தமிழ்வரலாற்றில், தனித்தமிழ் இயக்க நிலையில் மறைமலையடிகளை அடுத்த தலைவராகவும், அறிஞராகவும் விளங்குபவர் ஞா. தேவநேயப் பாவாணர் ஆவார். சொல்லாராய்ச்சித் துறையில் முதன்மையான அறிஞராகத் திகழும் அவர் அகராதியியலிலும் மொழியியலிலும் குறிப்பிடத்தக்க அறிஞராவார். தமிழியலில் ஆராய்ச்சி அறிஞராக முதன்மை முகங்கொண்டு ஒளிரும் பாவாணர் அடிப்படையில் தேர்ந்த பாவலராகவும் இசைப்பாவாணராகவும் விளங்கியவர். இக்காரணம் பற்றியே தேவநேசன் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் கவிவாணர் என்னும் புகழ்ப் பெயரைப் பின்னொட்டாகப் பெற்றார். தனித்தமிழ் நோக்கால் இயற்பெயரும் புகழ்ப் பெயரும் தேவநேயப் பாவாணர் எனக் கால ஓட்டத்தில் வடிவம் பெற்றன. தமிழ்மொழிக் காப்பு வரலாற்றில் தேவநேயப் பாவாணரின் சிந்தனைகள் செலுத்திய பெருந்தாக்கத்தால் அவர் மொழிஞாயிறு உள்ளிட்ட புகழ்ப்பெயர்களால் தமிழ்ச் சமூகத்தில் போற்றப்பெற்றார். சொல்லாராய்ச்சித் துறை முதலியவற்றில் பாவாணரின் பங்களிப்புகள் விதந்தோதப் பெறும் பெருநிலை கொண்டவை. தமிழ் யாப்பியலிலும் பாவாணர் தனித்துச் சுட்டத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

pavanar450தமிழ்ப் பா வடிவங்கள்: பாவாணரின் தனித்த மதிப்பீடுகள்

தமிழ்ப் பா வடிவங்கள் காலந்தோறும் மரபின் அடிப்படையில் வளர்ச்சி பெற்றுப் பல்கிப் பெருகியுள்ளன. ஆசிரியம், வெண்பா, கலி, வஞ்சி, மருட்பா என்னும் பாக்கள், விருத்தம், துறை, தாழிசை என்னும் பாவினங்கள், வண்ணம், சிந்து, உருப்படி முதலிய இனவினங்கள் எனத் தமிழ்ப் பா வடிவங்கள் பற்பலவாய்த் தோற்றம் பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட யாப்பு வடிவத்திலேயே அமைந்த இலக்கியங்கள், பல யாப்பு வடிவங்கள் விரவி அமையப் படைக்கப் பெற்ற இலக்கியங்கள் எனத் தமிழிலக்கியங்கள் அமைந்து விளங்குகின்றன. குறிப்பிட்ட யாப்பு வடிவத்தில், பா வடிவத்தில் தலைசிறந்த திறம் கொண்டவர்களாகச் சில புலவர்கள் தமிழ் வரலாற்றில் காணப் பெறுகின்றனர். இவற்றையெல்லாம் மனங்கொண்டு குறிப்பிட்ட யாப்பு வடிவத்தில் தலைசிறந்தவர் இவர் என மதிப்பிட்டுரைக்கும் போக்கு தமிழ் வரலாற்றில் காணப்படுகின்றது.

பழம்பாடல்களுள் ஒன்று சில யாப்பு வடிவங்களில் வல்லவர்களை விதந்துரைப்பதாக அமைந்துள்ளது. இப்பாடல் பரவலாகப் பலராலும் அறியப்பட்டதாகும்.

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்

       சயங்கொண்டான் விருத்த மென்னும்

ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா

       அந்தாதிக் கொட்டக் கூத்தன்

கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்

       வசைபாடக் காள மேகம்

பண்பாகப் பகர்சந்தம் படிக்காச

      லாலொருவர் பகரொ ணாதே.

