மட்கார்ட் என்று பெயர் வந்ததே மண்ணில் இருந்து காக்கும் உபகரணம் அது என்பதால் தான். ஆனால் சில முட்டாள் பைக்கான்கள் அதைக் கழற்றி வைத்து விட்டு வண்டியை ஓட்டுகிறான்கள். பின்னால் வருகிறவன் மேல் மண் படும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கிறான்களே. எப்படி. அதில் என்ன ஸ்டைல் இருக்கிறது என்று தெரியவில்லை.
ஹெல்மெட் போடாதவன் சிக்கினால் கண்ணை காவு வாங்கும் மண் சீறல். கழுத்து கால் என்று போகிற போக்கில் அள்ளி தெளித்து கிழித்து விடும். அதுவும் மழை நாளில் சாலையில் இருக்கும் அத்தனை மண்ணும் நீரோடு சகதியாக... டயரின் சுழற்சியில் பின்னால் வருகிறவரை பிராண்டி விடுவதை எப்படி விவரிப்பது. மட்கார்ட் இருக்கும் வண்டியே சில நேரங்களில் மண்ணை வாரி அடிக்கும் சூழலில் அது இல்லாத வண்டிகள் செய்யும் அசுரத்தனம் அட்டூழியத்துக்கானது. சட்டையில் மண் கோடு போட்டு.. முகத்தில் மண் அள்ளி பூசி... நம் வண்டியில் மண் பெயிண்ட் அடித்து.. மண்ணா போகும் பயணம் அது.
அதே போல கண்ணாடியை உட்பக்கமாக திருப்பி வைத்துக் கொள்ளும் கோமாளிகளைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அது மாட்டுக் கொம்பு மாதிரியே இருக்கும். கண்ணாடி கொண்டிருப்பவனையே பின்னால் வரும் வண்டிகள் ஏய்த்து விடும் சூழலில்... இப்படி மடக்கிக் கொண்டு ஓட்டுவது எப்படி பாதுகாப்பாகும். மேலும் அது என்ன வகை நவ நாகரீகம் என்றும் தெரியவில்லை. பின்னால் என்ன வருகிறது என்று தெரிந்தால்தானே முன்னால் எப்படி போய்க் கொண்டிருக்கிறோம் என்று புரிபடும்.
நாம் தொடரும் சாலைக்கு கண்கள் நாம் என்றால்.. நம்மைத் தொடரும் சாலைக்கு கண்கள் கண்ணாடி அல்லவா.
இன்னும் சிலர் கண்ணாடியைக் கழற்றியே வைத்து விடுகிறார்கள். கண்ணாடி எத்தனை தேவை என்ற இயல்பான புரிதல்கூட இல்லாத கைகளில் இருக்கும் ஒவ்வொரு இருசக்கர வாகனமும் ஆபத்தான காண்டாமிருகமே.
அதே போல நிறைய பேருக்கு வண்டியை நிறுத்தத் தெரிவதில்லை. வண்டி ஓட்டத் தெரிவது என்பது... வேகமாய் முறுக்குவது அல்ல. முன்னே போகிறவன் எத்தனை வேகத்தில் சடன் பிரேக் போட்டாலும் அவன் மீது முட்டாமல் நிறுத்த வேண்டும். அதுதான் வண்டி ஓட்டுவதில் நிபுணத்துவம் பெற்றதற்கான சான்று. நான் என்ன பண்றது முன்னால போனவன் பட்டுனு நிறுத்திட்டான்னு சொன்னா... அது சரி இல்லை. பின் பற்றவேண்டிய இடைவெளியை பின்னால் வருகிறவன் பின்பற்றவில்லை என்றே பொருள். நிதானமான வேகத்தில் செல்லவில்லை என்றும் பொருள். முன்னால் செல்லும் வண்டியில் முட்டி நிறுத்துவதெல்லாம் ஓட்டுனருக்கு அவமானம் என்று புரிய வேண்டும். அது ஒரு பெயிலியர் டெஸ்டினேஷன்.
(விதிவிலக்கு விபத்துகள் உண்டு. அதற்குள் இல்லை இந்தக் கட்டுரையின் ஓட்டம்)
பராக்கு பார்த்துட்டு... சிந்தனையை வேறு பக்கம் விட்டுட்டு.. அலைபேசிக்கு காதை கடன் கொடுத்துட்டு.. அதிவேகமா அத்துமீறும் வண்டிகள்... முன்னால் செல்பவன் பிரேக்கை கணிக்காமல் முட்டிக்கொண்டு நிற்பதெல்லாம் வண்டி ஓட்ட லாயக்கில்லை கணக்கில் தான். வண்டி ஓட்டுகையில் சிந்தனையில் பிரேக் பிடித்தபடியே இருத்தல் வேண்டும். பிரேக் இல்லாத எதுவும் வேகத்துக்கு ஆகாது.
இந்த வண்டி மாதிரி இனி கிடைக்காது என்று இன்னும் யமன் 100cc வண்டி ஒன்றை வைத்துக் கொண்டிருப்பார்கள். அதில் ஒரு வெத்து கெத்து. சில குப்பை லாரி ரோடெல்லாம் குப்பையை கொட்டிட்டு போற மாதிரி இந்த வண்டி சத்தத்தை கொட்டிட்டு போகும். அந்த சத்தம் இல்லாத இதய நோயை உண்டாக்கும். இருக்கும் இதய நோயாளியைக் கொண்டு சேர்க்கும். அதுவும் பழைய தகர டப்பா தொண்டைல கேரோசின ஊத்துன மாதிரி கதறும். அது ஒன்னும் லுக்காவும் இல்ல. அத எப்பிடி கொண்டாடறாங்கனு தெரியல. எடுத்ததும் வேகம் எடுக்குமாம். எடுத்ததும் வேகம் எடுக்கறதெல்லாம் டபக்குனு முடங்கிரும் கண்ணுங்களா.
இன்னொரு கோமாளித்தனம்... இந்த சைலன்சரை தூக்கி தொடுவானம் நோக்கி வைத்துக் கொள்வது.
அது நேராக பின்னால் நிற்கும் வண்டிக்காரனின் முகத்திலேயே காற்றை ஊதி தள்ளும். சைலன்ஸரின் இயல்பு கிடைமட்டமாக இருத்தல். அதுதானே அதன் வடிவமைப்பு. அதைத் தூக்கி சரிவாக வைத்துக் கொண்டு அலைவது அராஜகம். இதற்கு எப்படி அனுமதி தருகிறார்கள் என்று புரியவில்லை. ஒருவேளை ரேஸ் வண்டிக்கு அப்படி இருந்தால்... அது தனி. எந்த வண்டிக்கு எந்த சாலை என்று ஒன்றிருக்கிறது தானே. எப்போதும் சொல்வது தான்... ரேஸ்க்கு போ... முறுக்கு. கப் வாங்கிட்டு வா. கை தட்டலாம். அதை விட்டுட்டு அந்த வண்டிகளை பொது சாலையில் ஓட்டி சீன் போடுவதெல்லாம் சிக் மனநிலை. மாட்டு வண்டி வேகமாய் ஓடுவது போலவே தெரிகிறது.
- கவிஜி