சங்க காலப் புலவர்களில் அதிக எண்ணிக்கையில் அமைந்த பாடல்களைப் பாடிய பெருமையும், குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடுவதில் தனித்துவமும் பெற்றுத் திகழ்ந்தவர் கபிலர். சங்க இலக்கியத் தொகுப்பில் இவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 235 ஆகும். இவரின் பாடல்களைப் பற்றி உரையாசிரியர்களும் திறனாய்வாளர்களும் பல்வேறு நோக்கில் நுணுகி ஆராய்ந்து தம் கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் தமிழ் கூறும் நல்லுலகில் ம.ரா.போ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் மம்சாபுரம் ராக்கப்பிள்ளை போத்திலிங்கம் குருசாமி அவர்கள் ‘கபிலம்’ என்ற நூலில் கபிலரின் பாடல்களுக்கு உரை வகுத்துள்ளார். அவரின் உரையில் காணப்படும் உரைத்திறனை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வு அமைகின்றது.
சொற்பொருள் விளக்குதல்
கபிலர் பாடல்களுக்கு உரை எழுதும்போது எண்ணற்ற சொற்களுக்கு மிக நுட்பமாகவும் சுவையாகவும் பொருள் விளக்கம் தரும் போக்கினை ம.ரா.போ வின் உரையில் காண முடிகின்றது. இதற்கு, “கவ்வை - (ஊரார் தமக்கு மறைவாகப் பேசி) காதலர் பற்றி ஒரு மாதிரியாக பேசும் அலர்” (கபிலம், பக்.18) என்றும், “கையுறை - கையில் சேர்ப்பது காணிக்கை அன்பளிப்பு” (கபிலம், பக்.63) என்றும், “கன்னம் - நோய் தணிப்பதற்கு வழிபாட்டு இடத்திற்குச் செய்து கொடுக்கப்படும் பிரதிமை (பொம்மை); தாயத்து என்றும் சொல்லலாம்” (கபிலம், பக்.103) என்றும் வரும் உரைகள் சான்றாகும்.
ஒரு சொல்லுக்குப் பல பொருள் தருதல்
ஒரு சொல்லுக்கு உரிமை உடைய ஒரு பொருளை மட்டும் கூறாமல் அச்சொல்லுக்குரிய பல பொருள்களையும் சுட்டி உரை எழுதும் தன்மையைக் காண முடிகிறது. இதற்கு, “மாதர் என்ற சொல் காதல், அழகு, மகளிர் என்ற பொருள்களை உடையது, இங்கே கண்டோர் விரும்பும் அழகு எனப் பொருள் உரைக்கப்பட்டது” (கபிலம், பக்.441) எனவும், “பசி - பசுமை, ஈரம், நாய் எனப் பல பொருள் உடையது. மழையால் நனைந்தது என்றால் ஈரம் எனக் கொள்ளலாம்; வேட்டை நாயும் உடன் வந்ததெனக் கருதினால் நாய் எனக் கொள்ளலாம்” (கபிலம், பக்.57) எனவும் வரும் உரைகள் சான்றாக அமைந்துள்ளன.
அணி நயத்தினைச் சுட்டுதல்
புலவர்கள் பல்வேறு அணிநயங்களைப் பயன்படுத்தி தம்முடைய செய்யுளைச் சொல்லாலும் பொருளாலும் அழகுற எடுத்துரைப்பர். அவ்வகையில் கபிலரும் தம் பாடல்களில் பல்வேறு அணி நயங்களை கையாண்டு உள்ளார். ம.ரா.போ கபிலர் கையாண்ட அணி நயங்களை ஒரு சில இடங்களில் எடுத்துக்காட்டி உரை வகுத்துள்ள தன்மை போற்றுதற்குரியது. ‘’இயல்பு நவிற்சியையே பெரிது இயல்பாகக் கொண்ட சங்க இலக்கியத்துள் கவிதைச் சுவையின் பெயரால் ஆங்காங்கே உயர்வு நவிற்சியும் இடம் பெற்றுள்ளது. மலையுச்சியில் விழும் மழைத்துளிகளின் எண்ணிக்கையை விட காரி வழங்கிய தேர்களின் எண்ணிக்கை மிகுதி! சொல்வது கபிலர்! வாழ்க உயர்வு நவிற்சி!’’ (கபிலம், பக்.513) என்று புறநானூறு 123 ஆவது பாடலின் உரையின் வழி அறிய முடிகின்றது.