இப்பாடல் வெண்பா, விருத்தம் ஆகிய பா வடிவங்களிலும், பரணி, கோவை, உலா, அந்தாதி, கலம்பகம் ஆகிய பிரபந்த இலக்கியங்களிலும் தேர்ந்த திறத்தை வெளிப்படுத்திய புலவர்களை எடுத்துரைக்கின்றது. “வெண்பாவிற் புகழேந்தி”, “விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்” என்பன இப்பாடலில் இடம்பெற்றுள்ள யாப்பியல் சார்ந்த மதிப்பீடுகளாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழிலக்கிய வரலாற்றை யாப்பு நோக்கில் கருத்தில்கொண்டு ஒவ்வொரு பா வடிவத்திலும் சிறந்த புலவர் பெருமக்களை மதிப்பிட்டுரைக்கும் முயற்சிகளின் தொடக்கமாக இப்பாடல் அமைந்துள்ள போதிலும் இரண்டு பா வடிவங்களில் வல்லவர்களை மட்டுமே இப்பாடல் சுட்டியுள்ளது. இப்பாடல் முன்னெடுத்த சீரிய மரபை வளர்த்தெடுக்கும் நோக்கில், முழுமைப்படுத்தும் நோக்கில் முதன்முதலாகத் தேவநேயப் பாவாணர் பாடல் வடிவில் யாப்பு வடிவ வல்லாளர் குறித்த மதிப்பீட்டினை முதன்முதலில் புரிந்துள்ளமை தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழ் யாப்பியல் வரலாற்றிலும் கவனத்தில் கொள்ள வேண்டிய பாவாணரின் பங்களிப்பாகும்.

தேவநேயப் பாவாணர் படைத்த இசைப்பாடல்களின் தொகுதியாக அமைந்தது ‘இசைத்தமிழ்க் கலம்பகம்’ என்னும் நூலாகும். இந்நூல் 1966இல் முதலில் வெளிவந்ததாகும். இதன்கண் இடம்பெற்ற இசைப்பாடல் ஒன்று “யார் யார் எவ்வெப்பா வல்லார்?” என்னும் தலைப்பில் அமைந்ததாகும். இப்பாடல் தமிழ் யாப்பு வடிவங்களில் சிறந்த திறத்தை வெளிப்படுத்திய புலவர் பெருமக்களை விரிவாக மதிப்பிட்டுக் காட்டுகின்றது.

தமிழின் சிறப்பைக் குறித்துப் பேசும் ஒரு பாடலில் பாவாணர் ‘இந்த உலகத்தினிலே எந்த மொழி கற்றிடினும் முந்து தென்னிலத்து இருந்த எல்லைவழி-மோனை, எதுகை அமை தேனை நிகர் இனிமைப்பா’ (‘செந்தமிழ்ச் சிறப்பு’, இசைத்தமிழ்க் கலம்பகம், ப. 14) கொண்டது தமிழ் என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்பகுதியில் தமிழின் தொடைநலன்களின் தனிச்சிறப்பைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். மேலும், வேறு எந்த மொழியிலும் வெண்பாவோ, கலிப்பாவோ, வண்ணப்பாடல்களோ இல்லை என்பதையும் தமிழின் தனித்தன்மை இவை என்பதையும்

வெள்ளைகலிப் பாவுமுண்டோ வேறு மொழியே – ஒலி

வீறுதமிழ் வண்ணங்களும் கூறும் வழியே – ஒரு

வாறுமில்லை கடுமையுந்தான் பாடும் நிலையே – எதும்

கூடவில்லையே (செய்.)

(‘செந்தமிழ்ச் செய்யுட் சிறப்பு’, இசைத்தமிழ்க் கலம்பகம், ப. 15)

எனச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

தமிழ்மொழி தனது பெயரிலும்கூட இனிமையைத் தாங்கி நிற்கக்கூடிய பேரின்பக் கடல் எனவும், தமிழின் பாடல்களில் எதுகை, மோனை தவறாமல் பயிலும் என்பதையும்

பேரிலுந்தமிழ் இனிமைதங்கும் பேரின்ப வாரி

சாரும் எதுகை மோனை வண்ணம்

சற்றுந்தவறாது நண்ணும்        (பேரிலுந்)

(‘தமிழின்பம்’, இசைத்தமிழ்க் கலம்பகம், ப. 19)

எனப் பாடியுள்ளார்.

தொல்காப்பியச் செய்யுளியலில் இடம்பெறும் இருபது வகை வண்ணங்கள், எண்வகை வனப்புகள், ‘பாட்டுரை நூலே’ எனத் தொடங்கும் எழுநிலச் செய்யுள்கள் ஆகியன இறந்துபட்ட அவலத்தை ஒரு பாடலில் பாவாணர் நாம் மனங்கொள்ளுமாறு படைத்துள்ளார்.

