திருப்பூரில் பரம்பொருள் பவுண்டேஷன் என்று ஒரு அமைப்பு நடக்கிறதாம். அங்கு போய்ச் சேர்ந்தால் பரம்பொருளைப் பார்த்து விடலாமாம்! "Point to point service " மாதிரி போல் இருக்கிறது! இடைநில்லா பேருந்து மாதிரி இவர்கள் நேரடியாகப் பரம்பொருளிடம் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்களாம்!

அந்த மோசடிக் கம்பெனியை நடத்தும் மகாவிஷ்ணு என்னும் ஒருவர் (அடுத்த நித்தியானந்தா போலிருக்கிறது) சென்னையில் உள்ள சைதை, அசோக் நகர் அரசு பள்ளிகளில் உரையாற்றி இருக்கிறார். பாவம், புண்ணியம், மோட்சம், ஆன்மா பற்றி எல்லாம் பேசி இருக்கிறார். அது பிள்ளைகளை ஊக்குவிக்கும் உரையாம் (motivational speech).mahavishnu 471இடையில் குறுக்கிட்டுப் பேசிய மாற்றுத்திறனாளியான தமிழாசிரியர் சங்கர் என்பவரைப் பார்த்து, "எப்படிப் பேச வேண்டும் என்று நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் " என்று அந்த 'மாமேதை மகாவிஷ்ணு' கூறியிருக்கிறார். எவ்வளவு திமிர் பாருங்கள்!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அந்தப் பள்ளிக்கே சென்று, அந்த ஆசிரியரை அழைத்து மேடையில் தன் அருகில் அமர வைத்துப் பாராட்டியதுடன், மகா விஷ்ணுவைப் பேச அனுமதித்த தலைமை ஆசிரியர்கள் இருவரையும் இட மாற்றம் செய்திருக்கிறார்!

அமைச்சரின் செயல் பாராட்டுக்குரியது அதே நேரத்தில், அந்த அனுமதியைக் கொடுத்த அதிகாரியைக் கண்டுபிடித்து அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடமாற்றம் என்பது போதுமானதன்று..... இடை நீக்கம் (suspension) செய்து துறை சார்ந்த விசாரணை நடத்த வேண்டும்!

இப்போது அந்தப் பரம்பொருளைத் தேடிக் காவல்துறை திருப்பூருக்குச் சென்று இருக்கிறது. ஆனால் அந்த மகாவிஷ்ணுவோ தலைமறைவாகி விட்டாராம்! ஆக மொத்தம், இப்போது பரம்பொருளையே காணவில்லை!

இதுபோன்ற மோசடிக் கும்பல்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், மக்களிடமும், மாணவர்களிடமும் அறிவியல் சிந்தனைகளை, பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி விழிப்புணர்வை உண்டாக்க வேண்டிய கடமை, அரசுக்கும் நமக்கும் இருக்கிறது!

- சுப.வீரபாண்டியன்