முள்ளிவாய்க்கால் முற்றழிவைப்போல மீண்டும் ஓர் இன அழிப்பு தமிழ்நாட்டில் தொடங்கி விட்டது. குருதி சிந்தாமல் கொத்துக் கொத்தாக மக்களைக் காவு வாங்காமல் ஓர் இன அழிப்பு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்பும் அதன் அழுகுரலும் உலகம் எங்கும் கேட்டது. அந்த அழுகுரலும் தமிழர்களின் காதுகளைத் தவிர வேறு எவர் செவிகளையும் எட்ட வில்லை.
அன்று ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பை முன்னின்று பார்ப்பனர்கள்தான், இந்திய அரசுதான் அதே ஆர்.எஸ்.எஸ்.தான் இன்று தமிழ்நாட்டு தமிழர்களை கொன்றொழிக்கும் போரைத் துவங்கி இருக்கிறார்கள். இந்தப் போர் நீண்ட நெடுங்காலமாக நடந்து வந்த போதிலும் இன்று அதன் போர்முறை அச்சம் தருவதாக உள்ளது.
ஈழத்து முள்ளிவாய்க்கால் போர் ஒன்றரை இலட்சம் பொது மாந்தர்களையும் வெள்ளைக் கொடி ஏந்திவந்த தமிழீழப் போராளிகளையும் கொன்று குருதி குடித்தது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் தொடங்கி இருக்கும் போரோ பல கோடிப் பேரின் உயிரை விட்டு விட்டு அவர்களின் மூளையைக் கொன்றொழிக்கப் போகிறது.ஈழத் தமிழர்கள் முள்வேலி மூகாமில் இருந்தாவது வெளியேற முடிந்தது. அனால் இப்பொழுது தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கும் போரின் பாதிப்பிலிருந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் தலைமுறைத் தலைமுறைக்கும் அடிமை முகாமிலிருந்தும் இன இழிவு முகாமிலிருந்தும் பலநூறு ஆண்டுகள் வெளியேற முடியாமல் முடக்கிப் போடும் ஒரு போர் தொடங்கி இருக்கிறது.
இனப் பகைவர்கள் இப்பொழுது தாக்கத் துவங்கி இருக்கும் இலக்கு நம்மைத் தாங்கி நிற்கும் தமிழ்நாட்டு தன்மான தளமாக, அதன் உள் கட்டமைப்பான தந்தை பெரியாரை. தாங்கள் கூறும் பொய்கள் மூலமாகவும் இழிவுரை மூலமாகவும் நம்மைச் சுற்றி வளைத்து தாக்குகிறார்கள் கருங்காலிகள் மூலமாக.
இவ்வளவு நாளும் தெருவில் கழிவுகளைத் தின்று கொண்டிருந்த பன்றிகள் இப்பொழுது வீடுகளுக்குள் நுழைய துவங்கி விட்டன. இதை நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் நம் வீட்டுச் சிறார்கள் உருப்பரையர்களாக சிதைக்கப் படுவார்கள். எதிர் காலத்தில் அவர்கள் மாற்றுத்திறனாளிகளாக வாழ நேரிடும். எனவே நாம் வாளாவிருக்க இயலாது.
பெரியார் என்பவர் தனி மாந்தரோ, இறந்து போன ஒரு மாந்தரோ அல்ல. அவர்தான் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் தன்மான பண்பாட்டுப் போர்க்களத்தின் தலைவர். ஈழப் போர்க்களத்தின் தலைவர் மாவீரன் மேதகு பிரபாகரன் போல தமிழ்நாட்டுப் போர்க்களத்தின் தலைவர் பெரியாதான்.
அந்தப் பெரியார் மீது சின்னத் துரும்பு விழுவதைக் கூட வேடிக்கைப் பார்ப்பவன் தன்குடி முற்றும் சிதைவதை தன் கண்களாலே காண நேரிடும். பெரியார்தான் ஒளிமயமான தமிழ்த்தேசியத்தின் அச்சாணி. அலங்காரத்தையும் ஆர்ப்பரிப்பையும் பார்த்துப் பார்த்து அச்சாணியை இழந்து விடக்கூடாது.
சீமான் ஒரு சில்லறை என்று விட்டு வைத்ததால் தான் அது இன்று பல சில்லறைகளை சேர்த்துக் கொண்டு வழியை செறுக்கிறது.
