Towards a New Formation: South Indian Society Under Vijayanagar Rule, (OUP,New Delhi,1992) என்ற தலைப்பில் பேராசிரியர் நொபொரு கராஷிமா அவர்கள் எழுதிய நூலின் முன்னுரையில் இந்நூல் தம் முதல் நூலின் தொடர்ச்சி என்று குறித்துள்ளார். இந்நூல் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. இதன்சாரம் நூலிற்கான அறிமுகமாக இங்கு தரப்படுகிறது. இந்நூலின் மையக்கரு தென்னகத்தின் இடைக்காலத்தில் நிகழ்ந்த நிலமானிய முறையினை புரிந்து கொள்வது என்றும் அவர் புரிந்து கொண்ட வகையில் நிலமானிய முறையினை விளக்குவதாகவும் சொல்லியுள்ளார். சோழராட்சியின் தமிழ்ச்சமூகம் அடுத்தடுத்துவந்த விஜயநகர் ஆட்சியிலும் தொடர்ந்து வந்த நாயக்கர் ஆட்சியிலும் புதிய புதிய மாறுதலுக்கு ஆட்பட்டது என்பதனை கல்வெட்டுச் சான்றுகள் மூலம் விளக்கியுள்ளார். நிலவுடைமை, நிலவருவாய் பற்றிய கல்வெட்டுக்களின் பகுப்பாய்வு இதனை உறுதிப்படுத்துகிறது. இவ்வாய்விற்கு 1300-1700 காலகட்டங்களின் கல்வெட்டுக்கள் பெரிதும் பயன்பட்டுள்ளன. இதுபோன்ற ஆர்வம் 1958 இல் அவரது முதுகலை பட்டப்படிப்பிற்கான ஆய்வுக் கட்டுரை சோழர் வரலாறு பற்றி அமைந்ததே காரணமாகும் என்கிறார்.
அப்போதே, தமிழ்மொழிக் கல்வெட்டுக்களில் நல்ல பரீட்சயம் ஏற்பட்டது என்றும் அதன் நீட்சிதான் அடுத்த கட்டத்து ஆய்வு என்றும் கூறியுள்ளார். அப்போது, ஆசிய சமூகம் தேக்கநிலை சமூகம் என்று முன்மொழிந்த மேற்கத்திய அறிஞர்களின் கருத்தினை சந்தேகித்ததே தம் ஆய்வின் தொடர வைத்தது என்கிறார். அதன் விளைவாக இந்தியச் சமூகம் காலந்தோறும் தேங்கி நிற்காமல் மாறி மாறி வந்துள்ளதனை சான்றுகள் விளக்குகின்றன என்கிறார்.
இடைக்காலத்திய வரலாறு பொறுத்து தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டு வரலாற்றில் சோழர் சரிவிற்கு பின்வந்த விஜயநகர் ஆட்சியில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதனை தக்க சான்றுகள் வழியே நிறுவுகிறார். 12 கட்டுரைகளை உள்ளடக்கிய 3 இயல்கள் 3 பின்னிணைப்புகள், 8 நிலப்படங்கள், 15 பக்கங்கள் கொண்ட துணைநூல் பட்டியல் கொண்ட இந்நூல் தேர்ந்த பகுப்பாய்வு முறைக்கு தக்க சான்றாகும். 1302-1642 வரையிலான விஜய நகராட்சியின் காலகட்டத்தினை 7 உள்கட்டங்களாகப் பிரித்து விஜயநகர் ஆட்சிக் காலத்தின் வருவாய் வரிச் சொற்களை ஆய்ந்துள்ளார். 480 கல்வெட்டுக்களில் இடம்பெற்ற 635 வரிச்சொற்கள் இடம் பெற்றதனை பகுப்பாய்வு செய்துள்ளார். 7 காலகட்டங்களில் மொத்தம் 40 வரிகள் 20 முறைக்குமேல் இடம் பெற்றுள்ளன. இவற்றில் உபாதி என்ற வரி 103 முறையும், ஆயம் 65 முறையும், கடமை 72 முறையும், காணிக்கை 86 முறையும், நன்செய் என்ற வரி 69 முறையும், மாவடை 66 முறையும், மரவடை 59 முறையும் இடம் பெற்றுள்ளன.
