தலைவர் கலைஞர் எழுதிய பராசக்தி திரைப்படத்தில் "இந்த நீதிமன்றம் பல்வேறு விசித்திரமான வழக்குகளைச் சந்தித்துள்ளது" என்று ஒரு வசனம் இடம் பெற்றிருக்கும். அப்படி ஒரு விசித்திரமான வழக்குதான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு. பொதுவாக "Bail is a Rule and Jail is an Exception" என்பது தான் இந்திய குற்றவியல் சட்டத்தின் நிலைப்பாடு. ஆனால் பதினைந்து மாதங்கள் செந்தில் பாலாஜி சிறையில் வாடிய போதும் பிணை கோரிய அவரது மனுக்கள் பல்வேறு நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது மாண்புமிகு உச்சநீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியுள்ளது. நீண்ட காலமாக அவர் சிறையில் இருக்கிறார் என்பதாலும், இந்த வழக்கு முழுவதுமாக முடிவடையப் பல ஆண்டுகள் ஆகலாம் என்பதாலும் அவரைப் பிணையில் விடுவிக்க மாண்புமிகு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதப் பணபரிமாற்றத் தடைச் சட்டம் பிரிவு 4 இன் கீழ் குற்றங்களுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஒரு வேளை அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சமாக மூன்று ஆண்டுகளும், அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்படலாம். ஆனால் அவர் இப்போதே குறைந்தபட்ச தண்டனைக் காலத்தின் ஏறத்தாழ பாதி காலத்தை விசாரணைக் கைதியாகவே சிறையில் கழித்துள்ளார் என்பது மிகவும் கொடுமையானது. வழக்கின் முடிவில் அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டால் விசாரணைக் கைதியாக அவர் கழித்த பதினைந்து மாத சிறைவாசத்திற்கு என்ன நிவாரணைத்தை நீதிமன்றங்களால் வழங்க இயலும்.
இந்த வழக்கின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே அமலாக்கத்துறை இதை விசாரிக்க முடியாது என்ற வாதத்தை செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் தொடர்ந்து முன்வைத்தனர். இயல்பாகவே ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க முடியும். செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டில் மூல வழக்கில் விசாரணையே இன்னும் தொடங்காத நிலையில் அமலாக்கத்துறை அவரைக் கைது செய்து 471 நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருந்தது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைதான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கும் போது முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது என்று விதிக்கப்பட்டது போன்ற கடுமையான நிபந்தனைகள் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட வில்லை. எனவே அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை துணிவோடு எதிர்கொண்டு ஏற்றுக் கொண்ட இயக்கத்திற்கும் அதன் தலைவருக்கும் விசுவாசமாக இருந்து, சட்டத்தின் துணையோடு சிறையில் இருந்து வெளிவரும் செந்தில் பாலாஜி அவர்களின் மன உறுதி பெரிதும் பாராட்டத்தக்கதாகும்.
பத்தாண்டுகளுக்கு முன்பே முடிந்து போன வழக்கை அரசியல் காரணங்களுக்காக முன்னெடுத்திருப்பதால் அமலாக்கத்துறையால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க இயலாது. ஆகவே மூல வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி குற்றமற்றவராக வெளியே வருவார் என்பதை இவ்வழக்கின் போக்கிலிருந்து அறிய முடிகிறது.
- வழக்கறிஞர் இராம.வைரமுத்து