நீண்ட காலத்துக்குப் பிறகு பெரியாரை வலதுசாரிகள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதால் அந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் பெரியார் எழுதிய "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற புத்தகம் பெரிய அளவு தமிழ்நாட்டில் விற்பனையானது. அந்தப் புத்தகம் தான் விற்பனையில் அந்த வருடம் முதல் இடத்தை பிடித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆரம்பத்தில் அரசியல் பழகும் பொழுது முதலில் நான் படிக்கத் தொடங்கிய தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அவரைத் தொடர்ந்து சில தலைவர்களை அங்கும் இங்குமாக வாசித்ததும் சிலரிடம் பேசிப் புரிந்து கொண்டதும் உண்டு.
கலைஞரைப் பற்றி அதுவரை கேள்விப்பட்ட எனக்கு கலைஞர் எவ்வளவு நெருக்கமானவர் என்பது அவர் மறைந்த அன்றுதான் தெரிந்தது.
நான் ஒரு வேலைக்கான நேர்காணலில் இருக்கும் பொழுது தான் அந்தச் செய்தி எனக்கு வந்து சேர்ந்தது. நேர்காணலில் இருந்து உடனடியாக அனைவரும் வீடு செல்ல வேண்டும், கலைஞர் மறைந்து விட்டார், அதனால் கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்று எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
அதுவரை எந்த பாதிப்பும் இல்லாத எனக்கு என் வீட்டில் யாரோ ஒருவர் மறைந்தது போல் மனதிற்கு அவ்வளவு பாரமாக இருந்தது. இவரைப் பற்றி யோசித்து வாகனத்தில் செல்லும் போது என்னை அறியாமல் கண்களில் இருந்து இரண்டு துளி கண்ணீர் வடிந்தது. இப்பொழுதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. எதற்காக என் கண்கள் கலங்கின? இவரைப் பற்றி பெரிதளவில் புரிதலும் இல்லை, நான் இவரை வாசித்ததும் இல்லை. ஆனாலும் இவரின் இழப்பு ஏன் என்னை இவ்வளவு பாதித்தது என்று எனக்குள் ஓடிய கேள்விக்கான பதில் சில வருடங்களுக்கு பிறகு தான் கிடைத்தது.
ஆச்சரியம் என்னவென்றால் என்னைப் போலவே பலரும் கலைஞரை அவரது மரணத்தின் பின்புதான் புரிந்து கொண்டார்கள். பலரும் இதைச் சொல்லும் பொழுது எனக்கு கலைஞர் சொன்ன வரிதான் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். "ஒருவர் மரணத்தின் பின் எத்தனை காலம் மக்களின் நினைவில் இருக்கிறாரோ அத்தனை காலம் அவரின் ஆயுள் கணக்கிடப்படும்". அப்படிப் பார்த்தால் என் மரணம் வரை தலைவர் கலைஞரின் ஆயுள் நீடிக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
பெரியாரின் பகுத்தறிவும் அண்ணாவின் ஆளுமையும் ஒன்றாக இணைத்து பெரியாரின் கனவான அண்ணாவின் தமிழ்நாட்டை தெற்கே உதித்த சூரியனாய் இந்தியாவிற்கும், உலகத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் தலைவர் கலைஞர்.
அவரைப் பற்றி பல அவதூறுகளைக் கேட்டதுண்டு. அதில் குறிப்பாக அவர் திருட்டு ரயில் ஏறி வந்தவர், கச்சத்தீவைத் தாரை வார்த்தவர், ஊழல்வாதி, குடும்ப அரசியல் செய்பவர் என கலர் கலராக ரீல் விடுவார்கள்.
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களும், பதவி இழந்தவர்களும், வாரிசு அரசியலைத் தூக்கிப் பிடித்தவர்களும் கொண்டாடப் படுகிறார்கள். ஆனால் இவை எதிலுமே தண்டிக்கப்படாத தலைவர் கலைஞர் இந்தப் பழியை எல்லாம் சுமந்து செல்ல வேண்டி இருக்கிறது, மரணத்திற்கு முன்பு மட்டும் அல்ல மரணத்திற்குப் பிறகும் கூட.