இவ்வரிகளை அறிந்து கொள்வதற்கு வெளியிடப்படாத கல்வெட்டுப் படிகளையும் படித்தறிந்து குறிப்பெடுத்துள்ளார். 1400-1600 காலகட்டத்தினை சார்ந்த வெளியிடப்படாத கல்வெட்டுப் படிகளை படிப்பதற்கு அனுமதியளித்த இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் மைசூரில் அமைந்துள்ள கல்வெட்டுப் பிரிவு அலுவலகத்தின் இயக்குநர்கள் K.V.Ramesh, M.N.Katti போன்றோருக்கு நன்றி நவில்ந்துள்ளார். இந்நூலினை கணினியில் கட்டமைத்தவர்களுக்கும், நிலப்படங்களை உருவாக்கித் தந்தவர்களுக்கும் நன்றியறிதலை தெரிவித்துள்ளார். நூலாக்கத்திற்கு முன் தம் கட்டுரைகளைப் படித்து கருத்துகள் வழங்கிய Romila Thapar, M.G.S.Narayanan, Parvathy Menon, Cynthiya Talbot போன்றோருக்கும் நன்றி செலுத்தியுள்ளார். நொபொரு கராஷிமா அவர்கள் இந்திய கல்வெட்டுக்களின் வகைகளை வாசிக்கவும் படியெடுக்கவும் பகுத்தறியவும் நன்கு பயிற்சி பெற்றவர். முன்பே சொன்னபடி, இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் கல்வெட்டுப் பிரிவு அலுவலகங்களில் பயின்றவர். தெற்காசிய தென்கிழக்காசிய நாடுகளில் பரவலாக கள ஆய்வுகளை பலமுறை மேற்கொண்டவர். ஆனாலும், அவர் கூட்டுப்படிப்பில் மிகவும் அக்கறை காட்டினார். பிற நாடுகளின் வரலாற்றறிஞர்களுடன் கள ஆய்வுகளையும் கல்வெட்டுக்களின் பகுப்பாய்களையும் செய்தார். தமிழ் மொழியில் நன்கு பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றிருந்தார். பிறரின் கருத்துகளை கவனமாகப் பரிசோதித்தார். அவருடைய ஒவ்வொரு ஆய்வும் அப்படித்தான் அமைந்தது. அவருடைய ஆய்வுக்களம் தமிழ்நாட்டின் ஒரு சிற்றூரிலிருந்து தென்கிழக்காசியநாடுகள்வரை பரவியிருந்தது. அந்தவகையில்தான் இங்கு பேசப்படும் நூலும் அமைகிறது.
இந்நூலிற்கு ஆய்வுக்களமாக வடாற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, பகுதிகளை தெரிவு செய்துள்ளார். தமிழகத்தின் வடக்கில் ஓடும் வெள்ளாற்றுச் சமவெளிப் பகுதியினையும் இத்துடன் சேர்த்துள்ளார்.
நாடும் சீர்மையும்: விஜயநகர் ஆட்சியில் தமிழ்நாட்டில் நாடு என்ற ஆட்சிப் பிரிவு சீர்மை என்று பெயர்மாற்றம் பெற்றது. இச்சொல் சீமா என்ற கன்னடம், தெலுகு மொழிகளின் சொல்லிலிருந்து பெறப்பட்டது (காட்டு: ராயலசீமா). மற்றொரு வகையில், இப்பிரிவு ராஜ்ஜியம் என்றும் அழைக்கப்பட்டது; உச்சாவாடி என்றும் பெயர் பெற்றது. இப்படி, தமிழ்நாட்டின் வடக்கில் சந்திரகிரிபடைவீடு உச்சாவடி, வழுதிலாம்பட்டு உச்சாவடி என்றும் இடைப்பகுதியில் திருச்சிராப்பள்ளிஉச்சாவடி என்றும் ஆட்சிப் பிரிவுகள் இருந்தன. இப்பிரிவுகளின் அலுவல்/ஆட்சி நாயக்கத்தனம் என்று அழைக்கப்பட்டது. இவ்வாட்சித் தலைவர்கள் நாயக்கர்கள் எனப்பட்டனர். இவர்கள், முன்பே நாடு அளவில் செயற்பட்ட நாட்டார்களை வலுவிழக்கச் செய்து தங்களின் முகவர்கள்மூலம் ஆட்சி செய்தனர். இச்சூழலில், தமிழ்நாட்டில் சமூக, அரசியல்,பொருளியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. இது ஒரு புதிய வரலாற்றுப் போக்கினை உருவாக்கியது. இவ்வரலாற்றுப் போக்கினை நில வருவாய் சொற்களின் அடிப்படையில் நொபொரு கராஷிமா நிரூபிக்கிறார். இதனடிப்படையில், நிலவுடைமை சமூகத்திலும், அடிமைச் சமூகத்திலும், வணிகத்திலும் ஏற்பட்ட மாற்றங்களையும் விளக்குகிறார்.
