தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழ் தவிர்த்த பிற துறைகளில் தொழிற்பட்டவர்கள் ஆர்வத்தின் அடியாக தமிழில் பெரும் சாதனைகள் புரிந்தார்கள் என்பதை அறிவோம். ஆனால், குடும்ப நிலை காரணமாக பள்ளிப் படிப்பைப் பாதியிலே விட்டு ‘கல் சிற்பி’ ஆன ஒருவர் தன் விடாமுயற்சியால் முறைசாராமல் பயின்று ‘சொல் சிற்பி’ ஆனதும், அதிலும் இலக்கியப் படைப்போடு இலக்கண உருவாக்கத்தில் ஈடுபட்டதும் தமிழ்ச் சூழலில் அரிதான முன் மாதிரி. ஆம். அவர்தான் பாவலரேறு ச. பாலசுந்தரனார்.
இது பாவலரின் (1924 - 2007) நூற்றாண்டு நிறைவு. சாகித்திய அகாதெமி நூற்றாண்டு காணும் இலக்கிய வாணர்களைத் தொடர்ந்து நினைவுகூரல் செய்து வருவது பாராட்டுக்குரியது. இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசையில் ச. பாலசுந்தரனார் பற்றி அவரின் திருமகன் பா. மதிவாணன் எழுதியுள்ளார். ஆளுமையாளர் குறித்த நூல் ஒன்று எப்படி அமைதல் வேண்டும் என்பதற்கு சான்று போல இந்நூல் அமைந்துள்ளது. சிறிதும் ‘தன்னிலை’ வெளிப்படாமல் மிகக் கவனமாக நூலினை எழுதி உள்ளார். நூலினை மொழிதல் முறைமையும் அழகுற அமைந்துள்ளது.
குலத்தொழில் அல்லாது குடும்பம் ஏற்றுக் கொண்ட ‘கல்லுப்பட்டறைக்காரர்’ வீட்டில் பிறந்த பாலசுந்தரம், சூழல் காரணமாக சிறுவர் நிலையிலேயே அத்தொழில் பழகி அதில் விற்பன்னராகிறார். இளம் வயதில் சிற்பம், கட்டடம் சார்ந்து பல்வேறு அனுபவங்களும் சுவையாகச் சொல்லப்படுகின்றன. கூடவே துணிக்கடைப் பணியிலும் ஊர்களுக்கு தலையில் சுமந்து சென்று துணி விற்கும் பணியிலும் கூட ஈடுபடுகிறார்.
பட்டறையில் பல அனுபவங்கள். அரசு சார்ந்த ஓர் பணியில் சாலை உருளையை உடைப்பது, கட்டட உயரம் குறைப்பது போன்ற பெரிய வேலைகளை பாலசுந்தரம் மிக எளிதாகச் செய்து விடுகிறார். சிற்பத் தொழில் நுட்பமானது. மரபறிவு. இதில் இவரின் தேர்ச்சி வியக்கத்தக்கது. ‘வேர்ப்பிள்ளையார்’ ஒன்றை ஒருவர் நினைவாக அமைக்கிறார். அது இன்றளவும் விளங்கி வருகிறது. இதனை, “பாலசுந்தரத்தின் தந்தையாரிடம் வந்து “குளத்து மேட்டுத் தெரு வடவாற்றுப் படித்துறையில் ஒரு பிள்ளையார் கோயில் கட்டலாம் என்று முடிவு செய்துள்ளேன். வெள்ளம் முதலியவற்றால் பாதிக்கப்படாமல் பிள்ளையாரை வேர்ப்பிள்ளையாராகச் செய்து வைக்க வேண்டும்’ என்றார். அதாவது ஐந்தடி நீளக் கருங்கல்லின் ஒரு நுனியில் ஒன்றரையடியளவில் விநாயகர் சிலையைச் செதுக்கி, மூன்றரையடி தரைக்குள் பதித்துச் சுற்றிக் கட்டிடம் அமைக்க வேண்டும். பாலசுந்தரம் அப்படி செய்து கொடுத்தார்.”(ப. 20)
சிற்ப வேலையில் மட்டுமல்ல தன் அன்றாட வாழ்விலும் கூட அழகும், நேர்த்தியும் மிக்கவற்றை பாலசுந்தரம் மேற்கொண்டார் என்பதை பல இடங்களில் இந்நூல் பதிவு செய்கிறது. பட்டறை வேலையில் பசியை ஆற்றிக் கொள்ள வெற்றிலைப் பழக்கத்துக்கு ஆளாகிறார். வாழ்நாள் முழுவதும் அதனைப் பின்பற்றுகிறார். தஞ்சாவூரில் தாம்பூலம் தரிப்பது இயல்பானதுதான். அதுவும் இசைவாணர்களின் அடையாளம் அது. இவர் கலைஞர், கவிஞர்.
