தொடக்கக் காலத்தில் ஜெயக்காந்தனின் எழுத்துக்கள் தத்துவ நோக்கத்தை ஆராயும் விதத்தில் அமைந்தது.
'சரஸ்வதி' எனும் இதழில் வெளியான அவருடைய கதைகள் பாலுணர்ச்சி குறித்துப் பேசுவதாக வெளிவந்தது. அதற்குத் தக்கச் சான்றுகளாக ‘கண்ணம்மா, போர்வை, சாளரம், தாம்பத்தியம், தர்க்கம்’ போன்ற கதைகளைச் சொல்லலாம். இவைகள் பேசும் பொருளாக அமைந்தது என்றாலும் மக்கள் விரும்பத்தக்க வகையில் அமையவில்லை எனலாம். அதற்கடுத்து வந்த காலக்கட்டத்தில் அவர் தம் எழுத்துக்களை மக்கள் விரும்பும் வகையில் அமைத்துக் கொண்டார். ஜெயகாந்தன் அவர்கள் ஆரம்பக் காலத்தில் சிறுகதைப் படைப்பதிலேயே மிகுந்த ஈடுபாடு உடையவராகத் திகழ்ந்திருக்கின்றார்.
1958-ஆம் ஆண்டு 'ஒரு பிடி சோறு' என்ற அவருடைய முதல் சிறுகதைத் தொகுதி வெளியானது. விந்தனின் தமிழ்ப் பண்ணைப் பதிப்பகம் அதனை வெளியிட்டது. எழுத்தாளர் தி.ஜானகிராமன் அவர்கள் அத்தொகுப்பிற்கு முன்னுரை வழங்கியதும், கண்ணதாசன் அவர்கள் புகழாரம் சூட்டியதும் அந்நூலிற்கு மேலும் பெருமை சேர்த்தது எனலாம். அதன்பிறகு தொடர் சிறுகதைகளை வெளியிட்டுச் ‘சிறுகதை மன்னன்' என்றும் பாராட்டும் அளவிற்கு சிறுகதைப் படைப்புகளில் தன் திறமையை வெளிக்கொணர்ந்தவர். தமிழ்நாட்டில் இன்று வரை தோன்றியுள்ள மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஜெயகாந்தனும் ஒருவர் என்று கு.அழகிரிசாமி குறிப்பிட்டுள்ளார். ஆனால் காலம் செல்லச் செல்ல ஜெயகாந்தன் சிறுகதை எழுதுவதைக் குறைத்துக் கொண்டு நாவல் மற்றும் குறுநாவல்கள் படைப்பதில் ஆர்வம் காட்டலானார். இருப்பினும் அவரது சிறுகதைகள் இன்றும் அவர் புகழ்பாடிக் கொண்டிருக்கின்றன.
ஜெயகாந்தன் 17 சிறுகதைத் தொகுதிகளையும், 25-க்கும் மேற்பட்ட குறுநாவல்களையும், 17 நாவல்களையும், 25 கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
ஜெயகாந்தன் பெற்ற பரிசுகளும், விருதுகளும்:
1964 இல் ஜெயக்காந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் இந்திய ஜனாதிபதி விருதைப் பெற்றது. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நாவல் 1972 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது. 1978 இல் அந்நாவல் திரைப்படமாக வெளிவந்த போது சிறந்த திரைக்கதைக்கான தமிழக அரசின் விருதினைப் பெற்றது. அதே ஆண்டு அவரது 'இமயத்துக்கு அப்பால்' என்ற நாவல் சோவியத்நாடு நேரு விருதினைப் பெற்றது. 1979-ஆம் ஆண்;டு 'கருணை உள்ளம்' என்ற திரைப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த கதைக்கான தமிழ்நாடு அரசு விருதினைப் பெற்றது. 1986 இல் 'ஜெய ஜெய சங்கர' எனும் நாவல் தமிழ்நாடு அரசின் சிறந்த நாவலுக்கான விருதையும், சுந்தரகாண்டம் எனும் நாவல் தமிழ் பல்கலைக்கழகத்தின் இராஜராஜ சோழன் விருதையும் பெற்றார்.
