கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஈரோடு புத்தகத் திருவிழா இருபதாம் ஆண்டாக இப்போது தொடங்க உள்ள நிலையில் இம்மாத ‘உங்கள் நூலகம்’ இதழ் ஈரோடு புத்தகத் திருவிழா சிறப்பிதழாக வெளிவருகிறது. இதனையொட்டி ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க நிகழ்வில் அதிகபட்சமாக ஏழுமுறை கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய உரையாளர் நடிகர் சிவகுமார் அவர்களைச் சந்தித்தோம். இனி அவருடனான விரிவான நேர்காணல்.

நேர்காணல்: ஜி.சரவணன்

சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஓவியம், சினிமா, சின்னத்திரை எனப் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள நீங்கள் ஆற்றொழுக்கான மேடைப்பேச்சாளராக உருவெடுத்த பின்னணியைக் கூறுங்களேன்...

ஓவிய மேதை கோபுலு அவர்கள் 90 வயதுக்கு மேல் வாழ்ந்தார். அவர் ஒரு வெற்றிகரமான முன்னோடி. அவர் சொன்னார். ‘சிவகுமார், பத்து வருசத்துக்கு ஒருமுறை வாழ்க்கை முறையை மாத்திக்கணும். இல்லன்னா போரடிச்சிடும்' என்றார். அதுமாதிரி அறிந்தோ அறியாமலோ என்னுடைய வாழ்க்கை மூன்று நான்கு வடிவங்கள் எடுத்துவிட்டன.

பதினாறு வயது வரைக்கும் பள்ளிக்கூடம், கரண்டே இல்லாத கிராமத்தில் இருந்தேன். அந்த வாழ்க்கை ஒரு வித்தியாசமான வாழ்க்கை.

அதற்குப் பிறகு சம்பந்தமில்லாமல் ஓவியக்கலைக்குப் போனேன். மற்ற ஓவியர்கள் மாதிரி இல்லாமல் இந்தியா முழுவதும் சுற்றி 'ஸ்பாட் பெயிண்டிங்' ஓவியங்கள் வரைந்தேன். அப்புறம் பிரமாதமான ஓவியர்ன்னு முடிவெடுக்கிற காலத்துல ‘பதினாலாம் நூற்றாண்டு பதினஞ்சாம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக் கால ஓவியர் நீங்க. ஒரு ஐந்து, ஆறு நூற்றாண்டு லேட்டா பொறந்துட்டீங்க. இது மாடர்ன் ஆர்ட் யுகம். உங்களுக்கு எதிர்காலம் இல்ல‘ன்னுட்டாங்க.sivakumar 650அப்போது வேறு வழியில்லாமல் புதிதாக நடிப்புத்துறைக்குப் போய் ஒரு நாற்பது வருசங்கள் 192 படங்களில் நடித்தேன். 172 படங்கள்ல ஹீரோவா நடித்தேன். அதுவும் ஒரு கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்தது. 2005ல இனிமே நாம மேக்கப் போடக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.

இந்த நேரத்தில்தான் விதிவசமாவோ அதிர்ஷ்டவசமாவோ 2005-ல் ஈரோட்டில் புத்தகத் திருவிழா துவங்கப்பட்டது. அப்ப என்னைப் பேச்சாளரா கூப்புட்டாங்க. நான் அட்ரஸ் மாறி வந்திருக்கீங்கன்னு சொன்னேன்.

அதெல்லாம் இல்லை, உங்களுக்குள்ள ஒரு பேச்சாளர் இருக்காருன்னு சொல்லி ஈரோடு புத்தகத் திருவிழாவில் 2006-ல் முதன்முதலா எனக்கு பேச்சாளராக ஒரு வாய்ப்பு கொடுத்தாங்க.

அப்ப எந்த தயாரிப்பும் கிடையாது. சங்க இலக்கியத்துல அஞ்சாறு பாட்டு, கம்பராமாயணத்துல ஒரு நாலு பாட்டு, பாரதியார் பாட்டு நாலு வச்சிட்டு ஒரு மணி முப்பது நிமிசம் பேசினேன். ஈரோடு புத்தகத் திருவிழாவுல ஐயாயிரம் ஆறாயிரம் பேரும் இடையில எழுந்து போகாம உட்கார்ந்திருந்ததப் பாத்திட்டு மிரண்டு போயிட்டேன். அதுக்கப்பறந்தான் நமக்குள்ள ஒரு பேச்சாளன் இருக்கிறான்னு நம்பினேன். என்னைப் பேச்சாளராக்கியது ஈரோடு புத்தகத் திருவிழாதான்.

சொன்னா நம்பமாட்டீங்க. சற்றேறக்குறைய இந்த இருபது வருடங்களில் நான் மேடையில் பேசியதே இருபது, இருபத்தைந்து நிகழ்ச்சிகள்தான் இருக்கும். மற்றவர்களைப் போல தினமும் அல்லது மாதத்திற்கு நான்கு நிகழ்ச்சிகளுக்குப் போற ஆள் இல்லை நான். இந்த நிகழ்ச்சிகள்ல நான் பேசின மகாபாரதமோ, கம்பராமாயணமோ, திருக்குறளோ நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு வடிவம் பெற்றது. இதை காலம் எனக்குக் கொடுத்த கொடையாகத்தான் நான் பார்க்கிறேன்.

இந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா இருபதாம் ஆண்டாகத் தொடங்குகிறது. அந்த வளர்ச்சிப்படி நிலை எவ்வாறானதாக இருக்கிறது?

