மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்றதுதான் தாமதம், ஊர் சுற்றக் கிளம்பிவிட்டார் நரேந்திரர். தோற்றுப்போக இருந்த தேர்தலை, தேர்தல் ஆணையர்களைக் கைக்குள் வைத்துக் கொண்டு வெற்றி அறிவிப்புகளாக மாற்றியதற்கு, ஆளும் கட்சியின் இருக்கைகளில் இறுக்கத்துடன் அமர்ந்திருந்த அந்த உறுப்பினர்களே சான்று! எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் ஆரவாரத்துடன் தங்கள் பேச்சுகளை வைக்க வைக்க, எதிரே வாட்டத்துடன் இருந்தனர் பா.ஜ.க வினர்.
எந்த நேரம் வழக்கு போடுவார்களோ, என்ன நிகழுமோ, எத்தனை பேர் பதவி பறிபோகுமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். ஏறக்குறைய 70 இடங்களில் வெற்றி தங்களிடமிருந்து பறிக்கப்பட்டதை சமூகச் செயல்பாட்டாளரும், வழக்கறிஞரும் ஆகிய டீஸ்டா செடல்வாத் அவர்களுடைய குழுவினர் கண்டுபிடித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும்கூட, அதை மக்கள் பிரச்சினையாக மாற்ற இ.ந்.தி.யா கூட்டணியினர் ஏனோ முனைப்புப் காட்டவில்லை. உச்ச நீதிமன்றமும் இனி ஒன்றும் செய்வதற்கில்லை எனக்கை விரித்துவிட்டது. பிரதமர் தொகுதியிலேயே மூன்று சுற்றுவரை தோல்வி முகம்தான்!
பதவி ஏற்புப் படலம் முடிந்த கையோடு, நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரும் தொடர, கடந்த 20 ஆண்டுகளில் மிக அதிகமான 281 மணி நேரங்கள் வேலை செய்துவிட்டதாம் மக்களவை! திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மஹூவா மொய்த்ரா பேச எழுந்தவுடனே எழுந்து அலறி அடித்து அவையை விட்டே ஓடிவிட்டார் பிரதமர். இவ்வளவு மன அழுத்தம் கொடுத்தால் என்னதான் செய்வார் பிரதமர்? கிளம்பிவிட்டார்.
2014இல் பூடானில் தொடங்கிய அவருடைய ஊர் சுற்றல், இதுவரை 79 வெளிநாட்டுப் பயணங்களாக, 70 நாடுகளுக்கு நீண்டு இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு இதோ ருசியா, ஆஸ்ட்ரியா, போலந்து, உக்ரைன், புரூனே மற்றும் சிங்கப்பூர் என அவருடைய ஊர் சுற்றல் மீண்டும் தொடங்கிவிட்டது.
2018இல் மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் அவர்கள், 2014 முதல் 2018 வரையிலான பிரதமரின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.2021 கோடிகள் எனத் தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகளில் அவ்வளவு என்றால், அதன் பிறகு 6 ஆண்டுகள் கடந்திருக்கும் இவ்வேளையில் அது ரூ.4000 கோடிகளைக் கடந்திருக்க வேண்டும். நாட்டில் பணம் இல்லை என்று விவசாயிகள், மாணவர்களுக்கு மானியங்கள், உதவித் தொகைகள் நிறுத்தப்படுகின்றன. ஆனால் மோடியின் ஊர்சுற்றலுக்கு மட்டும் தாராளமாகப் பணம் செலவழிக்கப் படுகிறது. ஒளிப்பதிவு மற்றும் ஒப்பனைக் கலைஞர்களுடன் போன மோடியின் பயணங்களால் நாட்டிற்கு எந்த நன்மையாவது, என்ன பயனாவது விளைந்திருக்கிறதா என்றால் எதுவும் இல்லை. ரூபாய் மதிப்பு தேய்ந்து, விலைவாசி உயர்ந்து, வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து, நாடு எல்லாக் குறியீடுகளிலும் கிட்டத்தட்ட கடைசி இடங்களுக்கான போட்டியில் தான் இருக்கிறது.
முன்பெல்லாம் அதானியை அழைத்துக் கொண்டுதான் வெளியூர்ப் பயணங்கள் இருக்கும். ஏறக்குறைய எல்லா வணிக வாய்ப்புகளையும் மடைமாற்றி, இந்திய நாட்டின் முதல் பெரும் பணக்காரராக அவரை மாற்றி விட்டதால், இப்போது உலக சமாதானத்திற்கு வழிதேடிப் போகிறாராம் மோடி! குண்டு போடும் ருசிய நாட்டு அதிபரையும் கட்டிபிடித்துக் கொள்வது, அடிபடும் உக்ரைன் நாட்டு அதிபரையும் கட்டிப் பிடித்துக் கொள்வது. கேட்டால் சமாதான நடவடிக்கையாம்! ஒரு கொள்கையோ கோட்பாடோ இல்லை. விழுமியங்களோ, தன்மதிப்போ இல்லை! எல்லாருக்கும் கட்டிப் பிடி வைத்தியம்தான்.
ஒருவர் வெளியூருக்குச்சென்று வீணாக வருகிறார் என்றால், இன்னொருவர் எங்கும் போகாமல் உள்ளூரிலிருந்து கொண்டே தன் வாயாலேயே கெடுக்கும் வேலையைச் செய்துகொண்டு இருக்கிறார். அவர்தான் நம் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.இரவி! அவர் தன் அலுவலகமான ராஜ்பவனைக் கிட்டத்தட்ட ஆர்.எஸ்.எஸ். ஷாகாவாக மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. அவர் பதவி ஏற்றதிலிருந்தே அவருக்கு இடப்பட்ட கலகக் கட்டளையை செவ்வனே நிறைவேற்றி வருகிறார். வள்ளுவருக்குக் காவி உடை தரித்து, திடீரென்று மே 24 அன்று திருவள்ளுவர் திருநாள் கொண்டாடினார். தனக்குப் பிடித்தவர்களைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்களாக நியமித்துக் கொண்டு, சனாதனக் கொள்கைகளைக் கல்லூரி மாணவர்களிடமும், பேராசிரியர்களிடமும் விதைத்து வருகிறார். இப்போதும்கூட சென்ற வாரம் பெற்றோர்களிடம், தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வித் திட்டம் மிகக் கீழ்த்தரமாக இருப்பதாகக் குறைபட்டுக் கொண்டிருக்கிறார். இஸ்ரோவில் தமிழ் நாட்டில் அரசுப் பாடத்திட்டத்தில் பயின்றவர்களே தலைமை தாங்குகிறார்கள் என்று சொன்னாலும் அவருடைய உளறல் மட்டும் குறையவே மாட்டேன் என்கிறது. குழந்தைத் திருமணம் நல்லது என்று சொன்ன 'மஹா புத்திசாலி' அல்லவா அவர்?
மாற்றித் தொலையுங்கள் என மக்கள் வாக்களித்தும், விடாப்பிடியாக நாற்காலிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் இருவருமே நாட்டிற்குத் தேவை இல்லாத ஆணிகள் தான்!
மக்கள் பொறுப்பரா? பொங்குவரா? பொறுத்திருந்து பார்ப்போம்!
- சாரதாதேவி