கம்பனை எப்படிக் கற்பது? பணி ஓய்வு பெற்ற பிறகு எழுத்தெண்ணிப் படிக்கத் திட்டமிடுவர் தமிழ் ஈடுபாடும், கம்பனில் ஆராக் காதலும் உடையவர்கள் பலரும் உண்டு. ஆனால் வேலைப்பளு, இல்லக்கடமை, இன்ன பல இத்யாதி என நேரமின்மையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தொ.மு.பாஸ்கர தொண்டைமான் எழுதிய கம்பராமாயணக் கட்டுரைகள் ஒரு வழிமுறை என்றே சொல்லலாம். ஆம், கிட்டதட்ட தொண்ணூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்; தொ.மு. பாஸ்கர தொண்டைமான் நமக்குக் கம்பராமாயண கடலிலிருந்து கவி அமிழ்தத்தை கடைந்து தந்தார். இதனை, இரண்டாயிரத்து இருபத்து நான்கில் கிருங்கை சேதுபதி தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார்.
பாலகாண்டத்தில் நாட்டுப்படலத்தோடு கம்பர் தொடங்கிய ராமகாதை நாடென்ப நாடாவளத்தென எனக் குறளோடு ஒப்பிட்டு அமைகிறது. வள்ளுவரின் வரையறைகளுக்கு – குறளின் இலக்கணத்திற்குக் கம்பரின் படைப்பு இலக்கியமாக அமைந்தமையை பாஸ்கர தொண்டைமான் விளக்குகிறார்.
ஆயிரத்தில் ஒருவராய் நின்று உயர்ந்த வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலைக் கம்பர் கவியின் வழி விவரிக்கிறது இரண்டாம் கட்டுரை. தன்னை ஆதரித்த வெண்ணெய் அண்ணலுக்கு ராமனது மௌலி புனையும் மரபினராய்ப் பெருமை சேர்க்கிறது இரண்டாவது கட்டுரை.
கோசல நாட்டு மக்களால் இறைவனாகவே போற்றப்படும் தசரதன் தண்ணளியை மூன்றாவது கட்டுரை விவரிக்கிறது. மக்களிடத்து முறை செய்து காப்பாற்றும் மன்னவனாக மட்டுமின்றி தண்ணளியுடையவனாய்த் தன் நாட்டு மக்களையும் காக்கின்ற பான்மையை தயரதன் தண்ணளி எனும் எழுத்துரை விவரிக்கிறது.
பிறந்து மொழி பயின்ற பின் வசிஷ்டரிடம் கல்வி கற்றுத் தேறிய பிறகு இராமனின் வீரச்செயல் வெளிப்படுவது தாடகை வதத்திலேதான். ஆனால், பெண்ணை வென்ற இச்செயல் சற்றே குறைவாகவே கருதப்படுகிறது. இதனை, “வயதின் இளமையாலும் போரின் முதன்மையாலும், போருக்கு இலக்காய் நின்ற அரக்கியின் ஆற்றலாலும், இராம சரிதத்திலேயே இராமனது புகழிற்கு முக்கியமான ஒரு சான்றாய் இவ்வெற்றி அமைந்திருக்க, இவ்விராம காதையில் வரும் மற்ற பாத்திரங்கள் பலரும் இவ்வெற்றியை எடுத்தியம்பாதே செல்கின்றார் என்பது குறிக்கத்தக்கது.
அரக்கரில் ஒன்றிரண்டு பேர் இப்போரைப் பற்றிப் பேசுவார்களானால் அதுவும் ஆத்திரத்தால் பேசும் சொற்களேயன்றி இராமனது ஆற்றலைப் புகழ்ந்து பேசும் சொற்களாக அமையவில்லை என்று விவரிக்கும் பாஸ்கர தொண்டைமான் புகழ்பொருந்திய இராமனுக்கு இது புகழ்பொருந்திய செயலில்லை என அறுதியிட்டு உரைக்கிறார்.