ஈரோடு புத்தகத் திருவிழாவை நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவையின் வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சி. ஸ்டாலின் குணசேகரன் என்கிற ஒரு தனிநபருடைய முயற்சியாகத்தான் நான் இதனைப் பார்க்கிறேன். அவர் நினைத்திருந்தால் ஈரோட்டில் எத்தனையோ தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நிகழ்ச்சிக்கு மொத்தமாக எவ்வளவோ பணம் வாங்கிக் கொள்ளலாம். அப்படியில்லாமல் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு மட்டும் ஸ்பான்ஸர் வாங்கிட்டு சுயமாகவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். நுழைவுக் கட்டணமாக ஒரு ரூபாய் வசூலித்தால்கூட நிறைய பணம் கிடைக்கும்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டவேண்டும் என்பதற்காக நடத்துகிறோம். நட்டமடைந்தாலும் பரவாயில்லை. நுழைவுக் கட்டணம் போடவே மாட்டேன் என்று சொல்லி புத்தகத் திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறார்.

எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், தமிழ்நாட்டில் இருக்கும் மிகச்சிறந்த பேச்சாளர்களை ஒரு பட்டியலெடுத்து ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கத்தில் மேடைப்பேச்சு இருக்கும். இரண்டு மணி நேரத்திற்குக் கேட்கலாம் என்பது மாதிரி ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கிறார். எனக்குத் தெரிந்து சமீபத்தில் தமிழ்நாட்டில் பல ஊர்களில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. ஆனால் இந்த அளவுக்கு ஆர்கனைசுடா மிகச் சிறந்த பேச்சாளர்களை அழைத்துப் பேசவைத்து மக்கள் ரசிக்கிற மாதிரியான மிகப் பெரிய ரசனையை உருவாக்கியவர் இவர்தான்.

ஈரோடு மக்கள் மாதிரி ரசனையான மக்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த ஊரிலும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அந்த மாதிரி செய்திருக்கிறார். பங்க்சுவாலிட்டின்னு ஒரு விஷயம் வைத்திருக்கிறார். ஆறுமணி என்றால் மிகச் சரியாக ஆறுமணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று போட்டு 5.55க்கெல்லாம் மேடையில் ஆட்களை அமர வைத்து விடுகிறார். பத்துபேர் பார்வையாளர்கள் இருந்தாலும் நிகழ்ச்சி சரியாகத் தொடங்கிவிடும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மேடையில் அரசியல், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு வைத்திருக்கிறார். இதுவெல்லாம் பாராட்டக்கூடிய விஷயங்கள்தான்.

இந்தப் பத்தொன்பது ஆண்டுகளில் அதிகபட்சமாக நீங்கள் ஏழுமுறை ஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளீர்கள். அந்த அனுபவங்கள் எப்படி?

இத்தனை முறை நான் பேசினேன் என்றால் ஒருமுறை பேசியதை நான் திரும்ப மறுமுறை பேசமாட்டேன். ஒன்றரை வருடம் ஆய்வு செய்து கம்பராமாயணம் பேசினேன். அது ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேசவில்லை. ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் பேசினேன். ஒருமுறை பேசிவிட்டதை கோடி ரூபாய் கொடுத்தாலும் திரும்ப நான் பேசமாட்டேன்.

அதுபோல நான்கரை வருடம் ஆராய்ச்சி செய்து மகாபாரதம் பேசினேன். அதுவும் வேளாளர் மகளிர் கல்லூரியில்தான் பேசினேன். கொரோனா காலத்தில் 2021இல் திறந்தவெளி அரங்கம்தான் பாதுகாப்பு என்பதால் என்னுடைய 81ஆம் வயதில் திருக்குறளை நான்குமணி நேரம் ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேசினேன்.

புத்தகத் திருவிழாவை நடத்தும் ‘மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 ஆண்டுகால செயல்பாடுகள் பற்றி உங்களின் மதிப்பீடு...

மக்கள் சிந்தனைப் பேரவை வியாபார நோக்கத்துடன் துவக்கப்பட்டதில்லை. அதேபோல ஈரோடு புத்தகத் திருவிழாவும் காசு சம்பாதிக்கும் நோக்கத்தில் துவக்கப்பட்டதில்லை. அபூர்வமான ஒரு மனிதருடைய வாழ்நாள் லட்சியம் அது. ஸ்டாலின் குணசேகரன் வெற்றிகரமான ஒரு வழக்கறிஞராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் பெரிய பங்களாவெல்லாம் வாங்கி சில ஜுனியர்களை வைத்துக்கொண்டு தொழிலை நடத்தியிருக்கலாம். ஆனால் அவர் இந்த நாட்டுக்கு சேவை செய்யவேண்டும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிற மனிதர்.

அவரது லட்சியப் பிடிப்பும் நேர்மையும் தொடர்ச்சியான கடின உழைப்பும் தான் உருவாக்கிய மக்கள் சிந்தனைப் பேரவையை ஒரு நிரந்தர சமூக நல அமைப்பாக உருவாக்கிடவேண்டும் என்ற முனைப்பும் நல்ல பலனைக் கொடுத்துள்ளது.

பல நல்ல உள்ளங்கள் இவரின் முயற்சிகளுக்கு மனப்பூர்வமான ஒத்துழைப்பைக் கொடுக்கிறார்கள்.

மக்கள் சிந்தனைப் பேரவை வலிமையான ஒரு அமைப்பாக உருவாகி வருகிறது. அதில் ஆயிரக்கணக்கானோர் இணைந்துள்ளனர். அவர்களுள் சிலர் இவரோடு குழுவாக செயல்பட்டு வருகிறார்கள்.

ஒரு தனிமனிதனின் முயற்சியாக இருந்தாலும் இதுவொரு கட்டொழுங்கு மிக்க அமைப்பாக உருவாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

சமீபத்தில் ஈரோட்டில் நடந்த மக்கள் சிந்தனைப் பேரவையின் வெள்ளிவிழாவுக்கு நேரில் சென்றிருந்தபோது இதனை என்னால் உணர முடிந்தது.

