அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி, தி.மு.கழகத்தைக் காலி பண்ணும் வரையிலும் நான் பா.ஜ.கவின் மாநிலத் தலைவராக இருப்பேன் என்று செய்தியாளர்கள்முன் திருவாய் மலர்ந்துள்ளார் திருவாளர் அண்ணாமலை.அடுத்த நிமிடமே, 'இந்தியா டுடே - சி வோட்டர்' இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், இன்றைய நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினால் தமிழ் நாட்டில் தி.மு.க கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றிபெறும். தி.மு.கவின் வாக்கு சதவீதம் இப்போது 5 விழுக்காடு உயர்ந்துள்ளது. அ.தி.மு.க 3 விழுக்காடு சரிந்துவிட்டது, பா.ஜ.க போணியாகாது என்றது தொலைக்காட்சி செய்தி.
பாவம் அண்ணாமலை! பெரியார் மண்ணில் படுக்கக்கூட இடம் கிடைக்காது பா.ஜ.கவுக்கு என்பது கூடத் தெரியாமல் இருக்கிறாரே.
தி.மு.கழகம் என்பது கட்சியல்ல; அது, மக்கள் இயக்கம், மக்களுக்கான இயக்கம்.
1916 ஆம் ஆண்டில் திராவிட இயக்கமாக வேர்விட்டு ஆர்ப்பாட்டம், மறியல், விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு உள்படப் பல போராட்டங்கள், கைது, சிறை, சித்திரவதை என்று மக்களுக்காகக் களமிறங்கி நெருப்பாற்றைக் கடந்து வந்து, 1967இல் மக்களால் ஆட்சியில் அமர்ந்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
கடவுளை மறுக்கும் தி.மு.க இதுவரை எந்தக் கோயிலையும் இடித்ததில்லை, பா.ஜ.கவைப் போல.
கல்வியில், வேலை வாய்ப்பில், தொழில்துறையில், மருத்துவத்தில், மகளிர் மேம்பாட்டில் என அனைத்துத் துறைகளிலும், மற்ற மாநிலங்களுக்குமுன்னோடியாய் இருக்கிறது 'திராவிட மாடல்' அரசு.
மோடியைப் போல ஆகாயத்தில் பறந்து கொண்டு இருக்கவில்லை எங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். தெருக்களில், சாலைகளில் நடந்து சென்று மக்களின் குறைகளைக் கேட்டு உரிய தீர்வு காண்கிறார் அவர். தி.மு.கழகம், மக்கள் இயக்கமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.
அதனால், கமலாலயத்தின் செங்கலை யாரும் உருவிவிடாமல் பார்த்துக் கொள்ளட்டும், அண்ணாமலை!
- கருஞ்சட்டைத் தமிழர்