முன்பு குழந்தை இலக்கியம் அல்லது சிறுவர் இலக்கியம் என்று அழைக்கப்பட்டதே இப்போது சிறார் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது.

சிறார் இலக்கியம் வயது பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட வேண்டும் என்ற கருத்து இப்போது கவனத்தில் கொள்ளப்படுகிறது.

அதனடிப்படையில் சிறார் இலக்கியத்தை மழலைப் பருவம் (3-6 வயது), சிறுவர் பருவம் (7-12 வயது), பதின் பருவம் (13-18 வயது) என முப்பெரும் பிரிவுகளாக வகுத்துக் கொள்ளலாம்.

குழந்தை இலக்கிய வரலாறு எழுதிய பூவண்ணனும் குழந்தை இலக்கிய வளர்ச்சி குறித்து கட்டுரைகள் எழுதிய கவிஞர் செல்ல கணபதியும் 7 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுதப்பட்டவற்றை சிறுவர் இலக்கியம் என்றே குறிப்பிடுகிறார்கள்.

"ஏடு தூக்கிப் பள்ளியில்

இன்று பயிலும் சிறுவரே!

நாடு காக்கும் தவைவராய்

நாளை விளங்கப் போகிறார்!"

என்று குழந்தைக் கவிஞரும் 7 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளையே குறிப்பிடுகிறார்.

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் மழலைப் பருவத்தினருக்கும் பதின் பருவத்தினருக்குமான படைப்புகள் குறைவாக உள்ளன என்பது உண்மை. சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள், சிறுவர் நாவல், சிறுவர் நாடகம் என்றே அதிகம் எழுதப்படிருக்கின்றன. குழந்தைகள் 7 வயதில் தான் புத்தகத்தை வாசிக்கத் துவங்குகிறார்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.             

சிறுவர்கள் வாசிக்கும் நுழைவாயிலில் இருப்பதால் அவர்களுக்கு நிறைய இதழ்கள் அவசியம். ஊஞ்சல், பொம்மி, சம்பக், பெரியார் பிஞ்சு தவிர இந்து தமிழ்ப் பத்திரிகையில் இணைப்பாக வரும் மாயாபஜார், தினமலரின் சிறுவர் மலர் ஆகியவை மட்டுமே கண்களில் படுகின்றன.  

இதில் "ஊஞ்சல்" பள்ளிக் கல்வித் துறை நடத்தும் மாதமிருமுறை இதழ். 4-5, ஆம் வகுப்பு மாணவர்களுக்காக வருகிறது. ஊஞ்சல் பள்ளியிலும் நூலகத்திலும் கிடைக்கிறது. இருபது ரூபாய் விலையுள்ள தனி இதழ் சந்தா கட்டினால் வீடு தேடியும் வரும்.

"ஊஞ்சல்" இதழ் திறமையான சிறார் எழுத்தாளர்கள் யெஸ்.பாலபாரதி, விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு நடத்தப்படுவதால் சிறப்பாக உள்ளது.        

சிறுவர்களை ஈ£¢க்கும் வேறுபாடுகளைக் கண்டுபிடி, விடுகதைகள், படக்கதை, மொழி விளையாட்டுகள், மாணவர்கள் வரையும் படங்கள், காகிதக் கலை, குட்டி கதைகள் ஆகியவை ஊஞ்சலில் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன.

ஆளுமைகளைப் பற்றிய சிறு கட்டுரைகள், வரலாற்று புகழ்மிக்க ஊர்களைப் பற்றிய செய்திகளும் அறிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன. தரமான தாளிலும் வண்ணத்திலும் "ஊஞ்சல்" வருவது கூடுதல் சிறப்பு.

அழ.வள்ளியப்பா காலத்துக்குப் பிறகு சிறார்களுக்குப் பாடல்கள் எழுதுபவர்கள் குறைந்து போய் விட்டார்கள் என்பது வெளிப்படை.

பழைய பாடல்களை மட்டுமல்ல, புதிய சிறார் பாடல்களையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம்.  

சிறார் இலக்கியத்தில் பாடல்களே முதன்மையானவை. குழந்தைகளைக் கவரும் பாடல்களைத் தருபவர்களே முதன்மை இடத்தைப் பெற முடியும்.  

