கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

"நம்மீது திணிக்கப் பட்டுள்ள இந்த மூவர்ணக் கொடி நமக்குச் சொந்தமாகாது. விதியின் உதையால் ஆட்சிக்கு வந்தவர்கள் மூவர்ணக் கொடியை நம் கைகளில் கொடுக்கலாம். ஆனால் அது நம்மால் மதிக்கப்படாது. மூன்று வண்ணங்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அது உளவியல் ரீதியாக மோசமான விளைவுகளைக் கொடுக்கும்!"

இப்படிச் சொன்ன தேசபக்தர்கள் யாராக இருக்க முடியும்? சாட்சாத் நம்ம ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தான். எங்கே சொன்னார்கள்?

போகிற போக்கில், "ஸுக்லாப்ரதம் ஸஸி வர்ணம்..." என்பதுபோல உளறிவிட்டுப் போகவில்லை.

ஆர்.எஸ்.எஸ் இன் அதிகாரப்பூர்வ ஏடான 'ஆர்கனைசர் ' இதழில்தான் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்கள்.rss raly 360அய்யய்யோ அது பெரிய தேசபக்தி இயக்கமாச்சே... இந்திய தேசியக் கொடி பற்றியா இப்படிக் கேவலமாகப் பேசியிருக்கிறார்கள்? சந்தேகமாக இருக்கிறதே...! என்று கவலைப்படுகிற சூத்திர பஞ்சம இந்துக்கள் .....

அதுயாரு சூத்திர பஞ்சம இந்துக்கள்?

அட நாமதான். நம்மை நாமே ஆண்ட பரம்பரைனு சொல்லிக்கிட்டாலும் இந்து வேத சாஸ்த்திர சனாதான தர்மப்படி பார்ப்பனரல்லாத சமூக மக்கள் எல்லோரும்..... பார்ப்பானின் அதிகாரப்பூர்வமற்ற தொடர்பால் அதாவது 'இல்லீகல் காண்டக்ட்ஸ்' மூலமாகப் பிறந்த ஸூத்ராஸ், என்கிறது வேதம்.

"இல்லையில்லை இதை நாங்கள் ஏற்கமாட்டோம். நாங்கள் ஸூத்ராஸ் இல்லே.."

"அப்படியா...? அப்ப நீ ஸூத்ராஸ்க்கும் கீழே பஞ்சமன்!"

சரி இதெல்லாம் இருக்கட்டும். இப்போதான் ஸூத்ராஸ் பஞ்சமாஸ் எல்லோரும் தங்களைத் தாங்களே ஆண்ட சாதிப் பெருமைக்குள் திணித்துக் கொண்டும் வெட்டிக் கொண்டும் நாசமாய்ப் போகிறோமே, அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆர்.எஸ்.எஸ் இன் அடுத்த தேசபக்தி ஒழுக்கம் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான பக்கங்களில், ஒன்று 1930 களில் தீவிரமடைந்த 'ஒத்துழையாமை இயக்கம்', இன்னொன்று 1942 இல் வலுப்பெற்ற ' வெள்ளையனே வெளியேறு' இயக்கம்.

இந்த இரண்டிலும் நம்ம தேசபக்த ஆர். எஸ். எஸ் தீவிரம் காட்டியிருக்குமே....? ஆமாம்... நிச்சயமாக! எப்படி?

சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ் ஒதுங்கியே இருந்தது. குறிப்பாக, "ஆங்கிலேயருக்கு எதிரான எந்தவொரு அரசியல் நடவடிக்கையையும் ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளாது!" என்பதே ஆர்.எஸ். எஸ் இன் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவரின் உறுதியான நிலைப்பாடு என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வரலாற்று ஆசிரியர் சி.பி.பிஷிகர் சொல்கிறார்.

ஆச்சர்யமா இருக்கே! " நாட்டு மக்கள் அனைவரும் தேசத்திற்காக உழைக்க வேண்டும்!" என்கிற ஆர்.எஸ். எஸ் இயக்கமா இப்படி? என்று நம்ம ஆட்களுக்குத் தோன்றலாம். ஆமாம். இப்போதும் ஆர்.எஸ்.எஸ் இதையேதான் சொல்கிறது. ஆனால் எந்த மக்கள்? அதான் உழைப்பதற்கென்றே ஒரு ஜாதியை வெச்சிருக்கோமே .....ஸூத்ராஸ். அவாதான் தேசபக்தியோடு உழைக்க வேண்டும். அதாவது ஆர்.எஸ்.எஸ் இன் அடியாட்களாக இருக்கிற கூட்டத்திற்குத் தான் தேசபக்தி. அதன் தலைமையை எப்போதும் அலங்கரித்துக் கொண்டிருக்கிற சித்பவன் பார்ப்பனர்களுக்கு தேசபக்தி, தெய்வ பக்தி என்பதெல்லாம் சாதாரணம். அதுமட்டுமல்ல அவர்களுக்கு மனிதத் தன்மையே வெகு தூரம்.

இந்து முஸ்லீம் கலவரம், பாக்கிஸ்தான் பிரிவினை, காந்தியார் படுகொலை, இந்தித் திணிப்பு, இந்தி வழியே சமஸ்கிருத கலாச்சாரம், வேத ஆகமம் வழியே சமூகப் பிரிவினை, ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, பெண்ணடிமை, குடி, கொலை, கொள்ளை, இனப் படுகொலை எல்லாம் அவர்களுக்குச் சாதாரணம்.

1925 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்ட அமைப்பான ஆர்.எஸ்.எஸ்க்கு மிகப்பெரிய இலக்கெல்லாம் ஒன்றுமில்லை. மேற்கண்ட சமூகவிரோத செயல்களைப் பாதுகாப்பதன் மூலமாகவே தங்கள் ஆரிய மேலாதிக்கத்தைப் பாதுகாக்க முடியும் என்பதுதான். அதாவது, மகாத்மாவே ஆனாலும், சித்பவன் பார்ப்பனரான திலகரின் சவம் கிடத்தப்பட்ட பாடையைத் தொட முடியாது என்கிற தங்கள் தனித்தன்மையைக் காப்பாற்றுவதற்காகவே தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அரசாங்க ஊழியர்களாக இருப்போர் இணையக் கூடாது என்றிருந்த முந்தைய சட்டத்தை விலக்கி ஒட்டுமொத்த அரசையும் ஆர். எஸ். எஸ் அமைப்பிற்கு அடிமைசாசனம் எழுதிக் கொடுக்கத் துணிந்திருக்கிறது நரேந்திரர் தலைமையிலான பாஜக அரசு.

இளைஞர்களே எச்சரிக்கை! இதுவரை அரசு ஊழியர்களுக்குள் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி இருந்தது. இனி அரசாங்கமாகவே ஆர்.எஸ்.எஸ் தான் இருக்கும் என்கிறார் நரேந்திரர். என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி, சிந்திப்போம்!!

- காசு.நாகராசன்