தன் வாழ்க்கை மொத்தத்தையும் நாட்டுக்காக அர்ப்பணித்த மனிதர். அந்த ஒரு மனிதருடைய செயல்பாடுதான் காரணம். இந்த இடத்தில் என்ன செய்யமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு சல்யூட் வைக்கிறேன் ஸ்டாலின் குணசேகரனுக்கு.

கம்பராமாயணத்தின் முழுக்கதையையும் ‘கம்பன் என் காதலன்’ எனும் தலைப்பில் ஆற்றிய உணர்ச்சிகரமான உரையின் தயாரிப்புப் பின்புலத்தை அறிந்து கொள்ளலாமா?

நான் முன்பே சொல்லியிருக்கிறேன். நான் பெரிய படிப்பாளி கிடையாது. பேச்சாளன் கிடையாது. காலமும் விதியும்தான் என்னை பேச்சாளனாக மாற்றிவிட்டது என்று நினைக்கிறேன். ‘இப்படிக்கு சூர்யா' என்று கல்கியில் சூர்யா வாழ்க்கை பற்றி ஒரு தொடர் வந்தது. அது புத்தக வடிவில் வந்தபோது சென்னை புத்தகக் கண்காட்சியில் அதனை வெளியிடலாமென்று பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை நாங்கள் அழைத்திருந்தோம்.

அவர் வந்து புத்தகத்தை வெளியிட்டு பெருமையாக சொல்லிவிட்டுச் சென்றார். ஊருக்குப் போன மனிதர் சும்மா இல்லாமல் மதுரையில் கம்பன் கழகம் நடத்தும் விழாவில் கம்பராமாயணம் பற்றி நீங்கள் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கம்பராமாயணம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.என்னைப் போய் பேசச்சொல்கிறீர்களே என்று கேட்டேன். தன்னடக்கத்தோடு சொல்கிறீர்கள். உங்களால் பேசமுடியும் என்று சொன்னார்.

உங்க பையன் நிகழ்ச்சிக்கு நான் வந்தேன். எங்க நிகழ்ச்சிக்கு நீங்க வரணும்ன்னு சொல்லிவிட்டார். பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் இன்னும் சில பேராசிரியர்கள் சேர்ந்து உருவாக்கிய கம்பராமாயணம் ஒன்பது தொகுப்பு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துவிட்டார். ஒவ்வொன்றும் 1500, 2000 பக்கத்துக்கு மேல் இருக்கும்.

அதை ஒவ்வொன்றையும் படித்துப் பார்த்து தலை சுற்றியது. அதையெல்லாம் விபரமாக எழுதமுடியாது.

"வெய்யோன் ஒளி தன் மேனியின்

 விரி சோதியின் மறைய,

பொய்யோ எனும் இடையாளொடும்,

 இளையானொடும் போனான் -

‘மையோ, மரகதமோ, மறி

 கடலோ, மழை முகிலோ,

ஐயோ, இவன் வடிவு!’

 என்பது ஓர்அழியா அழகு உடையான்".

இது எதாவது புரியுதா? இதைப் படித்தால் பைத்தியம் பிடித்துவிடுவது போலாகிவிடும்.

"பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி;

 முப் புரங்கள் செற்ற

சேவலோன் துணைவன் ஆன

 செங்கையோன் தங்கை;

திக்கின் மாஎலாம் தொலைத்து, வெள்ளி மலை

 எடுத்து, உலகம் மூன்றும்

காவலோன் பின்னை; காம

 வல்லியாம் கன்னி "

என்றாள்.

இப்படி பாடல்கள் எல்லாம் ஒன்றுமே புரியவில்லை என்று சொன்னபோது இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. நிதானமாக படியுங்கள் என்று சொல்லிவிட்டார்.

அப்போது அரையும் குறையுமாக சினிமா பாட்டுக்கும் இதுக்கும் கம்பேர் பண்ணி சினிமாவுல ஒரு பாட்டு, கம்பராமாயணத்துல ஒரு பாட்டுன்னு ஓரு முப்பது நிமிடம் பேசினேன்.

அப்ப சொ.சொ.மீ.சுந்தரம்ன்னு ஒரு பேராசிரியர் இருக்கிறார். அவர் வாழ்நாள் முழுவதும் கம்பராமாயணத்தைப் படித்தவர். அவர் என்னை ‘எப்பப் படிச்சீங்க' என்று கேட்டார்.

‘ஒன்றரை மாதம் ஆகிறது' என்று சொன்னேன்.

‘ஒன்றரை மாதத்தில் படித்து சொல்லமுடியாது கம்பராமாயணம். அவ்வளவு சுலபமா அது?' என்று கோபமாகக் கேட்டார்.

அப்போது சாலமன் பாப்பையாவிடம் ‘நீங்கதானே புத்தகம் வாங்கிக் கொடுத்தீங்க, கொஞ்சம் சொல்லுங்கள்' என்று சொன்னேன்.

அவர் ‘ஆமாம் போன மாதம்தான் புத்தகம் வாங்கிக் கொடுத்தேன்' என்று சொன்னார்.