"குழந்தைகளின் இயல்புகளான துள்ளல், மகிழ்ச்சி, கற்பனை ஆகியவற்றை பாடல்களே மீட்டெடுக்க முடியும்" என்று நம்புகிறவர் பாவலர் வெற்றிச் செழியன்.          

அவர் தந்துள்ள பாடல் நூல்களான மழலையர் மணிப்பாடல்கள், விடுதலைக் கிளிகள், அன்பின் வெற்றி (கதைப் பாடல்கள்) என்ன, என்ன அது என்ன? (விடுகதைப் பாடல்கள்) ஆகியவை கவனத்துக்குரியன. இதில் மழலையர் மணிப்பாடல்கள் ஷிஸிவி தமிழ் பேராயத்தின் அழ.வள்ளியப்பா விருது பெற்றது. இந்நூலில் மழலையர், சிறுவர் ஆகிய இரண்டு பருவத்தினருக்குமான பாடல்கள் உள்ளன.

இத்தொகுப்பிலுள்ள "சுண்டைக்காய், சுண்டைக்காய், சின்னஞ்சிறிய சுண்டைக்காய். நல்லதொரு வேடிக்கைப் பாடல், எங்கள் பாட்டி வருகிறார்" பாடலும் அப்படிப்பட்டதுதான். "விடுகதைப் பாடல்கள்" வித்தியாசமான முயற்சியாகும்.

கவிஞர் விண்மீன் குறுகிய காலத்தில் மூன்று சிறுவர் பாடல்களைத் தந்தவர். வண்ணத்துப்பூச்சி, வான்மலர்கள், எங்க பூமி பசுமை பூமி ஆகியவே அவை.

சொற்களின் வசீகரத்தால் ஒரு குழந்தையை புன்னகை பூக்க வைப்பதும் நெஞ்சில் பதிய வைப்பதும் ஒரு நல்ல பாடலுக்கு அழகு. அந்த அழகு விண்மீனுக்கு வசப்படத் தொடங்கியிருப்பதாக பாவண்ணன் பாராட்டியிருக்கிறார்.

8 முதல் 12 வரிகளுக்குள் விண்மீன் தன் சிறுவர் பாடல்களை எழுதியிருப்பது சிறப்பு.

பொம்மி, பெரியார் பிஞ்சு ஆகிய இதழ்களில் தொடர்ந்து சிறுவர் பாடல்களை எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.

பாவண்ணனின் யானை சவாரி, மாம்பழம் ஆகிய பாடல் நூல்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு வண்ணம் தீட்டுபவை.     

"யானை சவாரி" குழந்தையின் அனுபவத்தை அழகாகச் சொல்லுகிறது. "பெரியப்பாவுக்கு எதுவும் தெரியாது" என்ற பாடல் குழந்தையின் வியப்பை வெளிப்படுத்துகிறது.

கிருங்கை சேதுபதியின் "சிறகு முளைத்த யானை" (குழந்தைப் பாடல்கள்) 2018-ஆம் ஆண்டு பால புரஸ்கார் விருது பெற்றது.

இந்நூலில் தலைப்புகளில் 44 பாடல்கள் உள்ளன. "கேள்வியும் பதிலும்" தலைப்பில் வரும் பாடல்கள் சிறுவர்கள் வாசிக்க சுவையானவை. நூலின் தலைப்பு பாடலான "சிறகு முளைத்த யானை" நல்லதொரு கற்பனை.

சுகுமாரனின் "தங்கச்சிப் பாப்பா" பாடல் நூல் பளபளப்புத் தாளில் வண்ணத்தில் அச்சிட்டு வடிவத்தில் சிறந்து விளங்குகிறது. காக்காவுக்குக் கல்யாணம், பாட்டி கதை, புத்தகம் படி, பாட¢டும் கதையும், மூக்குப் போச்சு, வார்த்தைகள் என 10 பாடல்கள் இசை அமைக்கப்பட்டு அனிமேஷனுடன் வந்துள்ளன. "தங்கச்சிப் பாப்பா" கன்னி முயற்சி. சமீபத்தில் வந்துள்ள ரா.ராணி குணசீலி எழுதிய "ஊர் சுற்றலாம்" சிறுவர் பாடல்கள் நூலும் குருங்குளம் முத்துராஜா எழுதிய "காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக் கூடம்" சிறுவர் பாடல்கள் நூலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ராணி குணசீலியின் ஒவ்வொரு பாடலிலும் இசை இருப்பதோடு ஒரு பிரியமும் இருக்கிறது, என்கிறார் கல்வியாளர் ச.மாடசாமி. 'வண்டிச் சவாரி' - 'பம்பரம்' ஆகிய பாடல்களை சிறுவர்கள் விரும்பிப் பாடமுடியும்.