‘மாத ஊதியம் உறுதியான காலத்தில் வெற்றிலையைக் கவுளி(நூறு)யாக வாங்குவார். புகையிலையை புகையிலைக் கம்பெனியில் தேவைக்கேற்ப நிறுத்தும், சீவல், சுண்ணாம்பை மொத்த விலைக்கடையிலும் வாங்குவது அவரது வாடிக்கை. வெற்றிலை, சீவல் முதலியவற்றுக்குத் தனித்தனி அறை கொண்ட பித்தளைப் பெட்டி வீட்டில் இருக்கும். கைப்பையில் சிறு அலுமினிய வெற்றிலைப் பெட்டி இருக்கும்.
ஒரு கவுளி வெற்றிலையையும் ஒன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து நறுவிசாகப் பத்திரப்படுத்துவதிலேயே கலை நயம் தொடங்கிவிடும். ஒரு கட்டத்தில் தாமே பச்சைக் கற்பூரம், கிராம்பு முதலியவற்றைக் கலுவத்திலிட்டு மசித்து மணப்புகையிலை தயாரித்துக் கொண்டார். உரித்து விட்டு, நரம்புகள் ஓடும் பக்கத்தில் சுண்ணாம்பைப் பட்டும் படாமலும் பரவலாகத் தடவிச் சீவல் சேர்த்துப் பொட்டலம் போல் மடித்து, கடைவாயிலிட்டு வாய்மூடி அரைக்கும் போதே புருவச் சிலிர்ப்பும் கண்ணின் மென்னகையும் முகத்தின் மலர்ச்சியும் தோன்றிப் பொலியும். பின்னர்ப் புகையிலை போடுவார். செயலில் பேச்சில் உற்சாகம் கூடும். அவர் வெற்றிலை போடுவதை ஒரு கலை நிகழ்ச்சி போல் பார்க்கலாம்.”(பக். 15- 16)
அதே போல் இன்னபிற வேலைகளைச் செய்வதை,
“வாரந்தோறும் துணிகளைத் துவைத்துச் சுருக்கமில்லாமல் காய வைப்பார். மாலையில் கனன்றெரியும் கரியை நிரப்பி அவ்வப்போது வெப்பம் குன்றாமல் விசிறி, தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து பெட்டி போட்டு(ironing) மடித்து அடுக்கி விடுவார். தொழில் முறைச் சலவையாளரை விடவும் நேர்த்தியாகச் செய்வார்.” (ப.27)
“உடைமைகள் அதிகமற்ற ஓட்டு வீடாதலின் ஆண்டு தோறும் பொங்கலையொட்டிச் சுண்ணாம்புக் கற்களை வாங்கிச் சிமெண்ட் தொட்டியில் ஊறவைத்து தென்னை மட்டையைத்தட்டித் தூரிகையாக்கித் தாமே வெள்ளையடித்து விடுவார்.”(ப.28)
அறிவும், உழைப்பும் இருவேறு துருவங்கள் எனக் கருதும் சூழலில் இரண்டையும் இணைத்து பேதமற்று வாழ்ந்தவராக பாலசுந்தரனாரை இந்நிகழ்வுகள் சுட்டுகின்றன.
ஏழாம் வகுப்போடு படிப்பை விட்டவர். பட்டறைக்கு அருகில் கரந்தைக் கல்லூரி இருந்த தொடர்பில் மீண்டும் படிக்க விரும்பி தடைகளைத் தாண்டி, பணி செய்து கொண்டே ‘புலவர்’ ஆகிறார். இயல்பிலேயே கலையாற்றல், கவி புனையும் ஆர்வம் அவருக்கு இருந்தது. கரந்தையில் பயிலும் போது கவிஞர் தமிழ் ஒளி போன்றவர்கள் சக மாணாக்கர்கள். நடிப்பு, பாடல், திரைப்பட ஆர்வமும் இவருக்கு அதிகம் . நாடகங்கள் எழுதி அரங்கேற்றமும் செய்கிறார். ஒருவழியாக கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியில் ஆசிரியராகவும் பணி ஏற்கிறார்.
