கடந்த ஒரு வாரமாய்த் திரும்பும் திசையெல்லாம் திருப்பதி லட்டு பற்றித்தான் பேச்சு!
'பெருமாள் பிரசாதமே இல்லியோ....'
என்று லட்டு பற்றிப் பெருமையாகப் பேசியவர்கள், அதில் மாடு, பன்றிக் கொழுப்பு கலந்திருக்கிறது என்று உறுதியான பிறகு, இப்போது அது பிரசாதமே இல்லை என்று கூறுகிறார்கள். அது வெறும் இனிப்புதான் என்கின்றனர். லட்டு வெறும் இனிப்புதான் என்றால், தீர்த்தம் வெறும் தண்ணீர் தானே! இதைத்தானே நாம் காலகாலமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்!
ஒரு பக்கம் லட்டு பிரசாதம் இல்லை என்று சொல்லுகிறவர்கள், மறுபக்கம் தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ணர் தலைமையில், காலை முதல் மாலை வரை மகா நிவாரண தோஷ சாந்தி யாகம் நடத்துகிறார்கள். அது கடவுளுக்கு படைக்கப்பட்ட பிரசாதம் இல்லை என்றால், பிறகு எதற்கு நிவாரண தோஷ சாந்தி?
எல்லாவற்றுக்கும் நிவாரணமும், பரிகாரமும் இருக்கிறது என்றால், தினமும் மாட்டிறைச்சி தின்றுவிட்டு பிறகு நிவாரண தோஷ சாந்தி செய்து விடலாமே!
இந்த லட்டு விவகாரத்திற்குள் எந்தத் தொடர்பும் இல்லாத ஜக்கி வாசுதேவ் உள்ளே நுழைந்து, தன் புதிய கண்டுபிடிப்பு ஒன்றைச் சொல்கிறார். அறநிலையத் துறை அரசிடம் இருப்பதால்தான் இப்படி எல்லாம் நடக்கிறதாம். அதனை ஹிந்துக்கள் கையில் கொடுத்து விட வேண்டும் என்கிறார்.
குலதெய்வம் கோமாதாவின் கொழுப்பை லட்டில் கலந்து விட்டார்கள் என்று கொந்தளிக்கும் சந்திரபாபு நாயுடு, இனிமேல் புனிதம் கெடாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்கிறார். அது இருக்கட்டும், புனிதம் கெட்டுப் போன லட்டு லாரி லாரியாய் விற்பனையாகி இருக்கிறதே...., அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் போது ஒரு லட்சம் பேர் சுவைத்து சுவைத்து அதனைச் சாப்பிட்டு இருக்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன செய்வது?
திருப்பதி லட்டுகளை உடைத்துப் பார்த்தால் அதற்குள் இருந்து நிறைய அரசியல் வெளிவரும்போலத் தெரிகிறது. மாடு, பன்றி கொழுப்பும், மீன் எண்ணையும், லட்டுகளில் கலக்கப்படுவது நாயுடு உள்பட எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்திருப்பதற்குத்தான் வாய்ப்புகள் உள்ளன. இப்போது சட்டென்று அது பெரிதாக்கப்படுவதைப் பார்த்தால், அது ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மை பளிச்சென்று புரியும்!
ஜெகன்மோகன் ஒரு கிறிஸ்தவ ரெட்டியார் என்பதால், அதையும் வெளிக் கொண்டு வந்து, மத மோதலாகவும் இதை மாற்றி விடலாம் என்னும் திட்டமும் உள் இருக்கக்கூடும்! இந்து மதத்தின் புனிதத்தைக் கிறிஸ்தவர்கள் கெடுத்து விட்டார்கள் என்று சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது!
உணவுக்குள் மதத்தைக் கொண்டு வந்து, மதத்திற்குள் அரசியலைத் திணித்து, அரசியலை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள எத்தனை எத்தனை வியாக்கியானங்கள்!
- இனியன்