தமிழ்நாட்டில் சமூக மாற்றம்: சோழர்காலத்தில் ஏற்பட்ட பெருமளவிலான மாற்றங்களை தம் முந்திய நூலில் விளக்கியுள்ளார். அதன் தொடர்ச்சியே அடுத்து வந்த விஜயநகர ஆட்சி, நாயக்கர் ஆட்சி. இதனை விளங்கிக் கொள்வதற்காக 1400-1700 வரையிலான காலகட்டத்தின் 2900 கல்வெட்டுக்களில் இருந்து தரவுகளை திரட்டினார். இவற்றுள் 1064 கல்வெட்டுக்கள் திருமலை திருப்பதியில் கிடைத்துள்ளன. ஆனால், இவற்றுள் 600 மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள கல்வெட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இவற்றுள் பலவற்றின் பிரதிகளை (texts) முன்பே சொன்னபடி மைசூரில் படித்து தரவுகளை திரட்டினார். அதற்கு முன்பு, பெரும்பாலான ஆய்வாளர்கள் அயல்நாட்டுப் பயணிகளான Fernao Nuniz, Domingo என்பவர்களின் குறிப்புகளின் அடிப்படையில் விஜயநகராட்சியினை ஆய்ந்தனர். அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் நாயக்கர், நாயக்கத்தனம் என்பன. ஆனால், சோழர் வீழ்ச்சிக்குப்பின் 1250-1400 காலகட்டத்தில் தமிழ்நாடு பெரும் அவதிக்குள்ளானது. பாண்டியர், ஹோய்சாளர், காகதீயர், டெல்லி சுல்த்தான்கள் என பலரும் படையெடுத்தனர். தொடர்ந்து விஜயநகரின் ஊடுருவலும் (invasion) வந்தது என்பது இவரது கருத்து. அவருடைய கூடுதலான ஆய்வுக்கருத்துகள் இங்கு தரப்படுகின்றன. படைத்துறைபண்பு கொண்ட விஜயநகர் ஆட்சியில் பல வேளாண்குடிகள் வரிக் கொடுமையினால் ஊரை விட்டே ஓடினர். 15-ஆம் நூற்றாண்டில் ஒரியப் படையெடுப்பும் வந்தது. இவையெல்லாம் அரசியல் மாற்றங்கள். அதனால், சமூக மாற்றமும் நிகழ்ந்தது. 1250-களிலேயே வேளாண்குடிகள் அவர்கள் சார்ந்த சிலகுடிகள் ஒருபுறமும் கைவினைஞர்கள் அவர்கள் சார்ந்த சில குடிகள் மறுபுறமும் தங்களை முறையே வலங்கை இடங்கை குழுக்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர். இவ்விரு குழுக்களும் நிலக்கிழார்கள், காணியாளர்கள், விஜயநகர் அலுவலர்களான இராஜகரத்தார்களுக்கு எதிராக கலகம் செய்தனர். இக்கலகம், 15-ஆம் நூற்றாண்டின் முதல்கூற்றில் தென்னாற்காடு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் பகுதிகளில் நடந்தது.
விஜயநகர்ஆட்சியும் நாயக்கர்களும்: தமிழ்நாட்டில் ஆட்சி செய்த நாயக்கர்கள் 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகரமன்னர்களின் முகவர்களாகவே இயங்கினர். அவர்கள் காரியத்துக்குக் கடவரான, காரியத்துக்குக் கர்த்தாவான என்ற தொடரால் அறியப்பட்டனர். இவர்கள் தம் ஆளுகைக்கு ஒரு படையணியினை (military contingent) அரசருக்காக வைத்துக் கொள்ளலாம். இவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பு முன்பே சொன்னபடி சீர்மை எனப்பட்டது. அவர்களின்கீழிருந்த வட்டார ஆளுநர்கள் மகாமண்டலேஸ்வரர், மகாபிரதானிகள் எனப்பட்டனர். படைத்தளபதிகள் தண்டநாயகா எனப்பட்டனர். வரிவசூலிப்பவர் அதிகாரி எனப்பட்டார். நாயக்கர்களின் ஆட்சிப்பரப்பு தெளிவற்ற எல்லைகளை கொண்டிருந்தது. ஆனால், அவர்களின் ஆட்சி நிலமானிய கூறுகளைக் கொண்டிருந்தது. இந்நிலமானிய முறையின் உயர்தளத்தில் அரசர்களும் அடுத்ததளத்தில் நாயக்கர்களும் இருந்தனர். நாயக்கர்களிடையேயும் உள்படிநிலை நிலவியது. அடித்தளத்தில் ஊர்களின் நிலக்கிழார்கள் இயங்கினர். ஆனால், திருமலைநாயக்கருக்கு உட்பட்ட முருகமங்கலபற்று, படைவீடு அல்லது பிரமதேசப்பற்று எனப்பட்டது. இதுவே, இவரது நாயக்கத்தனம். இவர், அரசரின் ஒப்புதலின்றியே தன் ஆளுகைக்குட்பட்டிருந்த இரு ஊர்களுக்கு வரிவிலக்களித்தார். சில நாயக்கர்கள் அரசரின் அறிந்தேற்பினை பெறும்பொருட்டு அரசருக்கு புண்ணியமாகும் பொருட்டு என்றபொருளில் அவரின் அனுமதியின்றியே நிலக்கொடை அளித்தனர். இதனால், தங்கள் வட்டாரங்களில் செல்வாக்கும் பெற்றனர். இதனையே நிலமானிய அமைப்புமுறை என்கிறார் நொபொரு கராஷிமா. அதற்கான தம் புரிதலை கீழ்தந்துள்ளவாறு விளக்குகிறார்.