இன்னறு பாக்களும் இருபது வண்ணமும்,

எண்பெரு வனப்பொடு எழுநிலச் செய்யுள்களும்

(எத்திறம் இறந்தனவோ அத்திறம் அவன் அறிவான்)

(‘இறந்துபட்ட தமிழ் நூல்கள்’, இசைத்தமிழ்க் கலம்பகம், ப. 44)

எனப் பாடியுள்ளமை தொல்காப்பியச் செய்யுளியல் காட்டும் பல யாப்பியற்கூறுகளுக்கு இலக்கியமாய் அமையும் படைப்புகள் அழிந்துபட்டமையை எடுத்துரைத்துள்ளது.

இவ்வாறு இலக்கணச் செய்திகளுள் யாப்பியல் செய்திகளைப் பாவாணர் மிகுதியாகப் பாடல்களில் சுட்டிப் பாடியுள்ளமை தமிழ் யாப்பியலின் ஏற்றத்தை விதந்துரைக்கும் நிலையில் காட்சிதருகின்றது.

பாவாணர் பாடல்களின் யாப்பியல்

தனித்தொகுதிகளாகும் வகையில் பாவாணர் இசைப்பாடல்களை மிகுதியாகப் பாடியுள்ளார். எனினும் வாழ்த்துப்பாக்கள், இரங்கற்பாக்கள் முதலிய நிலைகளில் பல்வகை யாப்பில் பல பா வடிவங்களையும் அவர் ஆண்டுள்ளார். பாவாணர் பாடிய பாடல்கள் சிதறிக் கிடந்தமையை ஒருசேரத் திரட்டியளித்த இரா. இளங்குமரனார் பாவாணர் ஆண்ட யாப்பு வடிவங்களை நிரல்படுத்தியுள்ளார். அவை வருமாறு: ஆசிரியப்பா, நூற்பா, குறள் வெண்பா, நேரிசை வெண்பா, அறுசீர் ஆசிரிய விருத்தம், எழுசீர்ச் சந்த விருத்தம், எண்சீர் ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, கட்டளைக் கலித்துறை, கும்மிப்பா, இசைப்பா. இவ்வாறு பா, பாவின, இனவின வடிவங்கள் பலவற்றையும் ஆற்றல் மீதூர ஆண்ட தேர்ந்த பாவலராகவும் பாவாணர் திகழ்கின்றார். யாப்பு வடிவங்களைத் திறம்பட ஆண்டு ஆட்சிநிலையில் தமிழ் யாப்பியலுக்குப் பங்களித்தவராகவும் பாவாணர் விளங்குகின்றார்.

பாவாணரின் இசைப்பாடல்களில் பல தனிச்சிறப்புகள் அமைந்து விளங்குகின்றன. தேவாரப் பாடல், திருவாசகப் பாடல் முதலிய பழந்தமிழ்ப் பாடல்கள், திருப்புகழ், குற்றாலக் குறவஞ்சி, வள்ளலார் பாடல்கள், தியாகராசர் கீர்த்தனைகள், இசுலாமிய, கிறித்தவச் சமயங்களின் புகழ்பெற்ற பாடல் மெட்டுகள், திரைப்படப் பாடல் மெட்டுகள், மக்கள் பாடல் மெட்டுகள் முதலியவற்றில் பாவாணர் இசைப்பாடல்களை இயற்றியுள்ளார். பாரதியார் பாடல்களான, “பொழுது புலர்ந்தது”, “வந்தே மாதரம்”, “பாருக்குள்ளே நல்ல நாடு”, “ஓடி விளையாடு பாப்பா”, “தீராத விளையாட்டுப் பிள்ளை”, பாரதிதாசனின், “துன்பம் நேர்கையில் யாழெடுத்து”, “தலைவாரிப் பூச்சூட்டி உன்னை”, “இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம்” முதலிய மெட்டுகளிலும் பாவாணரின் இசைப் பாடல்கள் அமைந்துள்ளன. பல்வேறு பண், தாளம் குறிப்பிடப்பட்டு அவ்வவ்வமைப்பில் பாடல்கள் இயன்றுள்ளன. பாவாணர் இசைப்பாடல்களில் யாப்பு நிலைத் தனித்தன்மையாகச் சரணப் பகுதிகளில் வழக்கமாகப் பெரிதும் இடம்பெறும் கண்ணி, சிந்து அமைப்புகளோடு கலிவிருத்தம், ஆசிரிய விருத்தம், வஞ்சித்துறை முதலிய வடிவங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாவாணரின் யாப்பாய்வு

