1919 ஆம் ஆண்டு கனகசபை-பத்மாவதி தம்பதிக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு "காந்திமதி" என்று பெயர் வைத்தனர் அதன் பெற்றோர். அன்று அந்தப் பெற்றோர்க்குத் தெரியவில்லை, வரலாறு உள்ளவரை இந்தப் பெண்பிள்ளையின் வரலாறை உலகம் போற்றிப் பேசும் என்று.
கல்வியையும், சமூக அறிவையும் கொடுப்பது ஒரு சிறந்த பெற்றோரின் கடமை. அதை அரசியல் மணிக்கு அவரது பெற்றோர் கொடுத்தார்கள். அப்போதே புலவர் பட்டம் பெற்றார் நமது அரசியல் மணி.
வேலூர் கனகசபைக்கு 1943 ஆம் ஆண்டு பெரியார் ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் ”ஏதோ என் வாழ்க்கையை நான் ஓட்டிக் கொள்கிறேன்" என்று பெரியார் எழுதுகிறார். பாதுகாப்பு இல்லாதது போல உணர்கிறார். அதை வெளிப்படுத்தும்போது கனகசபை அவர்கள் தனது மகள் காந்தி மதி என்ற அரசியல் மணி அவர்களை அழைத்துச் சென்று, இனி வரும் காலங்களில் உங்களை என் மகள் பாதுகாத்துக் கொள்வார் என்று அவரிடம் விட்டுச் செல்கிறார்.
அன்று முதல் பெரியாருக்கு உதவியாக இருந்த அரசியல் மணி - "மணியம்மை" யாரானார்.
இன்றைக்குச் சில கேவலமான மனிதர்கள் அம்மையாரைப் பேசுவது மனசாட்சியற்ற பேச்சு. அம்மையார் பெரியாரை இறுதிவரை கரை சேர்த்து, பிறகு சில காலம் கழகத்தைக் கொள்கை மாறாமல் வழிநடத்திக் கொண்டு சென்றவர். அவரைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் அற்ற, வெறும் அரசியல் ஆதாய நோக்கத்திற்காகப் பேசும் வாய்கள் அம்மையாரின் கால்மண்ணுக்குச் சமம்.
1944 சேலத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் புலவர் மணியம்மை பேசுகிறார். அந்தப்பேச்சு சில காலம் கழித்து 'அம்மா பேசுகிறார்' என்று நூலாக வெளியிடப்பட்டது. அம்மையின் இறுதி மூச்சு உள்ளவரை,
சுயமரியாதை இயக்கம்,
திராவிடர் கழக மாநாடுகள்,
திராவிட மகளிர் மாநாடுகள்,
இவ்வாறாக, தான் வாழ்ந்த காலத்தை எதைக் கொண்டும் அழிக்க முடியாத பதிவுகளை செய்துவிட்டுச் சென்றுள்ளார்.
கந்த புராணம், இராமாயணம் இரண்டையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து கட்டுரை எழுதி இருக்கிறார். திராவிடர் கழக அறிக்கைகளை எழுதி வெளியீடு செய்துள்ளார்.
பெரியாரின் பேச்சுகளைக் குறிப்பெடுத்து, கட்டுரை எழுதி குடிஅரசு, உண்மை நாளிதழில் வெளியிட்டுள்ளார்.
இப்படித் தனது வாழ்நாளை தனது கல்வியைத் தனக்காக மட்டும் பயன்படுத்தாமல் இந்தத் தமிழ் சமூகத்துக்கும் உழைத்துக் கொட்டிக் கொடுத்து விட்டே சென்றுள்ளார்.
1948ஆம் ஆண்டில் குடந்தையில் அரசின் தடைச் சட்டத்தை மீறிச் செயல்பட்டு சிறையில் இருந்தார். 1949ஆம் ஆண்டில் நடந்த இரண்டாவது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொழுது, சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை முன்னின்று நடத்தினார், சிறைத் தண்டனை பெற்றார்
1978 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் நாள் உடல்நலக் குறைவால் பன்முக ஆளுமை கொண்டவராக வாழ்ந்த அம்மையார் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.
ஆணாக பிறந்து பெண்களுக்காக வாழ்ந்தவர் பெரியார்! அந்த ஓர் ஆணுக்காகவும், அவரது கொள்கைகளுக்காகவும் வாழ்ந்தவர் மணியம்மையார்!
- செங்கை சிலம்பு, திராவிடப் பள்ளி மாணவர்