நொபொரு கராஷிமா சுருக்கிவடித்த நிலமானியமுறையின் கூறுகள்: (1) அடிப்படையில் நேரடியாக உழைப்பவர்கள்/உற்பத்தியில் ஈடுபடுகிறவர்கள் உண்மையில் அடிமைகள் இல்லை. அவர்கள் வேளாண்குடிகள் (peasants). உற்பத்தி வழிகளோடு (means of production) உறவுடையவர்கள். (2) அவர்கள் வட்டார அளவிலுள்ள முக்கிய நபர்களின் (local magnets) நிலத்தின்மேல் மேலான உரிமையுடையவர்களின் (superior rights) நிலத்தில் உழுதனர். இவர்கள் வேளாண்குடிகளை தம் கட்டுக்குள் (subdue) வைத்தனர். இவர்களின் மேலதிக உற்பத்தியினை நிலவுடைமையாளர்களே எடுத்துக் கொண்டனர். ஒருவகையான பொருளியல் உறவின்மூலம் (extra-economic coercion) இதனை சாத்தியப்படுத்தினர். (3)அரசியலதிகாரம் படியமைப்பு கொண்டது (hierarchical structure). இது நிலக்கொடையாலும் கருத்தியலாலும் ஆளும் வர்க்கத்தினால் சாத்தியப்பட்டது. (4) வணிகத்திற்கான உற்பத்தி (commodity production) என்று தனியே நிகழவில்லை. உபரி உற்பத்தியிலேயே இது பெறப்பட்டது. இக்கருத்தியல்களின் பின்னணியிலேயே நொபொரு கராஷிமா நாயக்கத்தனம் என்ற நிலமானிய முறையினை ஆய்ந்தார்.
நாயக்கர்களும் கோயிலும்:நாயக்கர்கள் கோயில்களோடு நெருக்காமான தொடர்புடன் இயங்கினர். அதனால் நன்மையும் பெற்றனர். காட்டாக, அச்சுதப்ப நாயக்கர் 38 ஊர்களின்மேல் ஆளுமை கொண்ட ஸ்ரீமுஷ்ணம் கோயிலின் காப்பாளராக செயற்பட்டார். கல்வெட்டில் இப்பதவி தாளரிக்கம் எனப்பட்டது. அவ்வூர்களில் இருந்து கோயிலுக்கு வரும் வருமானத்தில் ஒரு பங்கு இவருக்கு கிடைத்தது. அது, ஸ்தான நிர்வாகம் எனப்பட்டது. இவரே, கோயிலின் கருவூலத்தினை காக்கும் பொறுப்பினையும் மேற்கொண்டார். அப்பதவி, திருமேனிகாவல் எனப்பட்டது. இவ்வனைத்து உரிமைகளும் காணியாட்சி எனப்பட்டது. இவர்கள் கோயில்களோடு தொடர்புடன் இருந்ததால் மேலதிகமான செல்வத்தினை பெற்றனர். மேலும், குத்தகை முறையினை நடைமுறைப்படுத்தி நாயக்கர்கள் தம் தம் வட்டாரத்தில் வலிமை பெற்றனர். கோயில்களுக்கு கொடையளிப்பதன்மூலம் தம் எஜமானர்களுக்கு நன்றியுடையவர்களாகக் காட்டிக் கொண்டனர்.
சோழர்வீழ்ச்சிக்குப்பின் 14-ஆம் நூற்றாண்டிலிருந்து அடுத்து 16-ஆம் நூற்றாண்டுவரை விஜயநகராட்சியில் வணிகம் பெருகியது. பட்டடை, தறி, பேட்டை, கைக்கோலர், செக்குவாணியர், கம்மாளர் போன்ற கல்வெட்டுச் சொற்கள் இதற்கு சான்றாகின்றன. இதில், கைக்கோலர்கள் செல்வாக்கு பெற்றனர். இவ்வணிகர்களும், கைவினைகுழுவினர்களும் சில சலுகைகளை பெற்றனர். கம்மாளர்கள் ஒன்றுதிரண்டு சலுகைகளை சாதித்துக் கொண்டனர். கைக்கோலர்கள் கோயில்களின் உள்ளகம் (precincts) எனப்படும் திருமடை வளாகத்தில் இயங்கும் உரிமை பெற்றனர். கோயில் வளாகங்களிலேயே தங்கள் தொழிலை செய்தனர். இவ்வாறு, நாயக்கர்கள் வணிகர்கள், கைவினைஞர்கள், கோயில்கள் மூலம் தம் இருப்பினை இருத்திக் கொண்டனர். இது, சோழ ர்காலத்திலிருந்து பெற்ற பொருளியல் மாற்றமாகும்.
புதிய நிலக்கிழார்கள்:விஜயநகர் ஆட்சியில் பலவகையிலும் புதிய புதிய நிலக்கிழார்கள் தோன்றினர். அவர்கள்: நிலத்தினை வாங்கியோர், நிலத்தினை குத்தகைக்குப் பெற்றோர், அதிகாரத்தால் நிலத்தினை கைப்பற்றியோர், அப்போது புகுந்த படையணியினர் போன்றோர். இம்மாற்றம் 15-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. கவுண்டர்கள், கைகோலர்கள், மன்றாடிகள், ரெட்டிகள் போன்றோர் புதிதாகத் தோன்றிய நிலக்கிழார்கள். முதலியார்பிள்ளை, ரெட்டியார் நிலக்கிழார்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்தனர். இவர்கள், கம்மாளர்களுக்கு வரிச்சலுகையளித்தனர். இக்காலகட்டத்தில் புதிய வேளாண்குடிகள் விரிவாக்கப்பட்டனர். குடியும் ஏற்றி என்ற கல்வெட்டுத் தொடர் இதனை விளக்குகிறது. இப்போக்கு நிலவுடைமைகள் அதிகரிக்க சாதிகள் அதிகரித்ததனையும் விளக்குகிறது. இதுவும் ஒரு வகை பொருளியல் மாற்றமாகும்.
