ஒரு அப்பட்டமான பொய்யைச் சொல்லிவிட்டு அதற்குச் சான்று கேட்டால் "நீ குடு"ன்னு திருப்பி கேட்கிற அயோக்கியத்தனத்துக்கு விமர்சனம்னு பெயரா? விவாதம்னு பேயரா? இப்போது வந்திருப்பதெல்லாம் அப்பட்டமான அவதூறு. சான்று கேட்டால் "நீங்கள் கொடுங்கள்" என்பதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? பெரியாரின் மொழியில் சொன்னால் இது அறிவு நாணயம் அற்ற செயல். பெரியார் ஏன் இந்தச் சூழலில் தேவைப்படுகிறார்? இந்தச் சூழல் என்றால் என்ன? தமிழ்நாட்டு மக்கள் ஒரு இந்துத்துவப் படையெடுப்புச் சூழலில், அதை எதிர்த்து நம்மைக் காக்கிற ஒரு கேடயமாக, தமிழகத்தைக் காக்கும் அரணாகப் பெரியாரும், அவருடைய சிந்தனைகளும், அவர் தொடங்கிய இயக்கமும் தேவைப்படுகின்றன. அப்போது தன் காலத்தில் பெரியாரைப் பற்றிப் பெரிதும் போற்றிப் பேசியவர்கள் பல பேர் உண்டு. அவரோடு கருத்து மாறுபட்டவர்கள் உட்பட. எல்லோரும் அவரைத் தந்தை பெரியார் என்று ஏற்றுக் கொண்டார்கள்.

periyar 364திரு.வி.க உட்பட பல தலைவர்கள். ஏ.எஸ்.கே ஐயங்கார் அவரைப் பற்றிப் பிரமாதமாகப் பேசும் போது, "எல்லோருமே ஐயங்கார் என்று போடும்போது நீங்களும் ஐயங்கார் என்று போடுகிறீர்களே" என்று பெரியாரிடம் கேட்டபோது, பெரியார் சொன்னார், "மற்றவர்கள் எல்லாம் என்னைப் போற்றுவதில் என்ன இருக்கிறது? ஒரு ஐயங்கார் பெரியாரை ஏற்றுக் கொண்டான் என்று சொல்வது தானே முக்கியம்? அதனால் அது இருக்கட்டும்" என்று சொன்னார். அதுபோல பல உதாரணங்களைச் சொல்ல முடியும். எத்தனையோ தலைவர்களை, மாறுபட்டவர்களைச் சொல்ல முடியும். அவரோடு மாறுபட்டுத் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்த பாவலரேறு போன்றவர்கள் எல்லாம் அவரைப் போற்றி மிக அழகாகப் பாடல் புனைந்தார்கள். கவிஞர் காசி ஆனந்தன் எழுதி இருக்கிறார். எவ்வளவோ பேர் எழுதியிருக்கிறார்கள்.

பாவேந்தர் அவரைப் பற்றி மிகச் சுருக்கமாகச் சொன்னார். "தொண்டு செய்து பழுத்த பழம்; தூய தாடி மார்பில் விழும்; மண்டைச் சுரப்பை உலகு தொழும்; மனக்குகையில் சிறுத்தை எழும்; அவர்தான் பெரியார்" இந்த வியப்பு கலந்த பாராட்டு உரை என்பது தமிழ்நாட்டில் பெரியாருக்குப் பொருந்தும். இன்னும் சிலருக்கு ஓரளவுக்குப் பொருந்தலாம். உலக அளவில் மிகப்பெரிய மெய்யியல் அறிஞர்களுக்குக்கூட பொருந்தலாம். ஆனால் பெரியார் வாழ்ந்த களம், காலம் ஆகியவற்றை ஒட்டிப் பெரியாரை இதே போன்ற ஒரு நான்கு வரிகளில் எழுத வேண்டும் என்று நான் எழுதினேன். "தமிழினத்தின் தன்மான அடித்தளம் ; சமூக நீதி புத்தமைப்பின் உளைக்களம்; தந்தை பெரியார் விடுதலைச் சிந்தையின் விளைநிலம்; தமிழினத்தின் தன்மானத்திற்கு அவர் தான் அடித்தளம்".

இதை நாம் மட்டுமல்ல, 1925 இல் குடியரசு ஏட்டைத் தொடங்கி சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் நிறுவினார். இது என்னவென்றால் தமிழினம் தன்னைத்தான் அடையாளம் கண்டுகொள்ளும் போராட்டத்தின் தொடக்கம் என்று இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தீக்கதிர் பொங்கல் மலரில் எழுதினார். 1938 இல் ராஜகோபாலாச்சாரியாரின் இந்தித் திணிப்புக்கு எதிராக மொழிப் போருக்குத் தலைமை வகிக்கிறார் பெரியார். தமிழர் தந்தை என்று அவரோடு எத்தனையோ வகையில் மாறுபட்டிருக்கக் கூடிய மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம், கருமுத்து தியாகராயர் ஆகிய எத்தனையோ பேர் அவரைத் தமிழர் தலைவர் என்று அழைத்தார்கள். அப்போது உள்ள குடியரசு ஏடுகளை எடுத்துப் பார்த்தால் தெரியும். எவ்வளவு பொறுப்போடு அவர் எல்லா தரப்பட்ட மக்களையும் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகத் திரட்டுகிற முயற்சியில் ஈடுபட்டார் என்று.

