கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியரும் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறைத் தலைவருமான முனைவர் வீ.செல்வகுமார் அவர்கள் தமிழகமெங்கும் பல தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் முன்னணி ஆய்வாளர்.

தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்திலேயே கற்காலக் கருவிகளைக் கண்டறிந்தவர். கேரளக் கடற்கரையில் அமைந்துள்ள பட்டிணம்தான் பண்டைய சஙககாலத் துறைமுகமான முசிறி என்பதை நிறுவிய ஆய்வுக்குழுவில் இவரும் ஒருவர். அண்மையில் மோளப்பாளையம் அகழாய்வின் வழியாக தென்னிந்திய புதிய கற்காலம் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள நொய்யலாற்றுப் பள்ளத்தாக்கு வரை இருந்ததாக நிறுவியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவரை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

நேர்காணல்: ஜி.சரவணன்

கடல்சார் வரலாறு என்ற வரலாற்று வகைமை குறித்த சுருக்கமான அறிமுகம் செய்யுங்களேன்!

வரலாற்றை பல நிலைகளில் நாம் ஆராயலாம். ஒரு எறும்பின் பார்வையில் சிறு புள்ளியிலிருந்து தொடங்கி, ஒரு சமூகம், வட்டாரம், பெருநிலப்பரப்பு, நாடு, துணைக்கண்டம், ஆஃப்ரோயுரேசிய-இந்தியப் பெருங்கடற் பகுதி எனப் பருந்தின் பார்வையில் ஆராயமுடியும். சில நிலைகளில் இத்தகைய வரலாற்று வகைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.

v selvakumar 363வாஸ்கோடகாமா வந்திறங்கிய காப்பாடு என்ற கோழிக்கோட்டிற்கு அருகில் உள்ள இடத்தை ஒரு சிறு புள்ளி எனலாம். அவ்வாறு அவர் இறங்கிய இடம் ஒரு சிறு புள்ளி என்றாலும் அது உலக அளவில் கடல்சார் வரலாற்றுடன் தொடர்புடையது.

ஒரு சமூகத்தின் வரலாறு, ஓர் ஊரின் வரலாறு, ஒரு வட்டாரத்தின் வரலாறு என வரலாற்றுப் பரப்பு விரிவடைந்து கொண்டே செல்லும்.

ஒவ்வொரு ஊரின் வரலாறு எழுதப்பட்டால்தான் ஒரு நாட்டின் வரலாறு முழுமைபெறும். இது போன்று மேற்கூறிய ஒவ்வொரு நிலையும் நுணுகி ஆராயப்பட வேண்டும். அப்போதுதான் வரலாற்றின் பன்முகப் பரிமாணத்தை நாம் புரிந்து கொள்ள இயலும்.

பொதுவாக, வரலாற்றை நாம் நிலத்தை மையப்படுத்திதான் ஆராய்கிறோம், கடலை மையப்படுத்தி ஆராயப்படும் வரலாறே கடல்சார் வரலாறு. ஆனால் கடல்சார் வரலாற்றை ஒரு தனிவரலாறு என்று கருதமுடியாது. அது நிலத்தில் நடப்பதுடன் தொடர்புடையது. இருப்பினும் கடற்கரையின் அருகில், கடலைச் சார்ந்து, கடலைக் கடந்துசென்று மனிதர்கள் நிகழ்த்திய சாதனைகளை அது ஆராய்கிறது. கடல்சார் வரலாறு நெய்தல் நில வாழ்வியல், கடற்கரைச் சமூகங்கள், துறைமுகங்கள், கடற்செலவு, கடல்சார் வணிகம், வணிக வழிகள், அயலகத் தொடர்புகள், புலம் பெயர் மக்கள் எனக் கடலை மையமிட்ட சமூக, பொருளாதார, பண்பாட்டு வரலாற்றை அது ஆராய்கிறது, கடலைப் பற்றிய கருத்தாக்கம், கடல்வளங்கள், கப்பல் கட்டுமானம், கடற்போர், கடல்கடந்த படையெடுப்பு, கடல் குறித்த அறிவுசார் மரபுகள் ஆகியவை இங்கு ஆராயப்படுகின்றன. மேலும் கடலைக் கடந்து செல்வதற்கு தனி ஆர்வமும், துணிவும், தொழில் நுட்பமும், மன உறுதியும் வேண்டும். எனவே கடல்சார் வரலாறு மனிதர்களுடைய திறனையும், துணிவை ஆராய்வதாகவும் அமைகிறது.