2005-ஆம் ஆண்டில் இந்திய இலக்கியத்திற்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட விருது இவருக்குக் கிடைக்கப்பெற்றது. தமிழ்நாட்டில் அகிலனுக்குப் பிறகு இவ்விருதைப் பெறும் சிறப்புக்குரியவராகத் திகழ்பவர் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். இவ்வாறு தமிழக அளவிலும் இந்திய அளவிலும் ஆசிய அளவிலும் பல பல விருதுகளைப் பெற்றுள்ளமைப் போற்றுதலுக்குரியதாகும். 1980, 1983, 1984 ஆம் ஆண்டுகளில் சோவியத் ரஷ்யா அழைப்பின் பேரில் ரஷ்யப் பயணம் மேற்கொண்ட சிறப்பும் இவருக்கு உண்டு.
பத்திரிகைத் தொடர்பு:
ஜெயகாந்தனும் முதன் முதலில் சிறுகதை ஆசிரியராக இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்த போது தமிழ்ப் பத்திரிகைகள் தான் அவரை வரவேற்றது. சுதந்திரப் போராட்டக் காலக் கட்டத்திலும் அதற்குப் பின்னரும் தொடர்ந்து பல இலக்கியப் பத்திரிகைகள் தோன்றி தனது இலக்கியத் தொண்டை செவ்வணே புரிந்து வருகின்றன. அவ்வகையில் ‘மணிக்கொடி' எனும் பத்திரிகை இதழுலகில் தனக்கான முத்திரையைப் பதித்தது குறிப்பிடத்தக்கதாகும். ‘சரஸ்வதி’ எனும் பத்திரிகையும் ஜெயகாந்தனுக்கு இலக்கியப் பணிபுரிய முதன்முதலாக வித்திட்ட களம் ஆகும். சௌபாக்கியம், தாமரை, சாந்தி, கல்வி, ஆனந்த விகடன், தினமணிக்கதிர் போன்ற பல பத்திரிகைகளிலும் தனது தொடர் படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
பெண்களின் நிலை:
நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழ்வாழும் மக்களே விளிம்புநிலை மக்கள் ஆவர். அவர்களின் வாழ்க்கை என்பது அடுத்த வேளை உணவிற்கே அல்லல்படும் சூழலமைந்ததாகும். ஒண்டு குடிசையில் வாழ்வு, ஒரு வேளை கஞ்சிக்காக நாள் முழுவதும் உழைக்கும் அவலம் இத்தகைய வாழ்க்கை வாழும் மக்களிடமும் கூட்டுக்குடும்பமாக சேர்ந்து வாழும் பண்பு உள்ளது. கணவன், மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டி என அதிக உறுப்பினர்களுடன் வாழும் குடும்ப வாழ்வு போராட்டக்களமாய் அமைந்திருப்பதை ஜெயகாந்தனின் சிறுகதைகளுள் சில விளக்குகின்றன.
விளிம்புநிலை
மக்களின் குடும்பவாழ்க்கையைச் சித்தரிக்கும் சிறுகதையாக 'ஒரு பிடி சோறு' எனும் சிறுகதை அமைகின்றது. ராசாத்தியும் அவள் மகன் மண்ணாங்கட்டி ஆகிய இருவர் மட்டுமே அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆவர். கூலி வேலை செய்யும் ராசாத்தி வேலை இல்லாத நாட்களில் விலைமகளாக இருக்கிறாள். குடிசையில் நடக்கும் இவர்களது வாழ்க்கை ஒரு வேளை உணவுக்கே துன்பப்படும் அளவில் உள்ளது. விறகு சுமப்பது சுமைகளை லாரியிலிருந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள். இவையும் கிடைக்காதபோது சாப்பாட்டுக்காக விபச்சாரம். இவ்வாறு வாழ்க்கை நடத்தும் குடிசை வாசிகளான இம்மக்களிடமும் உதவும் மனநிலை, மனிதநேய உணர்வு, கருணை போன்றவை இருப்பதைச் சித்தரித்துக் காட்டுகிறது.
