூபாய் சம்பளங்கொடுத்து, கிணற்றிலும் அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டால் தாங்கள் “சுத்தமாக” இருக்க முடியுமா?” என்று கேட்டார் கைவல்யம் (குடிஅரசு, 1929 ஏப்ரல் 28)

தீண்டாமை உள்ளிட்ட கொள்கைகளை ஆதரித்த கடும் சைவர்கள், இந்த நீர்த்துப்போன தீர்மானத்தைக் கூட ஆதரிக்காமல் எதிர்த்தனர். ‘சிவநேசன்’ என்ற செட்டிநாட்டு இதழ் – இந்தச் சீர்திருத்தத் தீர்மானங்களைக் கடுமையாக எதிர்த்தது.

“சைவத் திருக்கோயில்களில் பாகுபாடு இன்றி எல்லோரும் செல்லலாம் என்பதற்குத் தக்க ஆதாரங்களைக் காட்ட முடியுமா? என்று ஜாதிவெறியுடன் எழுதியது அந்தப் பத்திரிகை. – (சிவநேசன் 1929 மே 1)

“தீண்டாமை சிவபெருமானால் வகுக்கப்பட்டது” என்றும் அந்தப் பத்திரிகை பச்சையாக எழுதியது. (செப்டம்பர் – 1927)

இந்த கூட்டத்தில் பங்கேற்ற வ.உ.சிதம்பரம் பிள்ளை (வ.உ.சி), சைவ சமயத்தை சீர்திருத்த திருநீறு, உருத்திராக்கம் (கழுத்தில் அணியும் உத்திராட்சம்) தேவையில்லை என்று பேசினார். தீவிர சைவர்கள் எதிர்த்ததால், வ.உ.சி அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதுபற்றி ‘குடிஅரசு’ இவ்வாறு எழுதியது.

“விஷயாலோசனைக் கமிட்டியில் திருவாளர் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை, திரிகூடசுந்தரம் பிள்ளை முதலியவர்கள் கூட்டத்திற்கு அனுமதிக்கப்படவில்லையாம். இதனால் திரு. சிதம்பரம் பிள்ளை அவர்கள் சைவப் பெரியார் மகாநாட்டிற்கு வந்ததில் சைவத்தில் மற்றவர்களையும் பற்றுக்கொள்ளச் செய்வதற்குப் பதிலாகச் சைவத்தில் இருந்து பிரிந்து போக நேரிட்டது தான் சைவப் பெரியார் மகாநாட்டின் பலன் என்று சொல்லிக்கொண்டு வெளியேறிவிட்டாராம். (குடிஅரசு ஏப்ரல் 7, 1929)

நெல்லையில் நடந்த மாநாட்டிலும் தீவிர சைவர்களுக்கும் – நடுத்தர சைவர்களுக்கும் மோதல் ஏற்பட்டன. வறட்டுச் சைவத்துக்கு நெல்லை மாநாடு நெருக்கடியை உருவாக்கியதாக பெரியாரின் ‘ரிவோல்ட்’ (ஆங்கில இதழ், ஏப்ரல் 10, 1929) எழுதியது.

கடும் சைவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள் என்பதற்கு சான்று சென்னை தனிக்கூட்டத்தில் நடந்த கூத்து. அந்தக் கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டவர்களிடம் சைவம் குறித்தக் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு சரியான விடை தந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சைவத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்று பேசிய பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை ஓர் காந்தியவாதி, சுயமரியாதை இயக்க ஆதரவாளர் அல்ல. கூட்டத்தில் பங்கேற்க அவரது சைவப்புலமைக்கு தேர்வு வைத்தவர்கள், சரியான பதில் இல்லை என்று கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுத்தன்ர். மிகக் கடுமையான விவாதத்திற்குப் பிறகு அவருக்கு அனுமதி கிடைத்தது.

அதே காலகட்டத்தில் பெரியார், செங்கல்பட்டில் நடத்திய சுயமரியாதை மாநாட்டுக்கு பெண்கள், விதவைகள், தாசிகள் என்று கூறப்படுவோர் அனைவரும் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சைவத்துக்கு சுயமரியாதை இயக்கத்துக்கான கொள்கை முரண்பாடுகளை உணர்த்துகிறது. இதைத் தொடர்ந்து 1929, மே மாதத்தில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மறைமலை அடிகளார் தலைமையில் நடந்தது.