அப்ப இது என்னமோ வில்லங்கமா இருக்கேன்னு கம்பராமாயணத்துல ஒரு ஐம்பது பாட்டு படித்தேன். ஐம்பது பாட்டு படித்துவிட்டு பப்ளிக் ரிலேஷன்ஸ் கவுன்சில் ஆப் இண்டியான்னு ஒரு அமைப்பு இருக்கிறது. பத்திரிகையாளர் சுதாங்கன் நடத்திட்டுருந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் போனேன். பத்து இருபது பேர்தான் இருந்தார்கள். இந்த ஐம்பது பாட்டையும் சடசடன்னு சொன்னவுடனே ஒரு எண்பது வயது பெரியவர், இப்பதான் தண்டகாரண்யத்திலிருந்து நான் வர்றேன், பாதுகையை தலைமேல வச்சிட்டு பரதன் உடம்பெல்லாம் புழுதியோட போயிட்டுருக்கான்னு எமோசனோட அழ ஆரம்பிச்சிட்டாரு.

என்னடா இது, பாட்டுக்கெல்லாம் இப்படி ரீயாக்ட் பண்ணுவாங்களான்னு அதிர்ச்சியாயிட்டேன்.

மறுநாள் சாப்பாட்டு நேரத்துல நண்பர் ஒருத்தர் ஃபோனக் கொடுத்தாரு. அந்த ஃபோனக் காதுல வச்சா ஒரு பாட்டு போயிட்டுருக்கு.

"புலியின் அதள் உடையானும், பொன்னாடை

 புனைந்தானும், பூவினானும்

நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு

 யாவர், இனி நாட்ட வல்லார்?

மெலியும் இடை, துடிக்கும் முலை, வேய் இளந்

 தோள், சேயரிககண், வென்றி மாதர்

வலிய நெடும் புலவியினும் வணங்காத

 மகுட நிரை வயங்க மன்னோ".

இந்தப் பாட்ட எங்கயோ கேட்டிருக்கிறோமே என்று பார்க்கிறபோது அது என் குரலாக இருந்தது. ‘வட அமெரிக்காவுக்கு மேலிருக்கும் வான் கூவர் நகரிலிருந்து வருகிறது’ என்றார். வியப்புடன் ‘எப்படி’ என்று கேட்டபோது ‘நேற்று நீங்கள் பேசியதை ஒலிப்பதிவு செய்து வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். அந்த சாப்ட்வேர் கம்பெனியில் பகல் உணவு இடைவெளியில் இதை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்' என்றார்.

அப்போதுதான் கம்பன் இவ்வளவு பெரிய ஆளா என்று வியந்து பார்த்தேன்.

அப்ப 98 பாட்டை மனப்பாடம் பண்ணி சிங்கப்பூரில் பேசினேன். 2009 ஆம் வருசம் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் 100 பாடல்களை மனப்பாடம் செய்து அரங்கேற்றம் செய்தேன். இப்போதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாது. 10520 பாடல்கள் உள்ள கம்பராமாயணத்தில் 1000 பாடல்களைத் தேர்ந்தெடுத்து அதை 100 பாடல்களாகச் சுருக்கி மனப்பாடம் செய்து பேசினேன். உளறக்கூடாது, பேப்பர் வைத்திருக்கக் கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது. ஐயாயிரம் ஆறாயிரம் பேர் கூட்டம்.

என் வாழ்க்கையில் பேச்சாளன் என்று சாதனையாக நினைத்தால் முதலில் ராமாயணம், இரண்டாவது மகாபாரதம், மூன்றாவதாக திருக்குறள். இந்த மூன்றும்தான் சிவகுமாரின் பேச்சின் அடையாளம் என்று நினைக்கிறேன்.

எண்பது வயதைத் தாண்டிய நீங்கள் ஈரோட்டில் திருக்குறளைப் பற்றி இடைவெளியில்லாமல் தொடர்ந்து நான்கு மணி நேரம் பேசி அசத்திய சாதனை உரை அனுபவம் எப்படியிருந்தது?

என்னுடைய அடையாளமாக நான் பார்ப்பது ஓவியம். என்னோட பசங்க ரெண்டு பேருமே நடிப்பில் என்னைத் தாண்டிவிட்டார்கள். பிரமாதமாக நடிக்கிறார்கள். ஆனால் நான் வரைந்த ஓவியங்களை அவர்களால் வரையமுடியாது. அவங்கன்னு இல்ல, 24 வயதுக்குள் அந்த தரத்தில் நான் வரைஞ்ச ஓவியங்கள வரைஞ்சவங்க உலக அளவில் இருபது பேர்கூட இருக்கமாட்டாங்க. ஆக ஓவியம் என்பது என்னுடைய அடையாளம். நடிப்பு என்பது எனக்கு வாழ்க்கை கொடுத்த கலை. அதற்கு நான் மரியாதை கொடுக்கிறேன்.

நான் இன்னார்ன்னு முத்திரை குத்தணும்ன்னு நினைக்கிறபோது எனக்குக் கிடைச்ச ஒரே களம் பேச்சுதான். ஆனா எனக்கே தெரியாது நான் பேச்சாளராக வருவேன் என்று. கம்பராமாயணம், மகாபாரதம் பேசியதைப் பார்த்து பெரியவர்கள் எல்லாம் அசாத்தியமான ஒரு வேலையை செய்கிறீர்கள். யாருமே செய்யமுடியாது என்று சொன்னார்கள்.

அப்போதுதான் வாழ்க்கையின் பெரும்பகுதியை வீணாக்கிவிட்டோமே என்று கடைசிக் காலத்தில் எதாவது செய்யலாமே என்று நாலு மணி நேரம் 'நான் ஸ்டாப்பா' திருக்குறளை பேசினேன். ஈரோடு மக்களையும் ஸ்டாலின் குணசேகரனையும் இப்ப கையெடுத்துக் கும்பிடுறேன். அது நான் பேசினத விட அந்த மக்கள் உட்கார்ந்திருந்து என்கரேஜ் செய்தார்கள் அல்லவா, கைதட்டி ஆரவாரமாக ரசித்தார்கள் இல்லையா அதுதான் முக்கியம்.

