தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ் வழிக் கல்வியியல், மருத்துவ, பொறியியல் கல்லூரிகளை நடத்துமாறு அறிவுரை சொல்லியிருக்கிறார்! அதாவது ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, முதலில் தமிழ் என்று கூறி, பிறகு இந்தியை அழைத்து வருவது அவர்களின் நோக்கம் ! இந்த மோடி வித்தைகளில் எல்லாம் ஏமாந்து விடாது தமிழ்நாடு!
பாஜக ஆளும் மாநிலங்களிலேயே, தங்களின் தாய்மொழி அழிந்து கொண்டிருப்பதாக - இந்தி அதனை அழித்துக் கொண்டிருப்பதாக - அவர்களின் தலைவர்களே சொல்கிறார்கள். மராத்தியத்தில் அந்தக் குரல் இப்போது வெளிப்படையாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. மாரத்தியை மறந்து விட்டார்கள், மராத்திய மக்கள் இந்திப் படங்களைத்தான் பார்க்கிறார்கள், இந்தியில்தான் பேசுகிறார்கள் என்று பாஜகவினரே புலம்பி இருக்கிறார்கள்.
மேற்கு வங்கத்தில், பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ், வங்கம் தொன்மையான மொழி, அதனை விட்டுவிட்டு வங்காளிகள் இந்தியில் பேசலாமா என்று கேட்டிருக்கிறார்.
இதுதான் இவர்கள் தாய் மொழியை வளர்க்கும் அழகு ! வடநாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளை இந்தி அரித்துக் கொண்டும், அழித்துக் கொண்டும் இருக்கிறது என்கின்றனர்.
தாய்மொழி இயற்கையானது! அதனைத் தாண்டி பிறமொழிகளைக் கற்றுக் கொள்வது, அவரவர் தேவையை ஒட்டியது ! அப்படிப் பார்த்தால், அனைவரோடும் தொடர்பு கொள்ள, ஆங்கிலம் என்னும் மொழி, இந்தியாவிலும், வேறு உலக நாடுகளுக்குச் செல்லும் போதும் போதுமானதாக இருக்கிறது! இந்த நிலையில் எல்லோரும் மூன்றாவது மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இப்போது எங்கிருந்து எழுகிறது?
தேவையை ஒட்டி மொழிகளைக் கற்றுக் கொண்டால், மொழி துணையாக இருக்கும் ! தேவையற்று மொழிகளைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினால், அதுவே சுமையாக மாறிவிடும்!
தான் இந்தியை எதிர்க்கவில்லை என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தாலும், இரு மொழிக் கொள்கையால் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் மீதும், பிற மாநிலங்களின் மீதும் இன்னொரு மொழியைத் திணிப்பதை கைவிட்டு விட்டு, தமிழ்நாட்டைப் பின்பற்றி எல்லா மாநிலங்களிலும், அவரவர் தாய்மொழி மற்றும் உலகத் தொடர்புக்கு ஆங்கில மொழி என்னும் நிலையை ஒன்றிய அரசு கொண்டுவருமானால், தமிழ்நாட்டைப் போல இந்தியாவும் விரைந்து முன்னேறும்!
- சுப.வீரபாண்டியன்