இராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலை, அமைச்சர் பொன்முடி பதவிப் பிரமாணம் எனத் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களை பெற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தொடர்ந்த சட்ட முன்வடிவுகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பின் மூலம் பலத்த கண்டனத்திற்கு ஆளாகி உள்ளார்.
தமிழ்நாடு அரசு இரண்டாம் முறையாக அனுப்பிய பத்து சட்ட முன்வடிவுகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்ததுடன், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 142 இல் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அந்தப்பத்து சட்ட முன்வடிவுகளுக்கும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.அத்துடன் அவ்வழக்கில் தமிழ்நாடு அரசு வேண்டியபடி சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க "ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள்" என்ற காலவரையறையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரை இந்திய அரசியலமைப்பு சட்டம் "As Soon as Possible" என்று அளித்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்திச் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதை "As Late as Possible" எனத்தாமதித்துக் கொண்டிருந்த ஆர்.என்.ரவி போன்ற ஆளுநர்களுக்கு இதன் மூலம் கடிவாளம் போடப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை தங்கள் விருப்பத்திற்கேற்ப கலைக்க பரிந்துரை செய்து கொண்டு இருந்த ஆளுநர்களை "S. R. Bommai vs Union of India" வழக்கின் தீர்ப்பு கட்டுப்படுத்தியதோ அதைப் போல சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் "The State of TamilNadu vs The Governor of TamilNadu" வழக்கின் தீர்ப்பு இந்திய ஒன்றியம் முழுமைக்கும் வழி காட்டும் தீர்ப்பாக அமைந்துள்ளது.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதம் முழுமையாக ஏற்கப்பட்டதுடன், ஆளுநரின் சார்பாக வாதிட்ட ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் முன் வைத்த வாதம் முற்றிலுமாக நிராகரிக்கப் பட்டுள்ளது. எனவே இந்த தீர்ப்பு ஆளுநருக்குக் கிடைத்தத் தோல்வி என்பதைத் தாண்டி ஒன்றிய அரசுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் கிடைத்தத் தோல்வியாகக் கருதப்படுகிறது.
தலைவர் கலைஞர் அவர்களால் மாநில சுயாட்சிக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ராஜமன்னார் ஆணையத்தின் அறிக்கையில் " ஆளுநர் ஒன்றிய அரசின் முகவராக இல்லாமல் அரசியலமைப்பின் அடிப்படையில் மாநில அரசின் ஆலோசனைப்படி பணியாற்ற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரிகளுக்கு இந்த தீர்ப்பின் மூலம் சட்ட அங்கீகாரத்தை பெற்றுத் தந்திருக்கிறார் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு போராடியது! தமிழ்நாடு வென்றது!!
- வழக்கறிஞர் இராம.வைரமுத்து