உலகத்தில் எங்காவது வந்து உட்கார்ந் திருப்பார்களா? இது இளையராஜா கச்சேரியில்ல, ஒருத்தன் வெறுமனே பேசிகிட்டே இருக்கான். யாருமே பாதியில எழுந்து போகாம இருந்தாங்களே. நான் தயார் பண்ண விதம் ஒண்ணு. அந்த மக்கள் என் மேல் வைத்திருந்த மரியாதை ஒண்ணு. இதுவெல்லாம் சேர்ந்ததுதானே தவிர இந்தப் பெருமையெல்லாம் எனக்கே சேர்ந்தது என்று நான் சொல்லிக்கொள்ளமுடியாது.

தங்களின் வாழ்வனுபவங்களை மட்டுமின்றி வெவ்வேறு தளங்களில் தொடர்ந்து பல்வேறு நூல்களும் எழுதியுள்ளீர்கள். அவற்றிற்கான அடிவேர் எங்கிருந்து தொடங்கியது?

பொதுவாக எனக்கு நினைவாற்றல் அதிகம் என்று சொல்கிறார்கள். அதை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால் அறிந்தோ அறியாமலேயோ 1961லிருந்து இதுவரைக்கும் கிட்டத்தட்ட 63 வருடம் டைரி எழுதிட்டு வர்றேன். தமிழ்நாட்டில் சுமார் எட்டு கோடி பேர் இருக்கிறார்கள். அதில் டைரி எழுதுபவர்கள் 100 பேர் இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். சரியோ தப்போ ஒருநாள் நடக்கிற விஷயங்களைக் குறித்து வைப்பது சாதாரண விஷயமல்ல. தினமும் சாயங்காலம் என்று சொல்லமுடியாது. இரண்டுநாள் கழித்துக்கூட எழுதுவேன். நேற்று காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் உங்களுக்கு ஞாபகம் வராது. யார் யாரைச் சந்தித்தீர்கள் என்று கேட்டால் நினைவு வராது. டைரி எழுதும்போது முதலில் நடந்து முடிந்ததை யோசிக்கிறோம். மற்றவர்களைக் கேட்டு சரிசெய்துகொண்டு உறுதிப்படுத்திக்கொண்டு குறித்து வைக்கிறோம். கடந்தகாலத்தை நினைத்துப் பார்ப்பதால் நமக்கு நினைவாற்றல் கூடுகிறது. அதை டைரியில் பதிவு செய்கிறபோது இன்னும் ஆழமாகப் பதிகிறது.

அந்தமாதிரி 63 வருசமா டைரி எழுதிட்டு வருகிறேனில்லையா? இந்த டைரி எழுதும் பழக்கம்தான் எனக்கு ‘கொங்கு தேன்' என்ற பெயரில் நான் 16வயது வரைக்கும் வாழ்ந்த கிராமப்புறத்து வாழ்க்கையை நூலாகப் பதிவு செய்வதற்குக் காரணமாயிருந்தது.

அதேபோல ‘சித்திரச்சோலை‘ன்னு அதே இந்து தமிழ் திசை இன்னொரு புத்தகம் வெளியிட்டிருக்கிறது. அதில் காஞ்சிபுரத்துக்கு எந்தத் தேதி எத்தனை மணிக்குப் போனேன் என்று இருக்கும். யாரை சந்தித்தேன் என்ற குறிப்பும் இருக்கும். எப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பத்து மணி நேரம் ஓவியம் வரைந்தேன் என்ற குறிப்பும் இருக்கும்.

எனவே நினைவாற்றலை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஆழப்படுத்திக் கொள்வதற்கு டைரி மிகப்பெரும் உதவியாக இருந்தது. டைரி வழியாகத்தான் நான் நிறைய சம்பவங்களை குறித்திருக்கிறேன். அது மனத்திரையில் ஆழமாகப் பதிவாகிவிடுகிறது. நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்த திரையுலகம் பற்றி டைரி எழுதியதால் ‘அக்னிசாட்சி' படம் என்றால் எந்தத் தேதியில் சூட்டிங் நடந்தது? சிந்து பைரவி என்றால் விசாகப்பட்டினத்தில் எந்தத் தேதியில் பாடல் எடுத்தோம்? என்பதெல்லாம் டைரியில் இருக்கின்றன.

இந்தப் பதிவுகள்தான் ‘கொங்கு தேன்' எழுதுவதற்கும் ‘சித்திரச்சோலை‘, ‘திரைப்படச்சோலை' போன்ற புத்தகங்கள் எழுதுவதற்கும் உதவியாக இருந்தது. அடிப்படையில் டைரி குறிப்புகள்தான் காரணமாகத் தோன்றுகிறது. அதுதான் நினைவாற்றலைக் கூட்டுவதற்கும் மேடையில் பேசுவதற்கும் உதவுகிறது என்று நினைக்கிறேன்.

தங்களின் ஞானத்தந்தை ‘கரிசல்' எழுத்தாளர் கி.ரா அவர்களுக்கும் உங்களுக்குமான உறவின் தனித்துவமும் மகத்துவமும் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

ஜூனியர் விகடன் தொடங்கிய காலகட்டத்தில் ‘இது ராஜபாட்டை அல்ல' என்று ஒரு தொடர் 40, 45 வாரம் நான் எழுதினேன். நான் பேச்சாளன் என்பது போய் எழுத்தாளன் என்று பார்ப்பதற்குக் காரணம் ஜூனியர் விகடனில் நான் எழுதிய கட்டுரைதான். ஜூனியர் விகடனில் என்னுடைய தொடர் முடிந்தவுடன் உடனடியாக ‘கரிசல் காட்டுக் கடுதாசி' எனும் கி.ரா. அவர்களின் தொடர் வெளிவந்தது. அந்தத் தொடரை எடுத்துப் படித்துப் பார்க்கும்போது அவர் கரிசல் மண்ணைச் சார்ந்த கிராம வாழ்க்கையைச் சொல்லியிருக்கார். நான் வாழ்ந்தது செம்மண் பூமி. அவர் எழுதியதைப் படித்துப் பார்த்து அவருக்கு ‘நானும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவன்தான். உங்கள் கடிதங்களைப் படிக்கும்போது ஏன் கிராமத்தை விட்டு வந்தோம் என்று ஏக்கமாக இருக்கிறது' என்று கடிதம் எழுதிப் போட்டேன்.

