கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இளையராஜா தன்னை எவ்வளவுதான் பார்ப்பனிய மையப்படுத்திக் கொண்டாலும் ஒரு போதும் அவரால் பார்ப்பனர்கள் அனுபவிக்கும் பிறவி அடிப்படையிலான சலுகைகளுக்கு உரிமை கோர முடியாது என்பதோடு, அப்படியான நிகழ்வுகள் தன்னையும் அறியாமல் நிகழ்ந்துவிட்டால் கூட பார்ப்பனக் கூட்டம் சனாதன சாக்கடையில் மூழ்கடித்து விடும் என்பதை மீண்டும் இளையராஜாவுக்குப் புரிய வைத்திருக்கின்றது.

 இளையராஜாவுக்கு இப்படியான அவமானங்கள் ஏற்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் திருவண்ணாமலை கோயிலுக்கு கோபுரம் கட்டுவதற்கு சில இலட்சங்களைக் கொடுத்தார். ஆனால் அக்கோயில் குடமுழக்கு விழாவிற்கு இளையராஜா வரக்கூடாது என பார்ப்பனக் கூட்டம் முட்டுக்கட்டை போட்டது.ilayaraja srivilliputhoor temple ஆனாலும் இளையராஜா அதையெல்லாம் பெரியதாக எடுத்துக் கொண்டவர் கிடையாது. அவரைப் பொறுத்தவரை தன்னுடைய இசை என்பது தான் கட்டமைத்து வைத்திருக்கும் ஆன்மீக உலகில் இருந்து பீறிட்டுக் கொண்டு வருவது என்பதுதான் அவரது எண்ணம்.

அந்த எண்ணத்தின் வெளிப்பாடாக ரமண மாலை, கீதாஞ்சலி, மீனாக்ஷி ஸ்தோத்திரம், மூகாம்பிகை, திருவாசகம் போன்ற பஜனைப் பாடல்களுக்கு இசைமைத்தார்.

பெரியார் திடலில் பெரியார் சிலைக்கு மாலை போட மாட்டேன் என மறுத்த இளையராஜா, பெரியார் திரைப்படத்திற்கும் இசை அமைக்க மறுத்ததாக சொல்லப்படுகின்றது.

பார்ப்பனக் கடவுள்களை தேடித் தேடிப் போய் வழிபடுவதையும், கோயில் திருப்பணிகளுக்கு நன்கொடைகளை வாரிவாரி வழங்குவதையும் தன்னுடைய புனிதக் கடமையாக நினைத்து செய்து வந்தார் இளையராஜா.

 அதே போல திரையிசையிலும் ‘ஜனனி... ஜனனி…போன்ற பல புகழ்பெற்ற பஜனைப் பாடல்களுக்கு மெட்டமைத்தார். இன்னும் சொல்லப்போனால் தான் கலந்து கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளிலும் இந்தப் பாட்டை அவர் பெரும்பாலும் பாடிவிடுவார்.

பகுத்தறிவுக்கும் இளையராஜாவுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத காத தூரம். காரணம் இசை அமைப்பது, பணம் சம்பாதிப்பது என இரண்டை மட்டுமே தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த இளையராஜா, தினசரி பத்திரிகைகளைக் கூட படிக்கும் பழக்கம் இல்லாதவர் என்பது அவரது பேச்சைக் கேட்டாலே தெரியும். அவர் மேடைப் பேச்சை எல்லாம் நீங்கள் கேட்டீர்கள் என்றால் அவை திரும்பத் திரும்ப பேசப்பட்ட ஒன்றாகவே இருக்கும்.

 மேலும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கேள்வி கேட்டால் கூட அதற்கு நேரடியாக பதில் சொல்லும் திராணியற்ற நபராகத்தான் இளையராஜா இருப்பார். யாராவது அவர் அறிவைப் பயன்படுத்தி சொல்ல வேண்டிய கேள்வியைக் கேட்டுவிட்டால், உடனே

“நான் சொல்லிடுவேன். அதை புரிஞ்சுக்குற அளவுக்கு உனக்கு அறிவிருக்கா? சங்கீத ஞானம் இருக்கா?”

“நான் உன் எதிர்ல வந்து உட்கார்ந்துட்டா என்ன வேணும்னாலும் கேட்ருவியா? நீயும் நானும் சமம் ஆகிடுவோமா?”

 என்று கேள்வி கேட்டவரையே அவமரியாதை செய்து விடுவார்.

