கீற்றில் தேட...

   ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்குத் தொழில்துறையின் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். முதலீடுகளைப் பெறுவதற்கும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. அதே நேரத்தில், தொழிலாளர் இல்லை என்றால், தொழில்கள் இல்லை; நிறுவனங்கள் இல்லை. தொழிலாளர் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் கடமை அவர்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கும், அதற்கும் மேலாக அரசாங்கத்திற்கும் உள்ளது.

சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில், தமிழ்நாடு அரசு கவனமாகச் செயல்பட்டு இரு தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்படுத்தியதோடு, தொழிலாளர்கள் கோரிக்கை பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொள்ளும்படிச் செய்திருக்கிறது. காவல்துறையினரின் நள்ளிரவு கைது போன்ற அத்துமீறல்கள் தவிர்த்திருக்கப்பட வேண்டியவை. அதே நேரத்தில் தொழிலாளர்களுக்கான சங்கம் வைப்பதற்கான உரிமை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

தொழிலாளர்கள் பெரும்பான்மையினராக உள்ள ஒரு சங்கத்தை அமைத்து, பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் முறையாக சங்கத்தைப் பதிவு செய்ய விண்ணப்பிக்கிறார்கள் அந்நிறுவனத்தின் பணியாளர்கள். இதில் காலதாமதம் ஆனதன் விளைவே தொழிலாளர்களைப் போராட்டச் சூழலுக்குத் தள்ளியது. இதனைக் கண்டித்துக் கூட்டியக்கம் நடத்தியதில் திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச.-வும் இருக்கிறது. எனவே இதனை ஒட்டுமொத்தமாக ஆளும் திமுக அரசிற்கு எதிராகச் சித்தரிப்பது தவறு.

அதே வேளையில், அனைவரும் வர்க்கமாக இணைய வேண்டும் என்று குரல் எழுப்பும் கம்யூனிஸ்டுகள், அடிப்படை உரிமையோ, ஊதியமோ இல்லாமல் தமிழ்நாட்டில் பணிபுரியும் லட்சக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்களின் பிரச்சினையில் எடுக்கும் நிலைப்பாடு என்ன என்பது விவாதத்திற்கு உரியது.

இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதைக் காரணம் காட்டாமல், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்கம் அமைப்பதற்கு உரிய அனுமதியினை வழங்குமாறு சாம்சங் நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி விரைவில் இதற்குத் தீர்வு காண வேண்டும்.

- கருஞ்சட்டைத் தமிழர்