கடற்சார் தொல்லியல் முழுகிய கப்பல்கள், படகு கட்டுமானம், மூழ்கிய நகரங்கள் எனத் தொல்லியல் சான்றுகளை ஆராய்கின்றது. கடல்சார் ஆய்வுகளை நீரில் மூழ்கிதான் ஆராயவேண்டுமென்பதில்லை. கடற்கரைப் பகுதிகள், காயல் பகுதிகள் அங்குள்ள வாழ்விடங்கள், துறைமுகங்கள், வழிபாட்டிடங்கள் ஆகியவற்றையும் ஆராய வேண்டும். ஏன் ஒரு துறைமுகம் குறிப்பிட்ட இடத்தில் உருவானது? அதனோடு தொடர்புடைய உள் நாட்டு நகரங்கள், பொருளுற்பத்தி மையங்கள் எவை என அனைத்தையும் ஆராயவேண்டும். கடல்சார் வரலாறு பன்முகத்தன்மை உடையது. கடல்சார் வரலாறு இராசேந்திர சோழனின் கடற்படையெடுப்பை ஆராய்வதோடு, சாதாரண மீனவ சமூகங்களின் வரலாற்றையும் ஆராயவேண்டும்.

நம் கடல்சார் வரலாறு குறித்த வரலாற்றுத் தரவுகள் தென்னிந்தியா கிரேக்கம், உரோம் நாடுகளில் அகழ்வாராய்ச்சி, எழுத்தாவணங்கள் வழியாக புதிதாக வெளிப்பட்டுள்ளனவா?

கடல்சார் வரலாறு தொடர்பான தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக்கொண்டே உள்ளன. கேரளாவில் பட்டணம் என்ற இடத்தில் கிடைத்த தரவுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இவை முசிறி என்ற சங்க காலத் துறைமுகத்துடன் தொடர்புடையவை. தமிழ் நாட்டில் உள்ள அழகன்குளம் என்ற தொல்லியல் இடத்தில் தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையின் அகழாய்வு பல ரோமானியத் தொடர்புள்ள சான்றுகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

பெரனிகே எகிப்தின் செங்கடற்கரையில் உள்ள துறைமுகமாகும். கொற்றபூமான் என்ற தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடு, 7½ கிலோ அளவுடைய மிளகு, சங்க காலச் சேரர் காசு, எனப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. அண்மையில் ஒரு புத்தர் சிற்பமும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கோவையில் நீங்களும் உங்கள் குழுவினரும் மேற்கொண்ட அகழாய்வு குறித்து கூறுங்களேன்!

நொய்யலாற்றுப் பள்ளத்தாக்கில் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள பூலுவப்பட்டி மோளப்பாளையத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் புதிய கற்காலச் சான்றுகளைக் கண்டுபிடித்துள்ளது. இங்கு நடத்தப்பெற்ற தொல்லியல் அகழாய்வுகளில் கி.மு, 1600-1400 ஆண்டுகளுக்கிடையே வாழ்ந்த புதிய கற்கால மக்களின் தொல்லியல் சான்றுகள் வெளிப்பட்டுள்ளன. இந்த தொல்லியல் இடம் 2021இல் அகழப்பட்டது. மீண்டும் 2024 ஜூன்-ஜூலை மாதங்களில் இங்கு வாழ்ந்த தொடக்க நிலைப் பண்பாடுகளைப் புரிந்துகொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன

2021 ஆம் ஆண்டு இத் தொல்லியல் இடத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளவும், முதுகலைப் பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில் மூன்று மனித எலும்புக்கூடுகளும், அதிகமான அளவில் விலங்கு எலும்புகளும், கடல் கிளிஞ்சல், அம்மிக் கற்கள், அரவைக் கற்கள், கல் உருண்டைகள், தானிய விதைகள், கற்கோடரிகள், புதிய கற்காலப் பானைகள், கடற் சங்கில் செய்யப்பட்ட மணிகள், சேமிப்புக் குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தக்காணக் கல்லூரியின் மானுடவியல் அறிஞர் வீணா முஷ்ரீப் திரிபாதி மனித எலும்புகளை ஆராய்ந்து, இவை 3 இலிருந்து 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள், நடுத்தர வயதுப் பெண் ஒருவரின் எலும்புகள் என அடையாளப்படுத்தியுள்ளார்.