விசுவாமித்திரரோடு மிதிலை மாநகரம் செல்லும் இராமனது மெய்வண்ணத்தையும் சொல் வண்ணத்தையும் சுட்டுகிற கட்டுரை ஆனந்தபோதினி இதழில் 1931 ஜூலையில் வெளிவந்தமையை பதிப்பாசிரியர் குறிப்பிடுவது தமிழ் கூறும் நல்லுலகம் மறந்த ஒரு நெறியாகும்.
கண்ணோடு கண்ணினை நோக்கும் தமிழர்தம் அகக் காதலை அடியொற்றி ராமனும் சீதையும் கொள்ளும் காதலை கம்பர் வழி நின்று திருக்குறளைக் களமாக்கி ஆசிரியர் விளக்குகிறார்.
சம்பந்தக் குழந்தையின் உள்ளம் கவர் கள்வனையும் குறிஞ்சிக் கலி நகைக் கூட்டம் செய்த கடைக்கண் கள்வனையும் இணைத்து பேசும் பாஸ்கர தொண்டைமான் வாசகர்களாகிய நமக்கு இலக்கிய விருந்தை இந்த ஆய்வுரையில் படைத்து விடுகிறார். கேகயர் கோமகளின் அறநெறியைத் தசரதனிடம் பெற்ற வரம் என்ற விளக்கம் அமைந்த ஆய்வுரை சோமசுந்தர பாரதியாரின் தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்ற நூலினை அடியொற்றி எழுதப்பட்டதான குறிப்பு இன்றைய திறனாய்வுலகில் காணக் கிடைக்காத ஒரு நேர்மையாகும்.
இலக்குவன், குகன், பரதன், சடாயு, அங்கதன் என இராமகாதையில் பாத்திரங்களைத் துலக்கிடும் ஆய்வுரைகள் கம்ப காதையின் வழிமுறையை அடியொற்றி அமைவது பதிப்பாசிரியரின் தொகுப்பு நெறிக்குச் சான்றாகிறது.
அடுத்ததாக கிஷ்கிந்தையிலிருந்து கிளம்பும் அனுமனோடு இலங்கையின் இராவணனை நூலில் நாம் சந்திக்கிறோம். தமையனுக்கு நன்னெறி புகட்டும் விபிஷ்ணனையும், செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் கும்பகர்ணனையும், தந்தைக்காக தன்னுயிர் நீக்கவும் துணிந்த இந்திரஜித்தையும் காண்பதோடு மண்டோதிரியின் மாண்பும், சீதையின் சீலமும் பகுதி-1 ல் விளக்கமுறுகின்றன.
கம்பனது கவிதையைப் படலம் படலமாகக் கண்டால் கவி இன்பம் தீர்ப்பது எளிமை என்பதை சூர்ப்பனகை என்ற படலத்தின் வழி ஆசிரியர் விளக்குவது அற்புதமே. ஓதிமமும் போதகமுமாய் அன்னையும் அண்ணலும் விளங்கும் அரிய காட்சியை ஆசிரியர் விளக்குவது வாசகர்களாகிய நமக்கும் படலம் படலமாய்க் கம்பரை கற்றுத் தேற வழியாகிறது.
உலா என்பது சிற்றிலக்கிய வகையின் கூறுகளாய் காப்பியங்களில் உலாப்பகுதிகள் அமைவதுண்டு. அப்படி இராமனது உலாவினைக் கம்பன் கவி வழி பாஸ்கர தொண்டைமான் நிகழ்த்திக் காட்டுகிறார்.
ஒன்பான் சுவையில் ஒருசுவையாய் அமைவது நகைச்சுவை. இந்தக் கட்டுரையில் இலக்குவனால் மூக்கறுப்பட்டு மூளியான சூர்ப்பனகை “மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை அன்றோ” எனக் கூறுவது நகைச்சுவை எனப் பல சான்றுகளை அடுக்கிக் கூறி கம்பனை கற்பதற்கு நம்மைத் தூண்டுகிறார் ஆசிரியர். மண்டோதரியின் மாண்புடை கற்பும் ஆசிரியரின் விவரணைக்கு உட்படுவது சிறப்பேயாகும்.
