உண்மை, நேர்மை, எளிமை இந்த மூன்று நடைமுறைகளுக்கும் சொந்தக்காரராக இருப்பது மிகவும் அரிதான ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மூன்றையும், தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த, சென்னை மாகாணத்தின் கடைசி முதல்வரைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். தனது சொத்துக்களை அனைத்தையும் இழந்த போது கூட, நேர்மையை இழக்காத, நேர்த்தியான மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் பூ.ச.குமாரசுவாமி ராஜா. இந்த நேர்மைக்காக இந்த காலகட்டத்தில் அவரைப்பற்றி பேசுவது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

kumarasamay raja 414த. பிரகாசத்திற்கு முன் காலகட்டத்தில் சென்னை மாகாண மேலவைத் தலைவர்களாக செயல்பட்டனர். அந்தப் பொறுப்புகளில் இராஜகோபாலாச்சாரி, கூர்மா வெங்கடரெட்டி, ராமகிருஷ்ண ராவ், பி.டி.இராஜன், ராமகிருஷ்ண ரங்காராவ், முனுசாமி நாயுடு, சுப்பராயன், பனகல் ராஜா, சுப்பராயன் ஆகியோர் செயல்பட்டுள்ளனர் (1920 முதல் 1937 வரை).

பூசாபதி சஞ்சீவி ராஜாவின் மகன் குமாரசுவாமி ராஜா 08.07.1898 இல் பிறந்து, எட்டு நாட்களில் தனது தாயையும், மூன்று வயதில் தந்தையையும் இழந்தார். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. தனது பாட்டியின் வீட்டில் வளர்ந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த இவர், தனது 14 வது வயதில் தன்னைவிட ஆறு மாத மூத்த ஸ்ரீ ரங்கம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால், ஆறு ஆண்டுகளில் அவர் இறந்து விடுகிறார். அதன்பிறகு தனது மனைவியின் சகோதரியை திருமணம் செய்து வைக்கின்றனர், அந்தப் பெண்மணி இவரை விட இரண்டு வயது மூத்தவர்.

பூ.ச.குமாரசுவாமி ராஜா சார்ந்திருந்த சமூகம், 15 ஆம் நூற்றாண்டில், ஆந்திராவில் இருந்து இடம் பெயர்ந்து தமிழகம் வந்த ராஜூக்கள் என்ற சமூகத்தை சேர்ந்தவர். அதனால் தான் தனது பெயருக்குப் பின்னால் ராஜா என்ற அடைமொழி இந்த சமூகத்தினர் வைத்துக் கொள்வது வழக்கம். அடைமொழி போலவே உயர்ந்த பண்புகளிலும் ராஜாவாகவே வாழ்ந்தார். இவர் பள்ளிப் படிப்பை முடித்தவுடன், இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். பின்னர் கிராம பஞ்சாயத்து மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, பஞ்சாயத்து மற்றும் நகரசபை நிர்வாகங்களில் பொறுப்பேற்று பங்காற்றினார்.

அன்னி பெசண்ட், சத்தியமூர்த்தி ஆகியோர் மீது ஏற்பட்ட தாக்கம் காரணமாக, 1919 ஆம் ஆண்டு காந்தியை சந்திக்கிறார். இந்த சந்திப்பு, காந்தி மீதான ஈடுபாடு, எளிமை காரணமாக அவர் மீதான தாக்கம் அதிகரிக்கிறது. பாகுபாடு, சமத்துவமின்மை போன்ற நீதியற்ற சட்டங்களுக்கு எதிராக போராடுகிறார். இதனால் 1932 ஆம் ஆண்டு சிறைக்கு சென்றார். திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம் அடங்கிய தொகுதியில் வெற்றி பெற்று 1934 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரானார்.

சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பூ.ச.குமாரசுவாமி ராஜா 1949ஆம் ஆண்டு ஜனவரி 26 தேதி முதல், 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வரை முதலமைச்சராக பதவி வகித்தார்.

1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல், 1952 ஏப்ரல் 10ஆம் தேதி வரை முதல்வராக மீண்டும் தொடர்ந்து செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து 1954 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை, ஒரிசா ஆளுநராகப் பணியாற்றினார்.