குருங்குளம் முத்து ராஜாவின் "காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக் கூடம்" பாடலில்

"பள்ளிக் கூட மணி அடிக்க

என்ன செய்வது?

பக்குவமாக நரியும் வந்து

ஊளையிட்டது"

என்று வரும் வரிகள் சிறுவர்களின் மனதில் அழகான கற்பனையை விரிக்கிறது. "எப்படி இப்படி ஆசை? "பலாப்பழம்" , தட்டான், கத்துக் கொடுங்க, அழகு அணில் குட்டி ஆகிய பாடல்கள் கற்பனையும் அழகும் நிறைந்தவை.

முத்துராஜாவின் பாடல்கள் எளிமை, சந்தம் ஆகிய அம்சங்களில் முழு மதிப்பெண்களைப் பெற்று விடுகின்றன என்று மதிப்பிடுகிறார் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன். அது மிகையல்ல.

தமிழில் சிறார் நூல்கள் நிறைய வருகின்றன. அவை சிறார்களால் வாசிக்கப்படுகின்றனவா? என்ற கேள்வி சமூகத்தில் எழுந்தது. கேள்விக்கு சில பதில்கள் கண்பிடிக்கப்பட்டன.

சிறார் நூல்கள் உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் சிறார்களைக் கவர வேண்டும். சிறார்களின் வயது பிரிவுகளை கணக்கில் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தரப்பட்ட பதில்கள் முக்கியமானவை.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் , ஜனவரி 2022 முதல் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் நன்னெறிக் கல்வியைக் கற்பிக்கவும் அறம்சார் சமூக விழுமியங்களை வளர்த்தெடுக்கவும் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தில் 100 குழந்தை இலக்கிய நூல்களைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக 59 நூல்கள் வந்துள்ளன. அந்நூல்கள் வயது பிரிவுகளின் அடிப்படையில் வந்துள்ளது பாராட்டத்தக்கது. இவற்றுள் சில நூல்களைப் படிக்கும் வாய்ப்பு பெற்றேன்.           

5-8 வயது சிறார்களுக்கான "பாட்டும் தொகையும்" (வெற்றிச் செழியன்) ஜீ.பூம்..பா., என்ன சாப்பிடலாம்? (வெற்றிச் செழியன்) ஆகிய இரண்டும் மூத்தோர் உதவியின்றி படிக்க இயலாதவை.

பெரிய அளவில் வண்ணப்படங்களுடன் தேவையான செய்திகளுடன் இவை உள்ளன.

எனது உரிமைகள் என்ன? (வி.ஷி.பொற்கொடி) என்ற நூலும் கடினமான ஒன்று . வாக்கிய அமைப்புகள் தெளிவாக இல்லை. உள்ளடக்கம் கூட 5-8 வயதிற்குரியது அல்ல. 9-11 வயது சிறார்களுக்கான நூல்களான இயற்கையின் நேயன் பாரி, விதைப்பதே முளைக்கும், தோல்வியும் தவறல்ல, ஐந்து நிலங்கள் ஆகிய 4 நூல்களும் வெற்றிச் செழியன் எழுதியவை.

இயற்கையின் நேயன் பாரி நூல் அச்சு மற்றும் பாக்கள் செய் நேர்த்தி சிறப்பாக உள்ளது.

9-11 வயது சிறுவர்களுக்கானது அல்ல.

ஐந்து நிலங்கள் நூல் மூத்தோர் உதவியுடன் படிக்கக் கூடியது.

தோல்வியும் தவறல்ல, நல்ல கதை 9-11 வயது குழந்தைகளால் படிக்க முடியும்.

"விதைப்பதே முளைக்கும்" திருக்குறள் கதை எழுதப்பட்டதில் ஏதோ குழப்பம் தெரிகிறது.

பேருதவி (கொ.மா.கோதண்டம்) தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு பற்றி கதை. நல்ல கருத்தும் அமைந்த கதை.

