தமிழ் நாட்டில் ஆன்மிக அடையாளத்தைக் கடந்து மொழி, சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அவரின் நூற்றாண்டு இது. தற்போது அவரின் அடிச்சுவட்டில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செம்மையுறப் பணியாற்றி வருகிறார்.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினத்தின் 46வது குருமகா சந்நிதானமாகப் பொறுப்பேற்றுள்ள தவத்திரு பொன்னம்பல அடிகளார் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர். சமூக நிகழ்வுகளில் தம்மை இணைத்துக் கொண்டு மக்கள் நலப் பணியாற்றுபவர். இனியவர்; எளியவர்; அறிவியல் பயின்று, ஆன்மீகம் பழகி, மனிதம் விதைத்திடும் தமிழ் மாமுனிவராக வலம் வருபவர். அவரின் மணிவிழா ஆண்டு இது. மதுரை வானொலி நிலையத்தில் நாள்தோரும் இவர் காலை நேரத்தில் வழங்கிய கருத்துரைகள் ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ எனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

mannil nalla vannam vazhalamஇன்று போல் கேள்வி – காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வளர்ச்சி பெறாத காலத்தில், வானொலிதான் செய்தி அறியும், பொழுது போக்கும் வெகுமக்கள் ஊடகமாகத் திகழ்ந்தது. இன்றும் கூட உழைப்பாளர்களின் விருப்பமிகு ஊடகமாகப் ‘பண்பலை’ வானொலிகளே விளங்குகின்றன. அந்தவகையில் மக்களால் அதிகம் விரும்பிக் கேட்கப்படும் நேரத்தில் ஒலிப்பரப்பானச் சிற்றுரைகளின் தொகுப்பு இது. 2021 ஆம் ஆண்டு உழைப்பாளர் தினத்தில் தொடங்கிய இந்த உரைப் பொழிவிலிருந்து ‘அறுபது’ கருத்துரைகள் நூலாக்கம் பெற்றுள்ளன.தவத்திரு அடிகளார் எழுதுவது போலவே பேசக் கூடியவர். இதை வாசிக்கும் போது அவரே நம் முன் பேசுவதுபோல் இருப்பதை உணரமுடியும். இந்தப்பணி நுட்பமானது. சிக்கலானது. குறிப்பிட்ட ஒரு சில நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டியக் கருத்தைச் சொல்ல வேண்டும். சுவைபடவும் சொல்ல வேண்டும். இதில் அடிகளார் வெற்றி பெறுகிறார்.

மேடைப் பேச்சில் இன்று நிறைய மாற்றங்கள். அடுக்குமொழி, உரத்தக்குரல், வர்ணனை, வியக்க வைக்கும் கர்ஜனை… என்பதெல்லாம் இன்று மக்களால் விரும்பப் படுவதில்லை. அவசர உலகம். இரைச்சல்களின் வெளி. அமைதியாக, இதயத்தைத் தொடுவது மாதிரி காதலன் –காதலிக்குச் செய்தி சொல்வதுபோல் பேசுவதே வரவேற்கப் படுகிறது. சொற்களின் தெறிப்புகளாக இல்லாமல் சிந்தனைத் துளிகளை நிகழ்வுக் காட்சிகளாகச் சொல்வதையே பெரிதும் விரும்புகின்றனர். எளிய நேர் பேச்சுப் போல மேடைப்பேச்சு அமைந்தால் இன்பம். இயல்பிலேயே அடிகளாரிடம் இந்தத் தன்மை அமைந்திருக்கக் காணலாம். புன்முறுவலுடன் (இனிய சொற்களால்) கசப்பு மருந்தைக்கூடிய சுவைபட மொழியும் வல்லமை மிக்கவர்.

இந்தத் தொகுப்பு தமிழ் மேடைப் பேச்சின் இன்றைய போக்கின் ‘ஒரு சோற்றுப் பதமாகவும்’ அமைந்து விடுகிறது. திருக்குறள், தேவாரம், திருவாசகம், குரான், அறிஞர்களின் மேற்கோள்கள் என ஆங்காங்கே மிகப் பொருத்தமாக இணைத்துவிடுகிறார். சிலவற்றில் நகைச்சுவை உண்டு. ‘பஞ்ச்’ என்பது போல மனதில் ‘தைக்கும்’ தன்மைகளும் உண்டு. இவர் உரைகளின் தனிச்சிறப்பு ‘குறுங்கதைகள்,’ மிக நேர்த்தியாக பாட்டி பேரனுக்குச் சொல்வது போல மக்களுக்கு எளிமையாகச் சொல்லி விடுகிறார்.