நேற்று மேதகு தலைவர் பிரபாகரனை சாலையோரச் சமையல் காரனாகக் காட்டிய சீமான் இன்று ஐயா பெரியாரை பொய்யான தகாவல்களைச் சொல்லி இழிவு படுத்துகிறார். அடுத்து தன் வாழ்நாள் எல்லாம் தூயத்தமிழ் வளர்ச்சிக்காகவும் தமிழ் இனத்துக்காகவும் தான் மட்டும் அல்லாமல் தன் குடும்பம் முற்றும் தமிழுக்காகப் பாடுபட வைத்த அய்யா பாவலரேறு பெருஞ்சித்திரனாரையும் இழிவு செய்ய தொடங்கி இருக்கிறார்கள். சீமானின் அடிபொடிகள். எனவேதான் சொல்கிறேன் இது ஒர் இன அழிப்புப் போராட்டம் என்று.
இவர்கள் தமிழ்த்தேசியம் என்ற மூடுதிரைக்குள் ஒளிந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகள். இவர்கள் முகத்திரையைக் கிழித்து நாம் தெருத் தெருவாக இறங்கி பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும்.
இன்று ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் அனைத்து ஊர்களிலும் நுழைந்து விட்டார்கள். அனைத்து வீதிகளிலும் நுழைந்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.
விளக்குப் பூசை, அம்மன் வழிபாடு என்று பெண்களை குறி வைத்து படுத்தி இந்தியா இந்து தேசம் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். அந்தந்த ஊர்களில் இருக்கும் சமயப் பூசல்களை ஊதி பெரிதாக்கி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முரண்களைக் கூரேற்றுகிறார்கள்.
சில சின்னச் சின்ன ஊர்க்கோயில்களில் இந்தி ‘ஓம்’ எழுதப்படுகிறது. முச்சந்தியில் நிறுவப்படுகிறது. இந்துப்பெண்கள் எல்லோரும் தங்கள் நெற்றி வகிட்டிலும் குங்கும் வைத்துக் கொள்ளும் வழக்கம் வந்து நாளாகி விட்டன. ஆண்களில் நிறைய பேர் நடந்தே நேர்ச்சை என்று காலில் செருப்பு இல்லாமல் நெடுந்தூரம் நடந்து கோயில்களுக்குப் போகிறார்கள். இது முன்பெல்லாம் இல்லாத வழக்கம். இது மராட்டியம் போன்ற வடநாட்டு வழக்கம். முப்பது நாற்பது வீடிருக்கும் ஊர்களிலும் திருவிளக்கு வழிபாடு என்று பெண்களைத் திரட்டி மூளைச் சலவை செய்கிறார்கள். இது இந்துமதம், இந்துக்கள் என்கிற பெயர்களில் தமிழர்கள் தமிழுணர்வு குன்றி வடவருக்கு அடிமையாவதை காணலாம்.
எல்லா ஊர் கோயில்களிலும் பட்டரை அழைத்து வந்து குடமுழுக்கு செய்வதும், ஓமகுண்டம் வளர்த்து முதல் பூசை தொடங்குவதும் நடக்கத் தொடங்கி விட்டன.
ஊர்தோறும் நடக்கும் மங்கல நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்கள் முதன்மை பெறுகிறார்கள். பார்பனர்களை ஏற்றுக்கொள்ளத சாதியிலும் கூட இன்று பார்ப்பனர்களுக்கு முன்னிலை கொடுக்கப்படுகிறது. குறிப்பாக மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிலியிம் கூட பூப்படைந்த பெண்ணுக்கு தலைக்கு தண்ணீர் ஊற்றுவதை பார்பனர் ஊற்றி தீட்டு கழிக்கும் முறையைக் கொண்டு வருகிறார்கள். திருமண நிகழ்ச்சிகளில் பெற்றோர்களின் பாதங்களை மணமக்களை கழுவ செய்து அடிமை முறையை புகுத்துகிறார்கள். இது நாள்வரைக்கும் மணமக்கள் பெற்றோர் பாதங்களைக் கழுவும் நிகழ்வு சிற்றூர்களில் எங்கும் நடந்ததில்லை. இது நாளாவட்டத்தில் குருவணக்கம் என்று பார்ப்பனர்கள் தங்கள் காலைக் கழுவச்சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தும்.
