ஆதிக்க இந்தியைத் தடுத்து நிறுத்தி இரு மொழிக் கொள்கை என்றார். மெட்ராஸ் மாகாணத்தின் பெயரை மாற்றி தமிழ்நாடு எனறு பெயர் சூட்டினார். ஆரிய -வைதீக சடங்குகளைத் தவிர்த்து சுயமரியாதை திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் கொடுத்தார். ஸ்ரீ ,ஸ்ரீமதி, குமாரி என்ற வடமொழிச் சொற்களைத் தவிர்த்து, திரு, திருமதி, செல்வி போன்ற அழகு தமிழ் சொற்களை அறிமுகப்படுத்தினார், சமஸ்கிருத பேரலையைத் தடுத்து நிறுத்தித் தமிழ் பயிற்சி மொழி என்றார். அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார். குறுகிய காலம் ஆட்சி செய்தாலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து இந்திய ஒன்றியத்திற்கு எடுத்துக்காட்டாகத் தன்னுடைய ஆட்சியை மாற்றி அமைத்தவர் அறிஞர் அண்ணா.

anna 360“இந்த நாட்டிலுள்ள கட்சிகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அடிப்படையில் என்ன பேதம் இருக்கிறது என்றால், மற்ற எல்லாக் கட்சியினரும் இந்தியா ஒரே நாடு என்று வாதாடுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தான் இந்தியா ஒரு நாடு அல்ல. இது பல நாடுகள் கொண்ட ஒரு துணைக் கண்டம் என்று சொல்கிறது.” (நம்நாடு : 19-04-1949) என்றார் அண்ணா.

 இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மாநிலங்கள் மாநில சுயாட்சி உரிமையை உயர்த்திப் பிடித்துக் குரல் கொடுத்து வருகின்றன. அதற்கான முதல் புள்ளியை வைத்தவர் அறிஞர் அண்ணா. மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தை இந்திய ஒன்றியத்தின் மாநிலங்களில் எல்லாம் கேட்க வழிகாட்டியாகத் திகழ்பவர் அண்ணா என்பது யாரும் மறுத்திட முடியாத உண்மை. ஜனநாயகத்தின் அடிப்படையை மறந்து மாநிலங்களின் இறையாண்மையைச் சிதைக்கும் மக்கள் விரோத அரசின் திட்டங்களையும்,மாநில உரிமைகளைச் சிதைத்திடும்

சட்டங்களையும், கல்வி உரிமையை பறித்திடும் ‘நீட்’ ‘புதிய கல்வி’ போன்றவைகளுக்கு எதிராகவும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஆளுநர் எனும் நியமன பதவியின் வழியாக, மாநில அரசுகளின் உணர்வுகளுக்கு எதிராக அடாவடித்தனம் செய்யவைக்கும் ஆளுநர் பதவியை அகற்றிடும் அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்ற அறவழிப் போராட்டத்தை தமிழ்நாடு முன்னெடுத் உள்ளது என்றால் அது அண்ணா காட்டிய வழி.

பேரறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் நடராசன் - பங்காரு அம்மாள் இணையரின் மகனாக செப்டம்பர் 15, 1909 ஆம் ஆண்டில் பிறந்தார். “ No sentence can end with because because, because is a conjunction “ என்று ஆங்கிலேயப் பல்கலைக்கழக மாணவர்களை மிரளவைக்கும் ஆங்கிலப் புலமை, எல்லையற்ற தமிழ் எழுத்தாற்றல், பேச்சாற்றல் கொண்ட, தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணா 1967 ஆம் அன்டில் தமிழ்நாடு முதலைச்சர் ஆனார். பெப்ரவரி 03, 1969 அன்று மறைவு எய்தினார்.

இது அவரின் 56 ஆம் ஆண்டு நினைவு நாள், நெஞ்சில் நிறுத்துவோம்!

- திருப்பூர் மகிழவன்