ஒன்றியத்தில் பாரதிய ஜனதா அரசு பதவியிலிருந்த கடந்த பத்தாண்டுகளில் 3,656 தமிழ் நாட்டு மீனவர்களைக் கைது செய்தும், 611 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தும் இருக்கிறது இலங்கை அரசு. கடந்த நவம்பர் வரை மட்டும் 736 முறை மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறையே ஒப்புக் கொண்டுள்ளது. தாக்குதலில் கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதாகவும், சிறையிலிருந்து விடுதலை பெற மீனவர்களுக்குப் பெரும் தொகையை அபராதமாக விதிப்பதாகவும் மீனவர்கள் தமிழ் நாடு முதல்வரிடம் முறையிட்டிருக்கிறார்கள்.பிப்ரவரி 28 முதல் பலகட்ட போராட்டங்களை அறிவித்து மீனவர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 35 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளது. அண்மையில் நாகப்பட்டினத்துக்கு பலவளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கச் சென்ற முதல்வர், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளுக்கு நிவாரணத் தொகையை 6 லட்சத்திலிருந்து 8 லட்சம் வரை உயர்த்திக் கொடுக்கவும், இலங்கைச் சிறையில் உள்ள மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நாளொன்றுக்கான உதவித் தொகையை 350 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்திக் கொடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். இதை அடுத்து தலை நகர் புதுதில்லிக்குச் சென்று ஒன்றிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த தமிழ் நாட்டின் அமைச்சர்களுடன் மீனவர்கள் சங்கத் தலைவர்களும் செல்ல இருப்பதால் போராட்டத்தை நிறுத்தி இருக்கின்றனர் மீனவர்கள். 2010 முதல் இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே நடத்தப்பட்டு வந்த பேச்சு வார்த்தைகள் இப்போது நடைபெறுவதில்லை என்று சொல்கிறார் முதல்வர்.
கச்சத் தீவு கொடுக்கப்பட்டது காங்கிரசு அரசின் தவறு என்று அரசியல் பேசி, நாங்கள் வந்தால் எல்லாவற்றையும் சரிசெய்து விடுவோம் என்று ஆட்சிக்கு வந்த ஒன்றிய பா.ஜ.க அரசு, தமிழ் நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாகவே பார்ப்பதில்லை. வடநாட்டின் ஊடகங்கள் கூட அவர்களைத் தமிழக மீனவர்கள் என்று சொல்கிறதே ஒழிய, இந்திய மீனவர்கள் எனச் சொல்வதில்லை. தமிழ்நாடு என்றால் தனிநாடு போலத் தானே வடக்கில் தெரிகிறது? அதனால் தான் இந்தச் சிக்கல் வளர்ந்து கொண்டே இருக்கிறது. கச்சத் தீவை ஒரு ராஜ தந்திரமாக, தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் புறந்தள்ளி, இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது இந்திய அரசு. அது யாருடைய ஆட்சியாக இருந்தாலும், அதனால் இன்றும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் தமிழ் நாட்டு மீனவர்களுக்கு ஒரு நல்ல தீர்வை உருவாக்கித் தரும் பொறுப்பு இப்போது ஆட்சியில் இருக்கும் ஒன்றிய அரசுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இருக்கிறது.
இலங்கை அரசுடன் பேசி, இரு தரப்பையும் பேச்சு வார்த்தைக்கு உட்படுத்தி, அமைதிக்கான தீர்வுகளை எட்ட இந்திய அரசு எதுவும் செய்யாமல் பல பத்தாண்டுகளாக, தமிழ் நாட்டு மீன்வர்களை வஞ்சித்து வருவதை முதல்வர் தெளிவாகப் பேசி இருகிறார். தாயுள்ளத்தோடு மீனவர்களின் குறைகளைக் கேட்டறிகிறார். அவர்களின் பகுதிகளுக்கே சென்று ஆய்வு செய்கிறார். கடும் நிதி நெருக்கடியிலும், உதவிகளைச் செய்கிறார். அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஒன்றிய அரசிடம் பேச்சு வார்த்தைக்கு அனுப்புகிறார். மீனவர்களின் பிரச்சனை சுமுகமாகத் தீரவேண்டும் என்கிறது தமிழ்நாடு அரசு.
ஒன்றிய அரசு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாரதாதேவி