பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தைத் திருவள்ளுவர் கற்றுக் கொடுத்தார் என்று, திருவள்ளுவருக்குக் காவி அணிவித்துத் திருவள்ளுவர் நாளில் ஆர்.என்.ரவி செய்தி வெளியிடுகிறார்.

பாரதத்தின் சனாதன மரபையோ அல்லது பக்திமயத்தையோ வள்ளுவர் எங்கும் சொல்லவில்லை. இதன்மூலம் ஆர்.என்.ரவி திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூச முயல்கிறார் என்பது தெளிவாகிறது.

திருவள்ளுவரை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர், திருக்குறளை அயல்மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்தவர் மோடி என்றுவேறு பிதற்றுகிறார் அவர். பெஸ்கி என்ற வீரமாமுனிவர் 1730 ஆம் ஆண்டிலேயே திருக்கிறளை முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அதுமுதல் 1983 வரை 30 மொழிகளில் 117 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. சமஸ்கிருதத்தில் கூட திருக்குறள் மொழிபெயர்ப்பு இருப்பதாக உ.வே.சா கூறியிருக்கிறார்.

இந்தக் காலங்களில் மோடியின் அரசியலே தெளிவாக இல்லை. எனவே மோடிக்கும் திருக்குறளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒன்று ஆர்.என்.ரவி அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட ஆளுநராகச் செயல்பட வேண்டும். அல்லது முழுநேர அரசியலுக்கு வந்துவிட வேண்டும், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு.

அதிகாரப் பதவியில் இருந்து கொண்டு, தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதிராகக் காவி அரசியல் செய்வது, ஆளுநருக்கு அழகில்லை.

பொங்கல் நாள் என்று சொல்ல விரும்பாத அவர் 'லோஹ்ரி, மகர சங்கராந்தி, போகலி, பிஹு உத்தராயணத்தின் விசேஷமிக்க நாள்' என்று தமிழைப் புறக்கணிக்கும் ஆளுநர் இனியும், இங்கே தேவையில்லை.

- கருஞ்சட்டைத் தமிழர்