அப்போது இருவருக்கும் பழக்கமானது. அப்புறம் நெருக்கமாகி எனது மகன், மகள் திருமணத்திற்கு வந்து ஆசிர்வாதம் செய்தார். அவர் 98 வயதுவரைக்கும் வாழ்ந்தார். நான் பத்து மாதத்தில் தகப்பனை இழந்தவன். ஒரு தகப்பனுடைய அன்பை அவர்கிட்டயும் கணவதி அம்மாவிடம் தாயினுடைய பாசத்தையும் நான் பெற்றேன். அதனால் அவர் இறந்துபோவதற்கு முன்பே கி.ரா விருது என்பதைத் தொடங்கி கொங்கு மண்ணுக்கு மரியாதை செய்யவேண்டும் என்பதற்காக விஜயா பதிப்பகம் வேலாயுதம் அதனை வழிநடத்துகிறார். ஈரோடு சக்தி மசாலா கி.ரா. விருது வழங்கும் புண்ணியத்தை கட்டிக்கொள்கிறது.

சாகித்ய அகாடெமி அமைப்பு விருது ஒரு லட்சம்தான் பரிசுத்தொகை வழங்குகிறது. நாங்கள்தான் முதலில் ஐந்து லட்சம் விருதுத்தொகை என்று தொடங்கினோம். சக்தி மசாலா துரைசாமியையும் சாந்தியையும் கையெடுத்துக் கும்பிடவேண்டும். வருடாவருடம் ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்கிறார்கள். இந்த ஆண்டு கோயம்புத்தூர் போய் விருது கொடுக்கப் போகிறோம். ஆக கி.ரா என்பவர் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பெரிய எழுத்தாளர்.

பொதுவாகத் தங்களின் இலக்கிய வாசிப்புப் பரப்பு மற்றும் வாசிப்பு முறைமை குறித்துக் கூறுங்களேன்?

இலக்கியம், வாசிப்பு அப்படியெல்லாம் பெரிய வார்த்தையெல்லாம் போட்டு கேட்கவேண்டாம். நான் ஈரோடு புத்தகத் திருவிழாவில் மேடையில் பேசினேனே தவிர பேய்த்தனமான வாசகனெல்லாம் கிடையாது. நமக்கு வாழ்க்கையில் மிகவும் பிடித்தது ஓவியம். கல்லூரியில் படித்து அறிவை விரிவு செய்யும் காலகட்டத்தில் நான் ஓவியம் பக்கம் போய்விட்டேன். அப்போது இலக்கியம் படிப்பதற்கு வாய்ப்பு கிடையாது. அதுக்கப்புறம் இருபத்தைந்து வருடம் நடிப்பதற்கு வந்துவிட்டேன். அப்ப சிவாஜி, எம்ஜிஆர் உச்சத்தில் இருந்தாங்க. அவங்களுக்கு போட்டி போட்டு நடிப்பதற்கே நமக்கு நேரம் சரியாகப் போய்விட்டது.

நடிப்பை மேம்படுத்துவதற்கு இந்தியா முழுவதும் பத்து வருடங்கள் ஆயிரம் நாடகங்கள் போட்டோம். அதில் மிச்ச காலங்கள் போய்விட்டது. பிறகு ஹீரோவானதும் தொழில் செய்வதற்கே நேரம் போயிற்று.

சொன்னால் நம்பமாட்டீர்கள், அறுபது வயதுக்குப் பிறகுதான் புத்தகங்களையே படிக்கத் தொடங்கினேன். அறுபது வயதுக்குப் பிறகு என்ன பெரிசா இலக்கியத்தைப் படித்துவிடமுடியும்? நிறைய படித்ததாகவெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். எனக்கு பெரிய வாசிப்பெல்லாம் கிடையாது. எல்லா இலக்கியத்தையும் படித்தவன் இல்லை. ஸ்டாலின் குணசேகரன் மாதிரி தமிழருவி மணியன் மாதிரியோ வாழ்நாள் பூரா புத்தகம் படிப்பதே வேலை என்று இருந்தவனில்லை. நான் அப்படி கிடையாது.

நான் படித்த விஷயங்களை ஆழ்ந்து படித்து மூன்று உரைகள் பவர்ஃபுல்லா பண்ணியிருக்கேன். கம்பராமாயணத்தை ஒன்றரை ஆண்டுகள் ஆழ்ந்து படித்தேன். பி.ஆர்.சோப்ராவின் மகாபாரத்தை எழுபது மணி நேரம் குறிப்பெடுத்தேன். இளம்பிறை மணிமாறன் 20 மணி நேர மகாபாரத உரையைக் கேட்டுக் குறிப்பெடுத்தேன். சோவின் 1400 பக்க மகாபாரதத்தைப் படித்துக் குறிப்பெடுத்தேன்.

இவற்றையெல்லாம் 4500 பக்கம் பேனாவில் நானே எழுதினேன். அதை 3000, 2000, 1000, 500 என சுருக்கி கடைசியில் 350 பக்கமாகச் சுருக்கியெழுதி அதைத்தான் பேசினேன்.