விலைமகளுக்கு எப்பொழுதுமே ஓய்வு இல்லை. பசியோடும் அதனால் களைத்த உடலோடும், விபச்சாரத்திலும் ஈடுபட வேண்டிய அவலம்.
ஜெயகாந்தன் தனது சிறுகதையில் செல்வச் செழிப்புள்ள பணக்காரக் குடும்பங்களையும், அவற்றில் உறுப்பினராக இருக்கும் பெண்களையும் பாத்திரங்களாகப் படைத்துள்ளார். இப்பெண்கள் நாகரிக மாற்றங்களின் வளர்ச்சியையும் பண்பாட்டில் பொருளாதாரத்தினால் ஏற்படும் சிதைவுகளையும் உணர்த்துபவர்களாகக் காட்சியளிக்கின்றனர்.
சீதாராமன், மதுரம் தம்பதிகள் இரண்டு பெண் குழந்தைகள் என ஓர் அன்பான குடும்பமாக கதை தொடங்குகிறது. கணவன் மீது மதுரத்திற்கு அவ்வளவு அன்பு. சீதாராமனுக்கு ஓர் முறை அலுவலகத்தில் போடப்பட்ட நாடகக்குழுவில் கதாநாயகனாக இருந்தார். அதனாலும், தனக்கு இளமையும் அழகும் இருப்பதாலும், எப்போதும் ஆணழகன் என்ற செருக்குடன் இருப்பவர். வீட்டில் அனைத்துப் பணிகளையுமே மதுரமே செய்தாள். கணவனின் அழகும் மற்றவர் அவனைப் பற்றி புகழும் கருத்துக்களும் அவளுக்கு மிக இனிமையானது.
சீதாராமனோ தன்னுடன் கதாநாயகியாய் நாடகத்தில் நடித்த கமலாவிடம் தவறாகப் பழகுகின்றான். அவள் கர்ப்பம் அடைகிறாள். சீதாராமனின் மனதில் வீட்டு நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்ள இரண்டு மடங்கு ஊதியம் பெற எண்ணி கமலாவை திருமணம் செய்ய மதுரத்திடம் பேசி அவளின் அனுமதியைப் பெறத் திட்டமிடுகிறான். கமலா மூலம் உண்மையை அறிந்த மதுரம் கணவனை வெறுத்து விலகுகிறாள். தன் பெற்றோர் தனக்கு கொடுத்த வீடு ஒன்றே போதுமானது என்ற முடிவில் இத்தனை நாளும் கணவன் காட்டிய அன்பு எல்லாம் பொய் என்பதை அறிந்து மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறாள்.
இச்சிறுகதையில் இடம்பெற்றுள்ள மதுரம் என்ற பெண் பண்பாட்டுடன் வாழ்பவள். கணவனை உயிராக நினைப்பவள். ஆனால் அவன் தனக்குத் துரோகம் செய்ததை அறிந்ததும் இனி அவன் தேவையில்லை எனத் தெளிவாக முடிவெடுப்பதும், தனித்து வாழ முற்படும் தன்னம்பிக்கையோடு இருப்பதும் மதுரத்தின் மன உறுதியை, தன்னம்பிக்கையைக் காட்டுகின்றது. இச்சிறுகதையில் மதுரத்தின் தெளிந்த அறிவால் சிந்தனையையும் அறிய முடிகின்றது. 'மதுரம்' என்ற பெண் பாத்திரம் அடிப்படைக் கல்வியை உடைய நடுத்தரப் பெண்ணாகவும், மன உறுதியுடன் தெளிவாக முடிவெடுப்பவளாகவும் படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவளுக்கு வாழ்வாதாரம் தேட வேண்டியுள்ள அவசியம். எந்நிலையிலும் பாதிப்பு அடைபவர் பெண்களே. ஆகையால் பெண் என்பவள் திருமணத்திற்கு முன் எவரையும் எதிர்பார்க்காமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். தனது தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமை என்பது கைத்தொழில், கல்வி, சுயதொழில் போன்றவற்றில் தன்னுடைய திறமையை முழுவதும் பயன்படுத்த வேண்டும்.
