தேர்தலுக்கு முன்பு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால நிதி நிலை அறிக்கையிலாவது தமிழ் இருந்தது. தேர்தலுக்குப் பின்னர், 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் தமிழும் இல்லை, தமிழ்நாடும் இல்லை. தமிழ்நாடு மட்டுமல்ல. பீகார், ஆந்திரா தவிர ஒரு பேச்சுக்கு அசாம், மேற்கு வங்கம் தவிர மற்ற எந்த மாநிலங்களின் பெயர்களும் அறிக்கையில் இடம் பெறவில்லை. தேர்தலுக்குப் பிறகு தமிழ்மொழி, திருக்குறள் எல்லாமே மோடிக்குக் கசந்து போனதா? என்ன காரணம்? அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கொடுக்கும் அல்வா கூட தமிழர்களுக்கு இனிக்கவில்லை.

எல்லா மாநிலங்களிலும் பலத்த அடி வாங்கி இருக்கிறார்கள். 15 மாநிலங்களில், 75க்கும் மேற்பட்ட தொகுதிகளில், தில்லு முல்லுகளின் வழியாகவே வெற்றி பெற்றிருக்கிறாகள் என்ற சந்தேகத்திற்குத் தீனி போடுகிறது இந்த நிதி நிலை அறிக்கை.

nirmala seetharaman budget 2024இப்படி வெளிப்படையாகத் தங்கள் அரசியல் கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்திய கட்சி பாரதீய ஜனதா கட்சியாக மட்டுமே இருக்க முடியும். நிதிஷ்குமார், சந்திரபாபு ஆகியோரின் தயவால் ஆட்சி நடப்பதால், அவர்களைக் குளிர்விக்கப் பல மாநிலங்களின் வரிப் பணத்தில் இருந்து பெறப்படும் வருவாயை இரண்டே மாநிலங்களுக்குப் பெரிய அளவிலும், மற்றவர்களுக்கு சட்டைப் பையை வடிவேலு விரித்துக் காட்டும் பாணியில் இருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை. இதைத் தங்கள் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளும் அறிக்கை என்று ராகுல் காந்தி நக்கல் அடித்திருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாதம் 27 அன்று நடக்க இருக்கும் நிதி அயோக் கூட்டத்திற்கு போகப் போவதில்லை என்று அறிவித்து விட்டார். பொங்கி எழுந்திருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். மொத்தமாக மம்தாவைத் தவிர எல்லா இ.ந்.தி.யா கூட்டணி முதலமைச்சர்களும் நிதி அயோக் கூட்டத்தைப் புறக்கணிக்க இருக்கிறார்கள். பாராளுமன்றம் போர்க்கோலம் பூண்டிருக்கிறது. எந்த அளவிற்கு என்றால் பிரதமருக்குப் பாதுகாப்பு இல்லை என அச்சப்படும் அளவுக்கு!

எதிர்க்கட்சிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே ஒரு கண்ணாடிச் சுவர் எழுப்பப் பரிந்துரைத்திருக்கிறதாம் பாராளுமன்ற நிருவாகக் குழு.

நிதி நிலை அறிக்கையில் தங்கள் எஜமானர்களுக்கு விசுவாசம் காட்ட மட்டும் மறக்கவில்லை பா.ஜ.க. அந்நிய பெரு நிறுவனங்களின் தொழில் வரி 40% லிருந்து 35% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. தங்கம் இறக்குமதி வரி குறைக்கப் பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அப்படியே நகலெடுக்கும் விதமாக, வேலை வாய்ப்புடன் இணைத்த ஊக்கத்தொகை அறிவிப்புகள் வந்துள்ளன. அதுபோல பயிற்சிக்கால உதவித்தொகை பற்றிய காங்கிரசு கட்சியின் வாக்குறுதியையும் பா.ஜ.க தன் நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்திருப்பதை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றதோடு, இன்னும் பல அம்சங்களைச் சேர்த்து நகல் எடுத்திருக்கலாமே என்று இவரும் நக்கலடித்திருக்கிறார். தி.மு.க அரசின் 'தோழி' திட்டத்தையும் 'சுட்டு' இக்கிறது ஒன்றிய அரசு. பெண்களுக்கான சமூக நலத் திட்டமாக அதை அறிவித்திருக்கிறார்கள்.

தமிழ் நாடு அரசு ஏற்கனவே கேட்டிருந்த திட்டங்கள், வெள்ளப் பாதிப்புகள் எவற்றுக்குமே நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 2021 இல் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையான ரூ.63,000/- கோடியே இன்னும் வந்த சேர்ந்தபாடு இல்லை. இந்த அறிக்கையிலும் அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. புதிதாகக் கட்டப்பட இருந்த கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் குறித்து எந்தப் பேச்சும் இல்லை. அவ்வளவு கேலிக் கூத்துகளுக்கு அப்பாலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. தமிழ்நாடு இரண்டாண்டுகளாக வெள்ளக்காடாக மிதந்தும், பல ஆயிரம் கோடிகள் நட்டம் ஏற்பட்டும், பல முறை கேட்டும், பேரிடர் சிறப்பு நிதியாக ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு இந்த ஆண்டும் ஒதுக்கவில்லை.

 மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களைச் சுரண்டிக் கொண்டு, தங்களுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்று வேற்றுமையைக் காட்டி நிதிப் பங்கீட்டிலும் ஒன்றிய அரசு விளையாடுவது நாட்டின் குடிமைச் சமூக அமைதியை சீர்குலைக்கும்.

கார்கே சொல்வதுபோல இது நிதிநிலை அறிக்கை இல்லை. ஒருவரின் நாற்காலிக்காக இருவருக்கான அறிக்கை இது!

- சாரதாதேவி