இந்த அகழாய்வில் கிடைத்த மாட்டு எலும்புகள், ஆடுகளின் எலும்புகள், காட்டு விலங்கு எலும்புகள் கேரளப் பல்கலைக்கழகத்தின் முனைவர் ஜி எஸ் அபயன் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டது. வெண்சங்கு, உருளைச் சங்கு போன்றவற்றால் செய்யப்பட்ட மணிகளை புனே தக்காணக் கல்லூரியின் முனைவர் ஆர்த்தி தேஷ்பாண்டே முகர்ஜி அடையாளப்படுத்தினார். நன்னீர் சிப்பியில் கலை நயத்துடன் செய்யப்பட்ட ஒரு மீன் வடிவப் பதக்கம் அவர்களது அழகியலை உணர்த்துகின்றது. இதன் துடுப்புகளும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு தாவரச் சான்றுகள் கரிந்த விதைகளாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொள்ளு, உளுந்து, பச்சைப்பயிறு, அவரை போன்ற தாவரங்களின் விதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை தக்காணக் கல்லூரியின் முனைவர் சதீஷ் நாயக் அடையாளப்படுத்தியுள்ளார். இத் தொல்லியல் இடத்தின் காலம் இரண்டு கரியமிலக் காலக்கணிப்பின் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலக்கணிப்பு அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிடிக் ஆய்வகத்தில் பெறப்பட்டது.

2024இல் ஜூன் முதல் ஜூலை வரை இரண்டாம் பருவ அகழாய்வு நடத்தப்பெற்றது. இந்த அகழாய்வில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆய்வில் வாழ்விடச் சான்றுகள் தரையிலிருந்து 80 முதல் 140 செமீ வரை கிடைத்துள்ளன. இங்கு வாழ்ந்த புதிய கற்கால மக்கள் பல குழிகளைத் தோண்டி அவற்றைச் சேமிப்புக் கிடங்குகளாகவும் பிற செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்தியுள்ளனர். இக்குழிகளில் கரிந்த விதைகள், எலும்புகள், கற்கருவிகள், பானை ஓடுகள் ஆகியவை கிடைத்துள்ளன. அகழாய்வுக்குழிகளில் மூன்று மெருகேற்றப்பட்ட கற்கோடரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு மனித ஈமச்சின்னம், பானை ஓடுகள், வளர்ப்பு, காட்டு விலங்குகளின் எலும்புகள், மான் கொம்புகள், கல் உருண்டைகள், அரவைக் கற்கள், கடற் கிளிஞ்சலால் செய்யப்பட்ட மணிகள், பதக்கங்கள், சுடுமண் பொருள்கள், மெருகேற்றப்பட்ட கருப்பு, சிவப்பு பானை வகைகள், குவார்ட்ஸ் கற்களால் செய்யப்பட்ட பிளேடுகள், பிறைச் சந்திரன் வடிவ நுண்கற்கருவிகள், கரிந்த சுடுமண் கட்டிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மக்கள் வேளாண்மை செய்து ஆடுமாடு வளர்த்து வாழ்ந்து வந்துள்ளனர்.