தமிழ்நாட்டில், இந்தியாவில் ஏன் இந்த உலகத்திலேயே இவ்வளவு கடுமையான விமர்சனங்களையும், அவதூறுகளையும், இழிசொற்களையும் எதிர்கொண்ட தலைவர்கள் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்.
இங்கு எம்.ஜி.ஆரையும், காமராஜரையும் ஏன் ராஜாஜியைக் கூட புனிதப்படுத்தி வைத்திருக்கும் அரசியல் தலைவர்கள் கலைஞரை மட்டும் ஒதுக்கி விட்டார்கள். அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
எம்.ஜி.ஆரும், காமராஜரும், ராஜாஜியும் தமிழ்நாட்டின் முதல்வர்கள்; ஆனால் கலைஞர் மட்டும் தி.மு.க தலைவர்.
தமிழ்நாட்டில் இருந்து கலைஞரைக் கழித்து விட்டால் என்னவாக இருக்கும் என்று இந்த வசைச் சொற்களின் உரிமையாளர்கள் அனைவருக்கும் தெரியும். அது வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மக்களுக்கும் தெரியும். அதற்கான சாட்சிதான் ஒருமுறை கூட சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்படாத தலைவராக கலைஞர் நிமிர்ந்து நிற்கிறார்.
புதிதாக அரசியல் கட்சி தொடங்குபவர்கள் சொல்லும் ஒரே வசனம், நான் எம்ஜிஆரைப் போல ஆட்சி புரிவேன், காமராஜரைப் போல ஆட்சி புரிவேன் என்பதுதான். இப்பொழுதுதான் புரிகிறது அவர்களைப் போல ஆட்சியை நடத்துவது எளிது. ஆனால் கலைஞரைப் போல ஆட்சியை நடத்த வேண்டும் என்று நினைப்பதே கடினம் என்று.
ஆரம்ப காலத்தில் நான் எங்கோ வாசித்த கலைஞரின் ஒரு வரி வசனம் "நான் தாக்குதல்களைத் தாங்கிக் கொள்ளும் பழக்கம் உள்ளவன் மாத்திரமல்ல, தாக்குதல்களை விரும்புபவனும் கூட. தாக்கப்பட்டால்தான் நானே கூட மெருகு பெற முடியும்"
கலைஞரைப் பற்றி அவருடன் பயணித்தவர்களும் அவரை வாசித்தவர்களும் ஏன் இவ்வளவு சிலாகித்துப் பேசுகிறார்கள் என்று யோசித்து இருக்கிறேன். இப்பொழுதுதான் புரிகிறது கலைஞருடன் பயணிப்பதே கடினம் என்று.
கலைஞரைப் பற்றிப் பேசினால் குற்றம், கலைஞரைத் தூக்கிப் பிடித்தால் குற்றம், கலைஞர் செய்த நன்மைகளைப் பேசினால் குற்றம், கலைஞர் என்று சொன்னாலே இங்கு குற்றம்தான்.. அவ்வளவு ஏன் கலைஞரின் புகைப்படம் இருக்கும் ஒரு T-shirt அணிந்தாலே நம்மை அவ்வளவு விமர்சனம் செய்வார்கள்.....
ஒருமுறை சில தோழர்களுடன் டீக்கடைக்குச் செல்லும் பொழுது தந்தை பெரியாரும், பாரதியாரும், திருவள்ளுவரும், தலைவர் கலைஞரும் இருந்தபடி ஒரு T shirt அணிந்திருந்தேன். கூட இருந்த தோழர்கள் முதலில் குறிப்பிட்ட மூன்று பேரில் படங்கள் இருப்பதை ஏற்றுக் கொண்டனர். ஆனால் தலைவர் கலைஞரின் படத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
உங்களுக்கு அது உறுத்துமே! ஆனால், அந்த மூன்று புகைப்படங்களையும் நீக்கிவிட்டு வெறும் தலைவர் கலைஞரின் படம் இருக்கும் T.shirt அணிந்து கொள்ள எனக்குச் சிறிதளவு கூடத் தயக்கம் இல்லை, பெருமைதான்....!
- நிகில் தேவ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்