12-14 வயது சிறார்களுக்கான கதை நூல்களும் வந்துள்ளன. அவற்றுள் 8 நூல்களைப் படித்தேன். பல நூல்கள் சலிப்பூட்டுபவைகளாக உள்ளன. வயது பிரிவுகளின் அடிப்படையில் நூல்கள் வராமல் மாறி மாறி வந்துள்ளன.

சிறார்களை புத்தகங்கள் வாசிக்க வைப்பதற்கான இன்னொரு முயற்சி வாசிப்பு இயக்கம். பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் முன்னெடுத்த இயக்கத்தை முன்னாள் துணை வேந்தர் வே.வசந்தி தேவியும், கல்வியாளர் ச.மாடசாமியும் வழி நடத்தினர். சென்னையில் மூன்று நாட்கள்

பயிற்சிப் பட்டறை நடந்தது. கதைகள் உருவாயின.

அக்கதைகளைச் சிறார் வாசிப்பு நூலாக "புக்ஸ் ஃபார் சில்ரன்" வெளியிட்டுள்ளது. எளிய மொழி, சிறு சிறு வாக்கியங்கள், படங்களுடன் இச்சிறு புத்தகங்கள் வந்துள்ளன.

ஆந்தையும் மரங் கொத்தியும் (ஈரோடு சர்மிளா), பறக்கும் பூ நாய் (ஞா.கலையரசி), வானில் பறந்த மகிழ் (ஆதி வள்ளியப்பன்), நிலாவின் பொம்மை (ச.முத்துக்குமாரி), ஊசி (சக.முத்துக்கண்ணன்) ஆகியோர் எழுதிய நூல்களை வாசித்தேன், வாசிப்பு இயக்கத்தின் நோக்கத்தின் வடிவமாக இந்நூல்கள் அமைந்துள்ளன. வண்ணப்படங்களுடன் வெளிவந்துள்ள இச்சிறு நூலின் விலை ரூ.20 தான்.

சிறுவர் வயதிற்கான கதைகளை விழியன் எழுதியிருக்கிறார். "யாச்சியின் குமிழி ஆசை", "பம்பம் டோலேய்" ஆகிய சிறுகதை நூல்களை பெரியார் பிஞ்சு வண்ணப் படங்களுடன் வெளியிட்டுள்ளது. அதென்ன "கியாங்கி டுயாங்கி" தலைப்பு மட்டுமல்ல கதைகளும் வேடிக்கையானவைதான்.

ஞா.கலையரசியின் "மந்திரக் குடை" சிறுவர் நாவல் (32 பக்கங்கள்) எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. மந்திரக்குடை மூலம் காட்டுக்குள் சென்ற தேவி பெறும் அனுபவங்களை நாவல் சொல்லுகிறது.

சுகுமாரன் எழுதிய வண்டு குண்டு (சிறுகதைகள்) எளியநடை, விரும்பிப்படிக்கும் கதை ஓட்டத்துடன் அமைந்துள்ளன. இத்தொகுப்பில் 18 கதைகள் உள்ளன.

'வித்தைக்கார சிறுமி', 'வானத்துடன் டூ' ஆகிய இரண்டு சிறுவர் கதைத் தொகுப்புகள் விஷ்ணுபுரம் சரவணன் எழுதியவை. எளிமை, இனிமை நிறைந்த கதைகள்.

கவிஞர் விண்மீன் எழுதிய "பெட்டி பொம்மை" சிறுவர்களுக்கேற்ற கதைகளைக் கொண்ட தொகுப்பு.

கன்னிக் கோவில் இராஜா சிறுவர்களுக்காக பாடல்களையும் கதைகளையும் நிறைய எழுதியவர். "பட்டாம் பூச்சி தேவதை" கதைகளில் விலங்குகளும் பறவைகளும் பாத்திரங்கள். "ஏழு வண்ண யானை" அருமையான கற்பனைக் கதை சிறுவர்களைச் சிந்திக்க வைக்கும்.    

"அம்மா மனதிலிருந்து ஒரு புத்தகம்" (13 கதைகள்) ரஜினி பெத்து ராஜா எழுதியது. புத்தக வாசிப்பில் ஈடுபாடு காட்டும் ஒரு சிறுமியின் கதை.'ராஜா-ராணி" கதையும் வித்தியாசமான வாழ்க்கைப் பார்வையை சொல்லித்தரும் கதை.