மோளப்பாளையத்தின் புதிய கற்காலத் தொல்லியல் இடத்தைச் சுற்றி மலைகள் அரண் போல அமைந்துள்ளன. நொய்யல் ஆற்றிலிருந்து தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் மாடுகளின் பட்டிகளை அமைக்கவும், வேளாண்மை செய்யவும் பொருத்தமான இடமாக இருந்தது. இந்த இடத்தின் சுற்றுச்சூழல் வளத்தின் காரணமாக புதிய கற்கால மக்கள் இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பல தொல்லியல் இடங்கள் மெருகேற்றப்பட்ட கோடரியை வெளிப்படுத்தி யிருந்தாலும் அவை அனைத்தும் புதிய கற்கால இடங்கள் என்று கருத முடியாது. பானை ஓடுகள், எலும்புகள் உள்ளிட்ட வாழ்விடச் சான்றுகள் இருந்தால் மட்டுமே புதிய கற்கால இடங்களை தெளிவாக அடையாளப்படுத்த இயலும். இந்த அகழாய்வின் வழி மேற்கு தமிழ்நாட்டில் முதன்முதலாக தெளிவான புதிய கற்காலச் சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் வட பகுதியில் இந்திய அரசு தொல்லியல் துறை பையம் பள்ளியிலும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பூதிநத்தம், சென்னானூர் போன்ற இடங்களிலும், சென்னைப் பல்கலைக்கழகம் வலசை, செட்டிமேடு போன்ற இடங்களிலும் புதிய கற்காலச் சான்றுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த அகழாய்வு தென்னிந்திய புதிய கற்கால மக்களின் வாழ்வியல் முறைகளை வெளிப்படுத்தியுள்ளது, தென்னிந்தியாவில் புதிய கற்காலச் சான்றுகள் கர்னாடகா, ஆந்திரா, வட தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் மட்டுமே தெளிவாகக் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வின் வழி நீர்வளமுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை அடுத்துள்ள பகுதிகளில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது வெளிப்பட்டுள்ளது, தென்னிந்திய புதிய கற்காலம் கி.மு 3000 -கி.மு 1200-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. மோளப்பாளையத்தில் கிடைத்த சான்றுகள் இப்பண்பாட்டின் இறுதிக் காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளும், தென்மேற்குப் பருவமழையின் சாரலும், நொய்யல் சிறுவாணி தண்ணீரும் கோவை நகரை இன்று வளப்படுத்துவது போல, அக்காலத்தில் சுமார் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் மோளப்பாளையத்தில் வாழ்ந்த புதிய கற்கால மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கியுள்ளன. இத் தொல்லியல் இடத்தின் முக்கியமான கண்டுபிடிப்பு இங்கு கிடைத்த கடற்படுபொருள்களான சங்கு மணிகளாகும். இவை 3600 ஆண்டுகளுக்கு முன்னர், குறிஞ்சி நிலம் மட்டுமல்லாமல் நெய்தல் நிலவமைப்பும், முல்லை நிலவமைப்பும் உருவாகி இவ்விரு நிலங்களுக்கிடையே பரிமாற்றம் நடந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன.

மோளப்பாளையத்தில் கிடைத்த தொல்பொருள்கள் தற்போது மேலும் ஆய்வு செய்யப்பட்டுவருகின்றன. இதில் தமிழ்ப் பல்கலைக்கழக முதுகலை தொல்லியல் மாணவர்களுக்கு அகழாய்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய அரசு தொல்லியல் துறையின் அனுமதியுடன் நடத்தப்பெற்ற இந்த அகழாய்விற்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நல்கை வழங்கியுள்ளது.

ஆற்றங்கரை நாகரிகம் குறித்த செய்திகளுடன் கோவை போன்ற உள்நாட்டுப் பகுதியில் கிடைக்கும் தரவுகளை ஒப்பிட முடியுமா?

உறுதியாக ஒப்பிடலாம். நாகரிகம் என்ற சொல்லாடலில் சில சிக்கல்கள் உள்ளன. அனைத்துப் பண்பாடுகளையும் நாம் ஆய்வு செய்ய வேண்டும். நாகரிகங்கள் போற்றப்படவேண்டியவைதான். ஆனால் பண்டைய நாகரிகங்களுக்கிடையே பல பண்பாடுகளும் வளர்ந்து இருந்தன.

 நொய்யலாற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு புதிய கற்காலப் பண்பாடாகும். அக்கால மக்கள் அவர்களது சூழலுக்கு ஏற்ப வாழ்ந்துள்ளனர். நகரங்கள், நாகரிகங்கள் மட்டுமல்லாமல் சிறு பண்பாடுகளையும் நாம் ஆராயவேண்டும். பொதுமக்களுடைய புரிதலில் நாகரிகம் மட்டுமே போற்றப்படுகிறது.

கோரமண்டல் கடற்கரை (Coramandal coast) என்ற பெயருக்கு மாறாக சோழ மண்டலக் கடற்கரை (Cholamantal Coast) என்று அழைக்கவேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. இது குறித்த உங்கள் கருத்து என்ன?

தவறில்லை. பல காலனியாதிக்க காலத் திரிபுகளை நாம் திருத்தி விட்டோம், சோழமண்டலக் கடற்கரை என அழைக்கலாம். தமிழில் அவ்வாறுதான் எழுதி வருகிறோம்.

கடல் அகழ்வாய்வுகளில் ஆய்வாளர்கள் பொதுவாக சந்திக்க நேரும் பிரச்சினைகளைப் பற்றி கூறுங்களேன்?