சாதி அடிப்படையிலான சிறுநிலக்கிழமை (petty landlords) வேளாண்குடிகள் (cultivators) என்று நிலமானிய முறையின் இன்னொரு கூறாக அமைந்தது. காணியாளர் உரிமை பெற்ற பார்ப்பனர், வெள்ளாளர், நிலவுடைமையாளர் ஒருபுறமும் ரெட்டிகள், செட்டிகள், கைக்கோலர்கள் இன்னொரு புறமும் வேளாண்குடிகளையும் கைவினைஞர்களையும் நசுக்கினர். ஆனால், 15- ஆம் நூற்றாண்டில் வேளாண்குடிகளுக்கும் (cultivators) நிலவுடைமையாளர்களுக்கும் முறைப்பாடு (conflict) எழவில்லை. 16-ஆம் நூற்றாண்டில் புதியகுடிகள் ஏற்படுத்தப்பட்டதால் புதியநிலங்கள் விளைச்சலுக்கு கொண்டு வரப்பட்டன.
நாயக்கர்களும் நாட்டவர்களும்: 16-ஆம் நூற்றாண்டில் தென்னாற்காடு, சேலம், திருச்சி வட்டாரங்களில் நாட்டவர்பற்றி பேசும் கல்வெட்டுகள் நாட்டவர்களுக்கும் நாயக்கர்களுக்கும் இடையிலான உறவு பற்றி விளக்குகின்றன. இச்சான்றுகளில் நாட்டவர்கள் நாட்டுவேளான் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். நாட்டவரும் நாயக்கரும் இணைந்து கோயில்களுக்கு நிலக்கொடைகளையும் வரிவிலக்கினையும் அளித்துள்ளனர். நாயக்கர்களின் ஆட்சியில், நாட்டவர்களும் (ruling structure) இயங்கினர். ஒரு கல்வெட்டில் நாட்டவர் ஒருவர் நாட்டில் முதலியார் என்று சுட்டப்பட்டுள்ளார். உள்ளூர் உற்பத்திமுறை (local production) நாட்டார்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. மேலே சொல்லப்பட்ட நூற்றாண்டில் வெள்ளாற்றுச் சமவெளியின் மத்தியப் பகுதியில் ஆதிக்கம் கொண்டிருந்த தந்திரிமார்கள் எனப்பட்ட தமிழ்த் தலைவர்களை கன்னட, தெலுகுநாயக்கர்கள் ஓரங்கட்டினர்.
பெரிய நாட்டார் அமைப்போடு ஒட்டியிருந்த கைவினைஞர்கள் அதிலிருந்து விலகி நாயக்கர்களோடு சேர்ந்தனர். நாட்டவர்கள் காணியாளர் உரிமை கொண்ட நிலக்கிழார்களின் முகவர்களாக இயங்கினர். இவர்கள் நாட்டுக் காணிக்கை, நாட்டு விநியோகம் போன்ற வரிகளை வசூலிப்பவர்கள். இருந்தாலும் நாயக்கர் ஆட்சியில் நாடு என்ற உற்பத்தி அலகுகளின் எண்ணிக்கை குறைந்தது. உள்ளூர் ஆட்சி அலகு (unit of local administration) நாட்டிலிருந்து பற்று என்ற அலகிற்கு பல வட்டங்களில் மாறியது. இதனால், சோழர் காலத்தில் வெள்ளாளர்கள் மட்டுமே நிலக்கிழார்களாக இருந்த நிலை மாறி விஜயநகர் ஆட்சிக் காலத்தில் பிற இனத்திலும், வணிகர்கள், கைவினைஞர்கள் மத்தியிலும் நிலக்கிழார்கள் எழுந்தனர்.
தமிழ்நாட்டில் நாயக்கர் காலத்தின் ஆட்சியினை ஐரோப்பாவில் நிகழ்ந்த நிலமானியமுறையோடு (feudal lord-vassal) ஒப்பிடலாம் என்று விளக்கும் நொபொரு கராஷிமா சோழர்காலத்தின் தொடக்கத்தில் சலுகைகள் பெற்ற பார்ப்பனர் சோழராட்சியின் இறுதிப் பகுதியில் தனியாருடைமை அதிகரிக்கும்போது தங்களின் நிலவுடைமையினை இழக்க நேரிட்டது என்கிறார். இப்போக்கு தமிழ்நாட்டின் வடபகுதியில் நிகழ்ந்ததனை செங்கல்பட்டு வட்டாரத்தில் உக்கல் என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு மூலம் நிரூபிக்கிறார். இது இடைக்காலத்தில் உருவான புதிய மாற்றத்தினை விளக்கும் ஆர்வந்தரும் சான்று.
