வரலாற்றை இரண்டு வழிகளில் அறியலாம். ஒன்று, நூல்களைப் படித்தும், கற்றோர் உரைக்கக் கேட்டும் அறிவது. மற்றொன்று, வரலாறு நடைபெற்றதாகச் சொல்லப்படும் இடங்களை நேரில் சென்று அறிவது. இதில் இரண்டாம் வழியானது, நமது நினைவை விட்டு என்றுமே அகலாதது. வரலாற்றின் காலகட்டத்திற்கே நம்மை எடுத்துச் செல்லும் வல்லமை கொண்டது. அவ்வகையில், திராவிட இயக்கத்தோடு தொடர்புடைய வரலாற்றுத் தடங்களை நேரில் கண்டு அறியும் நடைபயணம் திராவிடப் பள்ளியின் சார்பாக அவ்வப்போது நடைபெற்று வருகிறது.oviya jeeva and princeகடந்த 16.03.2025 அன்று அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது வரலாறு தொடர்பான இடங்களைப் பார்வையிடத் திட்டமிடப்பட்டது. திராவிடப் பள்ளியுடன், திராவிடர் வரலாற்று ஆய்வு மையமும் இப்பயணத்தில் இணைந்தது, நடைபயணத்தை மேலும் செழுமையாக்கியது. திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இந்நடையை வழிநடத்தினார். புதிய குரல் நிறுவனர் எழுத்தாளர் ஓவியா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

சிம்சன் பெரியார் சிலையில் காலை 6.30 மணிக்கு இந்நடை தொடங்கியது. அவ்விடத்தில் பெரியார் சிலை வைக்கப்பட்ட வரலாறு விரித்துரைக்கப்பட்டது. அடுத்ததாக, அருகிலேயே மீரான் சாகிபு தெருவில் அமைந்துள்ள பெரியார் மாளிகைக்கு நடை தொடர்ந்தது. தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் வாழ்ந்த வீடு அமைந்திருந்த இடம் இது. மணியம்மையார் தனக்காக தந்தை பெரியார் வழங்கிய இடத்தை எவ்வாறு அமைப்புக்காகக் கொடுத்தார் என்ற வரலாறு நினைவுகூரப்பட்டது. அவ்விடத்தில் மணியம்மையார் குறித்த நினைவுகளைத் தோழர் ஓவியாவும் பகிர்ந்து கொண்டார்.

பெரியார் முன்னெடுத்த அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை, பெரியார் மறைந்த பின்னர் மீண்டும் தொடங்குகிறார் மணியம்மையார். தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் நிலையங்களின் முன்பு மறியல் நடத்தும் போராட்டத்தை முன்னெடுக்கிறார். சென்னையில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக, மணியம்மையார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, அதே கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டமும் நடைபெற்றது. இதனை நினைவுகூரும் வகையில், அடுத்த இடமாகத் தலைமை அஞ்சல் நிலையத்திற்கு நடைபயணம் தொடர்ந்தது. அங்கு மணியம்மையாரின் போராட்டக் களங்கள் விடுதலை நாளேட்டின் படிகளோடு (நகல்) விளக்கப்பட்டன. மேலும், தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழருக்கே வழங்கப்பட வேண்டும் என்ற அன்னை மணியம்மையாரின் கோரிக்கை உட்பட பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

அடுத்ததாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு அன்னை மணியம்மையார் சிலை வைத்த இடம் நோக்கி திராவிட நடை நகர்ந்தது. கலைஞருக்குத் தந்தை பெரியாரால் சிலை அமைப்பு அறிவிக்கப்பட்டது தொடங்கி, தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோது சிலை சேதப்படுத்தப்பட்டது வரையிலான வரலாற்று விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டன. அப்போது கலைஞர் எழுதிய புகழ்பெற்ற கவிதையும் நினைவுகூரப்பட்டது.

அடுத்து, மணியம்மையாரின் காலத்தில், எம்.ஜி. ஆர் தந்தை பெரியாருக்குச் சிலை வைத்த இடமான அண்ணா மேம்பாலத்திற்கு திராவிட நடைப்பயணம் விரிந்தது. அவ்விடத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் குறித்துப் பேசும்போது, எம்.ஜி.ஆர். சொன்ன பிழையான வரலாறும், அதற்கு மணியம்மையார் விடுதலை இதழிலேயே துணிச்சலோடு மறுப்பு எழுதியதுமான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

இறுதியாக, பெரியார் திடலைச் சென்றடைந்தது திராவிட நடை. அங்கே, இந்தியாவே அதிர்ந்த இராவண லீலாவை அன்னை மணியம்மையார் நடத்திக் காட்டிய வரலாறு, அவசரநிலைப் பிரகடனத்தின்போது திராவிடர் கழகத்தினர் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் ஆகியவை விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. பெரியார் அருங்காட்சியகம் தோழர்களால் பார்வையிடப்பட்டது. அதன்பிறகு, திராவிடர் கழகத்தினரோடு இணைந்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தோழர்களும், திராவிடப் பள்ளி மாணவர்களும் அன்னை மணியம்மையாரின் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினர். திராவிட நடை இனிதே நிறைவு பெற்றது.

- வெற்றிச்செல்வன்