கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இன்றைய ஒன்றிய அமைச்சர் தேவேந்திரப் பிரதானைப் போல அன்று வாய்க்கொழுப்பெடுத்துப் பேசிய கனகன் - விஜயன் என்ற வடநாட்டு இரு மன்னர்களைத் தோற்கடித்து, இமயமலையின் கல்லைச் சுமக்கச் செய்து, தேரில் அவர்களைக் கட்டிப் போட்டு இழுத்து வந்தவர் எங்கள் தமிழ்நாட்டு மன்னன் சேரன் செங்குட்டுவன் என்பது அமைச்சர் பிரதானுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.

தமிழர்களை "நான்சென்ஸ்" என்று சொன்னார் ஜவகர்லால் நேரு. 1957 டிசம்பர் 29 நாகர்கோயில் தி.மு.க பொதுக்குழு தீர்மானத்தின்படி, சென்னை கடற்கரையில் நேருவுக்குக் கருப்புக்கொடி காட்டும் விளக்கப் பொதுக் கூட்டத்திற்குத் தடையை மீறிச் சென்ற பேரறிஞர் அண்ணா ஈ.வே.கி.சம்பத், இரா.செழியன், ஆசைத்தம்பி எனத் தொடர்ந்து நாவலர், கலைஞர், பேராசிரியர், மதியழகன், நடராசன், இலட்சிய நடிகர், நடிப்பிசைப் புலவர் உள்பட பலர் கைது செய்யப்பட்டதால் தமிழ்நாடே போர்க்கோலம் பூண்டது.

ஆயினும் விடவில்லை, 1958 ஜனவரி 6 அன்று திட்டமிட்டபடி நேருவுக்குக் கருப்புக் கொடிகளைக் காட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தவர்கள் தமிழர்கள்.

1938, இந்தியைத் திணிக்க முயன்ற ஒன்றிய அரசுக்கு எதிராக எங்கள் தந்தை பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும், தமிழர்களும் போராடக் களம் இறங்கினார்கள். அந்த மொழிப்போர் 1965 ஆம் ஆண்டு வழியாக இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது என்று 2024 மார்ச் 15 ஆம் நாளிட்ட ஒரு கடிதக்தைக் காட்டுகிறார் அமைச்சர் பிரதான். தமிழ்நாடு அரசு அனுப்பிய கடிதத்தில், குழு அமைத்து ஆய்வு செய்து முடிவெடுப்பதாக சொல்லப்பட்டு இருப்பதை மறைத்துப் பொய் சொல்கிறார் அவர். இப்பொழுது தொகுதிகள் மறுவரையறை என்ற ஒன்றைத் தூக்கிக் கொண்டு இருக்கிறது காவி ஒன்றிய அரசு.

இப்படிப்பட்ட செப்படி வித்தைகள் எல்லாம் தமிழ்நாடு பார்த்து விட்டது.

 இப்பொழுது தமிழ்நாட்டில் வரிப்பணம் வாங்கும் நீங்கள் தமிழ்நாட்டின் கல்வி நிதியைத் தர முடியுமா? முடியாதா?

எங்கள் தமிழ்நாடு முதல்வர் கேட்கிறார், பதில் சொல்லுங்கள்!

- கருஞ்சட்டைத் தமிழர்