இலக்கண விளக்கம் தருதல்
ம.ரா.போ கபிலர் பாடல்களுக்கு உரை எழுதுகின்ற போது தேவைப்படுகின்ற இடங்களில் இலக்கணக் குறிப்புகளையும் இலக்கண விளக்கங்களையும் எடுத்துக்காட்டி உரை எழுதியுள்ளார். “மனை என்றது ஆகுபெயரால் வீட்டில் உள்ளவர்களைக் குறித்தது'' (கபிலம், பக்.20); “நம் என்பது நட்பொற்றுமை சுட்டுகின்ற உளப்பாட்டுத் தன்மைப் பன்மை”(கபிலம், பக்.79); “பின் - பின்னுதல் (முதல் நிலைத் தொழில் பெயர்)” (கபிலம், பக்.224); ''கூந்தல் என்ற ஒருமை பெயர் உரிய என்ற பன்மை முற்றினைப் பெற்றது. “கூந்தல் ஐந்து பகுதியாக அணி செய்யப்படுவதால்'' (கபிலம், பக்.315) எனவரும் சான்றுகளின் அடிப்படையில் ஆழ்ந்த இலக்கணப் புலமையினை அறிந்து கொள்ள முடிகின்றது.
பிறர் உரையைச் சுட்டலும் மறுத்தலும்
கபிலர் பாடல்களுக்குத் தனக்கு முன்பு உரை எழுதிய உரையாசிரியர்களின் கருத்துக்களைப் பல இடங்களில் எடுத்துக்காட்டுகின்றார். மேலும் அவர்களின் கருத்தினை ஏற்க வேண்டிய இடத்தில் ஏற்றும், மறுக்க வேண்டிய இடத்தில் மறுத்தும் உரை எழுதி உள்ள தன்மை போற்றுதற்குரியது. உரையாசிரியரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதற்கு, “பல வீடுகள் சேர்ந்திருப்பது சேரி என விளக்குவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரவர்கள்” (கபிலம், பக்.348) என்றும், “மன்னன் என்றது தலைமகனை எனப் பழைய உரை குறித்திருப்பது மனம் கொள்ளத்தக்கது” (கபிலம், பக்.154) என்றும் வரும் உரைகளின் வழி அறிய முடிகின்றது. ஐங்குறுநூறு 252 ஆவது பாடலில் பேராசிரியரின் கருத்தினை மறுத்துரைத்ததை, “தொல்காப்பிய உவம இயலில் இதனை உள்ளுறை யுவமம் எனப் பேராசிரியர் குறித்தார்; இக்கருட்பொருள் காட்சி இன்றெனினும் உரிப்பொருள் தெரிய இடமிருப்பதால், இதனை இறைச்சியெனக் கொள்ளுதல் சீரிது” (கபிலம், பக்.111) எனவரும் உரைப்பகுதியின் வாயிலாக அறியலாம்.
இலக்கியப் புலமை
உரையாசிரியர்கள் தம்முடைய கருத்திற்கு வலிமை சேர்க்கும் பொருட்டு இலக்கண, இலக்கிய மேற்கோள்களைத் தம்முடைய உரைகளில் பயன்படுத்துவர். அவ்வகையில் ம.ரா.போ பல்வேறு இடங்களில் பிற இலக்கியப் பாடல்களை குறிப்பிட்டு தம்முடைய இலக்கியப் புலமையை வெளிப்படுத்தி உள்ளார். சங்க இலக்கியம் முதல் பாரதியார் கவிதைகள் வரை உள்ள இலக்கிய பாடல்களைத் தம்முடைய உரையில் எடுத்தாண்டு உள்ளார். திருக்குறளின் கருத்தை “இசைப்பட வாழ்பவர் செல்வம் என்ற தொடருடன் ஈதல் இசைப்பட வாழ்தல் என்ற குறள் தொடரை ஒப்பிட்டுக் காண்க” (கபிலம், பக்.350) எனக் குறிப்பிட்டுள்ளார். ஒரே கருத்தினை வெளிப்படுத்தும் பாடல் அடிகளை ஒருங்கே குறிப்பிட்டு உரை எழுதி உள்ளதை “வேங்கை மலரை பறிக்க நினைப்பவர்கள் புலி புலி என்று ஆரவாரம் செய்வர் என்பது ஓர் இலக்கிய வழக்கு. (மதுரை:296-7); (மலைபடு:305-6); (அகநா:48:6-7;52:2-4)” (கபிலம், பக்.317) எனவரும் சான்றின் மூலம் அறிய முடிகின்றது. சுடர்த்தொடீஇ! கேளாய்! எனத் தொடங்கும் கலித்தொகைப் பாடலுக்கு உரை எழுதுகின்ற போது “தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாரின் தீராத விளையாட்டுப் பிள்ளை' எனத் தொடங்கும் கவிதையோடு ஒப்பிட்டு உணரத் தகுந்த நயமான கற்பனை” (கபிலம், பக்.232) என்று பாரதியாரின் கவிதைகளையும் மேற்கோள் காட்டி உரை வகுத்துள்ளார்.
