சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் பதவி என்பது பேரவைத் துணைத் தலைவரின் பதவிக்குச் சமமானது. அந்தப் பதவியின் கண்ணியத்தைப் பேணும் வகையில் எதிர்கட்சித் தலைவரின் பேச்சும், செயலும், அறிவார்ந்து குறிப்பாக அரசு வேறு, கட்சி வேறு என்பதைப் புரிந்து பேச வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்யச் சொல்லி பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியுமா என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டார், எடப்பாடியிடம். இது கட்சிகள் பற்றிய பிரச்சனை. அதுவும் நீட் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற வாக்களித்ததே அதிமுகதான்.

உடனே எடப்பாடி நேரடியாகப் பதில் சொல்லாமல், காவிரி நீர் தராத கர்நாடக அரசுக்கும், முல்லைப் பெரியாறு குறித்து கேரள அரசுக்கும் எதிராகத் தீர்மானம் போடமுடியுமா? என்று தன் மேதாவித்தனத்தைக் காட்டியிருக்கிறார் எடப்பாடி.

காவிரி,முல்லைப் பெரியாறு - இரண்டும் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையில் உள்ள நீண்ட காலப் பிரச்சனையே ஒழிய அவை கட்சிப் பிரச்சனை அல்ல. இவைகளின் வழக்குகள் நீதிமன்றங்களில் இருக்கின்றன. இவைகூடத் தெரியாமல் எதை, எதனுடன் ஒப்பிட்டுப் பேசவேண்டும் என்பது கூடத் தெரியாமல் பிதற்றுகிறார் அவர்.

அதுபோகட்டும். கடந்த காலங்களில் பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, இனி பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று வீரவசனம் பேசினார் அவர்.

சில நாட்களுக்கு முன்னர் டில்லி சென்று, கார்மாறி - கார்மாறி முக்காடிட்டு அமித்ஷாவைச் சந்தித்தார் எடப்பாடி, கூட்டணிக்காக. இன்று சென்னை வந்துள்ள அமித்ஷாவைச் சந்தித்துக் கூட்டணியை உறுதிசெய்யக் காத்துக்கிடக்கிறார் அவர். அது அவர்களின் தனிப்பட்ட கட்சிப் பிரச்சனைதான். ஆனாலும் அவைகளில் ஒரு நேர்மை, நாணயம் இருக்கவேண்டும்.

நிறம் மாறும் பச்சோந்தியைப் போல இருப்பதும், பேசுவதும், செயல்படுவதும் அரசியல் தலைமைத்துவப் பண்பாக இருக்க முடியாது.

அரசியலில் பெரிய சாணக்கியன் என்று பாஜக மற்றும் ஊடகங்களால் தூக்கி வைத்துப் பேசப்பட்ட அமித்ஷாவின் அரசியல் சாணக்கியம், தமிழ்நாட்டுத் தந்தையின் கைத்தடியின் முன்னால் நிற்க முடியாது என்பது, எடப்பாடிக்குப் புரியவில்லையே!

"என்ன மங்குனி அமைச்சரே.." என்பார் வடிவேலு ஒரு திரைப்படத்தில். ஏனோ அது இப்போது நினைவுக்கு வருகிறது.

- கருஞ்சட்டைத் தமிழர்