இந்திய ஒன்றியத்தின் தலைசிறந்த அரசியல் ஆளுமையும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான தலைவர் கலைஞர் அவர்களின் 100 ருபாய் நாணயத்தை வெளியிட்டு ஒன்றியப் பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றும் போது....

"கலைஞர் கருணாநிதியின் அரசியல் போராட்டங்கள் மிகவும் தீவிரமானவை, துணிச்சல் மிக்கவை. இந்தியாவின் தேசிய ஆளுமை கலைஞர் கருணாநிதி. தமிழ்நாட்டின் எல்லையைக் கடந்து பலதரப் பட்டவர்களைத் தன்பக்கம் ஈர்த்தவர். இந்திய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், பண்பாட்டுத் தலைவர். சமூக நீதியை அயராது பரப்பியவர் கலைஞர் கருணாநிதி. கலைஞர் கருணாநிதியின் பொதுநலத் தொண்டால், நாட்டிற்கே நன்மை ஏற்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதியின் நாணயத்தை நான் வெளியிடுவது, அவருடைய அர்ப்பணிக்கப் பட்ட வாழ்வுக்கு நான் செலுத்தும் அஞ்சலி." என்று பேசினார்.

உடனே எதிர்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இதை... பாஜக-திமுகவின் கள்ள நட்பு என்றும், இந்தியில் எழுத்து இருக்கிறது என்றும், ராஜ்நாத்சிங்கை ஏன் அழைக்க வேண்டும் என்றும், ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என்றுகூட ஒரு கேள்வியையும் கேட்டுத் தன்அறியாமைக் காட்டிக்கொண்டு இருக்கிறார் அவர்.

ஒரு தலைவரின் நினைவைப் போற்றி நாணயம் வெளியிடல் என்பது ஒன்றிய நிதித்துறை அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் எடுக்கப்பட வேண்டிய முடிவு. அப்படி எடுத்த முடிவில் இது ஓர் அரசு விழா, கட்சி விழா அல்ல. முன்னாள் முதல்வர் கலைஞருக்கான விழாவில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு உள்ளார்கள்.

எடப்பாடிக்குக் கழக முன்னணியினர் இதற்கு உரிய விளக்கம் சொல்லி விட்டார்கள். எனவே நமக்கு அந்த வேலை இல்லை.

இந்த நிகழ்வை "கூட்டணி தர்மத்தை மிஞ்சிய நட்பு", என்று கூறி தன் அரசியல் முதிர்வைக் காட்டியுள்ளார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்.

ஆர். எஸ். எஸ். சித்தாந்தங்களும், திராவிட இயக்கக் கோட்பாடுகளும் நேர்முரணானது, என்றும் சேர முடியாதது என்பதைக்கூட உணராமல் பேசக்கூடாது.

"தொட்டனைத் தூறும் மணல் கேணி..." என்ற திருக்குறளைச் சற்று அரசியல் படுத்திப் படிக்க  வேண்டும், எடப்பாடியார்!

- கருஞ்சட்டைத் தமிழர்