கம்பன் கவியின் செந்தமிழ் இன்பம் எனும் கட்டுரை நூலின் தலைப்பாக அமைந்து சிறக்கிறது. கம்பரது பல நுட்பங்களையும் நயங்களையும் மிக விரிவாக எடுத்துரைக்கும் பாஸ்கர தொண்டைமான் வால்மீகியினும் கம்பர் தனித்துச் சிறக்கும் பான்மையை இந்தக் கட்டுரையில் கவி நுட்பம் புலப்பட எடுத்துரைக்கிறார். இந்த நூலின் மூன்றாம் பகுதி கம்பன் கவியின் செந்தமிழ் இன்பம் என்ற கட்டுரைக்கரு கோபால திருமலை என்பவர் எழுதிய மறுப்புரையாக அமைகிறது. இந்த மறுப்புரையை வாசிக்கிறபோது முரண்பாடுகளைக் கூட நயத்தக்க நாகரிகத்தோடு எடுத்துரைக்கும் பண்பு நமக்கெல்லாம் பாடமாக இருக்கிறது.
மறுப்பின் மேலான குறிப்பாக கம்பனது மண் சார்ந்த விழைவும் தமிழர்தம் பண்பை வெளிப்படுத்தும் முறையும் காரணமாகும் என ஆணித்தரமாகச் சொல்லும் ஆசிரியர், இம்மாதிரியான மாறுபட்ட கருத்துக்கள் ஆய்வை ஊக்குவிக்கும் வழி என்றும் உரைக்கிறார். இந்த நூலின் நான்காம் பகுதியில் அமையும் நான்கு ஆளுமைகள் பற்றிய எழுத்துரைகள் கம்பனில்; தோய்ந்த தமிழறிஞர்களை நமக்கு வெளிச்சமிடுகின்றது. மேலகரம் சுப்ரமணியக் கவிராயர், வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், டி.கே.சிதம்பரனார், ஏ.சி,பால்நாடார் எனக் கம்பன் திறனிகளை பாஸ்கர தொண்டைமானின் எழுத்தோவியம் நமக்குக் காட்சிப்படுத்துகின்றது.
காலம் கடந்த கட்டுரைகளைப் பதிப்பிக்கும் நெறிமுறைகள் இந்த பதிப்பாசிரியரின் எழுத்துரையில் குறிப்பிடப்படுவது பதிப்பின் நெறிமுறையாக அமைகிறது. ஆனந்த போதினியில் அமைந்த இக்கட்டுரைகள் நாளும் மாதமும் குறிப்பிடப்படுகிறது. பாட வேறுபாடுகளை அடிக்குறிப்பில் தருவது பதிப்பின் நெறிமுறையாக மிளர்கிறது. ஒரு சில கட்டுரைகளில் நாள் குறிப்புகள் விடுபட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. நாட்டுடைமையாக்கிய நூல்களைப் பதிப்பிக்கும் பல பதிப்பகங்கள் எந்த நெறிமுறையுமின்றி முதல் பதிப்பு எனக் குறிப்பிட்டுப் பதிப்பாண்டைப் போடும் முறைமைகள் தவிர்க்கப்படுவது தமிழ் ஆய்வுலகிற்கு பெருநன்மை. இந்த நூலின் முதல் பகுதியில் அமையும் ஜெகத்ரெட்சகனின் வாழ்த்துரை பதிப்பாசிரியரை அறிமுகப்படுத்துகிறது என்றால் கம்பன் கவி ஊட்டும் கலைமணி என்ற பகுதி பாஸ்கர தொண்டைமானின் பின்புலத்தை நமக்குக் காட்டுகிறது. காலம் கடந்த காரணனை கம்பன் வழி கற்பதற்குக் கைப்பிரதியாய் இந்நூல் அமைகிறது.
கம்பர் கவியின் செந்தமிழ் இன்பம் | தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
தொகுப்பும் பதிப்பும்: கிருங்கை சேதுபதி | வெளியீடு: என்சிபிஎச், சென்னை | விலை: ரூ.325/-
- முனைவர் யாழ் சு.சந்திரா, தமிழ்த்துறைத் தலைவர், மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி, மதுரை.