கடல்சார் தொல்லியல் ஆய்வுகளில் அதிகமான சிக்கல்கள் உள்ளன. பல இடங்களில் கடற்கரை மாற்றங்களினால் சான்றுகள் மண்படிவுகளுக்கு அடி­யிலோ, நீரின் அடியிலோ காணப்படுகின்றன. அல்லது அழிந்து விட்டன. இவற்றை தேடிக் கண்டுபிடிப்பது கடினம். தேடிக் கண்டுபிடித்தாலும் ஆய்வு செய்வது அதைவிடக் கடினம். கேரளாவில் உள்ள கொல்லம் என்ற துறைமுக நகரின் அருகில் கட்டுமானப் பணிக்காகத் தோண்டும் போது சீனப்பானை ஓடுகளும் காசுகளும் கிடைத்தன. அதுபோல சில நேரங்களில் நமக்குத் தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன.

கடல்சார் ஆய்வுகள் குறிப்பாகத் தொல்லியல் அகழாய்வுகள், கப்பல்களைக் கண்டுபிடிக்க, கடலுக்கடியில் பரப்பாய்வுகள் செய்ய அதிக நிதி தேவை. இருப்பினும் கடலுக்கு அடியில் இவை உடைனே கிடைக்குமா என்று கூற இயலாது.

மற்ற ஆய்வுத்துறைகளில் உள்ளதைப்போல அதிகளவில் கடல்சார் ஆய்வுத்துறையில் இந்திய அளவில் நூல்கள் வந்திருக்கின்றனவா? தமிழில் எந்தளவு வந்திருக்கிறது?

இந்திய அளவில் பல நூலகள் வெளிவந்துள்ளன. ஹிமான்சு பிரபா ரே, ரண்வீர் சக்ரவர்த்தி, ஜெய்சீலா ஸ்டிபன், சீலா திரிபாதி, அலோக் திரியாதி உள்ளிட்டோர் எழுதியுள்ளனர்.

பேராசிரியர் ந. அதியமான் தமிழில் சில நூல்களை எழுதியுள்ளார். மொழிபெயர்த்துள்ளார். ஆசிவசுப்பிரமணியன், செயசீல ஸ்டீபன் ஆகியோருடைய நூல்களும் குறிப்பிடத்தக்கவை.

இந்தியாவில் தொல்லியல் ஆய்வுகளின்போது கிடைக்கும் பழங்காலப் பொருட்களின் பொதுத்தன்மை என்று ஏதும் கூறமுடியுமா?

இந்தியாவில் கிடைக்கும் தொல்பொருள்கள் மக்களின் வரலாற்றைக் கூறுகின்றன. எழுத்து இல்லாத மக்கள் குழுக்களின் வரலாற்றை அறிய தொல்லியல் மிகவும் உதவியாக உள்ளது.

தொல்லியல் ஆய்வுத்துறையில் இன்றைய தலைமுறையினரின் வருகை எந்தளவு ஈடுபாடாக இருக்கிறது?

தொல்லியல் ஆய்வுகளில் இளைஞர்கள் அதிகமாக ஆர்வம் காட்டிவருகிறார்கள், குறிப்பாக ஆர்வலர்களில் சிலர் சிறப்பான பணிகளைச் செய்துவருகிறார்கள். பொதுமக்கள் திரைப்படங்களை மட்டும் பேசிய காலம் மாறி தற்போது வரலாற்றையும், மரபுச் சின்னங்களையும் பேசி வருகிறார்கள்.

தொல்லியல் துறையில் வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இதில் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதற்கும் ஒரு எல்லை உள்ளது.

ஆனால், அரசு தொல்லியல் படிப்புகளுக்கு கல்லூரிகளில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தொல்லியலுக்கென்று உதவிப்பேராசிரியர்களை வரலாற்றுத் துறைகளில் நியமிக்க வேண்டும்.

தமிழகத்தில் பூம்புகாருக்கு அடுத்து எங்கேனும் கடலாய்வுகள் நடத்தப்பட்டுள்ளனவா?

தமிழகத்தில் பூம்புகார் அளவில் கடலாய்வுகள் எங்கும் நடைபெறவில்லை. அண்மையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கொற்கையில் ஆய்வுகள் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது. மாமல்லபுரம் பகுதியில் சில ஆய்வு அலோக் திரிபாதி அவர்களால் நடத்தப்பட்டுள்ளது. கேரளாவில் பட்டணம் பகுதியிலும் சில ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இதுவரையிலான தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்தவற்றிலிருந்து அறிந்து கொள்ளும் செய்தியாக எதைக் கருதுகிறீர்கள்?