மூன்றாம் இராஜராஜன் ஆட்சியில் நிலவுடைமை கொண்ட ஒரு பார்ப்பன சபை தங்களூரின் கிழக்குப் பகுதியான பிடாகையினை ஒரு தனியாருக்கு விற்றது. வாங்கியவர் பட்டியர்போயன் பெருங்கண்தேவப்பெருமான் என்பவர். இவர், பார்ப்பனர் அல்ல;உடையான் பட்டம் கொண்டவர். விற்கப்பட்ட பிடாகையின் கூறுகள்: நீர்நிலம், கொல்லைநிலம், ஊர்நத்தம், மநை, மநைபடப்பை, மரம், கிணறு, வழி, குளம், வழிப்போக்கு போன்றவை. இவற்றுடன், நீர், நீர்போக்கு, நீர்பாய்ச்சல் போன்ற உரிமைகளும் விற்கப்பட்டன. மேலும், ஆற்றிலிருந்து பாசனத்திற்காக விற்கப்பட்ட நிலத்திற்கு வரும் நீரில் ஐந்தில் இருபங்கும் கிடைத்தது. பாசன வாய்க்கால் தோண்டிக் கொள்ளும் உரிமையும் கிட்டியது. அந்நிலத்தினை வாங்கியவர், நிலத்தினை விற்கலாம் ஒத்தி வைக்கலாம் தலைமுறை தலைமுறையாக (inheritance) இறுத்திக் கொள்ளலாம். உடையான்பட்டம் கொண்ட இதுபோன்ற பல நிலக்கிழார்கள் சோழராட்சியின் இறுதிக் காலத்தில் அதிகரித்தனர். இதுபோன்று விஜயநகர் ஆட்சியின் இரண்டாம் ஹரிஹரனின் காலத்தில் உக்கல் மகாசபையார் அவ்வூரின் கிழக்குப் பகுதியான அரசாணி் பாலையினை பல்லவரையன் என்ற பட்டம் கொண்ட ஒருவருக்கு விற்றனர். இவர் சோழமண்டலத்தில் கும்பகோணத்தினைச் சேர்ந்தவர். வரிச்சுமையினால் இந்நிலம் விற்கப்பட்டது என்று அறிய முடிகிறது. சோழராட்சி மாறியபோது விஜயநகர் ஆட்சியில் பார்ப்பனரின் பொருளியல் நிலை இவ்வாறு மாறியது.
விஜயநகர் ஆட்சியில் அடிமைகள்: நிலவுடைமையின் மாற்றம் சமூகமாற்றத்தினை உருவாக்கியது. விஜயநகர் ஆட்சியில் புதிய நிலக்கிழார்கள் உருவாகியபோது புதிய புதிய உழுகுடிகளும் உருவாக்கப்பட்டனர் என்று கல்வெட்டுக்குறிப்புகள் சான்றளிக்கின்றன. நிலக்கிழார்களால் ஆளப்பட்ட உழுகுடிகள் அடிமைகள் எனப்பட்டனர்; கோயில் நிலத்தினை உழுவோர் குடிகள் எனப்பட்டனர். 1374-ஆம் ஆண்டின் ஒருகல்வெட்டு (திருப்பழத்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்) நிலக்கொடை பற்றி பேசுகிறது. மழவதரையர் களத்தூருடையான் என்ற ஒரு நிலக்கிழார் ஒரு பெண்ணிற்கும் அவருடைய மகளுக்கும் “காதல் கொடையாக” “ப்ரீதிதானம்” என்ற பெயரில் சுமார் 9 வேலி நிலமும் ஒரு வீடும் கொடையளித்தார். அந்நிலத்திற்கு உழுகுடிகளாக இரு வெவ்வேறு அடிமைகள் வழங்கப்பட்டனர்: (1) மூன்று வெள்ளாளர்கள். இவர்கள் வெள்ளாள அடியார் எனப்பட்டனர். (2) இரு ஜோடி புலையர். இவர்கள் புலைஅடியார் எனப்பட்டனர். புலைஅடியார்கள் நாகபட்டினத்திலிருந்து ஒரு முகவர் மூலமாக வாங்கப்பட்டனர். பெண் வெள்ளாள அடிமைகள் சிறுபல வெள்ளாட்டிகள் என்று அழைக்கப்பட்டனர்.