 இந்திய அரசமைப்புச் சட்டம் வந்தது. உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வகுப்புரிமையை ஒழித்துக் கட்டுவதற்கான ஒரு தீர்ப்பு வந்தது. அதை எதிர்த்து இங்கு ஒரு போர்க்களம் கண்டார் பெரியார். இவருடைய போராட்டத்தை அங்கீகரித்து அன்று சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், நாட்டின் தலைமை அமைச்சராக இருந்த நேரு தமிழ்நாட்டில் இருந்து இப்படி ஒரு குரல் வந்தது என்பதால் தான் அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் கொண்டு வந்தார்கள்.

நான் தமிழ்த் தேசியத்தின் பக்கம் உறுதியாக நிற்கிறேன். எனக்குப் பெரியாரை ஏற்றுக் கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. நான் தமிழ் தேசியத்தின் வழிகாட்டியாகப் பெரியாரை ஏற்றுக்கொள்கிறேன். பெரியாரை நீக்கிய தமிழ்த் தேசியம் சாதிய தமிழ்த் தேசியம். அது வலதுசாரி தமிழ்த் தேசியம். மதவாதத் தமிழ்த் தேசியம். இனவாதத் தமிழ் தேசியம். பெரியார் இனவாதி அல்ல. அவர் இன உரிமைக்குப் போராடியவர். இந்த இடத்தில் யாருமே பெரியாருக்கு நிகர் இல்லை. எத்தனையோ பேர் போராடினார்கள். தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம் சென்னை கடற்கரையில் முழங்கிய போது 1938 செப்டம்பர் 11 ஆம் நாள் நாவலர் சோமசுந்தர பாரதியார் இருந்தார். மறைமலை அடிகள் இருந்தார். "நாங்கள் மூன்று பேரும் இந்த முழக்கத்தைக்கொடுக்கும் போது தமிழ்நாட்டில் வேறு யார் இருக்கிறார்கள் இதை எதிர்க்க"என்று பெரியார் அந்த மேடையில் கேட்டார். இது உண்மை. அவர்களுக்கெல்லாம் உரிய பங்கு உண்டு அந்தப் போராட்டத்தில். நான் கேட்பது அந்த முழக்கத்தை இறுதிவரை எடுத்துச் சென்றவர் யார்? இவர்கள் அல்ல. யார் இயக்கம் நடத்தியவர்கள்? அந்தக் கூட்டம் எதற்கு நடக்கிறது? பட்டுக்கோட்டை அழகிரி தலைமையிலான நடை பயணத்தின் இறுதியில் நடக்கிறது. பட்டுக்கோட்டை அழகிரி யார்? அவர் பெரியாரின் தொண்டர். சுயமரியாதை இயக்கம் தான் இயக்கம் நடத்துகிறது.

 பெரியாரின் சிறப்பு என்னவென்றால் அவர் இயக்கம் இல்லாமல் ஏடு இல்லாமல் எப்போதும் இருந்ததில்லை. "குடியரசு" "விடுதலை" என்ற பெயர்கள் எல்லாம் எதைச் சுட்டுகின்றன? எந்தக் குடியரசு? தமிழ் குடியரசு. யாருடைய விடுதலை? தமிழ்நாட்டுடைய விடுதலை. அவர் தெளிவாக இருந்தார். அதைத் தவறாக எடுத்துக் கொண்டால் இந்த நிலப்பரப்பின் விடுதலை என்பது முடியாது. அதனால்தான் பெண் விடுதலை, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி என்று எல்லா விடுதலைகளையும் சேர்த்த ஒரு விடுதலையை அவர் கோரினார். அதனால் பெரியாரின் பார்வையில் பெண் விடுதலை உள்ளிட்ட சமூக நீதிப் பார்வை என்பதும், தமிழ்நாட்டு விடுதலை என்பதும் அவருடைய இரண்டு கண்கள். கண்கள் இரண்டானாலும் பார்வை ஒன்றுதான். அதுதான் புதிய உரிமை பெற்ற விடுதலை பெற்ற தமிழ் தேசம். இதை எப்படித் தமிழ் தேசியர்கள்களால் எதிர்க்க முடியும்?

(அண்மையில் ‘புதிய தலைமுறை' தொலைக் காட்சியின் ‘நேருக்கு நேர்' விவாதத்தில் தோழர் தியாகு பேசியதில் இருந்து....)

தொகுப்பு : சாரதாதேவி