 அவர் ஒரு போதும் தன்னுடைய பார்ப்பன விசுவாசத்தை மறைத்துக் கொண்டவரல்ல. அதன் உச்சமாகத்தான் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோதியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அன்ட் மோதி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்ட நூலுக்கு முன்னுரை எழுதியது.

 அது அவர் எழுதியது இல்லை என சொல்லப்பட்டாலும் இளையராஜாவின் விருப்பத்தோடுதான் அது நடந்தது.

 அதுமட்டுமா, காசியில் சங்கிக் கூட்டம் நடத்திய தமிழ்சங்கமம் நிகழ்ச்சியில் போய் உட்கார்ந்து கொண்டு சங்கிக் கூட்டமே கொட்டாவி விட்டு தூங்கும் அளவிற்கு பல மொழிகளில் பஜனை பாடல்களைப் பாடினார்.

தமிழ் மக்களிடம் இருந்து எழுந்த கடுமையான எதிர்வினையைகூட அவர் பொருட்படுத்தவில்லை. பார்ப்பனக் கூட்டத்திற்கு இத்தனை ஆண்டுகளாக அடிமையாக இருந்ததோடு கொலைகார சங்கிக் கும்பலை இந்து மதத்தைக் காப்பாற்றும் காவலர்களாக சித்தரித்ததற்குப் பலனாக கூச்சமோ, குற்ற உணர்வோ இன்று மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியை பெற்றுக் கொண்டார்.

எப்படி ஆர்.எஸ்.எஸ் கும்பல் தன் முழு வரலாற்றிலும் மக்கள் நலன் சார்ந்து நின்றதில்லையோ, அதே போல தன் வாழ்நாளில் எந்த ஒரு மக்கள் நலன் சார்ந்த அரசியலிலும் அவர் பங்கெடுத்துக் கொண்டவர் கிடையாது.

அவருடைய சம காலத்தில் நிகழ்ந்த கொடுமையான சாதிய வன்முறைகளுக்கு எதிராகவோ, சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகவோ, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவோ சிறு எதிர்வினையைக்கூட அவர் ஆற்றியதில்லை. அதனால்தான் அவரால் இயல்பாக பாசிச சங்கிக் கூட்டத்தோடு இணைந்து செல்ல முடிந்தது.

 ஆனால் இளையராஜாவைப் போலவே எல்லா இசைக்கலைஞர்களும் வரலாற்றில் இருந்ததில்லை.

மொஸார்ட்டின் இசை பெரும்பாலும் சமூக விமர்சனம் மற்றும் நையாண்டியின் கூறுகளைக் கொண்டிருந்தன. அவருடைய காலத்தின் சிக்கல்கள் மற்றும் முட்டாள்தனங்களைக் குறிப்பிட்டும் பொழுதுபோக்கைக் கடந்து அறிவுசார் உரையாடலையும் அவை தூண்டின. அதே போல பீத்தோவன் எந்த ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினராக இல்லாமல் இருந்தாலும் வர்க்கப் பிரிவுகள் மற்றும் பிறப்பு-உரிமைகளை இகழ்ந்தார்.

 1950கள் மற்றும் 1960களில் அமெரிக்காவில் சிவில் உரிமைகள் இயக்கத்தில் அரசியல் செயல்பாட்டின் ஒரு வடிவமாக இசை பயன்படுத்தப்பட்டது. நினா சிமோன், பாப் டிலான் மற்றும் சாம் குக் போன்ற கலைஞர்கள் தங்கள் இசையைப் பயன்படுத்தி அந்த காலத்தில் நிலவிய இன சமத்துவமின்மை மற்றும் அநீதியை எதிர்த்தனர்.

 1960கள் மற்றும் 1970களின் போர் எதிர்ப்பு இயக்கங்களின் போது அரசியல் செயல்பாட்டில் இசை தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. வியட்நாம் போர் தீவிரமடைந்த நிலையில், ஜான் லெனான், ஜோன் பேஸ் மற்றும் நீல் யங் போன்ற இசைக்கலைஞர்கள் போருக்கு எதிராகவும் அமைதிக்காகவும் தங்கள் இசையைப் பயன்படுத்தினர்.

 கென்ட்ரிக் லாமர், பியோன்ஸ் மற்றும் ஜே.கோல் போன்ற கலைஞர்கள் காவல்துறையின் மிருகத்தனம், அமைப்பு ரீதியான இனவெறி போன்றவற்றை வெளிச்சம் போட்டுக் காட்ட தங்கள் இசையைப் பயன்படுத்தினார்கள்.