ஜெயகாந்தனின் 'யுகசந்தி' எனும் கதையில் ஆசிரியையாகத் தொழில் செய்யும் “கீதா” என்ற பெண் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. கீதா இளம் விதவை, மறுமணம் செய்து வைக்காமல் வைதீக குடும்பத்தின் வழக்கப்படி மொட்டை அடித்து, வெள்ளைப் புடவை கட்ட வேண்டிய கீதாவை அவளது பாட்டி ஆசிரியை பயிற்சி வகுப்பில் படிக்க வைக்கிறாள். படித்து ஆசிரியை ஆனபின் தன்னம்பிக்கை உடையவளாக மாறுகின்றாள். கௌரிப்பாட்டியின் உதவியால் தந்தையின் அனுமதியுடன் ஆசிரியையாகப் பணியாற்றும் கீதா தன்னுடன் பணியாற்றும் ஹிந்திபண்டிட் ராமச்சந்திரனை மறுமணம் செய்து கொள்கிறாள்.
தொழில் தரும் நம்பிக்கை:
விதவையான கீதாவிற்கு ஆசிரியர் தொழிலும், கல்வியும் தன்னம்பிக்கையைத் தருகிறது. காலங்காலமாகச் சமுதாயத்தில் விதவைப் பெண்களுக்கென்று விதிக்கப்பட்டிருந்த கட்டுக்களை உடைத்து வெளியேறுகிறாள்.
“என்னோடு பணிபுரியும் ராமச்சந்திரன் என்பவரை வருகின்ற ஞாயிறன்று நான் பதிவுத் திருமணம் செய்து கொள்ள நிச்சயித்து விட்டேன். நான் விதவை என்பது அவருக்குத் தெரிந்தது தான். ஆறுமாத காலமாய் நான் எனது உணர்ச்சியோடு போராடித் தான் இம்முடிவுக்கு வந்தேன். உணர்வுப்பூர்வமான வைதவ்ய விரதத்திற்கு ஆட்பட முடியாமல் வேஷங்கட்டித் திரிந்து பிறகு அவப்பேருக்கு ஆளாகிக் குடும்பத்தையும், அவமானப்படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்த முப்பது வயதில் இந்த அளவு சோதனைகளையே தாங்காமல் இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பின் இதே முடிவுக்கு வர நேரிடுமோ என்ற அச்சமும் பிறந்ததே. அதான் இப்போதே சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். என் காரியம் என்னைப் பொறுத்த வரைக்கும் சரியானதே!” - (ஜெயகாந்தன் சிறுகதைகள் (தொகுதி2) - யுக சந்தி, ப.எண்: 114)
என்ற உரையாடல் வழி கீதாவின் தெளிவான சிந்தனைகள் வெளிப்பட்டுள்ளன. இந்து சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்து வரும் பிராமணக் குடும்பத்திலிருந்து வந்த விதவைப் பெண் வாழ்க்கை பற்றிய தெளிவினைப் பெற்று பெற்றோர் மறுப்பார்கள் என்ற போதிலும் தனது எதிர்கால வாழ்க்கையை இப்படித்தான் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பதை இச்சிறுகதை நிகழ்வு உணர்த்துகின்றது. இப்பெண்ணின் துணிவான முடிவிற்கு அவள் பெற்ற கல்வியும் யாரையும் நம்பி வாழாமல் தனது ஊதியத்தில் வாழ முடியும் என்ற நம்பிக்கையைத் தந்த ஆசிரியைத் தொழிலும் காரணமாக இருப்பதை அறிய முடிகின்றது. இளம் விதவைகளாக இருக்கும் பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடந்து சீரழியும் நிலையை மாற்றக்கருதும் கீதாவின் ஆற்றல் தெளிவுபடுத்துகிறது.
