கல்கத்தாவில் ஆர்.ஜி.கர் என்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை மருத்துவப் படிப்பு படித்து வந்த பெண் மருத்துவர் இரவுப்பணி முடித்துத் திரும்புகையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்தெலும்பு முறிக்கப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டது தெரிகிறது. பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் ‘இது கூட்டுப் பாலியல் வன்கொடுமையாக இருக்க வாய்ப்பிருக்கிறது‘ என்று தெரிவித்துள்ளார்.
அரசுப் பணியில் இருந்த ஒரு மருத்துவரின் இந்தக் கொடூரக் கொலையை மேற்குவங்க அரசு மிக மோசமாகக் கையாண்டிருக்கும் செயல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறது. வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது.இரவுப்பணி முடித்து அதிகாலை 3 மணிக்கு மருத்துவமனையின் நான்காவது தளத்தில் உள்ள சமூகக்கூடத்தில் ஓய்வெடுக்கப் போன அந்த மருத்துவர் அங்கு வன்புணர்வு செய்யப்பட்டதோடு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
மருத்துவக் கல்லூரியின் முதல்வர், ‘அந்த இரவு நேரத்தில் பயிற்சி மருத்துவர் அங்கு சென்றது தவறு‘ என்று எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர் மேலேயே பழியைப் போடும் படுபாதகக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
காலையில் கண்டறியப்பட்ட மரணத்திற்கு அன்றைய இரவு 11 மணிக்குதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொலையை ஊடக வெளிச்சம் படாமல் மூடி மறைக்கவே காவல்துறை முயன்றதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்குச் சென்ற பிறகே காவல்துறை சன்னமான நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது. அதுவரை மருத்துவக்கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை என்ற செய்தி நமக்குப் பேரதிர்ச்சியாக இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் மருத்துவர் சங்கங்கள் மற்றும் சமூக அக்கறையினர், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். சஞ்சய் ராய் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சுதந்திரமான அமைப்பின் விசாரணை தேவை எனக் கோரி வருகின்றனர்.
இந்தியளவில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லாத நிலையில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஓய்வில்லாத தொடர் பணி, மன உளைச்சல், உடல்நல பாதிப்பு போன்றவை அவர்கள் ஈடுபாட்டுடன் மருத்துவ சேவை ஆற்றுவதில் எத்தகைய தடங்கல்களை ஏற்படுத்தும் என்பதை ஆளும் அரசு அதிகாரம் புரிந்துகொள்ளாதது வேதனையானதும் கண்டனத்துக்குரியதுமாகும்.
நாடு முழுவதும் சுகாதாரமற்ற நிலையிலுள்ள மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்ட மண்டலப் பகுதிகளாக நிர்வகிக்கப்பட வேண்டியது உடனடியாக நிகழவேண்டிய அற்புதம். இதுபோன்ற ஒவ்வொரு அசாதாரண நிகழ்வுகளின்போதும் பொது சமூகத்தின் கொந்தளிப்புக்கு பணிந்து ‘பொறுப்போடு‘ கடமையாற்றும் ஆளும் அரசுகள் எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் அனைத்துத் துறைகளிலும் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய பாலபாடத்தைப் பயில வேண்டும்.
- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு