அண்மையில் திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்குச் சென்ற இசைஞானி இளையராஜாவிற்கு நேர்ந்துள்ள அவமதிப்பு உலகெங்கும் வாழும் தமிழர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. அவரைக் கோயிலின் அர்த்த மண்டபத்திற்குள் நுழைய விடாமல் மறுத்து வெளியே அனுப்பி உள்ளார் ஜீயர் ஒருவர். இந்நிகழ்வைத் தனி ஒருவருக்கு நேர்ந்த அவமதிப்பாக இல்லாமல், பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு நேர்ந்த அவமதிப்பாகவே கருத வேண்டியுள்ளது.

கோயிலுக்கு அடித்தளம் அமைத்ததில் தொடங்கி, கருவறைக்குள் கடவுளர் சிலை வரைக்கும் அமைத்துத் தருவது பார்ப்பனர் அல்லாதார்களே. கடைசியாக அனைத்திற்கும் தீட்டுக் கழித்து விட்டு பார்ப்பனர்கள் மற்றவர்களுக்கு அனுமதி மறுப்பது என்ன நியாயம்?

இன்று வரைக்கும் ஜாதியைப் பாதுகாக்கும் நிறுவனமாகத் தானே கோயில் கருவறை உள்ளது. ஆனால் இவற்றுக்கான பாதுகாப்பையோ அரசியலமைப்புச் சட்டம் ஏற்படுத்துக் கொடுத்துள்ளது. Customs எனப்படும் பழக்க வழக்கங்களைப் பாதுகாக்கும் பிரிவுகள் அரசியலமைப்பில் இருப்பதால்தானே இச்சட்டம் ஜாதியைப் பாதுகாக்கும் சட்டம் என்று தந்தை பெரியார் அப்பிரிவுகளை நீக்குவதற்கான போராட்டத்தை முன்னெடுத்தார்.

”ஆட்சியில் எல்லா மக்களுக்கும் நீதியும், சுதந்திரமும், சமத்துவமும், சகோதரத்துவமும் வழங்குவது என்பதாகச் சொல்லிக் கொண்டு மக்களில் ஒருவருக்கொருவர் பெருமையும், இழிவும், சுகமும், கஷ்டமும் உள்ளதான தன்மையுள்ள சாதி, மத, பழக்க வழக்க கலாச்சார உரிமை மக்களுக்கு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டிருக்கும் அரசியல் சட்டமானது போலித்தன்மையும் புரட்டு மோசடியுமானதாகுமென்று இம்மாநாடு கருதுகின்றது” (விடுதலை, 05.11.1957) என்று தஞ்சையில் மாநாடு கூட்டித் தீர்மானம் நிறைவேற்றினார் பெரியார். ஆனால் இன்றும் அப்பிரிவுகளைக் காரணம் காட்டி, கோயில் நுழைவு முதல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சினை வரை பார்ப்பனியம் காப்பாற்றப்பட்டு வருகிறது.

அரசியலமைப்பில் ஜாதியை, பழக்க வழக்கங்களைப் பாதுகாக்குக் பிரிவுகளை வைத்துக் கொண்டு, எத்தனை சட்டம் வந்தாலும் இளையராஜா கருவறைக்குள் அல்ல, அர்த்த மண்டபத்திற்குள்ளும் நுழைய முடியாது. ஜாதியும் ஒழியாது. அரசியலமைப்பின் அந்தப் பிரிவுகளை நீக்குவதே ஒரே வழி. பெரியாரே தீர்வு.

- கருஞ்சட்டைத் தமிழர்