மக்கள் தொடர்புச் சாதனங்கள்
பெண்களின் வாழ்வாதாரம் மக்கள் தொடர்புச் சாதனங்கள் மூலமாகவும் அமைகிறது என்பதை 'இருளைத்தேடி' எனும் சிறுகதை காட்டுகிறது. மக்கள் தொடர்புச் சாதனம் நுகர்வு மோகத்தை அதிகரித்து இளம் பெண்களின் மனதைக் கெடுப்பதையும் பத்திரிகை நடத்துபவர்கள் பெண்ணை வியாபாரக் கருவியாக்கிப் பணம் சம்பாதிப்பதையும், அதன் மூலம் அவருடைய வாழ்வாதாரம் அமைகிறது என்பதைக் காட்டுகிறது. இன்றைய நவீன உலகத்தில் விளம்பரப்படங்கள், ஓவியம், சிற்பம் போன்றவற்றைத் தயாரிக்கும் தொழில்களில் மாடலிங்காக தொழில் செய்து வாழ்க்கை வாழும் பெண்களும் காணப்படுகின்றனர்.
இதில் வருவாய் இருப்பதால் தன்மானத்தை கூடப் பெரிதாய் கருதாமல் இத்தொழிலை மேற்கொள்ளும் பெண்ணாக 'ருக்கு' எனும் பாத்திரம் வலம் வருகிறது. வறுமை காரணமாக தன்மானத்தை ஒரு உயர் மதிப்பாகக் கருதாமல், விலைப் பொருளாகப் பாவித்து தொழில் செய்து வாழும் பெண்களுள் மாடலிங் பெண்களும் உள்ளனர். இருப்பினும் பெருமைக்காகவும், புகழுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், அழகுக் குறித்து மற்றவர் பாராட்ட வேண்டும் என்ற தற்புகழ்ச்சிக்காகவும், மாடலிங் செய்து வாழும் பெண்களும் உள்ளனர்.
முடிவுரை
விளிம்புநிலை பெண்களுக்கு வாழ்வாதாரமே ஆண்களை நம்பி இருப்பதாகும். அந்த ஆண் நம்பிக்கை துரோகம் செய்யும் பொழுது பெண்கள் அவ் ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். அதிலிருந்து மீண்டு பெண்கள் வாழ, கல்வியோ, சொத்துக்களோ, வேலையோ போன் ஆதாயம் தேவைப்படுகிறது. இல்லையெனில் ஏதேனும் ஒரு தொழில் செய்து பிழைக்க வேண்டிய சூழ்நிலை அமைகிறது. குறிப்பாக விபச்சாரம், மக்கள் தொடர்பு சாதனம் மூலம் மானத்தை விற்றும் வாழ வேண்டியுள்ளது.
துணைநூற்பட்டியல்
ஜெயகாந்தன் சிறுகதைகள் (தொகுதி1) - ஒரு பிடி சோறு - கவிதா, பப்ளிகேஷன் - சென்னை - 017 - ஏழாம் பதிப்பு ஆகஸ்ட் 2019
ஜெயகாந்தன் சிறுகதைகள் (தொகுதி2), ஹீரோவுக்கு ஒரு, ஹீரோயின் - கவிதா பப்ளிகேஷன் - சென்னை - 017 - பதிப்பு
ஜெயகாந்தன் சிறுகதைகள் (தொகுதி2) - இருளைத் தேடி - கவிதா பப்ளிகேஷன் - சென்னை - 017 - பதிப்பு
ஜெயகாந்தன் சிறுகதைகள் (தொகுதி 2), யுக சந்தி, கவிதா பப்ளிகேஷன் - சென்னை - 017 - ஏழாம் பதிப்பு ஆகஸ்ட் 2019
- ஆர்.பிரமிளா,
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை
வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவைப்புதூர், கோயம்புத்தூர்.
&
முனைவர் கோ.சுரேஷ்,
நெறியாளர் & இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவைப்புதூர், கோயம்புத்தூர்.