மற்றொரு கல்வெட்டில் (திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு மாவட்டம்,1388) நிலவிற்பனைபற்றி ஒரு குறிப்பு உள்ளது. விற்கப்பட்ட அந்நிலத்தோடு 3 வெள்ளாளர்களும், 16 பறை அடியார்களும் விற்கப்பட்டனர். விற்றவர், கிழவன்பட்டம் பூண்டவர். வாங்கியவர், தொண்டனார் கண்டராயர் என்று குறிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் தலைமுறை தலைமுறையாக அரையன்பட்டம் கொண்டவர். இங்கு வெள்ளாள அடிமைகள் வெள்ளாளப் பிள்ளைகள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். அதாவது, இவர்கள் வெள்ளாளப் பிள்ளைகளுக்கு வேலையாள்களாக இருந்தவராவார். நிலத்தோடு சேர்த்து அடிமைகளாக விற்கப்பட்டதால் இந்நிலவிலையாவணம் காணி-அடிமை- மனைவிலை பிரமாணம் என்று சுட்டப்பட்டுள்ளது. 1338-ஆம் ஆண்டின் மற்றொரு கல்வெட்டில் (குளித்தலை தாலுக்கா, திருச்சிராப்பள்ளி மாவட்டம்) ஒரு பார்ப்பனர் 4 வெள்ளாளர் அடிமைகளை ஒரு வணிகருக்கு (செட்டி) 270 பணத்திற்கு விற்றுள்ளார். இதில், இவ்வடிமைகள் வெள்ளான் அடிமைகள் என்று குறிக்கப்பட்டுள்ளனர். அப்பார்ப்பனர் இவர்களை தம் தங்கையிடமிருந்து வாங்கியுள்ளார். இவர்கள் தலைமுறை தலைமுறையாக அடிமையாக இருக்க வேண்டுமென்று கல்வெட்டு சுட்டுகிறது.
விஜயநகர் ஆட்சியில் வணிகம்: விஜயநகர் ஆட்சிக் காலத்தில் அரபியர்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள் வணிகத்திற்காக இந்தியத் துணைக்கண்டத்திற்கு வந்தனர். அவர்களில் பலர் தென்னிந்திய வணிகர்களின் வெளிநாடுகளுடனான வணிக நடவடிக்கைகள்பற்றி எழுதியுள்ளனர். அக்காலத்தின் கல்வெட்டுகளில் பேட்டைகள், சந்தைகளில் விற்கப்பட்ட பொருள்களை பற்றிய குறிப்புகளை தருகின்றனர். தமிழ்நாட்டின் கடற்கரையோரங்களில் கிடைத்த சீனக்களிமண் சில்லுகளும் இதனை உறுதி செய்கின்றன. இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுகுன்றத்தின் ஒரு கல்வெட்டு செய்தியளிக்கின்றது. அதில் திருக்கழுகுன்றம், சதிரவாசன்பட்டினம் என்ற இரு ஊர்கள் அரசுக்கு அளிக்க வேண்டிய வரிகள் பற்றி பேசுகிறது. அவ்வரிகளை குமாரகம்பனோ உள்ளூர் ஆட்சியரோ அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வரிகள்: பட்டடை நூலாயம், ஆட்டை- சம்மதம் (அதாவது ஒரு ஆண்டுக்கான வரி), பேர்- சம்மதம் (அதாவது தனிநபர் செலுத்த வேண்டியவரி), மாவிரட்டை அதியமாதம் (அதாவது குறிப்பிட்ட மாதங்களுக்கு இடையில் அளிக்கப்பட வேண்டிய வரி). தவிர, நெய்யப்பட துணிகளுக்கு நெசவாளர்கள் வரி செலுத்த வேண்டியிருந்தது. இவர்கள், ஒராண்டுக்கு மொத்தமாக 70 பணம் செலுத்த வேண்டியிருந்தது.
மற்றோர் கல்வெட்டு கோயில் முகவருக்கு வரி செலுத்த வேண்டிய பல குழுக்களை குறிக்கிறது. அவை: செட்டியள் (வணிகர்கள்), கைக்கோலர் (நெசவாளர்), கவரையாள் (வணிகர்கள்), கச்சவாடவாணியர் (சில்லரை வணிகர்), செக்குவாணியர் (எண்ணை வணிகர்), சேனைக்கடையர் (வெற்றிலை வியாபாரி). பிறிதொரு கல்வெட்டு மேற்குறிப்பிடப்பட்ட பட்டினம்பற்றிய கூடுதலான செய்திகளைத் தருகிறது. இது, 3 வெவ்வேறு குழுக்களின் செயல்களை விளக்குகிறது. திருக்கழுகுன்றத்தின் ஊரவர்கள், வெளியிடங்களில் இருந்துவந்த வணிகர்கள் (இவர்கள் பரதேசிகள் என்று அழைக்கப்பட்டுள்ளனர்), நானாதேசிகள் (இவர்கள் பல திசைகளில் இருந்தும் வணிகம் செய்ய வந்தவர்கள்) அனைவரும் திருக்கழுகுன்றத்தின் மலை மேலுள்ள பெருமாள்கோயிலை செப்பனிடுவதற்கு முயற்சி எடுத்துள்ளனர். தங்களின் வணிகப் பொருள்களுக்கு (முத்து, துணி, எண்ணை) அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினை கோயிலை செப்பனிடும் வேலைக்கு பயன்படுத்த முடிவெடுத்தனர். அவ்வணிகப் பொருள்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்தவை.