'வால் முளைத்த பட்டம்" கி.அமுதாசெல்வி எழுதிய கதைகள், சின்னச் சின்ன ஆசைகளையும் ஏக்கங்களையும் பேசுகின்றன என்கிறார் கல கல வகுப்பறை சிவா.

இராசகுரு கார் பாலன் எழுதிய "பரி சொன்னால் சரி" கதைத் தொகுப்பில் குட்டி குதிரையை மையப்படுத்திச் சொல்லும் கதை சிறப்பு.

காரை.இரா.மேகலா, பள்ளிக் குழந்தைகளின் ஆர்வங்களை "நாய்க்குட்டிப்பட்டாளம்" தொகுப்பில் கதையாக்கியிருக்கிறார்.

வ.விஜயலட்சுமி எழுதிய "வாலைத் தேடிய பல்லி" தொகுப்பில் 10 சுவையான கதைகள் உள்ளன என்கிறார் தேவி நாச்சியப்பன்.

சரிதா ஜோ சிறார் இலக்கிய உலகிற்கு பாய்ச்சலோடு வந்திருப்பவர். கிளியோடு பறந்த ரோகிணி, சாணி வண்டும் பட்டாம் பூச்சியும், போன்சாய் மரம் ஆகியவை சிறுவர்களுக்கான கதைத் தொகுப்புகளாகும். காடறிதல் நிகழ்ச்சியை நடத்தும் கோவை சதாசிவத்தோடு பயணிக்கிற கதை வாசனை வித்தியாசமானது. கிளியாக மாறிய ரோகிணி எளிய உயிர்களின் கஷ்டங்களைத் தெரிந்து கொள்கிறாள். இவ்வாறு வித்தியாசமான கற்பனைகளைச் சொல்லும் கதைகளும் இருக்கின்றன. கருத்துகள் திணிக்கப்பட்டு திணறும் கதைகளும் இருக்கின்றன.

சிறுவர்களுக்கு ஏற்ற நாவல் "ரோஸியும் வௌ¢ளையம்மாளும்". எளிமையாக, நேரிடையாக சொல்லப்படும் கதை. ரோஸி என்பது நாய், வௌ¢ளையம்மாள் என்பது பூனை. விலங்குகளிடம் பெண் என்றால் ஒதுக்கும் குணம் மனிதர்களிடம் இருப்பதை சுட்டிக்காட்டும் கதை.  

கார்த்திகா முகுந்த் எழுதிய "குட்டி யானைக்கு பச்சைத் தொப்பி" இயற்கையின் செயல்பாடுகளுக்கு இயல்புகளுக்கு செயற்கையான காரணங்களை கற்பனையாகச் சொல்லும் கதைகளைக் கொண்டது. "உயிர்மை" வெளியீடாக வந்துள்ளது.

ஜி.மீனாட்சி "மல்லிகாவின் வீடு" என்ற சிறுவர் நூலுக்காக பால புரஸ்கார் விருது பெற்றவர். விமர்சனங்களை சந்தித்தவர். "பரிசலில் ஒரு பயணம்" நீண்ட சிறுகதைகளைக் கொண்டது.

தேவி நாச்சியப்பன், குழந்தைக் கவிஞரின் மகள், பால புரஸ்கார் விருது பெற்றவர். "பனிலிங்கமும் படைவீரரும்" நூலிலுள்ள கதைகள் பள்ளிக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பு வளர்ச்சிக்கும் உதவுபவை.

"ஒல்லி மல்லி குண்டு கில்லி" மு.முருகேஷ் எழுதியது. "அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை" நூலுக்காக பால புரஸ்கார் விருது பெற்றவர். ஒல்லியான யானை, குண்டான ஒட்டகம் இவைகளைப் பாத்திரங்களாக்கி செயற்கையாக செய்யப்படும் நொறுக்குத்தீனிகள் தின்பதின் தீமைகளைப் பற்றிய கதையை ஆசிரியர் சொல்லி இருக்கிறார்.

இப்படிக்குத் திருடன், பூம் பூம், பயமா எனக்கா? ஆகிய சிறுவர் கதைத் தொகுப்புகளை துரை ஆனந்தகுமார் தந்திருக்கிறார். "ஊசி எலியும் ஆணி எலியும்", "காடனும் வேடனும்" ஆகிய சிறுவர் நூல்களை "பூவிதழ் உமேஷ்" தந்திருக்கிறார்.

