கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சென்னை, ஆளுநர் மாளிகையில் 21-01-2025 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர் தங்கள் மகள்களைத் தமிழ்நாட்டுக்கு படிக்க அனுப்பும்போது அவர்களின் பாதுகாப்பை உணர்கின்றனர்.

இதனால் தமிழ்நாட்டுக்கு அதிகமான பெண்கள் படிக்க வருகின்றார்கள், என்று ‘தமிழ்நாட்டில் பெண்களில் பாதுகாப்பை’ உறுதிசெய்தார் அவர். ஆளுநர் மனதார வாழ்த்துகிறாரே என்று வியப்பாக இருந்தது.அப்படிப் பேசி பத்து நாள்கள் கூட ஆகவில்லை. அடித்தார் ‘அந்தர்பல்டி’.

காஞ்சிபுரம் மாவட்டம் பொடவூரில் பிரம்மகுமாரிகள் சங்கப் பயிலரங்கத்தில் பேசிய ஆளுநர், சென்னையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பெற்றோர் நினைப்பதாகவும், அதை மாணவிகள் தம்மிடம் கண்ணீருடன் கூறியதாகவும் பேசி, கடந்த வாரம் தான்பேசியதை திருப்பியடித்தார் அவர்.

பேச்சில் நேர்மை இருக்கவேண்டும். ஒன்று ‘சரி’என்று சொல்ல வேண்டும். அல்லது எடப்பாடியைப் போல ‘தப்பு..தப்பு.. தப்பு’ என்றாவது சொல்ல வேண்டும். சீமானைப் போலப் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது.

உத்திரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களைப் போல, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் இல்லை. சில சமயங்களில் நடக்கும் தவறுகளுக்குக் காவல்துறை சரியாக, கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கின்றது. அவ்வளவு ஏன்? பெண்களுக்கு எதிரான சிறு குற்றங்களுக்குக் கூட கடுமையான தண்டனைகளைச் சட்டமாக்கியது தமிழ்நாடு அரசு. அதற்கு ஒப்புதல் கையெழுத்து போட்டுவிட்டு, இப்போது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பேசிக்கொண்டு இருக்கிறார் ஆளுநர்.

ஆளுநர், ஆளுநராக இருக்க வேண்டும் என்பது மரபு. ஆளுநர் பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒர் அரசியல்வாதியாகச் செயல்படக் கூடாது.

ஆளுநரை மாற்ற வேண்டாம், அவர் பேச்சு எங்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்று தமிழ்நாடு முதல்வர் அவர்கள் சொல்கிறார் என்றால் அது வஞ்சப்புகழ்சி (அணி) என்பது கூட ஒன்றியத்தின் காதுகளுக்கு எட்டவில்லை.

மாநிலத்திற்கு ஆளுநர் தேவையில்லை என்பது அறிஞர் அண்ணாவின் கருத்து, திராவிடத்தில் முடிவு. அந்தக் காலம் வரும்வரை இந்தக் கவர்னரை மாற்ற வேண்டும், ஒன்றிய அரசு!

- கருஞ்சட்டைத் தமிழர்