திருக்குறளை மூன்று வருடம் ஆராய்ச்சி செய்தேன். 2000 வருடங்களுக்கு முன்னால் திருக்குறள் எழுதப்பட்டிருந்தாலும் எத்தனை பேருக்கு தெரியும்? 1812க்கு முன்பு பரிமேழலகர், மணக்குடவர் உரை எழுதியதெல்லாம் யாருக்குத் தெரியும்? குடத்திலிட்ட விளக்குபோல்தான் இருந்தது. 1812இல் எல்லீஸ் என்ற வெள்ளைக்கார துரை மூலமாகத்தான் திருக்குறள் வெளியே தெரிந்தது. மு.வரதராசனார் உரை எழுதிய திருக்குறள் ஆறு லட்சம் பிரதிகள் விற்றதாம். ஆனால் வாங்கியவர்கள் எவருமே பிரித்துப் பார்க்கவும் இல்லை. படிக்கவுமில்லை.

அதற்குப் பின் திருக்குறளுக்கு கலைஞர், சாலமன் பாப்பையா போன்றோர் உரை எழுதியுள்ளார்கள். நூறு பேருக்கு மேல் எழுதியுள்ளார்கள். என்றாலும் திருக்குறள் முழுமையாக மக்களிடம் போய்ச் சேரவில்லை.

மகாத்மா காந்தி வாழ்க்கையில், காமராஜர் வாழ்க்கையில், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில், சினிமாத்துறை சம்பந்தப்பட்டவர்களுடைய வாழ்க்கையில், ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்க்கையில் உருக்கமான சம்பவங்களை மூன்றரை ஆண்டுகள் தேடி எடுத்தேன். தம்பி சங்கர சரவணனை உட்கார வைத்து இந்தக் கதைக்கு பாடலைச் சொல்லச் சொல்லி எளிமையான திருக்குறளைத் தேர்ந்தெடுத்தேன். அவர்கள் பாடலை எடுத்துக் கொடுக்க நான் கதைகளைச் சேர்த்தேன். அதில் கதைதான் என்னுடையதே தவிர திருக்குறள்கள் எல்லாம் அவர் எடுத்துக் கொடுத்ததுதான். நான் பெரிய இலக்கியப் படிப்பாளி என்றெல்லாம் சொல்லாதீர்கள். எல்லா இலக்கியத்தையும் நான் படித்தவன் என்று தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.

புதிதாக மேடைப் பேச்சாளராக விரும்புபவர்களுக்கு ஏதேனும் பயிற்சிகளும் வழிமுறைகளும் சொல்ல முடியுமா?

புதிதாக மேடையில் பேசப்போகிறவர்களுக்கு அறிவுரை சொல்வதற்கு நானொன்றும் அந்த அளவுக்கு அனுபவசாலி கிடையாது. நானொரு சாதாரண ஆள். நான் என்ன செய்கிறேனென்றால் எதைப் பற்றிப் பேசப்போகிறோம் என்று முதலில் முடிவு செய்கிறேன். கம்பராமாயணத்தைப் பேசவேண்டுமென்றால் அதைப் பற்றி யார் யார் எழுதியிருக்கிறார்கள் என்று தரவாகப் பார்க்கிறேன். அதைப் பற்றி யார் யார் பேசியிருக்கிறார்கள் என்ற உரைகளைக் கேட்கிறேன். தூத்துக்குடி பேராசிரியர் அ.கு.ஆதித்தன் அவர்கள் கம்பன் 1000 என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கார்.

பத்தாயிரத்து சொச்சம் பாடல்களை ஆயிரமாகச் சுருக்கி ஒரு பக்கம் பாடல், ஒருபக்கம் உரை என்று இருக்கும். கம்பராமாயணத்தின் முழு சாரமும் அந்த ஆயிரம் பாடல்களில் வந்துவிடுகிறது. இதனை இன்னும் சுருக்கி கம்பன் 100 என்று செய்தாலென்ன என்று நினைத்து செய்தேன். முதல் பாட்டுக்கும் நூறாவது பாட்டுக்கும் இடையிலுள்ள 98 பாடல்களின் சாரத்தையும் சேர்த்து சொல்லிவிடவேண்டும். அப்படிச் செய்தால்தான் கம்பன் 100 முடியும்போது கம்பராமாயணத்தின் முழுக்கதையையும் சொல்லமுடியும்.

நான் இதை எழுதுவேன். எழுதி எழுதி மனப்பாடம் செய்வேன். எல்லாவற்றையும் நான் எழுதித்தான் மனப்பாடம் செய்வேனே தவிர வாயால் மனப்பாடம் செய்தது கிடையாது. பத்துமுறை வாயால் படிப்பதைவிட மூன்றுமுறை எழுதினால் மனப்பாடம் ஆகிவிடும். எழுதி மனப்பாடம் செய்வது சாகும்வரை மறந்துபோவதற்கு வாய்ப்பில்லை.

இன்றைய நிலையில் எழுத்து, பேச்சு இதில் உங்கள் முதன்மைத் தேர்வும் விருப்பமும் எது? ஏன்?

எழுத்து, பேச்சு இரண்டில் எழுத்தைத்தான் சொல்லவேண்டும். ஏனென்றால் ஓவியம் வரைகிற காலத்திலிருந்தே நான் டைரி எழுதத் தொடங்கிவிட்டேன். மனதில் எதையாவது ஒன்றை நாம் உருவகப்படுத்தினால் அதனை என்னமாதிரி எழுதுவோம் என்ற சிந்தனை எனக்கு 65களிலேயே வந்துவிட்டது. 20 வயதிலிருந்தே இன்றைக்கு காலையிலிருந்து சாயங்காலம் வரை நடந்த சம்பவங்களை எழுதுவதற்கு ஒரு வடிவம் வேண்டுமில்லையா? அதை வார்த்தைகளைப் போட்டு எழுத்து வடிவத்தில் எழுதுவது இருபது வயதிலேயே நமக்கு வந்துவிட்டது.