"பெரியார் பிஞ்சு" வெளியீடாக வந்துள்ள "சொர்க்கத்துக்கு ஒரு சீட்டு" கதைத் தொகுப்பு மு.கலைவாணன் எழுதியது. சிறப்பான முயற்சி.

நீர் இன்றி, அன்புள்ள குழந்தைகளுக்கு யார் வந்தது? சிறிய வடிவத்தில் வந்துள்ள சிந்தனை நூல்களும் சிறுவர்களைக் கவரக் கூடியது.

"பேசும் தாடி" உதயசங்கர் எழுதிய சிறுவர் நாவல். இயற்கையோடு இயற்கையாக இணைந்து பறவைகளும் விலங்குகளும் வாழ்கின்றன. அவ்வாறு மனிதர்களும் வாழ வேண்டிய அவசியத்தை மாயா ஜாலத்துடன் பேசுகிறது.

"எனக்கு பிடித்த கலரு" பஞ்சு மிட்டாய் பிரபு எழுதிய சிறுவர் நாவல். மண்ணுலகிலிருந்து வண்ணங்கள் யாவும் காணாமல் போகிறது. அவற்றைத் தேடி வண்ணங்களின் மாயாஜால உலகிற்கு வனிதா பயணிக்கிறாள். அவளது சாகச பயணம்தான் இந்தக் கதை.

சிறுவர்களுக்குத் தோன்றும் கற்பனைகளை சிறுவர்களுக்குப் புரியும் மொழியில் சிறுவர்கள் தான் எழுத முடியும்.

2021-22 ஆம் ஆண்டுகளில் கொரோனா முடக்க நேரத்தில் ரமணி எழுதிய யாருக்குத் தைக்கத் தெரியும்? ரமணா எழுதிய சிம்பாவின் சுற்றுலா, மீனா எழுதிய வௌ¢ளைப்பூக்கள், எஸ்.அபிநயா எழுதிய புலிப்பல்லும் நரிக் கொம்பும், 60 சிறுவர்கள் எழுதிய கோலிக் குண்டு, (சிறுவர் பாடல் தொகுப்பு) தீப்சிகாவின் "வானவில்" பாடல்கள், கடலோரக் கிராமத்துக் குழந்தைகள் எழுதிய "மீனு...மீனு... சாளை மீனு" (கதைத் தொகுப்பு : ரா.பி.சகேஷ் சந்தியா) ஆகிய படைப்புகள் இப்போதும் மறக்க முடியாதவை, மதிப்பிற்குரியவை.

சிறுவர்கள் எவ்வளவு எளிமையாக கதை சொல்லியிருக்கிறார்கள். யாருக்கும் புத்திமதி சொல்லவில்லை.

பொது முடக்க காலத்தில் எழுதிய இவர்களின் பேனாக்கள் இப்போது படிப்பிற்காக முடங்கி விட்டன. அவர்களுடைய படைப்பாற்றல் மங்கிப் போய் விடக்கூடாது என்பதே நம் கவலை.

சிறுவர் இலக்கியத்தின் நோக்கம் சிறுவர்களை வாசிப்பு உலகத்திற்குள் கொண்டு வருவது தான். அவர்களுக்காக எழுதப்படும் வரிகளில் இனிமை இருக்க வேண்டும். எளிமை இருக்க வேண்டும். வெறும் செய்திகள், அறிவுரைகள் வாசிப்பு இன்பம் தராது. படைப்பு பணியாரமாக இருக்க வேண்டும். பல்லுக்கேற்ற பதத்தில் இருக்க வேண்டும்.         

மழலைப் பருவத்திலிருந்து நகர்ந்து வந்திருப்பவர்கள் சிறுவர்கள் மழலை மணம் மாறாதவர்கள். அவர்களை ஐந்தில்தான் விளைவிக்க வேண்டுமென்று நினைத்து "கருத்து" சம்மட்டிகளால் தாக்கிவிடக் கூடாது.

ஒரு கதை ஒரு புத்தகம், வாசிப்பு இயக்கம், வயது பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதுவது, நிறைய பெண் சிறார் எழுத்தாளர்களின் பங்களிப்பு ஆகியவை தமிழ்ச்சிறார் இலக்கியம் நம்பிக்கையான திசையில் பயணிக்கிறது என்பதை உணர்த்துகிறது.

சுகுமாரன்