சொல்லாராய்ச்சிக் களத்தில் முக்குளித்து அரிய நித்திலங்களைத் தமிழுக்கு வாரி வழங்கிய பாவாணர், அருகிய நிலையிலேயே யாப்பியல் ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். “பாவினம்” என்னும் தலைப்பில் விரிவான ஓர் ஆய்வுக் கட்டுரையைப் பாவாணர் படைத்திருக்கின்றார். தொல்காப்பியத்தில் இடம்பெறாத பா வடிவங்கள் பாவினம் ஆகும். சிலப்பதிகாரக் காலந்தொட்டுப் பெருஞ்செல்வாக்குப் பெற்ற வடிவங்களாகவும் இவை விளங்குகின்றன. பாவின வடிவங்களுள் முதன்மையானதாக விருத்தம் அமைகின்றது. விருத்தம் என்னும் யாப்பு வடிவம் தமிழில் இருப்பதனைப் போலவே வடமொழியிலும் உள்ளது. விருத்தம் என்னும் பெயர் வடமொழிப் பெயராக விளங்குகின்றது. விருந்து என்னும் சொல்லடியாக விருத்தம் என்னும் சொல் தமிழே என்பாரும் உளர். இவற்றை எல்லாம் மனங்கொண்டு பாவினம் குறித்து விரிவான ஆய்வைப் பாவாணர் நிகழ்த்தியுள்ளார்.

பாவினங்கள் வடமொழி யாப்பு வழிப்பட்டன என வழங்கும் கருத்து எத்துணை உண்மையென ஆராய்வதை நோக்கமாகக்கொண்டு இவ்வாய்வைப் புரிவதாகப் பாவாணர் குறிப்பிட்டு ஆய்வை நிகழ்த்தியுள்ளார். “துறை, தாழிசை, விருத்தமென்னும் மூவகைப் பாவினங்களுள் விருத்தமொன்றே வடமொழிப் பெயரால் வழங்குவதாகும். அதூஉம் பெயரான்மட்டும் வடமொழியேயன்றி யாப்பானன்று” (தமிழ்ப் பொழில், ப. 121) எனத் தெளிவுபடுத்தியுள்ளார். பாவினத் தோற்றத்திற்கான காரணத்தை, “ஒரு மொழியானது காலஞ் செல்லச் செல்ல, அவ்வக் காலத்து மக்கள் இயல்பிற்கும் அறிவிற்கு மேற்றவாறு இலக்கியத்தினும் இலக்கணத்தினும் திரிதல் இயல்பே. அங்ஙனம் தமிழ்யாப்பும் சங்க காலத்தில் பாவாயிருந்து பிற்காலத்தில் பாவினமாகத் திரிந்தது” (மேலது, ப. 122) எனத் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், பாவினங்கள் அனைத்தும் கலிப்பாவினின்றே தோன்றியதாகக் கருத்துரைத்து அதற்கான காரணங்களை விளக்கியுள்ளார். விளக்கங்களின் நிறைவில் “ஆகவே துறை, தாழிசை, விருத்தமென்னும் மூவகைப் பாவினமும் கலிப்பாவானமை பெறப்பட்டது” என முடிபுரைக்கின்றார். பாவினம் மூன்றும் தமிழ் யாப்பே என்பதனையும், விருத்தம் என்னும் சொல் வழக்குக் குறித்தும், பாவினத் தோற்றம், விருத்தத்தின் பேராட்சி குறித்தும் பாவாணரின் பின்வரும் கூற்று பாவின ஆய்வு வரலாற்றில் முதன்மைநிலையில் கருதத்தக்கதாக அமைகின்றது.

“இதுகாறுங் கூறியவாற்றால், பாவின மூன்றுந் தமிழ்யாப்பே யென்றும், அவை கொச்சகக்கலியின் திரிபென்றும், பின்னூலார் அவற்றைப் பன்னிரு பாவினமாகப் பகுத்துக்காட்டினரென்றும் சாலை, பண்ணை முதலிய தமிழ்ச் சொற்கள் மறைந்து ரோட்டு (இங்கிலீஷ்), ஜமீன்தார் (இந்துஸ்தானி) முதலிய அயற்சொற்கள் வழங்கினார்போல, மண்டிலமென்னும் தென்சொல் மறைந்து விருத்தமென்னும் வடசொல் வழங்கிற்றென்றும், இலக்கணம் நிரம்பிய பாவியற்றும் அருமை நோக்கிச் சங்க காலத்திற்குப் பின்னோர் எளிய யாப்பான இனங்களை யியற்றினரென்றும் அவற்றுட் சிறப்புப்பற்றி மண்டில யாப்புப் பெருவழக்காயிற்றென்றும் தெள்ளிதின் அறிந்துகொள்க.” (மேலது, ப. 131)