செங்கல்பட்டு வட்டாரத்தின் நாகலாபுரத்து கல்வெட்டு இதுபோன்றதொரு செய்தியினைத் தருகிறது. அங்கிருந்த வணிகர்கள் கரியமாணிக்க பெருமாள் கோயிலில் நிகழ்த்தப்படும் விழாவிற்கான செலவினை ஏற்கத் தலைப்பட்டனர். இவ்வணிகர்கள், வடக்கிலிருந்து வந்த வைசியர்கள். அவர்கள் கூட்டாக பட்டணஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களின் பெயர்கள்: சித்தம் செட்டியார், இலக்ஷ்மிபதி செட்டியார், பட்டபிள்ளை செட்டியார்,, பழவேற்காடு (புலிகாட்) ஸ்வாமிகள், நாராயண செட்டியார், திருவடிப்பிள்ளை செட்டியார். ஆனால், விழாவிற்கான செலவினை ஊர்மக்களிடமிருந்து வசூலித்தனர். அனந்தநாராயணபட்டினம் என்ற பழவேற்காடு துறைமுகத்தில் தொங்குகப்பல் என்ற ஒருவகை கப்பலிடமிருந்து, துணி மூட்டைகளை ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு வரிவசூலிக்கப்பட்டது. இது, அயல்நாட்டு வணிகத்தோடு தொடர்புடையது. திருப்பதியிலுள்ள ஒருகல்வெட்டின்படி 9வகையான பொருள்களுக்கு அரசாணை வரிவிலக்களித்தது. அப்பொருள்கள், நவசரண்ய சவர்க்கம் தெப்பத்து சரக்கு எனப்பட்டது. இவை வெவ்வேறு இடத்திலிருந்து வந்த மணப் பொருள்கள். அவற்றின்மேல் வசூலிக்கப்பட்ட வரிகளின்பெயர்கள்: ஆயம், உள்ளாயம், பேராயம், அனுப்பு, மகைமை, மூலைவீசம், தரகு போன்றவை. இதுபோன்று அச்சுதப்ப நாயக்கரின் ஆணையினால் காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரநாதர், காமாக்ஷியம்மன் கோயில்களுக்கு வரும் சில பொருள்களுக்கு வரிவிலக்களித்தார். அப்பொருள்கள்: கற்பூரம், புனுகு, கஸ்தூரி, பன்னீர், குங்குமப்பூ, சாம்புராணி, சல்லாபட்டு, பட்டாவளி.
தமிழ்நாட்டில் சீனக் களிமண் சில்லுகள்:9-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை உலகின் பல இடங்கில் சீனக் களிமண் சில்லுகள் கிடைக்கின்றன. மன்னார் வளைகுடாவின் பெரியபட்டினத்தில் 1000 சீனக் களிமண் சில்லுகள் கிடைத்துள்ளன. இவற்றில், சுமார் 500 சில்லுகள் தரைமேற்பரப்பிலேயே கிடைத்தவை. இவை, சீனாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சூளைகளில் சுடப்படவை. தரைமேல் கிடைத்தவை, 9-10 ஆம் நூற்றாண்டினை சார்ந்தவை. இவை, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் உள்ளன. பழையகாயல், தேவிபட்டினம், நாகபட்டினம் போன்ற இடங்களில் அகழாய்விலும் சீனக்களிமண்சில்லுகள் கிடைத்தன. இவை 16-ஆம் நூற்றாண்டினை சார்ந்தவை. கும்பகோணத்தருகேயுள்ள தாராசுரம் கோயிலின் உள்ளாளையிலும், வேலூர்கோட்டையிலும் இதுபோன்ற சில்லுகள் கிடைத்தன. இவற்றின் காலம் 17-18-ஆம் நூறாண்டுகள். கங்கை கொண்ட சோழபுரத்தின் அகழாய்வில் 11-12-ஆம் நூறாண்டினை சார்ந்த சில்லுகள் கிடைத்தன.
சமூக முரண்: 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இரு வெவ்வேறு சமூகக்கூட்டங்களுக்கு இடையில் முரண்பாடு (conflict) இருந்தது. ஒருபுறம் விஜயநகர் ஆட்சியரும், நிலக்கிழார்களும் மறுபுறம் விவசாயிகளும் கைவினைஞரும் இருந்தனர். இது தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்பட்ட ஒரு சமூக மாற்றம். 16-ஆம் நூற்றாண்டில் நாயக்கராட்சியில் ஐரோப்பியரின் வணிக நடவடிக்கை நிறுவனப்பட்டது (institutionalised). இது, இன்னொரு மாற்றம். இப்போக்கு தென்னிந்தியாவின் பொருளியலையும் மாற்றியது. இக்காலகட்டத்தின் கடல் தாண்டிய வணிகத்தில் துணி, மணப்பொருள்கள், குதிரைகள் முக்கியம் பெற்றன. 17-ஆம் நூற்றாண்டின் விஜய நகராட்சியின் வீழ்ச்சியும் தொடர்ந்து வந்த ஐரோப்பியரின் அரசியல்தலையீடும் அயல்நாட்டுவணிகத்தினை வீழ்த்தின. இதனாலும் சமூகமாற்றம் உண்டானது. இம்மாற்றம், முன்பிருந்த சமூகக் கட்டமைப்பினை உடைத்தது. அடுத்து, தென்னிந்தியாவுடன் இயைந்து தமிழ்நாடு அடுத்த கட்ட மாற்றத்திற்குள் புகுந்தது. அதற்கு காலனிய காலம் வழி திறந்தது.
- கி.இரா.சங்கரன்