திறனாய்வாளரின் கருத்துகளை எடுத்துரைத்தல்
ம.ரா.போ தம்முடைய உரையில் மு.வரதராசனார், வ சுப மாணிக்கனார், வேங்கடராசுலு ரெட்டியார், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, இரா. ராகவ ஐயங்கார் போன்ற அறிஞர்களின் கருத்துக்களைப் பயன்படுத்தி உரை எழுதிய பாங்கு போற்றுதற்குரியது. குறிஞ்சிக் கலித்தொகை 26 ஆவது பாடலின் உரையில் வ சுப மாணிக்கனார் கருத்தை, “பெருந்திணையையும் அகத்திணையையும் சேர்த்தே விளக்கும் அறிஞர் வ சுப மாணிக்கம் இப்பாடலை பெருந்திணைக்குரியதாக ஏற்கவில்லை. தலைவனும் தலைவியும் உறழ்ந்து பேசுவதை ஊடலாகவே விளக்கியுள்ளார். அவர்தம் கருத்து மேலும் ஆராய்வதற்கு உரியது என்ற அளவில் இங்கு நிறுத்துவோம்” (கபிலம், பக்.274) என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
சமூகவியல் நோக்கில் உரை எழுதுதல்
உரையாசிரியர்கள் நூலுக்கு உரையெழுதுகின்ற போது அந்நூல் குறிப்பிடுகின்ற சமூக நிலையினைச் சுட்டிக்காட்டி உரை எழுதுவர். அவ்வகையில் ம.ரா.போ உரை எழுதுகின்ற போது நூல் இயற்றப்பட்ட காலத்தில் இருந்த சமூக நிலையிலும் தற்போது உள்ள சமூக நிலையினையும் ஒருங்கிணைத்து உரை எழுதியுள்ள தன்மை சிறப்பானதாகும். ஐங்குறுநூறு 292 ஆவது பாடலுக்கான உரையில் “இரண்டாம் மணத்தைத் தடை செய்ய சட்டம் இருக்கிற காலம் நம் காலம். ஆனால் சமுதாய வழக்கம் சட்டப்படி இருக்கிறது என்று சொல்ல முடியாது. இரண்டாம் தாரம் மட்டுமின்றித் திருமண முறைக்கும் மாறான தொடர்புகளும் இன்றும் இருக்கவே செய்கின்றன. ஆடவர் மேலாண்மையின் கோளாறு இது. சங்க காலத்தில் மறுதார மணமும் பரத்தையர் பழக்கமும் இருந்தன என்பதில் ஐயமில்லை” (கபிலம், பக்.157) என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வுரையானது சமூகம் சார்ந்த கண்ணோட்டத்தோடு அமைந்திருப்பதை அறிய முடிகின்றது.
முடிவுரை
திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டு விளங்கிய பெருந்தகை ம.ரா.போ குருசாமி. கபிலர் பாடல்களுக்கு உரை கண்டதன் வாயிலாக ம.ரா.போ ஒரு சிறந்த உரையாசிரியர் என்பதையும் அறிய முடிகின்றது. சொற்பொருள் விளக்குதல், ஒரு சொல்லுக்குப் பல பொருள் தருதல் நிலையில் ம.ரா.போ வின் தமிழ்ச்சொல் ஆளுமையை அறிந்து கொள்ள முடிகின்றது. இலக்கண விளக்கம் தருதல், அணி நயத்தினைச் சுட்டுதல், இலக்கியப் புலமை, திறனாய்வாளரின் கருத்துக்களை எடுத்துரைத்தல் ஆகியவை இலக்கணம் மற்றும் இலக்கியத்தில் ம.ரா.போ வின் ஆழ்ந்த புலமையினை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
கபிலம்: கபிலர் பாடல்கள் - அறிமுக விளக்கம்
/ ம.ரா.போ.குருசாமி விலை: ரூ.390/-
வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
- முனைவர் மா.கார்த்திகேயன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி, கோவை - 14.