திராவிட மாடல் அரசு பதவி ஏற்ற பின், நான்காவது நிதிநிலை அறிக்கை நேற்று வெளியாகி இருக்கிறது. இளைஞர்களுக்கு ஊக்கம் தருகிற, பெண்களுக்கு நம்பிக்கை தருகிற, அறிவை விரிவு செய்கிற, அன்பையும் அரவணைப்பையும் பரவலாக்குகிற நிதிநிலை அறிக்கை என்று இதனைக் கூறிட வேண்டும்!

mk stalin and thangam thennarasuஆக்கப்பூர்வமான, மக்களுக்குப் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுகிற திட்டங்களோடு மட்டும் நிறுத்தி விடாமல், 45 உலக மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கவும், தமிழ்நாட்டில் மேலும் மூன்று மாநகரங்களில் கலைஞர் நூலகத்தைத் திறக்கவும் இந்த நிதிநிலை அறிக்கை முடிவெடுத்திருக்கிறது! அதாவது "அறிவை விரிவு செய்" என்று புரட்சிக் கவிஞர் எழுதியதை இந்த அரசு இன்று நடைமுறைப்படுத்தியிருக்கிறது!

20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள், 10 புதிய அரசுக் கல்லூரிகள் என்னும் இரண்டு அறிவிப்புகளும், கல்வி சிறந்த தமிழ்நாடு என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது!

குறிப்பாக, பெண்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் மூன்று திட்டங்கள் மிகப் பெரிய நம்பிக்கையைத் தந்திருக்கின்றன. தொழில் முனைவோராக முன்வரும் பெண்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் கடன் உதவி, அதிலும் 20 % மானியமாக வழங்கப்படும். இப்படி ஒரு லட்சம் பெண்கள் தொழில் முனைவோராக மாறும் வாய்ப்பு! இதற்காக 225 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி இருக்கிறது!

சொத்துப் பத்திரங்களைப் பெண்களின் பெயரில் பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்தில் 1% குறைத்துக் கொள்ளப்படும் என்னும் அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. கட்டணக் குறிப்பிற்காகவாவது, பெண்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்யப்படலாம் என்னும் நல்ல நோக்கம் இதனுள் மறைந்திருக்கிறது!

 திராவிட மாடல் அரசின் திட்டங்களில், பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திட்டம், மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்! ஒவ்வொரு மாதமும், ரூபாய் ஆயிரம், இப்போது 1.15 கோடிப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது! அவர்கள் யாரிடமும் போய் நின்று கையேந்த வேண்டியது இல்லை. அவரவர் வங்கிக் கணக்கிற்குத் தவறாமல் அந்தத் தொகை வந்து விடுகிறது! இப்போது மேலும் அந்த உரிமைத் தொகையைப் பெற விரும்பும், தகுதி உள்ள பெண்கள் உடனே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான், காலை உணவுத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. 2022 செப்டம்பர் 15, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், மதுரைக்கு அருகில் கீழண்ணத் தோப்பு என்னும் இடத்தில், ஆதிமூலம் தொடக்கப் பள்ளியில் அந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் தொடக்கி வைத்தார்! இன்று 20 லட்சம் கிராமப்புற மாணவர்கள் அந்தப் பயனைப் பெற்று வருகிறார்கள். அதனை இப்போது நகர்ப்புறத்து மாணவர்களுக்கும் விரிவாக்கும் அறிவிப்பு வெளிவந்துள்ளது!

மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை, அரசின் பெயரைச் சொல்லும்.... மக்களின் மனங்களை அள்ளும்!

- சுப.வீரபாண்டியன்