"ஒரு மந்திரம் சொன்னால் நெருப்பு மழை கொட்டும். இன்னொரு மந்திரம் சொன்னால் வானத்தில் பறக்கலாம்..." என்று உளறிக் கொட்டிய மூட நம்பிக்கையால் ஒரு மகாவிஷ்ணு இன்று இங்கே கம்பிகளுக்குப் பின்னால் புலம்பிக் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகாவில் எட்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் "சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட அறையில், ஒரு சிறிய சாவித் துவாரம் கூட இல்லை. இருப்பினும், புல்புல் பறவை ஒன்று எங்கிருந்தோ அறைக்கு வரும். சாவர்க்கர் ஒவ்வொரு நாளும் தாய்நாட்டிற்கு (இந்தியா) அந்தப் பறவையின் இறக்கைகளில் அமர்ந்து பறந்து வந்து செல்வார்," என்று இடம் பெற்றிருந்த பகுத்தறிவிற்கு ஒவ்வாதபகுதி அங்கே சர்ச்சையைக் கிளப்பி விட்டது.

மகாபாரதத்தில் கர்ணன் தாயின் கருவில் இருந்து பிறக்கவில்லை, மாறாக அந்தப் புராண காலத்திலேயே மரபணு விஞ்ஞானத்தின் மூலம் பிறந்ததாகவும்,

அதேபோல விநாயகன் தலையில் யானையைப் பொருத்தி இருப்பது அந்தக் காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்துள்ளதை உறுதி செய்கிறது என்றும் அடித்து விட்டிருக்கிறார் பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டில்.

இப்பொழுது ஒருவர் கிளம்பியிருக்கிறார், பெயர் இந்தர்சிங் பர்மர். மத்தியப் பிரதேச மாநிலக் கல்வி அமைச்சர் அவர். பர்கத்துல்லா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்களிடம் "அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் இல்லை, நமது முன்னோர்கள். அதுவும் 8 ஆம் நூற்றாண்டில் ஒரு இந்திய மாலுமி அங்கே போய் சாண்டியாகோவில் பல கோயில்களைக் கட்டி விட்டான்" என்று பேசியிருக்கிறார். அப்படியானால் 8 ஆம் நூற்றாண்டு என்பது கி.முவா? கி.பியா? அந்த மாலுமியின் பெயர் என்ன? ஒருவேளை அவரைத்தான் 'கொலம்பஸ்' என்கிறாரோ நம்ம ம.பி. அமைச்சர்?

அடுத்த போடு இப்படிப் போடுகிறார் அந்தக் கல்வி அமைச்சர். " ராமர் சிலைகளை உருவாக்கிய பால்பாகு என்ற இந்தியக் கட்டிடக் கலைஞரின் உதவியுடன் பெய்ஜிங் நகரம் வடிவமைக்கப் பட்டது", இது அவரின் வாக்குமூலம்.

அப்படியானால் ராமர் சிலைகளைச் சிற்பிகள் உருவாக்கவில்லை, மாறாகக் கட்டிடத் தொழிலாளர்கள்தாம் உருவாக்கினார்களா?

இன்றைய பெய்ஜிங் நகரம் அன்று பீக்கிங் என்று அழைக்கப் பட்டது. சீனாவின் வரலாறு தெரியாத 'ஞானசூன்யம்' என்பதற்கு இவரைத் தவிர வேறு சான்று எதுவும் தேவையில்லை.

"பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று முதலில் கணித்தவர்கள் ரிக்வேதத்தை எழுதியவர்கள் தான் " என்று கதையை முடித்து விட்டார் அந்த ம.பி. மந்திரி. இங்கே ஒரு கேள்வி எழுகிறது. பூமி சூரியனைச் சுற்றி வருவதாக ரிக்வேதத்தில் எந்த மண்டலத்தில், எந்த சூக்தத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதையும் அவர்தான் சொல்ல வேண்டும். உண்மையில் இப்படி ஒரு செய்தி அந்த வேதத்தில் சொல்லப்படவே இல்லை.

பூமி உட்பட அனைத்துக் கோள்களுமே சூரியனைச் சுற்றித்தான் வலம் வருகின்றன என்று அறிவியல் அடிப்படையில் ஒரு வலுவான கோட்பாட்டை முன்வைத்தவர் நிக்கோலஸ் கோப்பர்நிகஸ். அதைத் தனது தொலைநோக்கி மூலமாக வானியலை ஆராய்ந்து உண்மையென நிறுவியவர் கலிலியோ.

காவிகள் அறிவியலுக்குக் காவிச்சாயம் பூச முயல்கிறார்கள். அறிவியல் காவிகளுக்குள் அடங்காது என்பது அவர்களுக்குத் தெரியாது.

தந்தை பெரியார் சொல்கிறார், "பள்ளிக் கூடத்தில் சிறிது நேரத்தை ஒதுக்கிப் பகுத்தறிவைச் சொல்லித் தரவேண்டும்" என்று!

- எழில்.இளங்கோவன்