எழுத்து வடிவம்தான் நம்முடைய கருத்துகளை சொல்வதற்கு முன்னோடி என்று சொல்லவேண்டும், பேச்சு என்பது ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளை மனதுக்குள் உள்வாங்கி அதை எழுத்து வடிவில் கொடுத்து அதை மனப்பாடம் செய்துதான் பேசுவேன். ஆக எழுத்துதான் முதலில். அதையொட்டிதான் பேச்சு. என்னுடைய பேச்சு சிறப்பாக இருக்கிறதென்றால் அதற்கு முன்பாக எழுத்தில் எழுதி அதைப் பேசவதுதான் காரணம்.

நிறைவாக ஒரு கேள்வி. முதியவர், பெண்டிர், இளைஞர் மட்டுமல்லாது திரையில் நடிகராக உங்களைக் கண்டிராத இன்றைய இளந்தலைமுறையினரும் உங்களின் உரைக்குப் பெரும் ரசிகர்களாக இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?

எல்லாத் தரப்பு மக்களையும் ஈர்ப்பதுபோல் என்னுடைய உரை இருக்கிறதென்றால் முடிந்தவரைக்கும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல் இருப்பதுதான். 2008ஆம் ஆண்டு விஜய் டிவியில் ‘பெண்' உரை முதன்முதலில் ஒளிபரப்பானது.

எந்தப் பெரிய மனிதராக இருந்தாலும் தன்னைப் பற்றிய நெகடிவ் விஷயங்களை சொல்ல மாட்டார்கள். அறியாத வயதில் மனைவியை எப்படி டார்ச்சர் செய்தேன், அம்மாவை எப்படிக் கொடுமை செய்தேன் போன்ற எல்லா விஷயத்தையும் திறந்த மனதோடு சொல்லியிருப்பேன். அதை யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள். அதற்கு ஒரு பேராண்மை வேண்டும் என்று புவியரசு அவர்கள் சொல்வார். அதைப் பற்றி எனக்குத் தெரியாது.

தூக்குதண்டனைக் கைதி அவனை தூக்கில் போடுவதற்கு முன்பு தான் செய்த பாவங்களையெல்லாம் சொல்லி விமோசனம் தேடிக்கணும்னா அவன் எதையும் மறைக்கமாட்டான். அதுமாதிரி நான் செய்த தப்பை நான் வெளியில் சொன்னா பாரம் குறைந்து எவ்வளவு நிறைவாக இருக்கும்.

ஆக உண்மையைப் பேசுவது என்பதுதான் அது.

வாழ்நாள் பூரா படிச்சாலும் முழு மகாபாரதம் படிக்கமுடியாதுன்னு சொல்லுவாங்க. கம்பராமாயணம் பத்தாயிரத்து சொச்சம் பாட்டு. யார் படிப்பாங்க. திருக்குறள் அந்நியப்பட்டு போன மாதிரி ராமாயணம் மகாபாரதம் எல்லாம் வயசானவங்க மட்டும் படிக்கிறதா ஆகிப் போச்சு.

அதனாலதான் அவ்வளவு பாட்டையும் நூறாச் சுருக்கி பாமரர்களுக்கும் புரியும் மொழியில் பேசுகிறேன். ஏற்கனவே பாட்டே கடுமையாக இருக்கிறது.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று. ஒரு

பூசை முற்றவும் நக்கு புக்கென.

ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்றுஇக்

காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ

என்றால் யாருக்குப் புரியும்?

பாற்கடலுக்கு முன்பாக ஒரு பூனைக்குட்டி போய் உட்கார்ந்து இந்தக்கடலில் எவ்வளவு பால் இருக்கிறது? நாமே மொத்தையும் நக்கிக் குடிக்கலாம் என்று நினைப்பது எவ்வளவு அறியாமையோ பேதைமையோ அதைப்போல ராமனின் கதையை கம்பன் எழுதிப் பார்க்க ஆசைப்படுகிறான் என்று எழுதியிருக்கிறான்.

எல்லாரும், பாடலை முதலில் சொல்லிவிட்டு பிறகு அர்த்தத்தைச் சொல்வார்கள். அந்தப் பாட்டு மண்டையில் ஏறாது.

நான் முதலில் அர்த்தத்தைச் சொல்லிவிட்டு பிறகு பாடலைச் சொல்லும்போது பாதிப் பாடல் புரியும்.

நான் அறிவாளி, மேதை என்று காட்டிக்கொள்வதைவிட அந்தப் பாடலும் உங்களுக்குப் புரிய வேண்டும், கதையும் தெரிய வேண்டும் என்பதற்காக நான் பேசினேன். அதனால் இது இளைய தலைமுறைக்குப் போய்ச் சேர்ந்தது ஒரு பெரிய விஷயம்.

ராமாயணத்தைவிட நான்கு மடங்கு பெரியது மகாபாரதம். நான்கு ஆண்டுகள் அதை ஆய்வுபடுத்தி பாமரர்களுக்கும் புரியும்படி உரையைத் தயார் செய்தேன். வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப்போல உரையைத் தயாரிக்கும் யுத்தியைக் கையாண்டு பேசினேன். அதனால்தான் எல்லா தலைமுறையினருக்கும் அது போய்ச் சேர்ந்ததற்கான காரணம் என்று நான் நினைக்கிறேன்.

- சிவகுமார்