இந்தியா முழுவதுமாக நாம் ஆய்வுகளைச் செய்ய வேண்டும். நாகரிகங்களை மட்டும் ஆய்வு செய்தால் போதாது. பல்வேறு வட்டாரப் பண்பாடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டு வரலாற்றை முழுமையாக அறிய ஆய்வுப் பரப்பை தென்னிந்தியா, மத்திய இந்தியா என வெளியில் உள்ள பரப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

தொல்லியல் ஆய்வுகளுக்கு மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பு எந்தளவிற்கு இருக்கிறது?

மத்திய மாநில அரசுகள் தொல்லியலுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. மத்திய அரசு கூடுதல் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு நல்ல ஆதரவை அளித்துவருகிறது. நல்ல உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்கவேண்டும்,

ஒப்பீட்டளவில் உலகளவிலான தொல்லியல் ஆய்வுகளுக்கும் இந்திய அளவிலான ஆய்வுகளுக்குமான வேறுபாடுகள் உள்ளனவா?

சில வேறுபாடுகள் உள்ளன, இருப்பினும் இந்தியாவில் உள்ள ஆய்வாளர்களும் நல்ல ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். அறிவியல் தொழில் நுட்பங்களை அதிகமாக ஆய்விற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகளை நடத்த பல்துறைசார் ஆய்வகங்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்கலாம். குறிப்பாக, மனித எலும்புகள், விலங்கு எலும்புகள், தாவரச் சான்றுகளையும், பிற சான்றுகளையும் ஆராயும் அறிஞர்களை வளர்த்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும், இத்துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைவு. எதிர்காலத்தில் அறிவியலின் உதவியுடன் மட்டுமே துல்லியமான ஆய்வுகளைச் செய்ய இயலும். அறிவியல் ஆய்வுகள் செய்யும் ஆய்வாளர்களும் தொல்லியல் ஆய்விற்குப் பங்களிப்பு செய்ய இயலும். இருப்பினும் நமது ஆய்வுகளின் தரம் கூடவேண்டும்.

தமிழகத்தில் இதுவரையிலான தொல்லியல் ஆய்வு முடிவுகள் பற்றிக் கூறுங்களேன்.

தமிழகத்தில் தொல்பழங்காலத்திலிருந்து மக்கள் வாழ்ந்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கைக்கோடரி எனப்படும் கற்கோடரிகளை இம்மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் சுமார் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர். இக்கருவிகள் கீழைப் பழங்கற்காலத்தைச் சேர்ந்தவை. இதற்குப் பிந்தைய இடைப் பழங்கற்காலச் சான்றுகள் 385000 ஆண்டுகள் பழமையானவை என நிறுவப்பட்டுள்ளன. இச்சான்றுகள் தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் மட்டும் கிடைத்துள்ளன. பிற பகுதிகளில் இத்தகைய சான்றுகள் உள்ளனவா எனத் தேடவேண்டும்.

 நுண்கற்கருவிகள் எனப்படும் சிறிய கற்கருவிகளைப் பயன்படுத்திய மக்கள் தமிழகத்தில் பரவலாக வாழ்ந்து வந்துள்ளனர். நுண்கற்காலப் பண்பாடுகள் தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனால், இவை முறையான காலக்கணிப்பிற்கு உட்படுத்தப்படவில்லை.

புதிய கற்காலச் சான்றுகள் தமிழகத்தின் வட, வடமேற்குப் பகுதிகளில் மட்டுமே கிடைத்துள்ளன. குறிப்பாக பையம்பள்ளி மட்டுமே காலக்கணிப்பு செய்யப்பட்ட இடமாக உள்ளது. தமிழகத்தில் கிடைக்கக்கூடிய மெருகேற்றப்பட்ட கற்கோடரிகள் அனைத்தையும் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை என சிலர் கருதுகின்றனர். இது தவறாகும். இக்கருவிகள் இரும்புக் காலத்திலும் அதற்குப் பின்னரும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. தமிழகத்தில் புதிய கற்காலச் சான்றுகளை விரிவாகத் தேட வேண்டும். இம் முயற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் மோளப்பாளையம் என்ற இடத்தைக் கண்டுபிடித்து அகழாய்வு செய்துள்ளோம்.