மேலும், இவ்வாய்வுரையுள் தமிழ் யாப்பினையும் ஆங்கிலமொழி யாப்பினையும் இணைத்தெண்ணி “ஆங்கில யாப்புப் பலவகைப் பாக்கூறுமேனும் தமிழ்போல அத்துணைப் பரந்துபட்டதன்று” (தமிழ்ப் பொழில், ப. 121) எனக் கூறுதலும் மனங்கொள்ளத்தக்கதாக அமைகின்றது. தமிழ் யாப்பின் பா வடிவங்கள், பாக்கள், பாவினங்கள், இனவினங்கள் என முப்பெரும் பகுப்பில் அமைகின்றன. இவற்றுள் விவாதங்களுக்கு இடமான பாவினம் குறித்த ஆராய்ச்சிக் களத்தில் முன்னோடி நிலையில் பாவாணரின் இவ்வாய்வு அமைந்து தெளிவையும் புதிய ஒளியையும் வழங்குகின்றது. மேலும் எண்ணத்தக்க கூறுகளையும் கொண்டுள்ளது.

மேலும், தமது ‘தமிழும் திராவிடமும் சமமா?’ என்னும் கட்டுரையுள் ஆரியச் சார்பற்ற அருந்தமிழ் நூல்களை நிரல்படுத்துகையில் தொல்காப்பியச் செய்யுளியலில் இடம்பெற்ற யாப்பியல் வடிவங்களை மனங்கொண்டு, “அறுவகைப்பாவும் அவற்றின் வேறுபாடுகளும், “பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே, அங்கதம் முதுசொல்” என்னும் எழுநிலை யாப்பும், வாழ்த்துவகையும் பண்ணத்தியும் இருபது வண்ணமும், எண்வகை வனப்பும் நூற்றுக்கணக்கான அகப்பொருள் புறப்பொருட் டுறைகளும் ஆகியவற்றிற்குரிய பண்டை யிலக்கியமும், ஆரியச்சார்பற்ற அருந்தமிழ் நூல்களே” (‘தமிழியற் கட்டுரைகள்’, பாவாணர் தமிழ்க் களஞ்சியம்-43, ப. 24) எனக் குறிப்பிட்டுள்ளமை உள்ளிட்ட பல கூற்றுகள் செய்யுளியலைக் களமாகக்கொண்டு பாவாணரால் மொழியப்பட்டுள்ளன என்பதும் எண்ணத்தக்கது.

நிறைவு

தனித்தமிழ் இயக்கம், சொல்லாராய்ச்சித்துறை ஆகியவற்றில் முதன்மையாகக் கருதப்படும் பாவாணர் யாப்பியலில் குறிப்பிடத்தக்க நிலையில் யாப்பு வடிவ வல்லார் குறித்த மதிப்பீடு, தமிழ் யாப்பின் கூறுகளைப் பாடல்கள் வாயிலாய்ப் போற்றல், தேர்ந்த திறத்துடன் யாப்பு வடிவங்களை ஆளுதல், பாவின ஆய்வு எனப் புரிந்துள்ள பங்களிப்புகள் பாவாணரின் பிறிதொரு பரிமாணத்தை நமக்கு உணர்த்துகின்றன. அவை யாப்பியல் துறையினரின் கவனத்திற்குரியனவாகவும் அமைகின்றன.

துணைநூற்பட்டியல்

இசைத்தமிழ்க் கலம்பகம், ஞா. தேவநேயப்பாவாணர், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, மறுபதிப்பு: 2000.

திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, கலாரத்நாகர அச்சியந்திர சாலை, சென்னை, இரண்டாம் பதிப்பு: பராபவ-ஆவணி.

பாவாணர் தமிழ்க்களஞ்சியம்-10, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை, மறுபதிப்பு: 2009.

பாவாணர் தமிழ்க்களஞ்சியம்-36, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை, மறுபதிப்பு: 2009.

பாவாணர் தமிழ்க்களஞ்சியம்-43, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை, மறுபதிப்பு: 2009.

யாப்பு நூல், த.ச. தமிழன், தமிழன் பதிப்பகம், திருவாரூர், இரண்டாம் பதிப்பு: 1995.

இதழ்

1.      தமிழ்ப் பொழில், சீமுக - ஆடி.

- சி.இளங்கோ, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.