பார்ப்பானே மேலோன், உயர்ந்தோன் என்ற எண்ணம் ஊன்றப்படுகிறது. இதை செய்வதற்கு வடநாட்டு ஆர்.எஸ்.எஸ். குழுக்கள் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் துணையோடு தமிழ்நாட்டு பெருங்கோயில்களில் தங்கியிருந்து திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். இதையெல்லாம் உணராமல், தெரியாமல் இது பெரியார் பூமி, பெரியார் மண் என்றும் நாம் கண்டுக் கொள்ளாமல் இருந்தால் வடவன் போடுவதைத் தின்று விட்டு பொதி சுமக்கும் கழுதைகளாக கால் கட்டுகளோடு நம் வருங்கால தலைமுறைகள் வாழ நேரிடும்.
பெரியாரைச் சிறுமைப்படுத்தும் சீமானின் சின்னத்தனத்தை நாமும் களம் இறங்கி எதிர்கொள்ள வேண்டும். அதற்கு ஊர் ஊராக பெரியார் சிந்தனைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
எழுத்துலகத்தில் புதிய சிந்தனைகள் முளைவிட பெரியாரும் திராவிடர் அமைப்புகளும் செய்த பணிகளால்தான் இன்றைய எழுத்துலகின் வான் தோய்ந்த வளர்ச்சி. ஆனால் இன்று அழுகிய பதரொன்று பெரியாரை இழிவு செய்கிறது. அதை நவீன இலக்கிய வாதிகளெல்லாம் வாய் மூடி ஊமையர்களாக உறைந்து கிடக்கிறார்கள். சமுகத்தை அடிமையாக்கி விட்டு இவர்கள் என்ன புத்திலக்கியத்தைப் படைத்து விடப்போகிறார்களோ தெரிய வில்லை.
வடவன் கொடுக்கும் சாகித்திய அகதாமி விருதுகளுக்காக கறிக்கடை நாய்கள் போல காத்துக் கிடக்கிறார்கள். பெரியாரை இழிவு செய்து அதன் மூலம் குமுகத்தின் சமநிலையை குலைத்து சாதியை வளர்க்கத் துணைபோகும் திரைக்கதை உரையாடல் எழுதும் சீமானுக்கும், இன்றைய நவீன இலக்கிய வாதிகளுக்கும் அதிக வேறுபாடு இருப்பதாக தோன்றவில்லை.
இன்றைய நவீன இலக்கிய வாதிகளில் நிறைய பேர் ஆர்.எஸ்.எஸ்.சின் இலக்கிய அணி தலைவர்கள் போலவும் செயலாளர்கள் போலவும் தான் செயல் படுகிறார்கள். அவர்களின் எழுத்தை நுணுகி ஆய்ந்தால் அதை நாம் நன்குணரலாம். பின்நவினத்துவம் என்கிற பெயரில் மீண்டும் மீண்டும் புராணங்களையே எழுதும் இவர்கள் புழுத்து பூசணம் பூத்த கருத்துகளையே பக்கம் பக்கமாக எழுதி குவிக்கிறார்கள். அதனால் என்ன பயன்? புதிதாக புத்தகம் படிக்க எழுத்துலகத்தில் நுழைபவர்களை தங்கள் எழுத்தின் அழகியல் மாயங்களால் அவர்களை சமூக அக்கறை உள்ள நல்ல இலக்கியங்களின் பக்கமும் பகுத்தறிவுகளின் பக்கமும் வரவிடாமல் செய்யும் சூழ்ச்சியே தவிர வேறொன்றும் இல்லை.
திராவிட இயக்கங்களை, இயக்கத் தலைவர்களை வண்டி வண்டியாய் பகடி செய்யும் அந்த எழுத்தாளர்கள் ஒரு இடத்தில் கூட பார்ப்பனர்களையோ அவர்கள் செய்யும் முட்டாள் தனத்தையோ பகடி செய்வதில்லை. ஏதாவது ஒரு வகையில் இவர்கள் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக எழுகிறார்கள். பேசுகிறார்கள். செயல் படுகிறார்கள் சீமான் பேசும் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவர் களாகவே கள்ள மௌனம் கடைபிடிக்கிறார்கள்.
எனவே திராவிட உணர்வாளர்களே திரண்டெழுவோம். களம் காண்போம். தெருத்தெருவாக பெரியாரைக் கொண்டு சேர்ப்போம்!
- இறை.ச.இராசேந்திரன்