நடுத்தர சைவர்கள் இம்மாநாட்டிலும் குழப்பம் வந்துவிடக்கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மாநாட்டில் பங்கேற்கவரும் ஒவ்வொருவரும் உண்மையான சைவர்கள் தான் என்று, சைவச் சபையின் பரிந்துரைக் கடிதத்தைக் கொண்டுவர வேண்டும். பேசவிருக்கிறவர்கள் முன் அனுமதி பெற வேண்டும். தீர்மானங்கள் கொணர விரும்புவோர் முன்கூட்டியே எழுத்தில் அனுப்ப வேண்டும் என்ற கடுமையான விதிகள் உருவாக்கப்பட்டன. (நவசக்தி ஏடு, 1929, மே 8)

சுயமரியாதை இயக்க ஆதரவு சைவர்கள் உள்ளே வந்து விடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இவை. நடுத்தர சைவர்கள் சுயமரியாதை இயக்க ஆதரவு சைவர்களை விலக்கி வைக்கும் நோக்கத்தில் வெற்றிபெற்றனர். இந்த மாநாடு ஆறுநாள் நடந்தது. ”சைவத்தில் எந்தச் சீர்திருத்தமும் பழைய கோட்பாடுகளுக்கு உட்பட்டே இருத்தல் வேண்டும். திருநீறு, உத்திராட்ச மாலை அணிவது கட்டாயம்” இவைகளை ஏற்போரே சைவர் என்று தீர்மானங்களை நிறைவேற்றியது. சைவர்களை ஒரு கட்டமைப்புக்குள் திணிக்கும் முயற்சியாகவே இருந்தது.

தீவிரமான சைவர்கள் கூட பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவே இருந்தனர். ஆனால் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாடு சைவத்துக்கு தந்த அதிர்ச்சி வைத்தியத்தின் காரணமாக அவர்கள் பார்ப்பனர்களோடு சமரசம் செய்து கொண்டு சுயமரியாதை இயக்கத்தை எதிர்க்கத் தொடங்கினர். கடும் சைவரான பொ.முத்தையா பிள்ளை மாநாட்டுத் தீர்மானங்களைக் கடுமையாகக் கண்டித்தார். “பார்ப்பன துவேஷம், வடமொழி துவேஷம் காரணமாக மனம் போனவாறு சைவத்தில் மாறுதல் செய்யக்கூடாது” என்று எழுதினார். (சிவநேசன், 1929, மே)

சைவத்துக்கு எதிரான ‘வேதாந்தம்’ என்ற பார்ப்பனக் கருத்தியலை ஏற்றுக் கொண்டிருந்த கோ.வடிவேலு செட்டியார் ‘லோகோபகாரி’ என்ற பத்திரிகையை நடத்திவந்தார். சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க, மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட அமைப்புகளோடும் இணைந்து செயல்பட தீவிர சைவர்கள் முடிவு செய்தனர். வேதாந்தத்தைப் பரப்பும் ‘லோகாபகாரி’ பத்திரிகையையும் பயன்படுத்தலாம் என்று கடும் சைவர்கள் கூறினார்கள். திரிப்பாதிரிப்புலியூர் மாநாடு நிறைவேற்றிய ஒரு தீர்மானம் இவ்வாறு கூறுகிறது. “சைவ சமயத்தவர்கள் கடவுள் நம்பிக்கை உண்டு என்ற கொள்கையைப் பாதுகாப்பதிலும் பொதுநலம் கருதிய அருளொழுக்கத்தைப் பரப்புவதிலும் தம்மோடு இணங்கிவரும் ஏனைய சமயத்தவரோடு ஒத்துழைத்தல் வேண்டும். (சித்தாந்தம் இதழ் : 1929, ஏப்ரல்)

‘லோகோபகாரி’யின் ஆசிரியரும், வேதாந்தியுமான கோ.வடிவேலு செட்டியார், “சுயமரியாதை பெயரில் செய்துவரும் நாஸ்திகப் பிரச்சாரத்தை தடுக்க வேண்டி எல்லா அமைப்புகளும் ஒருங்கிணைத்து ‘ஆஸ்திக சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். இதன் தலைவராக சுயமரியாதை இயக்கத்தை எதிர்ப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், இதன் தலைவர். தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் (தொ.பொ.மீ) சகோதரர். இந்த அமைப்பின் பொருளாளராக தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளையே இருந்தார். ‘குடிஅரசு’ இந்த எதிர்ப்புகளை உறுதியுடன் எதிர்கொண்டது. ’ஆஸ்திகத்தை நிலைநிறுத்த சித்தாந்தத்தில் நுழைந்த கோ.வடிவேலு செட்டியார், அவர்களே! (குடிஅரசு. மே 19,1929) கனம் கோ.வடிவேலு செட்டியார் அவர்களுக்கு (குடிஅரசு. மே 26,1929) என்ற இரண்டு தலையங்கங்கள் வழியாகப் பதிலடித் தந்தது.

திருப்பாதிரிப்புலியூர் மாநாட்டுக்கு எதிர்வினையாக சுயமரியாதை இயக்க சைவ மெய்யன்பர்கள் பட்டுக்கோட்டையில் 1929 மே 26இல் மாநாடு கூட்டினர். எம்.தண்டபாணிப் பிள்ளை தலைமை தாங்கினார். சொ.முருகப்பா, சைவம் புராண சமயமாகிவிட்டது என்று கண்டித்தார். திருநெல்வேலி திருப்பாதிரிப்புலியூர் மாநாடுகள் சைவ மெய்யன்பர்களைக் கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1927 – 1929 காலப்பகுதியில் சுயமரியாதை இயக்கத்துக்கும் – சைவத்துக்கும் இடையே நடந்த மோதல் படிப்படியாகக் குறையத் தொடங்கின.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்