பாவலரின் பணிகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம் 1. ஆசிரியம், 2. நாடகங்கள், 3. மரபுப்பாக்கள், 4. கவியரங்கம், 5. அமைப்புகள், 6. பதிப்புப் பணி, 7. அகராதிப்பணி, 8. இலக்கிய – இலக்கண ஆய்வுகள், 9. தொல்காப்பிய உரைகள், 10. தன்வரலாறு.
பாவலர் விரும்பிச்செய்த பணி ஆசிரியம். சுமார் 32 ஆண்டுகள் நல் ஆசிரியராக அவர் விளங்கினார். இலக்கண, இலக்கிய உலகில் பலரை உருவாக்கினார். 1950 தொடக்கம் மறையும் வரை அவர் எழுதிய நூல்கள் சுமார் ஐம்பது. ‘கரந்தைக் கோவை’ அவருக்கு முகவரி தந்தது. அவரின் படைப்புகள் எளிமை, இனிமை, அழகு நிரம்பியவை. இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகள் புதுத்தடம் பாய்ச்சியவை. அகராதித் துறையில் இவரின் முன்வைப்புகள் தமிழின் முன்னோடி முயற்சிகள். அதேபோல சுவடியிலிருந்து பதிப்பித்த பதிப்புகளும் பதிப்பியல் நெறிகளுடன் விளங்குவன. பாவலரின் வாழ்நாள் பெரும் பணி என்பது தொல்காப்பியம் ஆராய்ச்சிக் காண்டிகை உரை – நீண்ட காலப்பணியும் கூட. இளம்பூரணம், நச்சினார்க்கினியம், வெள்ளைவாரணம் போல ‘பாலசுந்தரம்’ என அறிஞர்களால் போற்றத்தக்கது. இவை குறித்த நுட்பமான அறிமுகமாக இந்நூல் அமைந்துள்ளது.
பாவலரின் சிந்தையெல்லாம் தமிழ் மொழி, இலக்கணம், மரபு, இலக்கியம் என்பனவாகவே அமைந்தது. அவருக்கு தனிப்பட்ட அரசியல் சார்பு நிலைகள் இல்லை என்ற போதும் ‘தமிழ்’ எனும் கருத்தியல் இயல்பாக இருந்தது. தொல்காப்பியர் கழகம், தவத்திரு அடிகளாருடன் இணைந்து திருக்குறள் பேரவை ஆகிய அமைப்புகளில் இயங்கினார். நூற்றுக்கணக்கான தமிழ்முறைத் திருமணங்களை நடத்தி வைத்தார். இவரின் கவியரங்க மேடைகள் புகழ் பெற்றவை.
பாவலரின் ஆளுமைத் திறத்தையும், அறிவாற்றலையும், படைப்பாற்றலையும், பன்முகப் பணிகளையும் சுருக்கமாகவும் நுட்பமாகவும் இந்நூலில் பா. மதிவாணன் பதிவு செய்து உள்ளார். “நறுந் தாம்பூலத்தால் சிவந்த வாய்! செந்தமிழ் திளைக்கும் நா! நீறுமணக்கும் நெற்றி! இனிய அன்பு தவழும் நெஞ்சு! கவிதை கொழிக்கும் கொண்டல்! என்றெல்லாம் ஆயிரம் சொல்லிப் பாராட்டலாம். யாரை? கரந்தை தந்த கவிஞர் ச. பாலசுந்தரத்தைத்தான்! அவரை ‘கவிஞர்கோ’ என்று உளமிக்கப் பாராட்டி மகிழ்ந்தோம்” என்று பாவலரை, தவத்திரு குன்றக்குடி அடிகளார் ‘கவிஞர்கோ’ எனும் பட்டமளித்துப் பாராட்டினார்.
மூதறிஞர் பள்ளியகரம் நீ. கந்தசாமி பிள்ளை, “தமிழகத்தின் வளர்ந்து வரும் கவிஞரான, வித்துவான் ச. பாலசுந்தரம், அரிதான நுண்தேர்ச்சிப் புலமையாளர்; மொழியின் மரபும் வழக்கும் குறித்த தெளிவான கருத்துடைய இலக்கண வல்லுநர்; திறமான சிற்பி; ஓர் உயர் கல்வி நிறுவனத்தின் போற்றத்தக்க ஆசிரியர்; கலை இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் பரந்த ஆர்வத்துடன் கூடிய மறுமலர்ச்சிக் காலத்தின் தொடக்கக் கட்டத் தலைமுறையை அவர் எனக்கு நினைவூட்டுகிறார்” என்ற அறிமுகம் பாவலரின் பணிகளை நினைவு கூரப் போதுமானது.
- முனைவர் இரா.காமராசு, பேராசிரியர் – தலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.