சுயமரியாதை என்பது வெறும் சொல் அல்ல. அது ஒரு நூற்றாண்டுகாலத் தமிழரின் வரலாறு. சுயமரியாதை என்பது தூய தமிழ்ச்சொல் அல்ல என்றாலும் அது தமிழர்களின் மானத் தமிழ்ச்சொல். ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை, அடக்கு முறையை, ஒடுக்கு முறையை, அதிகாரத்தை மீறி வெடித்துக் கிளம்பிய ஒருமாபெரும் சொல் தான் சுயமரியாதை.
சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்ன போதும், ஆரியப் பார்ப்பனர் அல்லாத உழைக்கும் தமிழர்கள் எல்லாம் கல்விக்கூடங்களுக்கு வெளியில் நிறுத்தப்பட்ட போதும் அவர்களுக்காக கல்விச்சாலைகளைத் திறந்து அவர்களைப் படிக்க வைத்து ஆளாக்கியது திராவிட இயக்கத்தின் ஆணிவேரான நீதிக்கட்சி.
கல்வி மறுக்கப் பட்டவர்களுக்குக் கல்வியை கொடுத்து வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சமூக நீதிக் கண்ணோட்டத்தோடு தந்தை பெரியார் அவர்களால் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் 1925ல் தொடங்கப்பட்டது தான் சுயமரியாதை இயக்கம்.
அந்த இயக்கம் தான் "பால்ய விவாகம்" என்னும் குழந்தைத் திருமணத்தை எதிர்த்துப் போராடியது. அந்த இயக்கம் தான் கைம்பெண் கொடுமைகளை ஒழிக்கப் போராடியது. அந்த இயக்கம் தான் கைம்பெண்களுக்கு மறுமணத்தை வலியுறுத்தியது. அந்த இயக்கம் தான் நடைமுறையில் இருந்த தேவதாசி முறையை ஒழிக்கப் போராடியது. அந்த இயக்கம் தான் இடுப்பில் இழுத்துக் கட்டி கூனிக்குறுகிப் பணிந்து கிடந்த தமிழர்களைத் தோளில் துண்டு அணிந்து நிமிர்ந்து நடக்க வைத்தது. அந்த இயக்கம் தான் பட்டியல் இனமக்களை "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்று கோவிலுக்குள் அனுமதிக்காமல் தூர இருந்து கடவுளை வழிபடச் சொன்ன சனாதனத்தை வீழ்த்தி அவர்களைக் கோவிலுக்குள் அழைத்துச் சென்றது.
தாலி என்பது பெண் அடிமைச் சின்னம், அதை அணியக்கூடாது என்று சொன்னதும் சுயமரியாதை தான். அதே சமயம் திருமண உரிமை மறுக்கப்பட்ட தேவதாசி குலத்தில் பிறந்த குஞ்சிதத்திற்கும் அவர் தங்கை காந்தம்மா அவர்களுக்கும் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றாலும் அவர்களுக்குத் தாலியை கட்டச் சொன்னதும் சுயமரியாதை தான்.
சாதி ஒழிப்பையும் பெண் அடிமைத்தன ஒழிப்பையும் முன்னிறுத்தி ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் போராடியது சுயமரியாதை இயக்கம். அந்த சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவினை எந்தக் கோவையில் முதன்முதலாக பார்ப்பனர் அல்லாதார் மாநாடு நடைபெற்றதோ அதே கோவையில் இப்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தவுள்ளது.
இந்த ஒரு நூற்றாண்டு காலத்திற்குள் தந்தை பெரியார் என்னென்ன இலட்சியங்களைக் கொண்டிருந்தாரோ அவற்றைக் கடந்த அறுபது ஆண்டுகளில் நிறைவேற்றி வைத்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகம்.
இப்போது மக்களுக்காகப் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் அரசுக்குத் தரவேண்டிய ஜிஎஸ்டி பங்குத் தொகைகளைத் தராமல் இழுத்தடித்தும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஆளுநர் மூலம் கிடப்பில் போட்டும் தடைகளை ஏற்படுத்தி வரும் ஒன்றிய அரசின் சதித்திட்டங்களை முறியடித்து வெற்றிப்பாதையில் செல்கிறது தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
தனிமனிதரின் சுயமரியாதை காப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் காக்க இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதும் மாநில சுயாட்சிக் கோரிக்கைக்காக குரல் கொடுப்பதும் திராவிட மாடல் அரசின் தனித்தன்மையாகும்.
தொகுதி மறு சீரமைப்பு என்கின்ற பெயரில் இந்தி பேசும் மாநிலங்களுக்குப் பெருமளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை கூட்டி இந்தி பேசாத மாநிலங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை மட்டுப் படுத்தி வைத்து தங்கள் வஞ்சக சதித்திட்டங்களை நிறைவேற்றத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக அரசைத் துணிவுடன் எதிர்த்து நின்று அதற்காகப் பெரும் படை வரிசை ஒன்றை அமைத்து சுயமரியாதை காத்து வருகிறது தளபதி மு.க.ஸ்டாலின் அரசு.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைக் கிடப்பில் போட்டு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஆளுநர் ஆர் எஸ் எஸ் ரவியின் சதித்திட்டங்களை மான உணர்வுடன் சட்ட ரீதியாகப் போராடி உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெற்று தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுயமரியாதையை மீட்டெடுத்துள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளுக்குத் துணை நிற்போம், வலு சேர்ப்போம் .என்கின்ற விதத்தில் தான் கோவையில் சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு நடைபெற உள்ளது.
அந்த மாநாட்டினை பெண்ணிய போராளி திமுக துணை பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி கருணாநிதி திறந்து வைக்கிறார். மாநாட்டின் நிறைவுரையை சனாதனத்தின் பெரும்பகைவர் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிகழ்த்த இருக்கிறார். மாநாட்டின் முதல் அரங்கில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் திராவிட விடுதலைக் கட்சி தலைவர் மானமிகு கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு. இராம கிருட்டிணன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், புதிய குரல் அமைப்பின் தலைவர் தோழர் ஓவியா ஆகியோர் பங்கேற்பது மிகப்பெரும் சிறப்பாகும்.
மாணவர் அரங்கு, இளைஞர் அரங்கு, அரசியல் அரங்கு, கவியரங்கு, யூடியூப் இணையதளப் போராளிகளின் நையாண்டி நிகழ்சிகளுடன், இலக்கிய, அரசியல் ஆளுமைகள் சிறப்புரையாற்ற உள்ளனர்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டிற்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
- பொள்ளாச்சி மா.உமாபதி