இவரது ஆட்சிக் காலத்தில் ஆளுநராக, கிருஷ்ணகுமார் சிங் பவசிங் இருந்தார். இவருக்கு முன்னதாக ஓ.பி.ராமசாமி ரெட்டியார் 1947ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல், 1949 ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை முதல் முறையாக சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக செயல்பட்டார். இவருக்கு முன்னதாக, சென்னை மாகாணத்தின் பிரதமராக 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி முதல், 1947 மார்ச் 23 ஆம் தேதி வரை பிரகாசம் செயல்பட்டார். பதவி ஏற்ற ஓர் ஆண்டில், காமராஜருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தலில், ஓ.பி. ராமசாமி ரெட்டியார் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி, பிரகாசம் பிரதமர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். ஆனால் மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல், அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் அபுல் கலாம் ஆசாத் ஆகியோரது விருப்பம், ராஜாஜியை பிரதமராக்க வேண்டும் என்பது. இந்த விருப்பத்தை காமராஜிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாசத்தை தேர்வு செய்தனர். ராஜாஜி காங்கிரஸ் கட்சியின் புறக்கணிப்பதற்குக் காரணம், 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியை புறக்கணித்து வெளியேறி இருந்தார் ராஜாஜி, அதனால் அவரை ஏற்கவில்லை, அவருக்கு வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.பி.ராமசாமி ரெட்டியார், காமராஜரிடம், நான் விட்டு விலகும், இந்த முதல்வர் நாற்காலியில், ஒரு யோக்கியன்தான் உட்கார வேண்டும் என்று கூறியதைக் கேட்ட காமராஜர், திகைத்துப் போகிறார். சரி நீங்களே ஒரு யோக்கியரைக் கூறுங்கள் என்கிறார், அதற்கு என்னைவிட ஒரு யோக்கியன் ராஜபாளையத்தில் உள்ள பூ.ச.குமாரசுவாமி ராஜா என்கிறார். இதனைத் தொடர்ந்து அவர்களது ஆதரவோடு முதல்வரானார். அவரது ஆட்சிக் காலத்தில், பூரண மதுவிலக்கு அமல் படுத்தினார். நீதித்துறையும் நிர்வாகத் துறையும் ஒன்றாக இருந்ததைப் பிரித்து நீதித்துறையை சுதந்திரமாக செயல்படுத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆலய பிரவேசம் சட்டபூர்வமானது, கதர் கைத்தறி ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

குறிப்பாக ஊழலை அடியோடு அழித்த பெருமை அவரையே சாரும். சென்னை செய்தி என்ற ஒரு இதழைத் தொடங்கி, அதில் யார் ஊழல் செய்கிறார்களோ, அவரது பெயர், புகைப்படம், போன்ற முழு விவரங்களை வெளியிட்டு, ஊழலின் ஒட்டுமொத்த வேர்களையும், அவர் அழித்தார். மிகப் பெரிய செல்வந்தரான அவர், தனது சொத்துக்கள் முழுவதையும் ராஜபாளையம் பொதுமக்களுக்கு எழுதிக் கொடுத்தார். தான் வாழ்ந்த வீட்டை காந்தி கலை மன்றம் என்ற நுண்கலை அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கினார். இந்த இல்லத்தில் அவர் படிக்க சிறுகச் சிறுக வாங்கி வைத்த நூல்களைக் கொண்டு உருவாக்கினார். பின்னர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நூல்களைக் கொண்ட பெரிய நூலகத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தைக் கொண்டு திறந்து வைத்து அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தார்.

இந்தக் காலகட்டத்தில் பாரதியாருக்கு நினைவு மண்டபம் கட்ட, கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி நிதி திரட்ட முற்பட்ட போது, ஒரு நியாயமான மனிதரிடம் முதல் நிதியைப் பெறத் திட்டமிட்டு, ராஜபாளையம் பூ.ச. குமாரசுவாமியை நாடுகிறார், அப்போது தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கிறார், அதில் 50 ரூபாய் மட்டுமே இருந்தது, அதை முதல் ஆளாக வழங்கினார். காரைக்குடி வள்ளல் அழகப்பர், திருச்சூரில் ஒரு நூற்பாலை திறப்பு விழாவிற்கு வரவேண்டும் என, குமாரசாமி ராஜாவிற்கு கடிதம் எழுதுகிறார். அதற்கு பதில் கடிதம் எழுதியவர், நான் தான் எந்தப் பொறுப்பிலும் இல்லையே, என்னை ஏன் திறப்பு விழாவிற்கு அழைக்கிறீர்கள் என்று கேட்க, அதற்கு வள்ளல் அழகப்பர், கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர் நீங்கள், தாங்கள் தான் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று அவர் மீண்டும் கடிதம் எழுதியிருக்கிறார்.

அப்படிப்பட்ட நேர்மையாளரை, 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடையச் செய்தனர். 15.03.1957 ஆம் ஆண்டு, சென்னை மாகாணத்தின் கடைசி முதலமைச்சர் உயிரிழந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் அப்போதைய மத்திய அரசு, அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது. ராஜபாளையம் பேருந்து நிலையத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றி உருவாக்கப்பட்ட நகருக்கு இவரது பெயர் வைக்கப்பட்டது. இவரது நினைவிடம் விருதுநகரில் உள்ளது. 05.09.1978இல் ராஜபாளையத்தில் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன், குமாரசாமி ராஜாவின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைத்து, வருங்கால சமூகம் அறியும் வண்ணம், வரலாற்றில் நிலையான புகழை அவருக்குக் கிடைக்கச் செய்தார்.

- முனைவர் கோ. ஜெயக்குமார்