இளையராஜாவை இவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு ராஜாவிடம் இருக்கும் இசை மேதமை திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடுவதற்கும், அதன் மூலம் தயாரிப்பாளர்கள் லாபம் ஈட்டுவதற்குமே அவை பயன்பட்டன. மக்கள் ரசித்தார்கள், தங்களின் துன்பத்தை மறந்தார்கள் என்பது எல்லாம் உடன் விளைவுகளாகும்.

 இன்றும் பல அரசியல் அமைப்புகள் குறிப்பாக பெரியாரிய, கம்யூனிச அமைப்புகள் கலைக்குழுக்களை வைத்திருக்கின்றன. அவர்கள் எந்த வகையான ஊதியமும் இன்றி மக்களை மட்டுமே நம்பி மேடைகளில் பகுத்தறிவுப் பாடல்களையும், புரட்சிகரப் பாடல்களையும் பாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

 ஏன் இளையராஜாவே கூட அவரது அண்ணன் பாவலருடன் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளிலும் பல கிராமங்களுக்கும் சென்று பாடி பாடி பெற்ற அறிவு தானே இன்று அவரை பெரிய இசை மேதையாக மாற்றியது. ஆனால் அவர் இன்று அதை யாருக்காகப் பயன்படுத்துகின்றார் என்பதுதான் முக்கியமானது.

 அவர் அதை பணம் சம்பாதிப்பதற்கும் பஜனை கோஷ்டிகளை உற்சாகப்படுத்தவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். அதைத் தாண்டி இசையை ஒரு புரட்சிகர சக்தியாக மக்களை அவர்களுடைய அடிமைத்தனத்தில் இருந்தும், மூட நம்பிக்கையில் இருந்தும் மீட்டெடுக்கும் ஆயுதமாக அதை மாற்றவில்லை.

 இது போன்ற சங்கி புத்திக்காரர்கள்தான் தாங்கள் எவ்வளவு அவமானப்பட்டாலும் திருந்தவே மாட்டார்கள்.

 இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளச் சென்றவருக்கு, கோயில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்திற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 அதற்காக அனைத்து முற்போக்குவாதிகளும் அவர் பக்கம் நின்று குரல் கொடுத்தும், இளையராஜா என்ற பார்ப்பன அடிமை வழக்கம் போல "என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

 இதைவிட அவமானம் என்ன இருக்க முடியும்? ஒரு மனிதனை ஏற்றுக் கொள்வதற்கும் கொண்டாடுவதற்கும் இசை மட்டுமே போதுமா?. அதைத் தாண்டி அந்த மனிதன் தான் வாழ்ந்த காலத்தில் யாரின் குரலாக எந்த வர்க்கத்தின் குரலாக ஒலித்தான் என்பது முக்கியமில்லையா?

 அப்படி என்றால் இளையராஜா யார்? அதுதான் ஊருக்கே தெரிந்து விட்டதே!

 அரசியல் செயல்பாட்டில் இசையின் சக்தி உணர்ச்சி மட்டத்தில் மக்களுடன் இணைக்கும் திறனில் உள்ளது. இசை வலுவான உணர்ச்சிகளைத் தூண்டும் சக்தியைக் கொண்டுள்ளது. சக்தி வாய்ந்த பாடல் வரிகள் மற்றும் அழுத்தமான செய்தியுடன் அவை இணைந்தால், அது தனிநபர்களிடம் உணர்வைத் தூண்டி நடவடிக்கையை நோக்கி அவர்களை உந்தித் தள்ளும். மக்களை ஒன்றிணைத்து ஒற்றுமை உணர்வை உருவாக்கும் தனித்துவமான திறனை இசை கொண்டுள்ளது.

 ஆனால் அந்த இசை யாரின் கையில் இருக்கின்றது என்பது மிக முக்கியம். இளையராஜா ஒரு தலித், அதனால்தான் அவரை அனைவரும் தாக்குகின்றார்கள் என்று சாதி அரசியல் செய்பவர்கள் இனியும் விமர்சனம் வைப்பர்களை மிரட்டிக் கொண்டிருக்க முடியாது.

 இளையராஜாவின் இசை மேதமையைக் கொண்டாடும் அதே வேளை அவரின் அடிமைத்தனத்தையும் சங்கித் தனத்தையும் அம்பலப்படுத்தாமல் இருக்க முடியாது.

- செ.கார்கி