இரும்புக்காலத் தொல்லியல் இடங்களை கா. இராசன் அடையாளப்படுத்தி ஆராய்ந்துள்ளார். அண்மையில் மயிலாடும்பாறையில் இரும்பின் காலம் சுமார் 2200 கி.மு எனவும் கணிக்கப்பட்டு, அதற்கு முன்னரும் இக்காலம் செல்லலாம் எனக் கருதப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து பண்பாடுகளையும் முறையாக ஆராயவேண்டும்.

தமிழகம் பல தொல்லியல் சான்றுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் இவை முழுமையாக ஆராயப்படவில்லை. பல தொல்லியல் இடங்களின் காலக்கணிப்பு துல்லியமாக இல்லை. 2015 வரை சில இடங்களுக்கு மட்டுமே காலக்கணிப்பு பெறப்பட்டது. 2015 கீழடி அகழாய்விற்குப் பின்னர் தொல்லியலைப் பற்றிய பரவலான நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு அதிக அளவு நல்கை ஒதுக்கி ஆய்வுகளைச் செய்து வருகிறது.

தமிழகத்தில் அறிவியல்பூர்வமான ஆய்வுகளைத் தொடரவேண்டும். குறிப்பாக தொல்லியல் படிப்புகளுக்கு பாடம் எடுக்க கல்லூரிகளில் தொல்லியல் படித்தவர்களை உதவிப்பேராசிரியர்களாக நியமிக்கவேண்டும். வரலாற்றைப் போன்று தொல்லியல், கல்வெட்டியல் படிப்புகளுக்கும் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இடமளிக்கவேண்டும். தொல்லியலை வரலாற்றுடன் இணைத்து ஆய்வு செய்யவேண்டும். உள்ளூர் வரலாறு தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

தொல்லியல் ஆய்வுத்துறைகளில் தொல்லியல் ஆய்வாளர்கள் பணி நிரப்பப்படாமல் உள்ளன. இவை படிக்கும் மாணவர்களையும், ஆய்வின் தரத்தையும், வேலைவாய்ப்பையும் பாதிக்கின்றன.

தொல்லியல் சின்னங்களின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது?

தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சியின் காரணமாகவும், பாறை உடைத்தல் காரணமாகவும் பல பெருங்கற்கால இடங்கள் அழிந்துவிட்டன. எனவே Cultural Resource
Management (பண்பாட்டு வள மேலாண்மை) என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தலாம். அதாவது அழியக்கூடிய தொல்லியல் ஈமச்சின்னங்களை ஆய்வு செய்து தனியார் தொல்லியல் நிறுவனங்கள் சிறு நல்கைபெற்று அரசிடம் அறிக்கை அளிக்கக்கூடிய திட்டத்தை நடுவண் அரசின் உதவியுடன் செயல்படுத்தலாம். பல தொல்லியல் இடங்களை அகழ வேண்டும் என மக்கள் கோருகின்றனர். இவை அனைத்தையும் அரசால் அகழாய்வு செய்வது இயலாத காரியமாகும். சில ஆர்வலர்கள் இவற்றைத் தோண்டி சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இவை அனைத்தையும் அகழாய்வு செய்வதும், பாதுகாப்பதும் கடினமாகும். இவற்றை அழிப்பது தவறாகும். எனவே அரசு ஒரு செயல்திட்டம் வகுத்து ஒரு கொள்கை முடிவை எடுக்கலாம்.

அடுத்து என்ன மாதிரியான செயல்திட்டங்கள் வைத்துள்ளீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா?

தற்போது நான் தமிழகக் கடற்கரைப் பகுதிகளிலும், கேரளக் கடற்கரைப் பகுதிகளிலும் ஆய்வாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் ஆகியோருடன் இணைந்து ஆய்ந்து வருகிறேன். மேலும் மீனவர்கள், படகுக் கட்டுமானம், சங்குத் தொழில் குறிந்தும் ஆய்ந்து வருகிறோம். இலக்கியங்கள் சுட்டும் சில அடையாளப் படுத்தப்படாத துறைமுகங்களையும் ஆய்ந்து வருகிறோம். இந்தியப் பெருங்கடல் மையத்தின் வழியாக சொற்பொழிவுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.