‘உழைக்கும் மக்களின் உன்னதத் திருநாள்’ எனும் முதல் பதிவு உழைப்பாளர் நாளைக் குறித்து அமைந்துள்ளது. 1886 மே ஒன்றாம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ‘எட்டுமணி நேர வேலை’ என்பதை வலியுறுத்தி நடைபெற்ற வீரஞ்செறிந்தப் போராட்டத்தை உணர்வுப் பூர்வமாகச் சொல்கிறார். போராட்டத்தில் தலைமை தாங்கி மரண தண்டனைப் பெற்ற ஆல்பர்ட் பார்ஸன், ஜார்ஜ் ஏங்கல், ஆகஸ்ட் ஸ்பைஸ், அடொல்ஃப் ஃபிஷர் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

அன்றைய உழைப்பாளின் தேவை எவையென, ஜார்ஜ் ஏங்கல் சுட்டுகிறார்; “இன்றைக்கு தொழிலாளர்களுக்கு என்ன தேவை? வேலை, ரொட்டி, அமைதி. இவை மூன்றுதான். இவை கூட இவர்களுக்கு உத்தரவாதப்படுத்தப்படவில்லையே.” (ப. 23) அதேபோல பிரிதொரு இடத்தில் உழைப்பு பற்றிப் பேசும்போது நபிகள் நாயகம் கூறும், “உழைத்துக் காய்த்துப் போன இந்தக் கரங்களிலே தான் நான் இறையருளைக் காண்கிறேன்” என்பதைக் கூறுகிறார் (ப. 25) கோயில்கள் சமுதாயத்தில் எப்படி இருந்தன என்பதை இப்படிச் சுட்டுகிறார்.” மனித சமூகம் கூடிக் கலந்து வாழுகிற உறைவிடம் அது. மக்களாட்சித் தத்துவத்தைக் கற்றுத்தந்த இடம் திருக்கோயில் வளாகம். கல்வி கற்றுத் தருகிற மையங்கள் திருக்கோவில் வளாகம். இயல், இசை, நாடகம் என்ற முக்கலையும் வளர்த்த இடம் திருக்கோயில் வளாகம். நீதி வழங்குகிற சபைகள் திருக்கோயில்களிலேயே இருந்தன.” (ப. 28)

அன்பு, நட்பு, கல்வி, நன்றி மறவாமை, மனித உறவுகளைச் சரியாகப் பேணுதல் முதலியவற்றை பல உரைப்பதிவுகளில் வலியுறுத்துகிறார்.

“உள்ளே வருகிற காற்றை வெளியே அனுப்புகிற புல்லாங்குழல் வழி, அந்தக் காற்று இனிய கீதமாக மாறுகிறது; புல்லாங்குழலில் இசை இனிய கீதமாக எல்லோருக்கும் மகிழ்வைத் தருகிறது. ஆனால், காற்றைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிற தோலாலான பந்து எல்லோரது கால்களிலும் உதைபடுகிறது. நாம் புல்லாங்குழலைப் போல் இனிய இசையால் மற்றவர்களை மகிழ்விக்க இருக்கிறோமா? அல்லது பந்தைப் போல் பிறர் காலில் உதைபடப் போகிறோமா? நாம் தான் தீர்மானிக்க வேண்டும்” (ப.51)

அடிகளாரின் இந்த உரைகளில் முத்தாய்ப்பாய் பல இடங்களில் தெறிக்கும் சிந்தனைத் துளிகள் மக்கள் பின்பற்றத் தக்கன. “தனக்குக் கிடைக்காதது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் உண்மையான தலைமைப்பண்பு. தான் பெறாததை எல்லோரும் பெற வேண்டும் என்பதுதான் உண்மையான தலைமைப் பண்பு” (ப. 57)

“கற்பதற்கும் வாழ்க்கையில் செயலாக மாறுவதற்கும் இருக்கிறது முரண்பாடு” (ப. 99)

“அன்புக்காக ஏங்கித் தவிக்கிற குழந்தைகளிடம் அக்கறை காட்ட வேண்டியது பெற்றோர்களின் கடமை” (ப. 126)

“மனிதன் கால்களால் மட்டும் நடப்பவனல்ல; கருத்துகளால் நடக்க வேண்டியவன்; சிந்தனையால் நடக்க வேண்டியவன்.” (ப. 134)

அடிகளார் இன்றைய மக்களின் வாழ்வியலை நுட்பமாக உள்வாங்கி அவற்றில் உள்ள பிழைகளை, போதாமைகளைப் போக்கிட விழைகிறார். கணவன் – மனைவி, பிள்ளை – பெற்றோர், நண்பர்கள், சமுதாயம், ஆன்மீகம், கல்வி ஆகிய எல்லாவற்றிலும் அல்லன ஒதுக்கி நல்லன காண ஆற்றுப்படுத்துகிறார்.

பின்பற்றத் தக்கவைகளை அழுத்தமாகக் கவனப்படுத்துகிறார். அன்பை, நேயத்தை விதைக்கிறார். மனித உறவுச் சிக்கல் செடுக்குகளைக் களைய முனைகிறார்.

குறைந்த நேரத்தில் வாசித்து விடக்கூடிய, எளிமையாக எல்லோரும் உள்வாங்கக் கூடிய குறுங்கருத்துரைகளின் தொகுப்பு இந்நூல் பரவலான வாசிப்புக்கு உதவும்.

(மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் / தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் / என். சி. பி. ஹெச் வெளியீடு / ரூ190/-)

- பேராசிரியர் இரா.காமராசு, தலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்